என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    ஹாசினி கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான தஷ்வந்துக்கு வருகிற 19-ந்தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி அறிவித்துள்ளார்.
    செங்கல்பட்டு:

    மாங்காட்டை அடுத்த மவுலிவாக்கத்தை சேர்ந்த 6 வயது சிறுமி ஹாசினி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டாள்.

    இதுதொடர்பாக அதேபகுதி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த தஷ்வந்தை போலீசார் கைது செய்தனர். இந்த கொலை தொடர்பாக முதலில் அவர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார். பின்னர் அவர் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

    இதையடுத்து தஷ்வந்த் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதை தொடர்ந்து அவர் குடும்பத்துடன் குன்றத்தூரில் குடியேறினார். அப்போது செலவுக்கு பணம் கொடுக்காத ஆத்திரத்தில் கடந்த மாதம் 2-ந்தேதி தனது தாய் சரளாவையும் கத்தியால் குத்தி கொலை செய்தார்.

    மும்பையில் பதுங்கி இருந்த தஷ்வந்தை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மும்பை விமான நிலையம் அருகே ஓட்டலில் இருந்தபோது தஷ்வந்த் தப்பி ஓடினார். அவரை மீண்டும் போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

    சிறுமி ஹாசினி கொலை வழக்கு தொடர்பான விசாரணை தனியாக செங்கல்பட்டு மகளிர் கோர்ட்டில் நடந்து வருகிறது. இதற்காக புழல் சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் தஷ்வந்த் அழைத்து செல்லப்பட்டார்.

    கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு செங்கல்பட்டு கோர்ட்டு வளாகத்தில் மகளிர் அமைப்பினர் அவரை தாக்கிய சம்பவமும் நடந்தது.



    ஹாசினி கொலை வழக்கில் இறுதி கட்ட விசாரணை நீதிபதி வேல்முருகன் முன்னிலையில் தினமும் நடந்துவந்தது. மொத்தம் 35 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஹாசினியின் பெற்றோர் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.

    இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஹாசினி கொலை வழக்கின் தீர்ப்பு வருகிற 19-ந்தேதி வழங்கப்படும் என்று நீதிபதி வேல் முருகன் அறிவித்தார்.

    இந்த வழக்கில் அரசு வக்கீலாக சீதாலட்சுமியும், தஷ்வந்த் தரப்பு வக்கீலாக ராஜ்குமாரும் ஆஜராகி வாதாடினார்கள்.

    சிறுமி ஹாசினி கொலை வழக்கில் ஒரு ஆண்டுக்குள் தீர்ப்பு வருவது குறிப்பிடத்தக்கது. #tamilnews
    கிழக்கு கடற்கரை சாலை மற்றும் ஓ.எம்.ஆர். பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகளை குறி வைக்கும் வடமாநில கொள்ளையர்களால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    திருப்போரூர்:

    சென்னை புறநகர் பகுதியான சிறுசேரி, நாவலூர், பொன்மார், மாம்பாக்கம், முட்டுக்காடு கிழக்கு கடற்கரை சாலை மற்றும் ஓ.எம்.ஆர். பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக அசுர வளர்ச்சியின் காரணமாக எண்ணற்ற அடுக்குமாடி குடியிருப்புகள் உருவாகியுள்ளன.

    பெரும்பாலும் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் பணிபுரிபவர்கள் வெப்சைட் மூலம் இப்பகுதிகளில் இடம் தேர்வு செய்து அடுக்கு மாடி குடியிருப்புகள் வாங்கி பணத்தை முதலீடு செய்கின்றனர்.

    சிலர் தங்களது வீடுகளை வாடகைக்கு விடுவதும், சிலர் எப்போதாவது தங்களது வீடுகளுக்கு வந்து தங்கியும் செல்கின்றனர். இதனால் இவர்களது வீடுகள் எப்போதும் பூட்டி இருக்கும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்ட ஒப்பந்தக்காரர்கள் மூலம் ஆந்திரா, பீகார், ஒரிசா, ஜார்கன்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து தொழிலாளர்கள் அழைத்து வரப்படுகிறார்கள். அவர்கள் தங்குவதற்கு கட்டுமானம் நடைபெறும் இடத்தின் அருகிலேயே ஷெட் அமைத்து கொடுக்கப்படுகிறது.

    இதனால் கட்டிட பணிக்கு வரும் வடமாநிலத்தவர்கள் வேலை முடியும் வரை பல மாதங்களாக இங்கு தங்கி இருக்கிறார்கள். திடீரென அவர்கள் வேலையில் இருந்து நிறுத்தப்பட்டால் திரும்பவும் ஊருக்கு செல்ல, தங்களின் செலவிற்காக இங்கிருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளை நோட்டமிட்டு கொள்ளையில் ஈடுபடுவது தொடர்கதையாக உள்ளது.

    இவ்வாறு இங்கு வந்து தங்கும் வடமாநிலத்தவர்களின் விவரங்கள் கூட சரியாக தெரியாத வண்ணமே உள்ளது. ஏதாவது கொள்ளை மற்றும் கொலை நடந்தால் மட்டும் விசாரிக்கும் போலீசார் மற்றபடி அவர்களை கண்டு கொள்வதில்லை.

    இதனால் வடமாநில கொள்ளை கும்பல் இங்கு கைவரிசையை காட்டி விட்டு போலீசில் பிடிபடாமல் தங்களின் சொந்த ஊர்களுக்கு தப்பி சென்று விடுகிறார்கள். பின்னர் சிறிதுநாட்கள் தலைமறைவாக இருக்கும் அவர்கள் மீண்டும் சென்னை பகுதிக்கு வந்து கொள்ளை திட்டத்தை அரங்கேற்றி வருகின்றனர்.

    இதேபோல் திருப்போரூரை அடுத்த பொன்மார் ஊராட்சிக்குட்பட்ட போலச்சேரி பகுதியில் உள்ள ஒரு தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 7-ந்தேதி பூட்டியிருந்த சுமார் 10-க்கும் மேற்பட்ட வீடுகளின் பூட்டை உடைத்து வடமாநில கொள்ளை கும்பல் பொருட்களை அள்ளி சென்று விட்டனர். இந்த சம்பவம் தற்போது கண்காணிப்பு கேமராவால் வெளிச்சத்துக்கு வந்து உள்ளது.

    கொள்ளை நடந்த வீடுகளின் உரிமையாளர்கள் வெளிநாட்டில் இருப்பதால் அங்கிருந்து வந்து புகார் கொடுத்து இங்குவந்து தங்கி ஆகும் செலவைவிட கொள்ளைபோன பொருட் களின் மதிப்பு குறைவு என்பதால் அவர்கள் புகார் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    கண்காணிப்பு கேமரா காட்சியில் அடுக்குமாடி குடியிருப்புக்குள் 5-க்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் செல்வது பதிவாகி இருக்கிறது. இதில் 2 பேர் ஜட்டி மட்டும் அணிந்து உடல் முழுவதும் எண்ணெய் பூசி தங்களின் கைகளில் ஆயுதங்கள் வைத்திருப்பதும் சிலர் முகத்தை மூடியும் உள்ளனர்.

    கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து ஒருவர் பின் ஒருவராக வெளியேறுவதும் அந்த சிசிடிவி கேமாராவில் பதிவாகியுள்ளது.

    கொள்ளையில் ஈடுபடும் வடமாநில கும்பல் கண்காணிப்பு கேமரா மற்றும் காவலாளி இல்லாத பூட்டி கிடக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளையே குறி வைத்து கைவரிசை காட்டி வருகிறார்கள்.

    இதுபோன்ற சம்பவம் கிழக்கு கடற்கரை சாலை, மற்றும் ஓ.எம்.ஆர். பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் தொடர்ந்து நடந்து வருகிறது.

    எனவே காயார், தாழம்பூர், கேளம்பாக்கம் உள்ளிட்ட புறநகரில் உள்ள காவல் நிலையங்களில் போலீசாரின் எண்ணிக்கையை அதிகரித்து தினமும் ரோந்துபணியில் ஈடுபடவேண்டும் எனவும் இங்கு வந்து தங்கியுள்ள வடமாநிலத்தவர்களின் பெயர் முகவரிகள், அவர்கள் குற்றப்பின்னணி குறித்து போலீசார் விவரங்களை சேகரிக்கவேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    தரம் தாழ்ந்து பேசும் எச்.ராஜா எந்தக் கட்சியின் பொறுப்பில் இருப்பவர்களாக இருந்தாலும் தமிழக அரசு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என திருமாவளவன் கூறியுள்ளார்.
    காஞ்சீபுரம்:

    பஸ் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் காஞ்சீபுரம் காந்தி ரோடு பெரியார் நினைவுத் தூண் அருகே தெற்கு மாவட்டச் செயலாளர் சுந்தர் எம்.எல்.ஏ. தலைமையில் கண்டன பொதுக் கூட்டம் நடை பெற்றது.

    இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் கோயில்களில் தீ விபத்து ஏற்படும் போது அதனைத் தடுக்க கோயில்களின் வெளியே தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

    இது கண்துடைப்பான அறிவிப்பு. அனைத்து கோயில்களின் வெளியேயும் தீயணைப்பு வாகனங்கள் நிறுத்த முடியுமா?

    கோயில்களில் நடைபெற்ற தீ விபத்தின் உண்மைத்தன்மை அறிய தமிழக அரசு உடனடியாக விசாரணை ஆணையத்தினை அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

    அரசியலில் நாகரிகம் வேண்டும். நாகரிகம் குறைவாக பேசுதல் கூடாது. பாரதிய ஜனதாவின் எச்.ராஜா பேச்சு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. தரம் தாழ்ந்து பேசுபவர்கள் எந்தக் கட்சியின் பொறுப்பில் இருப்பவர்களாக இருந்தாலும் தமிழக அரசு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.



    ஏறத்தாழ 25 முறை பேச்சு வார்த்தை நடத்தியும் போக்குவரத்து ஊழியர்களின் பிரச்சினையை தீர்க்க இயலாத அரசாக தற்போதைய அரசு உள்ளது.

    எனவே தமிழகத்தில் சிறந்த முறையில் மக்கள் விரும்பும் ஆட்சி ஸ்டாலின் தலைமையில் அமையும். அந்த ஆட்சி தமிழகத்தில் இருந்து ஊழலை அகற்றும். அதற்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்.

    தமிழகத்தில் இருந்து ஊழலை ஒழித்து விடலாம். ஆனால் மதவாதம் பரவினால் அதனை அகற்றுவது கடினம். எங்களின் ஒட்டுமொத்த கொள்கை மதவாதத்தை ஒழிப்பதே.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் எழிலரசன் எம்.எல்.ஏ., சன்பிராண்ட் ஆறுமுகம், சி.வி.எம்.அ.சேகர், வி.எஸ்.ராமகிருஷ்ணன், சிறுவேடல் செல்வம், பி.எம்.குமார், காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவர் ஜீவி.மதியழகன், முன்னாள் எம்பி. பெ.விஸ்வநாதன், மற்றும் விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க., கம்யூனிஸ்டு உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #tamilnews
    ‘நீட்’ தேர்வு வந்தால் சாமானிய மக்களும் மருத்துவம் படிக்க முடியும். தேர்தல் கூட்டணி குறித்து தலைவர் விஜயகாந்த் தான் முடிவு எடுப்பார் என்று தே.மு.தி.க. மகளிர் அணி செயலாளர் பிரேமலதா கூறினார்.
    ஆலந்தூர்:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மனைவியும், மகளிர் அணி செயலாளருமான பிரேமலதா சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா படத்தை சட்டசபையில் திறப்பது குறித்து ஒவ்வொருவரும் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். சட்டசபையில் ஜெயலலிதா படம் ஏன் திறக்க கூடாது என தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த தெளிவாக கூறியிருக்கிறார்.

    ஜெயலலிதா ‘குற்றவாளி’ என்று கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. அவரது படத்தை அ.தி.மு.க. தலைமை கழகத்திலோ, போயஸ் கார்டன் வீட்டிலோ, அல்லது ஜெயலலிதாவால் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஆனவர்கள் வீடுகளில் திறக்கட்டும். சட்டமன்றத்தில் திறந்ததை ஏற்றுக் கொள்ள முடியாது. சட்டமன்றம் மிகச்சிறந்த எடுத்துக்காட்டானவர்கள், முக்கியமானவர்கள் வாழ்ந்த இடம். ஜெயலலிதா குற்றவாளி இல்லை யென்றால் படத்தை திறப்பதற்கு எதிர்ப்பு இல்லை.

    தமிழகத்தில் நடைபெறும் மக்கள் விரோதமான அரசு பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். ஆனாலும் அவர்கள் செய்வதை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். எதிர்காலத்தில் ஆட்சியாளர்கள் எப்படி செயல்பட போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். நீட் தேர்வுக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஆதரவு அளித்துள்ளார். எங்களுக்கு பிடித்த கருத்துக்களை சொன்னால் பா.ஜனதாவுக்கு ஆதரவா என கேட்கிறார்கள். பல கோடி பணம் தந்து மருத்துவ படிப்புக்கு சேர வேண்டியுள்ளது. ‘நீட்’ தேர்வு வந்தால் சாமானிய மக்களும் மருத்துவம் படிக்க முடியும். தேர்தல் கூட்டணி குறித்து தலைவர் விஜயகாந்த் தான் முடிவு எடுப்பார். முதலில் தேர்தல் வரட்டும் பின்னர் பார்க்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    பல்கலைக்கழகத்தில் கோடிக் கணக்கில் ஊழல் நடந்திருப்பது வேதனை அளிக்கிறது, இதனை ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்று வைகோ கூறியுள்ளார்.

    ஆலந்தூர்:

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மதுரை செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ரெயில்வே பட்ஜெட்டில் தமிழகம் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி தினத்தந்தி தலையங்கத்தில் புள்ளி விவரங்களை தந்துள்ளது. கர்நாடகாவிற்கு கடந்த ஆண்டை விட  அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    ரெயில்வே பட்ஜெட் தனியாக இருந்ததை பொது பட்ஜெட்டுடன் சேர்த்துள்ளார்கள். பட்ஜெட்டை பொறுத்தவரை தமிழகத்திற்கு யானை பசிக்கு சோலைப்பொறியாக உள்ளது. ஆந்திராவில் சிறப்பு பொருளாதார அந்தஸ்து வழங்க நிதி தரவில்லை என்று கூட்டணியில் உள்ள தெலுங்கு தேச கட்சி நாடாளு மன்றத்தில் கடுமையாக போராடி வருகிறது.

    தமிழகத்திற்கு மக்களவையில் நாதி இல்லாமல் போனது வருத்தம் அளிக்கிறது. தமிழகத்தை மோடி அரசு நீட்தேர்வு, மீத்தேன், காவிரி நீர், ஹைட்ரோ கார்பன் போன்ற எல்லா துறையையும் வஞ்சித்து வருகிறது.

    நீட் தேர்வில் அந்தந்த மாநில பாடத்திட்டத்தில் தேர்வு நடத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது. அப்படித்தான் நடத்த வேண்டும். ஆனால் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் நடத்துவது ஓர வஞ்சணையானது. இது மேல்தட்டு குடும்பங்களில் இருந்து படிப்பவர்களுக்கு மட்டும் வாய்ப்பு ஏற்படுத்தி விடும்.

    தமிழகத்தில் புதிதாக சி.பி.எஸ்.சி. பள்ளிகளை திறக்க அனுமதிப்பது எதிர் காலத்தை பாழாக்க கூடியது. கல்வித்துறை மிகுந்த கவலை தருகிறது.

    பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர், பேராசிரியர்கள் நியமனத்தில் கோடிக் கணக்கில் ஊழல் நடந்திருப்பது வேதனை அளிக்கிறது. இதனை ஓய்வு பெற்ற நீதிபதி அல்லது கல்வித் துறையில் நேர்மையான அதிகாரியை வைத்து விசாரணை நடத்த வேண்டும்.

    பேருந்து கட்டணம் உயர்வால் ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளர். ஆனால் இந்த அரசு அதைப்பற்றி கவலைப்பட வில்லை. போக்குவரத்து துறை நாசமானதற்கு ஊழலும் நிர்வாக சீர்கேடும் தான் காரணம். சட்ட சபையில் ஜெயலலிதா படம் வைக்கப்பட்டது குறித்து கருத்து கூற விரும்பவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காட்டாங்கொளத்தூரில் பிரபல ரவுடி தலை துண்டித்த நிலையில் கொலை செய்யப்பட்டிருப்பது அப்பகுதி பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    செங்கல்பட்டு:

    காட்டாங்கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் பின்புறம் உள்ள சாலையில் இன்று காலை வாலிபரின் தலை துண்டிக்கப்பட்டு தனியாக கிடந்தது. அருகில் ரத்தக் கறை படித்த பாலிதீன் பை இருந்தது.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் மறைமலைநகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து தலையை மீட்டு விசாரணை நடத்தினர்.

    அப்போது தலை துண்டித்து கொலை செய்யப்பட்டவர் மறைமலைநகரை அடுத்த கோனாதி கிராமத்தைச் சேர்ந்த ராமதாசின் மகன் பாலாஜி (33) என்பது தெரிந்தது. அருகில் உடல் இல்லை. அதனை போலீசார் தேடி வந்தனர். ரவுடியான பாலாஜி மீது செங்கல்பட்டு, மறைமலை நகர் உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் அடிதடி, நகை பறிப்பு வழக்குகள் உள்ளன.

    நேற்று இரவு மர்ம நபர்கள் 2 பேர் வீட்டில் இருந்த பாலாஜியை மோட்டார்சைக்கிளில் அழைத்து சென்றார்கள். அதன்பின்னர் அவர் திரும்பவில்லை. இதனால் அவரை அழைத்து சென்ற நண்பர்களே கொடூரமாக கொலை செய்து இருக்கலாம் போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    செங்கல்பட்டு நகரமன்ற துணைத்தலைவராக இருந்த ரவிபிரகாஷ் சில ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பாலாஜி குற்றவாளி. இந்த கொலைக்கு பழி வாங்க தீர்த்துக்கட்டப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

    பாலாஜி பிரபல ரவுடியான பட்டரவாக்கம் சிவாவின் நெருங்கிய கூட்டாளியாகவும் இருந்து வந்துள்ளார். ரவுடிகளுக்கு இடையே ஏற்பட்ட போட்டியில் கொலை செய்யப்பட்டாரா? என்றும் விசாரணை நடக்கிறது.

    இதற்கிடையே ரவுடி பாலாஜியின் உடல் ஸ்ரீபெரும்புதூர் அருகே மணிமங்கலம் பகுதியில் புதரில் வீசப்பட்டு கிடந்தது. தலையில்லாத அந்த உடலை போலீசார் மீட்டனர்.

    பாலாஜியை தலையை துண்டித்து உடலை வீசி சென்று இருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக மணிமங்கலம் போலீசாரும் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு ரவுடிகள் கும்பல் பிறந்த நாள் கொண்டாடி அட்டகாசம் செய்தனர்.

    தற்போது ரவுடி ஒருவரை கொலை செய்து தலையை ஆட்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் வீசி சென்று இருப்பது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
    சென்னை அரும்பாக்கம் மற்றும் குன்றத்தூர் அருகே சாலையில் நடந்து சென்ற பெண்களிடம் மர்மநபர்கள் தங்கச்சங்கிலி பறித்துச்சென்ற சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
    சென்னை:

    காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரை அடுத்த இரண்டாம் கட்டளை, ராகவேந்திரா நகர், கம்பர் தெருவை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 61). இவரது மனைவி ஜெயஸ்ரீ (57). நேற்று முன்தினம் இருவரும் அருகில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு நடந்து சென்றனர்.

    அப்போது அவர்களை பின்தொடர்ந்து வந்த மர்மநபர் ஜெயஸ்ரீ அணிந்து இருந்த 5 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு ஓடினார். அவரை அசோக்குமார் மற்றும் அங்கு இருந்தவர்கள் விரட்டினர். ஆனால், அந்த மர்மநபர் அங்கு தயாராக இருந்த தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றார்.

    மர்மநபர் சங்கிலி பறித்ததில் நிலைகுலைந்து கீழே விழுந்த ஜெயஸ்ரீ காயம் அடைந்தார். இந்த நகை பறிப்பு சம்பவம் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அதை வைத்து குன்றத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ஜெயஸ்ரீயிடம் மர்மநபர் நகை பறிப்பதும், இதில் அவர் தடுமாறி கீழே விழுந்ததும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருப்பதை படத்தில் காணலாம்

    இதேபோல், சென்னை பழைய வண்ணாரப்பேட்டை நடராஜன் தெருவை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவரது மனைவி மேனகா (45). நேற்று காலை உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக மேனகா அரும்பாக்கம் வந்தார். அவர் அங்குள்ள திருவள்ளுவர் சாலையில் நடந்து சென்றபோது, 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்களில் பின்னால் இருந்த மர்மநபர் மேனகாவின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறித்தார். அப்போது மேனகா சுதாரித்துக்கொண்டு நகைகளை பிடித்துக்கொண்டார்.

    அந்த நபர் தொடர்ந்து இழுத்ததால் மேனகா நிலை தடுமாறி கீழே விழுந்தார். இருப்பினும், அந்த நபர் தங்கச்சங்கிலியை கையில் பிடித்துக்கொண்டு அவரை சாலையில் தரதரவென்று இழுத்துக்கொண்டே சென்றார். பின்னர் கையில் கிடைத்த 15 பவுன் தங்கச்சங்கிலியுடன் அவரை அப்படியே போட்டுவிட்டு மர்மநபர்கள் தப்பிச்சென்றனர். இதில் அவர் காயம் அடைந்தார்.

    மேனகாவை சாலையில் தரதரவென்று மர்மநபர் இழுத்துச்செல்லும் கொடூர சம்பவம் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதைவைத்து கோயம்பேடு பஸ்நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் சங்கிலி பறிப்பு சம்பவங்களால் சாலையில் நடந்து செல்ல பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். #tamilnews
    காஞ்சீபுரம் நகரத்தில் பெருகி வரும் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் நகரத்தில் பெருகி வரும் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் பொது மக்கள் அவதி அடைந்து வந்தனர்.

    போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை குறித்து போலீசார் ஆலோசனை நடத்தினர். அப்போது காஞ்சீபுரத்தில் போக்குவரத்து மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது.

    இந்த போக்குவரத்து மாற்றம் நாளை முதல் (10-ந் தேதி) அமலுக்கு வருகிறது. இது தொடர்பாக காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு முகிலன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    காஞ்சீபுரம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த காந்தி ரோடு, மூங்கில் மண்டபத்திலிருந்து கீரை மண்டபம் செல்லும் ரோடு ஆகியவை ஒருவழிப்பாதையாக மாற்றப்படுகிறது.

    நாளை (10-ந் தேதி) முதல் காலை 7 மணி முதல் 11 மணி வரையும், மாலை 3 மணியில் இருந்து 9 மணி வரையும் இந்த சாலைகள் ஒருவழிப்பாதையாக செயல் படும்.

    இந்த நேரங்களில் மேட்டுத் தெருவில் இருந்து காந்தி ரோடு வழியாக தேரடிக்கு செல்பவர்கள் மட்டுமே செல்ல முடியும். தேரடியிலிருந்து மேட்டுத் தெருவுக்கு வருபவர்கள் விளக்கடி கோயில் தெரு வழியாக வர வேண்டும்.

    மேலும் பஸ் நிலையத்திலிருந்து கீரை மண்டபம் செல்பவர்கள் மூங்கில் மண்டபம் வந்து காந்தி ரோடு, விளக்கடி கோவில் தெரு வழியாக கீரை மண்டபத்திற்கு செல்ல வேண்டும். இரு சக்கர வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Kancheepuram
    ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் சாலை விதிகளை மீறிய 92 வாகன ஓட்டுனர்களிடம் ரூ.5 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

    ஸ்ரீபெரும்புதூர்:

    சென்னை தெற்கு மண்டல போக்குவரத்து இணை ஆணையர் ராமலிங்கம் உத்தரவின் பேரில், ஸ்ரீபெரும்புதூரில் வட்டார போக்குவரத்து அலுவலர், வெங்கடேஷ்வரன் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் கண்ணன் ஆகியோர் ஸ்ரீபெரும்புதூர் போக்கு வரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட பல இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    சோதனையில் அதிகபாரம் ஏற்றி வந்த 17 சரக்கு வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    மேலும் சாலை விதிகளை மீறிய 92 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதன் மூலம் ரூ.5 லட்சம் வசூலானது.

    ஆலந்தூர் எம்.என்.கே. சாலையில் சுரங்கப் பாதை முதல் காந்தி மார்க்கெட் வரை உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை வியாபாரிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    ஆலந்தூர்:

    ஆலந்தூர் எம்.என்.கே. சாலையில் சுரங்கப் பாதை முதல் காந்தி மார்க்கெட் வரை 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஆக்கிரமிப்பு கடைகள் அதிகம் உள்ளதாக அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன.

    வாகனங்களில் செல்வோர் சிரமப்படுவதாகவும், ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று புகாரில் தெரிவித்திருந்தனர்.

    இதையொட்டி நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஜே.சி.பி. எந்திரங்களுடன் கடைகளை அகற்ற வந்தனர். இதற்கு அங்குள்ள வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.

    ஜே.சி.பி. எந்திரம் முன்பு படுத்து மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் பதட்டமான சூழ்நிலை உருவானது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

    தி.மு.க. பகுதி செயலாளர் குணாளன், பேரவை மாவட்ட தலைவர் சவுந்தர ராஜன், கணேசன் உள்பட ஏராளளான வியாபாரிகள் அங்கு வந்து அதிகாரிகளிடம் சமரச பேச்சு நடத்தினார்கள்.

    அப்போது அதிகாரிகள் கூறுகையில், “6 மாதத்துக்கு முன்பே ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீசு கொடுத்தும் இடத்தை விட்டு நகர மறுக்கிறார்கள். சாலையில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கார், வேன், மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நலன் கருதி ரோட்டை ஆக்கிரமிக்காதீர்கள்” என்று கூறினார்கள்.

    அங்கு பதட்டமான நிலை நிலவுவதால் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். #Tamilnews
    நீலாங்கரையை அடுத்த வெட்டுவாங்கேணியில் சமோசா சாப்பிட்டு விட்டு குளிர்பானம் குடித்த 10-ம் வகுப்பு மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    திருவான்மியூர்:

    நீலாங்கரையை அடுத்த வெட்டுவாங்கேணி, கற்பக விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். ஓட்டல் தொழிலாளி. இவரது மகள் காயத்ரி (வயது 14). சின்ன நீலாங்கரையில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று மாலை அவர் பள்ளி முடிந்து வீட்டுக்கு தோழிகளுடன் நடந்து வந்தார். வரும் வழியில் ஒரு கடையில் சமோசாவும், குளிர் பானமும் அவர்கள் வாங்கினர்.

    பின்னர் சமோசாவை சாப்பிட்டு விட்டு குளிர் பானத்தை ஒரே நேரத்தில் குடிக்க போட்டி நடத்தியதாக கூறப்படுகிறது.

    அப்போது காயத்ரி, சமோசாவை சாப்பிட்டு விட்டு குளிர்பானத்தை குடித்தார். இதில் திடீரென அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. இதனை கண்டு பயந்து போன தோழிகள் கூச்சலிட்டனர்.

    சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் காயத்ரியை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே மூச்சு திணறி காயத்ரி இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    காயத்ரியின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் தோழிகள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இதுகுறித்து நீலாங்கரை போலீசார் விசாரித்து வருகிறார்கள். #Tamilnews
    மதுராந்தகம் அருகே திருமண கோஷ்டியினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் வேன் மற்றும் பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டது. இந்த மோதலால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    செங்கல்பட்டு:

    மதுராந்தகத்தை அடுத்த சூனாம்பேடு அருகே உள்ள அரசூரை சேர்ந்த சுமார் 80-க்கும் மேற்பட்டோர் வேன், பஸ்சில் புதுச்சேரியில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றனர்.

    நிகழ்ச்சி முடிந்ததும் அவர்கள் திரும்பி வந்து கொண்டு இருந்தனர். அரசூர், ஆரவல்லிநகர் அருகே வந்தபோது பஸ்சில் இருந்தவர்களுக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.

    பின்னர் இது கோஷ்டி மோதலாக மாறியது. இருதரப்பினரும் பஸ்சை நிறுத்தி ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.

    சத்தம் கேட்டு வேனில் இருந்தவர்கள் அவர்களை சமாதானப்படுத்த முயன்றனர். அவர்களுக்கும் அடி விழுந்தது.

    மேலும் பஸ்-வேனின் கண்ணாடிகள் கல்வீசி நொறுக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்ததும் சூனாம்பேடு போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் மோதலில் ஈடுபட்டவர்களை தடுக்க முயன்றனர். அப்போது 2 போலீசாரும் தாக்கப்பட்டனர்.

    இதையடுத்து கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு மோதலில் ஈடுபட்டவர்களை கலைந்து போகச் செய்தனர். இந்த மோதலால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது குறித்து சூனாம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து 6 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
    ×