என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேனகாவை மோட்டார் சைக்கிளில் இருந்துகொண்டு மர்மநபர் தரதரவென்று இழுத்துச்சென்ற காட்சி
    X
    மேனகாவை மோட்டார் சைக்கிளில் இருந்துகொண்டு மர்மநபர் தரதரவென்று இழுத்துச்சென்ற காட்சி

    பெண்ணை தரதரவென்று இழுத்துச்சென்று சங்கிலி பறித்த மர்ம நபர்கள்

    சென்னை அரும்பாக்கம் மற்றும் குன்றத்தூர் அருகே சாலையில் நடந்து சென்ற பெண்களிடம் மர்மநபர்கள் தங்கச்சங்கிலி பறித்துச்சென்ற சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
    சென்னை:

    காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரை அடுத்த இரண்டாம் கட்டளை, ராகவேந்திரா நகர், கம்பர் தெருவை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 61). இவரது மனைவி ஜெயஸ்ரீ (57). நேற்று முன்தினம் இருவரும் அருகில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு நடந்து சென்றனர்.

    அப்போது அவர்களை பின்தொடர்ந்து வந்த மர்மநபர் ஜெயஸ்ரீ அணிந்து இருந்த 5 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு ஓடினார். அவரை அசோக்குமார் மற்றும் அங்கு இருந்தவர்கள் விரட்டினர். ஆனால், அந்த மர்மநபர் அங்கு தயாராக இருந்த தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றார்.

    மர்மநபர் சங்கிலி பறித்ததில் நிலைகுலைந்து கீழே விழுந்த ஜெயஸ்ரீ காயம் அடைந்தார். இந்த நகை பறிப்பு சம்பவம் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அதை வைத்து குன்றத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ஜெயஸ்ரீயிடம் மர்மநபர் நகை பறிப்பதும், இதில் அவர் தடுமாறி கீழே விழுந்ததும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருப்பதை படத்தில் காணலாம்

    இதேபோல், சென்னை பழைய வண்ணாரப்பேட்டை நடராஜன் தெருவை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவரது மனைவி மேனகா (45). நேற்று காலை உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக மேனகா அரும்பாக்கம் வந்தார். அவர் அங்குள்ள திருவள்ளுவர் சாலையில் நடந்து சென்றபோது, 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்களில் பின்னால் இருந்த மர்மநபர் மேனகாவின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறித்தார். அப்போது மேனகா சுதாரித்துக்கொண்டு நகைகளை பிடித்துக்கொண்டார்.

    அந்த நபர் தொடர்ந்து இழுத்ததால் மேனகா நிலை தடுமாறி கீழே விழுந்தார். இருப்பினும், அந்த நபர் தங்கச்சங்கிலியை கையில் பிடித்துக்கொண்டு அவரை சாலையில் தரதரவென்று இழுத்துக்கொண்டே சென்றார். பின்னர் கையில் கிடைத்த 15 பவுன் தங்கச்சங்கிலியுடன் அவரை அப்படியே போட்டுவிட்டு மர்மநபர்கள் தப்பிச்சென்றனர். இதில் அவர் காயம் அடைந்தார்.

    மேனகாவை சாலையில் தரதரவென்று மர்மநபர் இழுத்துச்செல்லும் கொடூர சம்பவம் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதைவைத்து கோயம்பேடு பஸ்நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வரும் சங்கிலி பறிப்பு சம்பவங்களால் சாலையில் நடந்து செல்ல பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். #tamilnews
    Next Story
    ×