என் மலர்
காஞ்சிபுரம்
ஸ்ரீபெரும்புதூரை அடுத்த புதுநல்லூர், புதுநகர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 27). இருங் காட்டு கோட்டை பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார்.
இவர் அதே பகுதியை சேர்ந்த பானுபிரியா (24) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை. சதீஷ் மாமியார் வீட்டில் தங்கி இருதார்.
குழந்தை இல்லாதது தொடர்பாக சதீசுக்கும் மனைவி பானுபிரியாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று மாமியார் கடைக்கு சென்று இருந்த போது கணவன்-மனைவிக்கு இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த சதீஷ், மனைவி பானுபிரியாவை சரமாரியாக தாக்கி பெல்டால் கழுத்தை நெறித்தார். பின்னர் அருகே இருந்த கத்தியால் பானு பிரியாவின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் டி.எஸ்.பி. (பொறுப்பு) பஞ்சாட்சரம், இன்ஸ்பெக்டர் அசோகன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் பானு பிரியா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் சோமங்கலம் பகுதியில் பதுங்கி இருந்த சதீசை போலீசார் கைது செய்தனர். அவரை ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள் குடும்பத்துக்கு நிவாரண நிதியை ரூ.20 லட்சமாக உயர்த்தி இருப்பது பாராட்டுக்குரியது. பயங்கரவாதிகள் பஸ்சுக்கு தீ வைத்ததில் ஒரு பெண் பலியாகி இருக்கிறார். அந்த குடும்பத்துக்கு என்ன செய்யப்போகிறார்கள்.
பிரிவினைவாதம், பயங்கரவாதத்துக்கு எதிராக குரல் கொடுக்க தி.மு.க. தயங்குவது ஏன்? பயங்கரவாதிகளையும், தீவிரவாதிகளையும் தண்டிக்க வேண்டும் என்று சொல்லக்கூட தி.மு.க. தயங்குவது ஏன் என்று புரியவில்லை.
தமிழகத்தில் நடந்து வரும் பல விஷயங்களில் மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
தி.மு.க. எதிர்க்கட்சி என்கின்ற அந்தஸ்தை இழந்து நிற்கிறது. முக்கியமான பொருள் பற்றி சட்டமன்றத்தில் விவாதம் நடந்து கொண்டிருக்கும் போது கூட்டத்தை புறக்கணித்து விட்டு ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி கொண்டிருக்கிறார்கள்.
அரசியல் நாடகத்தை அரங்கேற்றி போலியான சட்டமன்ற கூட்டங்களை கட்சி அலுவலகத்திலும் திருச்சி, சேலம், திருநெல்வேலி நகரங்களிலும் நடத்துகிறார்கள். இதற்காகவா மக்கள் ஓட்டு போட்டு அனுப்பினார்கள்.

சட்டசபை கூட்டத்தில் கலந்து கொண்டு விவாதங்கள் நடத்துவார்கள் என்றால் ஸ்டெர்லைட் பிரச்சனைக்கு தி.மு.க.வும், காங்கிரசும் சமஅளவு காரணமாக இருந்ததை ஆளும் கட்சியால் வெளிக்காட்டப்படும் ஆபத்து இருக்கிறது.
அ.தி.மு.க. செய்த தவறுகளை தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முன்னெடுக்க வேண்டிய ஆபத்தும் உள்ளது. இது சம்பந்தப்பட்டவர்களுக்கு நன்கு தெரியும்.
அதனால்தான் அவர்களுக்குள் இப்படி ஒரு உடன்பாட்டை போட்டு நாடகம் ஆடுகிறார்கள். தி.மு.க. தனது போலித்தனமான அரசியல் விளையாட்டுக்களை விட்டு விட்டு சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சனைகளை எதிரொலிப்பது மட்டுமே வாக்களித்த மக்களுக்கு செய்யும் நன்றிக்கடனாக இருக்கும்.
தவறுகளை திரைக்குப் பின்னால் மறைக்கும் முயற்சிதான் இது என்பதை தமிழக மக்கள் புரிந்து கொள்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். #ADMK #DMK #PonRadhakrishnan
பழவந்தாங்கலை அடுத்த நங்கநல்லூர் நேரு காலனி, 21-வது தெருவில் வசித்து வருபவர் பாலவேலாயுதம். ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரி.
இவர் வீட்டின் ஒரு பகுதியை இடித்து புதிதாக கட்டி வந்தார். இதையடுத்து பாலவேலாயுதம் அதே பகுதி பி.வி. நகரில் உள்ள மகள் வீட்டில் இரவில் குடும்பத்துடன் தங்குவது வழக்கம்.
இந்த நிலையில் இன்று காலை அவர் கட்டுமான பணிகளை பார்வையிடுவதற்காக வீட்டுக்கு வந்தார். அப்போது முதல் மாடியில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த 100 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் ரொக்கம் கொள்ளை போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் ஆட்கள் தங்காததை அறிந்து மர்ம கும்பல் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.
இது குறித்து பழவந்தாங்கல் போலீசில் புகார் செய்யப்பட்டது. வீட்டில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் இதில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இது தொடர்பாக கட்டுமான தொழிலாளர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாகண்ணு மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை விவசாயத்திற்கு பயன்படுத்துவதை தடைசெய்யக்கோரி மார்ச் 1-ந் தேதி முதல் 100 நாட்கள் குமரிமுதல் கோட்டை வரை 32 மாவட்டங்கள் வழியாக விவசாயிகள் விழிப்புணர்வு பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகம் எண்ணத்தூர், உத்திரமேரூர், வேடந்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்ட அவர் காஞ்சீபுரம் வந்தார்.
பின்னர் அய்யாக்கண்ணு மாவட்ட கலெக்டர் பொன்னையாவை சந்தித்து பாலாற்றில் 3 கிலோ மீட்டருக்கு ஒன்று என தடுப்பணை கள் கட்ட வேண்டும், மாவட் டத்தில் உள்ள அனைத்து சீமைகருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவினை அளித்தார்.
அப்போது அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-
விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க யாரும் முயற்சி மேற்கொள்ளவில்லை. காலம்காலமாக அரசியல் வாதிகள் விவசாயிகளை அடிமை போல் வைத்துள்ளனர்.
அ.தி.மு.க, தி.மு.க, விடுதலை சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமை கட்சி என எந்த ஒரு அரசியல் கட்சியும் விவசாயிகளுக்காக துணை நிற்கவில்லை.
மத்திய மாநில அரசுகளின் எந்தவொரு திட்டத்திற்காகவும், விவசாய நிலங்களை கையகப்படுத்த விட மாட்டோம். மீறி கையகப்படுத்தினால் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் சென்று நீதியை பெறுவோம்.
நடிகர் ரஜினிகாந்த் நதிகள் இணைப்பிற்காக தருவேன் என்று சொன்ன 1 கோடி ரூபாயை என்னிடமோ அல்லது மத்திய அரசிடமோ இதுவரை தரவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக அய்யாக்கண்ணு கலெக்டர் அலுவலக வளாகத்தில் பொது மக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். அவருடன் தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில துணைபொதுச் செயலாளர் தீனன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். #Tamilnews
மாமல்லபுரம் அருகே உள்ள வடநெம்மேலி கிழக்கு கடற்கரை சாலையில் முதலைப்பண்ணை உள்ளது.
இங்கு 25 வகை முதலைகளும், ஆமைகள், பாம்புகள் உட்பட 35 வகை ஊர்வன விலங்குகளும் உள்ளன.
இதனை காண சுற்றுலா பயணிகளுக்கு திங்கட்கிழமையை தவிர்த்து மற்ற நாட்களில் பகலில் மட்டும் அணுமதி வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் முதல் முறையாக வடநெம்மேலி முதலை பண்ணையில் சுற்றுலா பயணிகள் இரவு 7 மணி முதல் 8 மணி வரை கையில் டார்ச் லைட்டுடன் சென்று முதலைகளை பார்க்க சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு ரூ.100-ம், பெரியவர்களுக்கு ரூ.200-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதற்கு சுற்றுலா பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது. #Tamilnews
தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தூத்துக்குடி சென்று உள்ளார். அவரும், அமைச்சர்களும் முன்கூட்டியே சென்று இருக்க வேண்டும். அங்குள்ள மக்களுக்கு முழு பாதுகாப்பு மற்றும் அச்ச உணர்வை போக்குவது அரசின் கடமை.
மக்களுக்கு அரசு பாதுகாப்பு தரும் என்ற எண்ணம் இல்லாததினால் தான் போராட்டங்கள் பிரிவினைவாதிகள் கையில் சென்று விடுகின்றன.
துணை முதலமைச்சர், தூத்துக்குடி சென்று இருப்பது ஆரோக்கியமானது தான். அது கண்துடைப்பு என்று சொல்ல முடியாது.
இயல்பாக நடப்பதை கூட எதிர்க்கட்சிகள் அரசியலாக்கி மக்கள் மனதில் பதியவைத்து தமிழ்நாட்டை போராட்ட களமாக்கி வருகின்றனர். நாளை சட்டமன்றம் கூட இருக்கிறது. வழக்கம்போல் தி.மு.க. வெளிநடப்பு செய்யும். சட்டமன்ற கூட்டமோ, அலுவல் கூட்டமோ எதுவாக இருந்தாலும் அதில் ஆக்கப்பூர்வமாக நடக்க வேண்டும் என்று ஸ்டாலினை கேட்டுக் கொள்கிறேன்.

மு.க.ஸ்டாலின் எப்போது முதலமைச்சரை கீழே இறக்கலாம், தான் எப்போது முதலமைச்சர் ஆகலாம் என்று நினைத்து போராட்டத்தை நடத்த கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.#ThoothukudiProtest #sterlite #tamilisaisoundararajan
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் அடுத்த ஓரிக்கை பகுதியில் அரசு டாஸ்மாக் குடோன் உள்ளது. மதுபான உற்பத்தி தொழிற்சாலைகளில் இருந்து எடுத்து வரப்படும் மதுபான பாட்டில்கள் இங்கிருந்து வாகனங்கள் மூலம் அரசு மதுபானக் கடைகளுக்கு அனுப்பி வைப்பது வழக்கம்.
நேற்று படப்பை, வாலாஜா பாத் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து லாரிகளில் மதுபான வகைகள் கொண்டு வரப்பட்டது. மதுபாட்டில்களுடன் லாரிகள் குடோனில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.
இந்த நிலையில் நள்ளிரவில் டாஸ்மாக் குடோனுக்கு மர்ம நபர்கள் வந்தனர். திடீரென அவர்கள் அங்கு மதுபாட்டில்களுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 லாரிகளுக்கு தீ வைத்து தப்பி ஓடினர்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
எனினும் 3 லாரிகளும் அதில் இருந்த ரூ. 80 லட்சம் மதிப்பிலான மதுபான பாட்டில்கள் முற்றிலும் எரிந்து நாசமாயின. தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் அங்கிருந்த மற்ற இடங்களுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக இந்த தீ வைப்பு சம்பவம் நடந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
அரசு டாஸ்மாக் குடோனில் மதுபான லாரிகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து காஞ்சீபுரம் தாலுக்கா இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் வழக்கு பதிவு செய்து தீ வைத்து மர்ம நபர்களை தேடி வருகிறார். #Tasmac #Tasmacgodownfire
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு கே.கே. தெருவை சேர்ந்தவர் உமாபதி. இவரது மகன் நவீன்குமார் (வயது 17). நேற்று முன்தினம் நண்பர்களுடன் வெளியில் சென்ற நவீன்குமார். பின்னர் திரும்பி வரவில்லை. அவரை குடும்பத்தினர் தேடி வந்தனர்.
இந்த நிலையில் தட்டான் மலை பகுதியில் கை, கால்கள் கயிற்றால் கட்டப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
அவரது கழுத்து அறுக்கப்பட்டு இருந்தது. உடலில் பல இடங்களில் வெட்டுக் காயங்கள் காணப்பட்டன. செங்கல்பட்டு டவுன் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
இது தொடர்பாக நவீன் குமாரின் நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த பிரவீன்குமார், அபிஷேக் குமார் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இது குறித்து போலீசார் கூறும்போது, கொள்ளையடித்த நகையை பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் நவீன் குமார் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்றும் விசாரணை நடக்கிறது என்றார்.
கொலையுண்ட நவீன் குமார் மற்றும் பிடிபட்ட அவரது நண்பர்கள் மீது பழைய குற்ற வழக்குகள் எதுவும் இல்லை. எனவே மனல் கடத்தல் கும்பலுடன் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்ததா? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. #tamilnews
சோழிங்கநல்லூர்:
சென்னை கண்ணகி நகர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் விமல் (வயது23). பெயிண்டராக வேலை செய்து வந்தார். கடந்த 6 வருடங்களாக அதே பகுதியில் வசித்து வந்தார்.
சென்னை காரப்பாக்கத்தில் 2 நாட்களுக்கு முன்பு திருமண நிகழ்ச்சி நடந்தது. இதில் விமல் பங்கேற்றார். அப்போது கண்ணகி நகரை சேர்ந்த வாலிபர்கள் சிலர் திருமண நிகழ்ச்சியில் குடிபோதையில் ஆட்டம் போட்டனர். அப்போது விமலுக்கும் அவர்களுக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
நேற்று இரவு 8.30 மணியளவில் விமல் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது கண்ணகி நகர் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் அவரை மது அருந்தலாம் என்று எழுப்பிச் சென்றார். இருவரும் அங்குள்ள ஏரிக் கரை பகுதிக்கு சென்றனர்.
அப்போது திருமண வீட்டில் நடந்த மோதல் முன்விரோதம் காரணமாக 5 பேர் கொண்ட கும்பல் விமல் கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்தனர். பின்னர் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விமல் கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கொலையாளிகளை தேடி வருகிறார்கள். #tamilnews
அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான டி.டி.வி.தினகரன், சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தூத்துக்குடி மக்கள் ஸ்டெர்லைட் ஆலையை மூடாததால் கொதித்து போய் உள்ளனர். கலெக்டரிடம் மனுக்களை தரச்சென்ற எங்களை போலீசார் சுட்டு கொன்று உள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடினால்தான் பழைய நிலைக்கு திரும்புவோம். இல்லை என்றால் எங்களை சுட்டு கொன்றுவிடுங்கள் என்று கூறுகின்றனர்.
ஆலையை மூடுவதற்கான உத்தரவாதத்தை அரசு தரவேண்டும். தூத்துக்குடி கலெக்டர் சரியாக கையாளாததால்தான் இந்த பிரச்சினை ஏற்பட்டதாக நினைக்கின்றனர். துப்பாக்கி சூட்டிற்கு யார் உத்தரவிட்டது?.
காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து விரைவில் அரசிதழில் வெளியிட மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இதில் மத்திய அரசு காலதாமதம் செய்யக்கூடாது.
ஜெயலலிதா மருத்துவமனையில் பேசிய ஆடியோவை தற்போது விசாரணை ஆணையம் வெளியிட காரணம் என்ன?. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை மறைக்கவே இவ்வாறு அரசு செயல்பட்டு உள்ளது. இதுபற்றி நீதிபதி ஆறுமுகசாமியிடம்தான் கேட்கவேண்டும்.
இந்த அரசு மீது தூத்துக்குடி மக்கள் கோபமாக உள்ளனர். இது தெரியாமல் முதல்-அமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் விஷப்பரீட்சையில் இறங்க பார்க்கிறார்கள். போலீசாருடன் செல்வது விபரீத விளைவுகள் ஏற்படும். ஆலையை மூடிவிட்டு மக்களை சந்திக்க தூத்துக்குடி சென்றால் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு நல்லது.
இவ்வாறு அவர் கூறினார். #jayalalithadeath
சென்னை ராயபுரத்தைச் சேர்ந்தவர் இப்ராகீம்(வயது 26). இவர், சொந்தமாக தொழில் செய்வதற்காக தன்னுடன் கல்லூரியில் ஒன்றாக படித்த சென்னை மண்ணடியைச் சேர்ந்த அமீன்(26) என்பவரிடம் கடந்த 2016-ம் ஆண்டு ரூ.20 லட்சத்தை கடனாக பெற்றதாகவும், அதில் ரூ.11 லட்சத்தை இப்ராகீம் திருப்பி கொடுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில் தொழிலில் நஷ்டம் அடைந்ததால் மீதம் உள்ள ரூ.9 லட்சம் கடனை திருப்பி தராமல் இப்ராகீம், மலேசியாவுக்கு சென்றுவிட்டதாக தெரிகிறது. ஓராண்டு மலேசியாவில் இருந்த இப்ராகீம், தனது குடும்பத்தினரை பார்க்க சென்னைக்கு திரும்பி வந்தார்.
இதை அறிந்த அமீன், தனது தம்பி தமீம்(25), நண்பர் சாகுல் உள்பட 3 பேருடன் காரில் விமான நிலையத்துக்கு வந்து காத்திருந்தார். அப்போது விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த இப்ராகீம், விமான நிலைய மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு நடந்து சென்றபோது, அவரை அமீன் தடுத்து நிறுத்தி காரில் ஏற்றி, தாம்பரத்துக்கு கடத்திச்சென்றார்.
அங்கு தனக்கு தரவேண்டிய ரூ.9 லட்சம் பணத்தை திரும்பி தரவேண்டும் என்று கேட்டு மிரட்டினார். பின்னர் இப்ராகீமின் தந்தை சாகுல்அமீத்திற்கு போன் செய்த அவர், மலேசியாவில் இருந்து சென்னைக்கு வந்தபோது சுங்க இலாகா அதிகாரிகள் பிடித்து வைத்து விட்டார்கள். உடனே ரூ.9 லட்சம் பணத்தை கொண்டு வரவேண்டும் என்று தந்தையிடம் கூறும்படி இப்ராகீமிடம் வற்புறுத்தினார்.
ஆனால் செல்போனை வாங்கி பேசிய இப்ராகீம், தான் கடத்தப்பட்டு இருப்பதாகவும், ரூ.9 லட்சம் பணம் கேட்பதாகவும் தந்தையிடம் கூறினார்.
மேலும் பணத்தை தராமல் போலீசுக்கு சென்றால் இப்ராகீமை கொன்றுவிடுவதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
அதற்கு இப்ராகீமின் தந்தை சாகுல்அமீது, தற்போது ரூ.9 லட்சம் இல்லை. ரூ.3 லட்சம் மட்டும் தருவதாக ஒப்புக்கொண்டார். அந்த பணத்தை தாம்பரம் கொண்டுவருமாறு கூறினர். அதற்கு சாகுல்அமீது, அங்கு வரமுடியாது. திருவல்லிகேணிக்கு வந்தால் பணத்தை தருவதாக கூறினார்.
பின்னர் விமான நிலைய மெட்ரோ ரெயில் நிலையம் அருகே வருமாறு கூறிய சாகுல்அமீது, இதுபற்றி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.
இதையடுத்து தாம்பரத்தில் இருந்து காரில் விமான நிலைய மெட்ரோ ரெயில் நிலையம் வந்தனர். பின்னர் தனது தம்பி தமீமுடன் இப்ராகீமை அனுப்பி வைத்து, பணத்தை வாங்கி வரும்படி கூறிய அமீன் உள்பட 3 பேரும் காரில் இருந்தனர். அதன்படி அங்கு சென்ற தமீமை அங்கிருந்த போலீசார் சுற்றி வளைத்து கைது செய்து, இப்ராகீமை பத்திரமாக மீட்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அமீன் உள்பட 3 பேரும் அங்கிருந்து காரில் தப்பிச்சென்று விட்டனர். இது பற்றி விமான நிலைய போலீஸ் உதவி கமிஷனர் விஜயகுமார், இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய அமீன் உள்பட 3 பேரை தேடி வருகின்றனர். #tamilnews






