என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    கடந்த 2016-ஆம் ஆண்டிற்கான சிறந்த கைத்தறி நெவாளர்களுக்கான விருதுக்கு இந்தியா முழுவதும் 21 பேரின் பட்டு சேலைகள் ஆய்வு செய்யப்பட்டு, அதில் காஞ்சீபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்க உறுப்பினர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    காஞ்சீபுரம்:

    கடந்த 2016-ஆம் ஆண்டிற்கான சிறந்த கைத்தறி நெவாளர்களுக்கான விருதுக்கு இந்தியா முழுவதும் 21 பேரின் பட்டு சேலைகள் ஆய்வு செய்யப்பட்டு, அதில் காஞ்சீபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்கத்தை சேர்ந்த கே.மகேஸ்வரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இந்த சேலை “காலை, மாலை” (மார்னிங்-ஈவினிங்) என்ற ரகத்தில் முந்தானையில் மயில் சக்கரம் ஆகிய வடிவங்களுடன் மஸ்டர்டு பிரவுன், அரக்கு நிறத்தில் சேலை நெய்யப்பட்டு பாரம்பரிய பட்டு வடிவத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.

    மேலும் சேலையில் மொக்கு, நட்சத்திரம், கையில் முட்டிக்கு மேலே அணியப்படும் வங்கி போன்ற வடிவங்கள் உள்ளன. இத்தகைய சிறப்பு வாய்ந்த சேலை தேசிய விருதுக்கு தேர்வாகி உள்ளது.

    மேலும் சிறந்த கைத்தறி நெசவாளர்களுக்கான தேசிய நற்சான்று விருதுக்கு முருகன் பட்டு கூட்டுறவு சங்கத்தை சேர்ந்த பி.பார்வதி மற்றும் காஞ்சீபுரத்தை சேர்ந்த தனியார் நெசவாளர் ஆர்.வரதன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும் கைத்தறி துணி விற்பனைக்கான தேசிய விருது காஞ்சீபுரம் அறிஞர் அண்ணா பட்டு கூட்டுறவு சங்கத்திற்கும், கைத்தறி துணை விற்பனை தேசிய நற்சான்றிதழ் விருது காஞ்சீபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்கத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    சிறந்த கைத்தறி நெசவாளருக்கான தேசிய விருதுக்கு, விருதுடன் ரூ.1 லட்சத்து 50 ஆயிரமும், தேசிய நற்சான்று விருதுக்கு, ரூ.75 ஆயிரமும் நற்சான்றிதழும் வழங்கப்படும். இந்த விருதுகளை பிரதமர் அல்லது ஜனாதிபதி வருகிற ஆகஸ்ட் 7-ந்தேதி தேசிய கைத்தறி தினத்தில் வழங்குவார்கள் என்று தெரிகிறது. விருதுக்கு தேர்வான மகேஸ்வரி கூறியபோது:-

    எங்கள் குடும்பம் பாரம்பரியமாக நெசவுத் தொழில் செய்து வருகிறோம். நான் 35 ஆண்டுகளாக இத்தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். விருது பெற்ற இந்த சேலையை நெய்வதற்கு 1 மாத காலம் ஆனது. சாதாரண சேலை நெய்வதற்கு ஒருவரே சேலை அறுக்கலாம். ஆனால் இது போன்ற சிறப்பு ரகங்களில் 2 பேர் மாதம் முழுவதும் சேலை நெய்து அறுக்க வேண்டும். நெசவு தொழில் நலிவுற்று இருக்கும் நிலையில் இது போன்ற அங்கீகாரம் மற்றும் விருதுகள் தான் தொழிலை தொடர உத்வேகத்தை கொடுக்கும் என்றார்.

    காஞ்சீபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்கம் 3 விருதுகளை பெற்றதையொட்டி அதன் உறுப்பினர்களை சங்கத் தலைவர் வீ.வள்ளிநாயகம், இணை இயக்குநர் எஸ்.சாரதி சுப்புராஜ், துணைத்தலைவர் எஸ்.ஜெயந்தி சோமசுந்தரம், இயக்குநர்கள் பி.சம்பத், எஸ்.பாஸ்கர், பி.கிருஷ்ணமூர்த்தி, ஆர்.இளங்கோவன், எஸ்.கீதா சண்முகானந்தம் ஆகியோர் பாராட்டினர். #tamilnews
    ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்ணீரில் இருந்த 11 சாமி சிலைகளை மீட்டகப்பட்டது. தங்க சிலை கிடப்பதாக பரவிய தகவலால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூரை அடுத்த சேந்தமங்கலத்தில் ஏரி உள்ளது. இங்குள்ள தண்ணீரில் தங்கத்திலான சாமி சிலைகள் கிடப்பதாக அப்பகுதியில் தகவல் பரவியது.

    இதனை அறிந்த பொது மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜான் விக்டர், தாசில்தார் ரமேஷ் மற்றும் அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர்.

    அவர்கள் தண்ணீரில் இருந்த 11 சாமி சிலைகளை மீட்டனர். அதனை சோதனை செய்த போது தங்க நிறத்தில் பெயிண்ட் அடிக்கப்பட்ட சிலை என்பது தெரிந்தது.

    இதில் அதிக அளவில் அம்மன் சிலைகள் இருந்தன. பெரும்பாலான சிலைகள் உடைந்து சேதம் அடைந்து இருந்தது.

    தங்க சிலைகள் என்று நினைத்து மர்ம கும்பல் கொள்ளையடித்து வந்து இருக்கலாம் எனவும், அவை சிமெண்ட் சிலைகள் என்பது தெரிந்ததும் அதனை ஏரியில் வீசி தப்பி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இது தொடர்பாக காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிலைகள் மாயமாகி உள்ளதா என்ற விபரத்தை சேகரித்து வருகின்றனர். கைப்பற்றப்பட்ட சாமி சிலைகள் தாசில்தார் அலு வலகத்தில் வைக்கப்பட்டு உள்ளது. தங்க சிலை கிடப்பதாக பரவிய தகவலால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. #tamilnews

    காஞ்சீபுரம் பாரத ஸ்டேட் வங்கியில் பென்சன்தாரர்களுக்கு வழங்கப்படும் பணத்தில் ரூபாய் ஆயிரத்திற்கு கட்டாயமாக 10 ரூபாய் நாணயமாக வழங்கி வருவதாக பென்சன்பணம் வாங்கும் வயதானவர்கள் கூறி வருகின்றனர்.

    காஞ்சீபுரம்:

    10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என சில மாதங்களுக்கு முன்பாக வதந்தி பரவியது. இதனால் வியாபாரிகள் மற்றும் பஸ்களில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்ததால் பொது மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

    சில வங்கிகளில் டெபாசிட் பணமாக 10 ரூபாய் நாணயங்கள் செலுத்தினாலும் ஏற்றுக்கொள்ள மறுக்கும் காட்சி சமூக வலைத் தளங்களில் பரவியது. தற்போது 10 ரூபாய் நாணயங்கள் செல்லும் என ரிசர்வ் வங்கி தெரிவித்து இருந்தாலும் பெரும் பாலானோர் நாணயங்களை வாங்க மறுக்கின்றனர்.

    இந்நிலையில் காஞ்சீபுரம் பாரத ஸ்டேட் வங்கியில் பென்சன்தாரர்களுக்கு வழங்கப்படும் பணத்தில் ரூபாய் ஆயிரத்திற்கு கட்டாயமாக 10 ரூபாய் நாணயமாக வழங்கி வருவதாக பென்சன்பணம் வாங்கும் வயதானவர்கள் கூறி வருகின்றனர்.

    வயதான பென்சன்தாரர்கள் அதை பெற்றுக்கொண்டு மாற்றுவதில் பல்வேறு பிரச் சினைகளை சந்திக்கிறார்கள். வங்கிகளிடம் கேட்டால் ஏற்கனவே ஏராளமான 10 ரூபாய் நாணயங்கள் உள்ளது. அதனை மாற்றவே எங்களால் முடியவில்லை என்று தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து காஞ்சீபுரத்தை சேர்ந்த ஓய்வூதியம் பெற்ற முதியவர் ஒருவர் தெரிவிக்கையில், “பாரத ஸ்டேட் வங்கியில் வரும் ஓய்வூதியதாரர்கள் அனைவருக்கும் ரூ.1000 கட்டாயமாக வழங்கப்படுகிறது.

    இதனை அதே வங்கியில் கூட டெபாசிட் செய்ய முடியவில்லை. ஏனென்றால் டெபாசிட் செய்ய வங்கியில் உள்ள மிஷின்களில் 10 ரூபாய் நாணயத்தை டெபாசிட் செய்வதற்கான வழிமுறை இல்லை எனக் கூறுகின்றனர்.

    வங்கியில் கேட்டால் ஓய்வூதியதாரர்களுக்கு மட்டு மின்றி அரசு அதிகாரிகள் அனைவருக்கும் 10 ரூபாய் நாணயங்களை வழங்கியே ஆகவேண்டும் என்று மேலிடத்து உத்தரவு என்று கட்டாயமாக திணிக்கிறார்கள்.

    வயதான காலத்தில் இந்த 10 ரூபாய் நாணயத்தை பெற்றுக்கொண்டு மாற்ற இயலாமல் அவதிப்பட்டு வருகிறோம். பல இடங்களில் வாங்க மறுக்கின்றனர்.

    உடல் நிலை சரியில்லாமல் மருந்துக்கடைக்கு மாத்திரைகள் வாங்கி விட்டு 10 ரூபாய் நாணயங்களை கொடுத்தால் கடைக்காரர் வாங்கவில்லை. இதனால் எங்களுக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது” என்று தெரிவித்தார். #tamilnews

    மாணவர்களை போராட்டத்தில் ஈடுபட வலுக்கட்டாயமாக அழைத்து வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்துகொண்டிருந்தது. அப்போது கோவிந்தவாடி அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் சிலர் கூறி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பள்ளியின் கூடுதல் கட்டிடத்திற்கு மாற்று இடம் மாவட்ட நிர்வாகத்தால் தேர்வு செய்யபட்டுவிட்ட நிலையில் இதுபோன்ற போராட்டம் கண்டிக்கத்தக்கது என்று கலெக்டர் பொன்னையா நேரில் வந்து மாணவர்களை எச்சரித்தார்.

    அப்போது கலெக்டர் கூறும்போது, “மாவட்டத்தில் பல்வேறு பள்ளிகளிலிருந்து செல்லும் மாணவ- மாணவிகளை பள்ளிக்கு செல்லவிடாமல் தடுத்து கல்வி கற்பதற்கு இடையூறு ஏற்படும் வகையில் போராட்டத்தில் ஈடுபட வலுக்கட்டாயமாக அழைத்து வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். #tamilnews
    அரசியல் வெற்றிடத்தை அன்புமணி நிரப்புவார் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர். ராமதாஸ் கூறியுள்ளார்.

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் பொதுக்குழு கூட்டம் காஞ்சீபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது.

    மாவட்ட துணைத் தலைவர் ஆ.செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாநில துணைப்பொது செயலாளர் பொன்.கங்காதரன், மேற்கு மாவட்ட செயலாளர் வ.உமாபதி, முன்னாள் மாவட்ட செயலாளர் பெ.மகேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் கலந்துகொண்டு பேசியதாவது:-

    காஞ்சீபுரம் பெரிய தொகுதி. இந்த நகரத்தை மாநகராட்சியாக மாற்றினால் மக்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும். ஆனால் இதனை தற்போதுள்ள அரசிடம் சொல்லி ஒருபயனும் இல்லை. தமிழகத்தில் உள்ள 5.96 கோடி வாக்காளர்களில் பெண்களே அதிகம் உள்ளனர்.

    அதனால் நமது கொள்கைகளை வீடுவீடாக சென்று பெண்களிடம் எடுத்து கூறி அவர்களை பா.ம.க. விற்கு ஓட்டுப்போட வைக்க வேண்டும். இனி எந்த கூட்டமாக இருந்தாலும் கட்சி நிர்வாகிகள் தங்கள் மனைவியுடன் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்.

    அப்போது தான் பெண்களுக்கும் அரசியல் தெரியும். தமிழக அரசின் மீது பா.ம.க. கூறிய ஊழல் புகார்கள் தற்போது உண்மையாகி வருகிறது. தமிழக அரசின் 25 துறைகள் மீது தமிழக கவர்னரிடம் பா.ம.க. ஊழல் புகார் தெரிவித்துள்ளது. அதன்மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி கூறப்பட்டுள்ளது. உரிய நடவடிக்கை எடுப்பதாக கவர்னர் தெரிவித்தார்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பல்கலைக்கழக துணை வேந்தர் கணபதி ஊழல் குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இருந்தோம். அப்போது எங்கள் புகாரை கண்டு கொள்ளவில்லை. ஆனால் நாங்கள் புகார் தெரிவித்த கணபதி ஊழல் வழக்கில் கைதாகியுள்ளார். இதன் மூலம் நாங்கள் கூறிய உண்மை வெளிவந்துள்ளது.

    ஊழல் புகாரில் சிக்கிய பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதியை ஏன் தகுதிநீக்கமோ, பணி இடைநீக்கமோ செய்ய வில்லை. ஊழல் புகாரில் பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தர் கணபதிக்கும் தற்போதய தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், முன்னாள் அமைச்சர் பழனியப்பன் ஆகியோருக்கும் தொடர்பு உள்ளது. அதனால் நடவடிக்கை எடுக்கவில்லையா? உண்மை வெளிவர பா.ம.க. தொடர்ந்து போராடும்.

    தமிழகத்தில் தற்போது பெரிய அரசியல் தலைவர்கள் இல்லை. அரசியலில் வெற்றிடம் உள்ளது. அதை நிரப்புவதற்கு அன்புமணியை தவிர வேறு யாரும் கிடையாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாநி பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, மாநில துணைப் பொதுச்செயலாளர் திருக்கச்சூர் கி.ஆறுமுகம், முன்னாள் எம்.எல்.ஏ. சக்தி கமலம்மாள், புதுவை மாநில அமைப்புச் செயலாளர் கோ.தனராஜ் உள்பட ஏராள மானோர் கலந்துகொண்டனர். #tamilnews

    காஞ்சீபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோயிலில் கஞ்சா செடி வளர்க்கப்பட்ட விவகாரம் பக்தர்களுக்கு கடும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் காந்திரோடில் அமைந்துள்ளது வழக்கறுத்தீஸ்வரர் கோயில். இந்த கோயிலுக்கு சென்று யாகம் செய்தாலோ அல்லது எள்விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டாலோ வழக்குகளில் இருந்து விடுபட முடியும் என்பது நம்பிக்கை.

    இதனால் வடஇந்திய, தமிழக அரசியல் பிரமுகர்களும் சினிமா பிரமுகர்களும் வந்து யாகங்களும் சிறப்பு பூஜைகளும் செய்து வருவதால் இக்கோயில் மேலும் பிரசித்திபெற்றது.

    ஒவ்வொரு திங்கட்கிழமையும் ஆயிரம் கணக்காண பக்தர்கள் வந்து தீபம் ஏற்றி வழிபட்டு செல்வார்கள். இக்கோவில் கும்பாபிஷேகம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்றது.

    இந்த நிலையில் கோவில் வளாகத்தில் கஞ்சா செடி வளர்கப்பட்டு வருவதாக விஷ்ணுகாஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் அளித்தார். நேற்று மாலை கோயிலுக்கு சென்று போலீசார் அதிரடி ஆய்வு செய்தனர்.

    அப்போது கோயில் வளாகத்தில் அமைந்துள்ள குளக்கரையில் உடைக்கப்பட்ட பிளாஸ்டிக் குடத்தில் மண்ணை நிரப்பி அதில் கஞ்சா செடி வளர்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    விசாரணையில் கோயிலை ஒட்டி அமைந்துள்ள துணிக்கடையில் காவலாளியாக வேலை பார்த்து வரும் சின்ன காஞ்சிபுரம் டோல்கேட் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி என்பவர் கஞ்சா செடி வளர்த்தி வந்தது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    வேறு எங்காவது வளர்த்தால் மாட்டி கொள்வோம் என்று பயந்து கோயிலுக்குள் கஞ்சா செடி வளர்த்து பயன்படுத்தியதாக மூர்த்தி கூறி உள்ளார்.
    மாமல்லபுரம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பிளஸ்-2 மாணவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் மீனவர் பகுதியை சேர்ந்தவர் கடும்பாடி. இவரது மகன் மனோஜ்குமார் (வயது 17). திருக்கழுக்குன்றத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தான்.

    இவர் உடன் படிக்கும் நண்பர் அஜித்துடன் மாமல்லபுரத்தை அடுத்த பேரூர் கிழக்கு கடற்கரை சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    அப்போது முன்னால் வந்த வேன் மீது திடீரென மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மனோஜ்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    அஜித்குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு செங்கல்பட்டு  அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    துணைவேந்தர் பதவிக்கு வருவதற்கு அமைச்சர்களுக்கு பணம் கொடுக்கப்படுவதாக திருநாவுக்கரசர் கூறிய குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த ஓ.பன்னீர்செல்வம், ஆதாரம் இருந்தால் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
    ஆலந்தூர்:

    தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேட்டியளித்தார். அதன் விவரம் வருமாறு:-

    கேள்வி:- காவிரி விவகாரத்தில் என்ன மாதிரியான ஆலோசனை நடத்தப்பட்டது?

    பதில்:- காவிரியில் கர்நாடகத்திடம் இருந்து இந்த வருடம் தமிழகத்துக்கு 81 டி.எம்.சி. தண்ணீர் தரவேண்டிய பாக்கி உள்ளது. டெல்டா மாவட்டங்களில் நடப்பட்ட பயிர் களுக்கு தண்ணீர் அவசியமாக தேவைப்படுகிறது. அவர்களுக்கு தரவேண்டிய கடமை இருக்கிறது. அதை கேட்பதற்கு நமக்கு உரிமை இருக்கிறது. அதை கேட்டதற்கு மறுத்து உள்ளார்கள். சட்டபூர்வமான நடவடிக்கைகள் எடுப்பதற்கு தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

    கேள்வி:- காவிரி தண்ணீர் கிடைக்காது. தண்ணீர் தேவை என்றால் கடல் நீரை சுத்தி கரித்து பயன்படுத்தலாம் என்று சுப்பிரமணியசாமி கூறியுள்ளாரே?

    பதில்:- 17 ஆண்டுகளாக காவிரி நடுவர் மன்றம் தீவிர விசாரித்து வழங்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு. இந்த தீர்ப்பின்படி நமக்கு உரிமை இருக்கிறது. சுப்பிரமணியசாமி அவ்வாறு கூறியிருந்தால் அதற்கான காரணத்தை அவர்தான் கூறவேண்டும்.

    கேள்வி:- தமிழகத்தில் தொடர்ந்து அரசு துறை ஊழியர்கள் போராட்டங்களை அறிவித்து உள்ளார்களே?

    பதில்:- 7 ஆண்டுகளாக பஸ் கட்டணம் உயர்த்தப்படவில்லை. டீசல் விலை தினமும் உயர்ந்துகொண்டே இருக்கிறது. நிர்வாகத்தில் பல சிரமங்களை பெறவேண்டிய நிலை உள்ளது. இவைகளை தவிர்த்து பஸ் ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி தரவேண்டிய நிலை உள்ளது. பஸ் கட்டணம் உயர்த்தப்பட்ட பின்னரும் அண்டை மாநிலங்களை விட குறைவாகத்தான் இருக்கிறது.

    கேள்வி:- தமிழகத்தில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழகத்துக்கான உரிமைகளை கேட்டு பெறாமல் ஆடு, மாடுகள் போல் செயல்படுகிறார்கள் என்று சுப்பிரமணியசாமி கூறியுள்ளாரே?

    பதில்:- சுப்பிரமணியசாமி சொல்வதற்கு எல்லாம் பதில் சொல்லிக்கொண்டு இருக்க முடியுமா?.

    கேள்வி:- துணை வேந்தர்கள் பதவிக்கு வருவதற்கு அமைச்சர்களுக்கு பணம் தரப்படுவதாக திருநாவுக்கரசர் கூறியுள்ளாரே?

    பதில்:- விசாரணையில் ஆதாரம் இருந்தால் யாராக இருந்தாலும் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும். அரசனாக இருந்தாலும், ஆண்டியாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மதுரை விமான நிலையத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டது எதிர்பாராத விதமானது. அனைத்து துறைகளின் முயற்சியால் தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது.

    தீ விபத்து நடந்த இடங்களை அமைச்சர்கள் சேவூர் ராமச்சந்திரன், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், சட்டமன்ற உறுப்பினர்கள் பார்வையிட்டு உள்ளனர். தொல்லியல் துறை நிபுணர்களின் ஆய்வு அறிக்கையின்படி தீ விபத்து நடந்த பகுதிகள், பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும். இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    அ.தி.மு.க. உறுப்பினர் அட்டை இருந்தால் தான் நலத்திட்டங்களை பெற முடியும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருப்பது அவருடைய சொந்த கருத்து. ஏழை எளிய மக்களுக்கும், தொண்டர்களுக்கும் அரசின் அனைத்து நலத்திட்டங்களும் முறையாக சென்று சேரும். 5 வருடங்களுக்கு ஒரு முறை அ.தி.மு.க.வில் அமைப்பு தேர்தல் நடத்துவதன் முதல் படியாக, உறுப்பினர் சேர்க்கை படிவங்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன.

    ஜெயலலிதாவின் காலத்தில் 1½ கோடி உறுப்பினர்கள் இருந்தனர். தற்போது இளைஞர்களும், மாணவர்களும் அ.தி.மு.க.வில் இணைய அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதன் மூலம் அ.தி.மு.க. உறுப்பினர்களின் எண்ணிக்கை 1½ கோடியில் இருந்து நிச்சயம் உயரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #tamilnews
    துபாய், சிங்கப்பூரில் இருந்து சென்னை விமானத்தில் கடத்திய ரூ.50 லட்சம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தங்கத்தை கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    ஆலந்தூர்:

    துபாயில் இருந்து சென்னைக்கு இன்று அதிகாலை பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    சென்னையை சேர்ந்த சினேகா என்பவரை அதிகாரிகள் சோதனை செய்த போது 9 தங்க வலையல்கள் ஆடையில் மறைத்து கடத்தி வந்தது தெரிந்தது. இதன் மதிப்பு ரூ.25 லட்சம் ஆகும்.

    இதையடுத்து சினேகாவை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    அதே விமானத்தில் வந்த சென்னையை சேர்ந்த கமல் ஜித்சிங்கை சோதனை செய்ய போது ஆடையில் மறைத்து வைத்திருந்த ½ கிலோ தங்க நகை சிக்கியது. இதன் மதிப்பு ரூ.15 லட்சம். கமல் ஜித்சிங்கை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

    இதே போல் சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணிகளிடம் சோதனை நடத்தினர். சென்னையை சேர்ந்த மொய்தீன்கான் என்பவர் 3 தங்க கட்டிகள் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.10 லட்சம். அவரையும் கைது செய்து தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

    காஞ்சீபுரம் அருகே விவசாயி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரத்தை அடுத்த மாமல்லநல்லன் நகரை சேர்ந்தவர் இளங்கோவன், விவசாயி. இவரது மனைவி லட்சுமி.

    இளங்கோவனுக்கு காஞ்சீபுரத்தை அடுத்த கூரம் பெரியகரும்பூர் கிராமத்தில் 15 ஏக்கர் நிலம் உள்ளது. நேற்று இரவு நிலத்தில் தண்ணீர் பாய்ச்ச செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்ப வில்லை.

    இந்த நிலையில் இளங்கோவன் தலையில் வெட்டுக் காயத்துடன் தனது நிலத்தில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

    இதை பார்த்த கிராம மக்கள் பாலுசெட்டிசத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இளங்கோவன் உடலை கைப்பற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் இளங்கோவனுக்கும் அவரது தாய்மாமன் சந்தியப்பனுக்கு கூரம் பெரியகரும்பூரில் உள்ள நிலம் தொடர்பாக தகராறு இருந்து வந்தது. இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது.

    இதையடுத்து சந்தியப்பனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் தைப்பூசப் பெருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற விழாவில், தைப்பூச ஜோதியை பங்காரு அடிகளார் முன்னிலையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஏற்றிவைத்தார்.
    மேல்மருவத்தூர்:

    மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் தைப்பூசப் பெருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற விழாவில், தைப்பூச ஜோதியை பங்காரு அடிகளார் முன்னிலையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஏற்றிவைத்தார். விழாவையொட்டி சித்தர் பீடம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தைப்பூச சக்தி மாலை அணிந்து, சக்தி விரதம் இருந்து இரு முடி எடுத்து வந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கருவறையில் உள்ள சுயம்பு அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.

    முன்னதாக சித்தர் பீடம் வந்த பங்காரு அடிகளாரை பக்தர்கள் பாத பூஜை செய்து வரவேற்றனர். விழாவில் பா.ஜனதா மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழ்நாடு தேர்வாணையத் தலைவர் அருள்மொழி, கவர்னரின் நேர்முக உதவியாளர் ராஜகோபால் மற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். #Tamilnews
    ஆதம்பாக்கம் பகுதியில் இரண்டு கடைகளில் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    ஆலந்தூர்:

    ஆதம்பாக்கம், வைகைத் தெருவில் டீக்கடை மற்றும் குளிர்பானக்கடை நடத்தி வருபவர் அலிக்குட்டி. நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிச் சென்றார்.

    இன்று காலை கடையை திறக்க வந்த போது கடையின் ‌ஷட்டர் பூட்டு உடைந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பணம் பெட்டியில் இருந்து ரூ.40 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.

    இதே போல் அருகில் இருந்த அம்பலவாணன் என்பவருக்கு சொந்தமான செல்போன் ரீசார்ஜ் கடைக்குள் புகுந்த கும்பல் அங்கிருந்த ரூ.11 ஆயிரத்தை சுருட்டி சென்று இருந்தனர்.

    மேலும் அதே ராமகிருஷ்ணபுரம் 3-வது தெருவில் நிறுத்தப்பட்டு இருந்த 4 ஆட்டோக்களில் பேட்டரிகள் திருடு போய் இருந்தது.

    இதுகுறித்து ஆதம்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அலிக்குட்டி கடைக்குள் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான 7 புதிய துணி பண்டல்கள் கிடந்தன.

    கொள்ளை கும்பல் அதனை வேறு கடையில் திருடி வந்திருப்பதும், இங்கு பணம் கிடைத்ததும் துணி பண்டல்களை விட்டு சென்று இருப்பதும் தெரிந்தது.

    கடந்த மாதம் ஆதம்பாக்கம் பரமேஸ்வரன் நகர் பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் 4 கடைகளில் கொள்ளை நடந்தது. இந்த வழக்குகளில் இதுவரை கொள்ளையர்கள் சிக்கவில்லை. தொடர்ந்து நடைபெறும் கொள்ளை சம்பவத்தால் ஆதம்பாக்கம் பகுதி வியாபாரிகள் கலக்கம் அடைந்து உள்ளனர்.
    ×