என் மலர்
செய்திகள்

பல்கலைக்கழகத்தில் ஊழல்: நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்- வைகோ பேட்டி
ஆலந்தூர்:
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மதுரை செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
ரெயில்வே பட்ஜெட்டில் தமிழகம் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி தினத்தந்தி தலையங்கத்தில் புள்ளி விவரங்களை தந்துள்ளது. கர்நாடகாவிற்கு கடந்த ஆண்டை விட அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ரெயில்வே பட்ஜெட் தனியாக இருந்ததை பொது பட்ஜெட்டுடன் சேர்த்துள்ளார்கள். பட்ஜெட்டை பொறுத்தவரை தமிழகத்திற்கு யானை பசிக்கு சோலைப்பொறியாக உள்ளது. ஆந்திராவில் சிறப்பு பொருளாதார அந்தஸ்து வழங்க நிதி தரவில்லை என்று கூட்டணியில் உள்ள தெலுங்கு தேச கட்சி நாடாளு மன்றத்தில் கடுமையாக போராடி வருகிறது.
தமிழகத்திற்கு மக்களவையில் நாதி இல்லாமல் போனது வருத்தம் அளிக்கிறது. தமிழகத்தை மோடி அரசு நீட்தேர்வு, மீத்தேன், காவிரி நீர், ஹைட்ரோ கார்பன் போன்ற எல்லா துறையையும் வஞ்சித்து வருகிறது.
நீட் தேர்வில் அந்தந்த மாநில பாடத்திட்டத்தில் தேர்வு நடத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது. அப்படித்தான் நடத்த வேண்டும். ஆனால் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் நடத்துவது ஓர வஞ்சணையானது. இது மேல்தட்டு குடும்பங்களில் இருந்து படிப்பவர்களுக்கு மட்டும் வாய்ப்பு ஏற்படுத்தி விடும்.
தமிழகத்தில் புதிதாக சி.பி.எஸ்.சி. பள்ளிகளை திறக்க அனுமதிப்பது எதிர் காலத்தை பாழாக்க கூடியது. கல்வித்துறை மிகுந்த கவலை தருகிறது.
பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர், பேராசிரியர்கள் நியமனத்தில் கோடிக் கணக்கில் ஊழல் நடந்திருப்பது வேதனை அளிக்கிறது. இதனை ஓய்வு பெற்ற நீதிபதி அல்லது கல்வித் துறையில் நேர்மையான அதிகாரியை வைத்து விசாரணை நடத்த வேண்டும்.
பேருந்து கட்டணம் உயர்வால் ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளர். ஆனால் இந்த அரசு அதைப்பற்றி கவலைப்பட வில்லை. போக்குவரத்து துறை நாசமானதற்கு ஊழலும் நிர்வாக சீர்கேடும் தான் காரணம். சட்ட சபையில் ஜெயலலிதா படம் வைக்கப்பட்டது குறித்து கருத்து கூற விரும்பவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.






