என் மலர்
காஞ்சிபுரம்
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்ட பயிற்சி முகாம் கலெக்டர் பொன்னையா தலைமையில் நடைபெற்றது.
பயிற்சியின் போது கருவூல கணக்கு துறை முதன்மை செயலாளர் தென்காசி ஜவகர் பேசியதாவது:-
நிதி மேலாண்மை தொடர்பான அரசு பணிகள் திறம்பட நடைபெற ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தினை செயல்படுத்த அரசு 288.91 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வழங்கியுள்ளது.
இத்திட்டம் செயல்படுத்தப்படும் அலுவலகங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் மென்பொருள் உருவாக்கும் பணிகளும் தற்சமயம் முடிவடைந்துள்ளன. இத்திட்டம் மூலம் சம்பள பட்டியல் மற்றும் இதர பட்டியல்களை கருவூலத்தில் சமர்பிக்க இயலும்.
இதன் மூலம் நிதி மற்றும் மனிதவள மேலாண்மை நிர்வாகம் சிறப்பாக நடைபெற வழிவகுக்கும். தேவையற்ற காலதாமதமும், முறைகேடுகளும் தடுக்கப்படும். அரசு பணியாளர்களின் பணி பதிவேடு எளிமையான முறையில் கணினி மயமாக்கப்பட்டு சம்பள பட்டியல், பதவி உயர்வு, மாறுதல்கள், விடுப்பு உள்ளிட்டவைகள் உடனுக்குடன் பதியப்படும்.
இத்திட்டம் வரும் ஆகஸ்டு மாதம் முதல் நடைமுறைபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அரசு பணியில் சேர்ந்தது முதல் ஓய்வு பெறும் வரை அரசு பணியாளர்களின் பணி வரலாறு முழுமையாக இத்திட்டதின் மூலம் கணினிமயமாக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில், சென்னை கருவூல மற்றும் கணக்கு துறை கூடுதல் இயக்குனர் மகாபாரதி, கருவூலம் மற்றும் கணக்குதுறை மண் டல இணை இயக்குனர் திருஞானசம்பந்தம், கைத்தறி மற்றும் துணி நூல் துறை இணை இயக்குனர் செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய ஆணையத்தின் சார்பில் ‘உலக சுற்றுச்சூழல் தின விழா’ மீனம்பாக்கத்தில் உள்ள விமானநிலையத்துக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் கொண்டாடப்பட்டது.
இதில் தென் மண்டல ஆணையக அதிகாரி ஸ்ரீகுமார், சென்னை விமான நிலைய ஆணையக இயக்குனர் சந்திரமவுலி, வனத்துறை அதிகாரி ரவீந்திரநாத் உபதாய்யா, மத்திய தொழிற்படை போலீஸ் அதிகாரி பொன்னியின் செல்வன் உள்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
விழாவில், இயற்கை வளங்கள் அழிக்கப்படுவது உள்பட பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் பல்வேறு தீமைகள் குறித்து விழிப்புணர்வு நாடகம் நடத்தப்பட்டது. மேலும் 21 தினங்களுக்கு பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்தல் பற்றி உறுதிமொழி ஏற்கப்பட்டது.
பின்னர் விமான நிலைய இயக்குனர் சந்திரமவுலி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு நடத்தப்பட்டது. நம்முடைய வாழ்க்கையில் பிளாஸ்டிக்கை எப்படி தவிர்ப்பது என ஆராயப்பட்டது. 21 தினங்கள் ஒரு பழக்கத்தை தொடர்ந்து கடைபிடித்தால் அது நிரந்தர பழக்கமாக மாறிவிடும். எனவே 21 தினங்களுக்கு பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது தொடர்பாக விழாவில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
விமான நிலையங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டை படிப்படியாக தவிர்ப்பது பற்றியும், முதற்கட்டமாக மறுசுழற்சி இல்லாத பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கலாம் என்றும் இந்திய விமான நிலைய ஆணையக தலைவர் அறிவுறுத்தி உள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் பல்வேறு விமான நிறுவனங்கள் மற்றும் பல தரப்பட்ட நிறுவனங்கள் உள்ளன. பிளாஸ்டிக் ஒழிப்புக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு தரவேண்டும். வருகிற ஆகஸ்டு 15-ந் தேதிக்குள் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக தவிர்த்து, சென்னை விமானநிலையத்தை பிளாஸ்டிக் இல்லா விமான நிலையமாக மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
காஞ்சீபுரம் ரெயில்வே சாலையில் அரசு பொது மருத்துவமனை, பழைய ரெயில் நிலையம், மின் வாரிய அலுவலகம் அமைந்துள்ளது. இதனால் அப்பகுதி எப்போதும் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும்.
மேலும் தாம்பரம், செங்கல்பட்டு, உத்திரமேரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் பஸ் நிலையத்தில் இருந்து இந்த சாலை வழியாகவே இயக்கப்படுகின்றன.
நகரின் முக்கிய பகுதியாக விளங்கும் இந்த சாலையில், ராஜாஜி மார்கெட் அருகே அரசு டாஸ்மாக் கடை மற்றும் பார் உள்ளது.
மாலை நேரங்களில் மதுக்கடைக்கு வருபவர்கள் தங்களது இருசக்கர வாகனங்களை தாறுமாறாக நிறுத்திவிட்டு செல்கின்றனர். எனவே இப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
மேலும் அரசு மருத்துவமனைக்கு இந்த வழியாக அடிக்கடி 108 ஆம்புலன்சுகள் சென்று வரும்போது வாகனங்களால் நெரிசலில் சிக்கி கொள்கின்றன.
எனவே பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் உள்ள இந்த டாஸ் மாக்கடைகளை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது. ‘‘முக்கிய சாலையால் உள்ள டாஸ்மாக் கடையில் பொது மக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.
குடிமகன்கள் தினமும் பிரச்சினையில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே இந்த மதுக்கடையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அகற்ற வேண்டும்’ என்றனர். #tamilnews
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் கல்ப்பாக்கம் மற்றும் சுற்று வட்டார கிராம பகுதி மக்களின் பயன்பாட்டுக்காக புதிய ஆம்புலன்சு வேன் வழங்கும் நிகழ்ச்சி கல்ப்பாக்கத்தில் நடைபெற்றது.
இதில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சமூக வலைதளத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசையை விமர்சித்த பெண்ணை காவல்துறையினர் சைபர் கிரைம் மூலம் உடனடியாக கைது செய்துள்ளனர்.
ஆனால் பெண் பத்திரிகையாளரை இழிவாக பேசிய நடிகர் எஸ்.வி.சேகரை இன்னும் கைது செய்யாதது ஏன்? அவர் மைலாப்பூர் பகுதி கடைகளுக்கு துணிச்சலாக போலீஸ் பாதுகாப்புடன் காரில் சென்று வருவது போலீசுக்கு தெரியவில்லையா?.
இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews
கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர்கள் குடியிருக்கும் நகரிய வளாகத்தின் வீடுகளின் எதிரே நிறுத்தி வைக்கப்படும் மோட்டார் சைக்கிள்களை கள்ளச்சாவி போட்டும் பூட்டுகளை உடைத்தும் மர்ம நபர்கள் திருடிச் செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வந்தது.
இது குறித்து கல்பாக்கம், சதுரங்கப்பட்டினம் போலீஸ் நிலையங்களில் ஏராளமான புகார்கள் வந்தன.
இதையடுத்து மாமல்லபுரம் டி.எஸ்.பி. சுப்பாராஜ் உத்தரவின் பேரில் மோட்டார் சைக்கிள் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் பைக் மெக்கானிக் ஒருவர் கொடுத்த தகவலின்படி செய்யூர் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார், கபால், கமலேஷ் ஆகிய 3 பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
அவர்கள் கல்ப்பாக்கம் நகரியத்தின் வளாக பகுதியில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்படாத பகுதிகளை நோட்டமிட்டு மோட்டார் சைக்கிளை திருடி வந்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 7 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. #tamilnews
சென்னை வேளச்சேரி விஜயநகர் 7-வது தெருவில் வசித்து வருபவர் அழகர்சாமி. தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் வெளிநாடு சென்று இருந்தார். சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று வீடு திரும்பினார். வீட்டிற்குள் நுழைந்தபோது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 12 பவுன் நகை, ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள், ரூ.2 லட்சம் ரொக்கப்பணம் ஆகியவை கொள்ளை போய் இருந்தது. அடுக்குமாடி குடியிருப்பில் அடுத்தடுத்து வீடுகள் உள்ள இடத்தில் இந்த துணிகர கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.
டாக்டர் வெளிநாடு செல்வதை நோட்டமிட்ட கொள்ளையர்கள் வீட்டிற்குள் புகுந்து கைவரிசை காட்டியுள்ளனர்.
இதுகுறித்து வேளச்சேரி போலீசில் டாக்டர் அழகர் சாமி புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். டாக்டர் வீட்டில் கைவரிசை காட்டிய கொள்ளை கும்பலை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். #Tamilnews
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன், கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமியை சந்திப்பதற்காக நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் பெங்களூரு புறப்பட்டு சென்றார். முன்னதாக அவர், சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
கர்நாடக-தமிழக ஒற்றுமைக்கும், காவிரி பற்றியும் எனது பேச்சு இருக்கும். அதையும் விட சில பேச்சுவார்த்தை கர்நாடக முதல்-மந்திரியுடன் பேச வேண்டியது இருக்கிறது. அதற்காகத்தான் பெங்களூரு செல்கிறேன். ஆனால் கண்டிப்பாக சினிமா சம்பந்தப்பட்ட விஷயங்கள் பேச மாட்டேன்.
காவிரி தண்ணீரை விட வலியுறுத்தும் பலம் என்னிடம் இல்லை. நான் மக்களின் பிரதிநிதியாக கருத்துகளை எடுத்து சொல்ல முடியும். அவர் கூறும் கருத்துகளை இங்கு வந்து சொல்ல முடியும். காவிரி விவகாரத்தில் அரசியல் வேண்டாம் என்பது என்னுடைய கருத்து. அந்த கருத்தின் அடிப்படையில்தான் என்னுடைய பயணத்தை நோக்கி செல்கிறேன்.
கர்நாடக முதல்-மந்திரியுடன் நடக்கும் பேச்சுவார்த்தை எப்படி அமையும்? நம்முடைய கோரிக்கை என்ன? என்று ஊருக்கே தெரியும். இரு மாநிலங்களுக்கும் தெரியும். நமக்கு என்ன தேவை. அவர்களால் என்ன இயலும் என்பதை பேச உள்ளேன்.
சட்டமன்றத்துக்கு மீண்டும் தி.மு.க. செல்ல முடிவு செய்து இருப்பது நல்ல முடிவாகும். இது வரவேற்கத்தக்கது. தூத்துக்குடி சம்பவம் பற்றி நடிகர் ரஜினிகாந்த் மீது செய்யப்படுவது விமர்சனம். அது அவருடைய கருத்து. நான் மக்களின் கருத்துகளை மக்களின் பிரதிநிதியாக பிரதிபலிக்கிறேன். நான் மக்களிடம் கேட்டு சொன்ன கருத்து ஒட்டுமொத்த மக்களின் எதிரொலிதான். நானாக எந்த கருத்தையும் சொல்லவில்லை.
கர்நாடகாவில் படங்கள் வெளியிடுவது குறித்து சம்பந்தப்பட்ட சினிமா தயாரிப்பாளர்கள், வர்த்தக அமைப்புகள் பார்த்துக்கொள்ள வேண்டும். அதை வியாபாரம் செய்பவர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். இப்பொழுது நான் வியாபார மன நிலையில் இல்லை. அது இப்போது முக்கியமில்லை என்று நினைக்கிறேன். அதை சம்பந்தப்பட்ட வியாபாரிகள் பார்த்துக்கொள்வார்கள். அவர்களுக்கு இடையூறு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அரசியல்வாதிகளின் பொறுப்பு.

காந்தி இறந்தபின் பிறந்தவன் நான். போராடுவதில் ஒரு தன்மை இருக்க வேண்டும். அந்த தன்மை என்ன? என்று காந்தியிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும். கத்தி, வாள், துப்பாக்கி ஆகியவற்றை வைத்து செய்வது போராட்டம் கிடையாது.
துப்பாக்கி வந்தாலும் திறந்த மனதுடன் ஏற்கும் தன்மையை தூத்துக்குடியில் பார்த்தோம். தூத்துக்குடி போராட்டம் நல்ல ஒரு பாதையாக நினைக்கிறேன். அதில் வன்முறை இருந்திருந்தால் அதை இன்னும் நாம் குறைத்துக்கொள்ள வேண்டும். போராட்டங்களில் அந்த கறைக்கூட பதியாமல் இருக்க வேண்டும். போராட்டங்களை நிறுத்தமாட்டார்கள். நிறுத்தவும் கூடாது.
ஸ்டெர்லைட் ஆலை தனது எல்லையை கடந்து பேராசையினால் பல தவறுகளை செய்து இருக்கிறது. பெரிய ஆலைகள் வர வேண்டும் என்பது காந்தி, பாரதியின் கனவுகள். ஆனால் அவை மண்ணின் சட்டங்களை மதித்து நடக்கும் ஆலைகளாக இருக்க வேண்டும்.
தி.மு.க. தலைவரை எப்போதும் தள்ளி நின்று வாழ்த்துகின்ற ரசிகன் நான். அந்த கூட்டத்தில் பார்த்திருக்க முடியாது. பிறந்த நாள் முடிந்தபின்னர் நான் சென்று வாழ்த்தி இருக்கிறேன். இந்த முறையும் அப்படித்தான் போய் வாழ்த்துவேன்.
தூத்துக்குடியில் வீடு, வீடாக சென்று சோதனை நடப்பதாக சொல்கின்றனர். ஆனால் உண்மையான தகவல் என்ன என்று தெரியாமல் பரப்பக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார். #Sterliteprotest #Kamalhassan
செங்கல்பட்டு:
செங்கல்பட்டை அடுத்த ரெட்டிபாளையம் நேரு தெருவை சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி. இவரது மனைவி அபிதா, மகன்கள் சரவணன் (14), பிரவீன் (8), மகள் பிரவீனா (11).
நேற்று இரவு அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். இன்று அதிகாலை திடீரென்று வீட்டின் மேற்கூரை கான்கிரீட் இடிந்து தூங்கி கொண்டிருந்தவர்கள் மீது இடிபாடுகள் விழுந்தது. இதில் பிதா, பள்ளி மாணவி பிரவீனா, சிறுவன் பிரவீன் காயம் அடைந்தனர். இதில் பலத்தகாயம் அடைந்த சிறுமி பிரவீனா சம்பவ இடத்திலேயே இறந்தாள்.
அபிதா, பிரவீன் ஆகியோரை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சரவணன் விழுப்புரத்தில் உள்ள பாட்டி வீட்டுக்கு சென்றதால் காயமின்றி தப்பினான்.
இதுகுறித்து பாலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். #Tamilnews
காஞ்சீபுரம் மாவட்டம் தண்டலம் கிராமத்துக்கு 3 மாதங்களாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை.
இது குறித்து ஊராட்சி மன்ற செயலாளர் கோதண்டராமனிடம் தண்டலம் கிராம மக்கள் புகார் செய்தனர். தங்கள் கிராமத்துக்கு 2 கிணறுகளில் இருந்தும் ஆபரேட்டர்கள் சீராக குடிநீர் வழங்கவில்லை.
எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதன் பிறகும் குடிநீர் சப்ளை முறையாக நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து 3 மாதங்களாக சீராக அனைத்து குடும்பங்களுக்கும் கிடைக்கும் வகையில் குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து இன்று காலை மதுராந்தகம்- உத்தரமேரூர் செல்லும் சாலையில் பொது மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் 3 பேருந்துகளை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் அங்கு சென்ற மேல்மருத்துவத்தூர் போலீசார் பொது மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் போக்குவரத்து ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது. இதுபோல் திருத்தணியை அடுத்த வேலஞ்சேரி காலனிக்கு 35 நாட்களாக குடிநீர் வரவில்லை. இங்கு 350 குடும்பங்கள் உள்ளனர். குடிநீர் வராததை கண்டித்து இன்று காலை 8 மணி அளவில் இந்த பகுதியை சேர்ந்த பெண்கள் திருத்தணி-நாகலாபுரம் சாலையில் மறியல் செய்தனர்.
தகவல் அறிந்ததும் திருத்தணி தாசில்தார் நரசிம்மன், பி.டி.ஓ. லட்சுமணன் ஆகியோர் அங்கு சென்று சமாதானம் செய்தனர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. இந்த சாலை மறியல் காரணமாக அங்கு 1 மணிநேரம் போக்குவரத்து பாதித்தது. #Tamilnews
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் தந்தை மற்றும் சகோதரனுடன் வசித்துவந்தவர் ஜேஸ்னா மரியா ஜேம்ஸ் (வயது 20). இவர் கேரள மாநிலம் காஞ்சிரப்பள்ளியில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்துவந்தார். கடந்த மார்ச் மாதம் 22-ந் தேதி அவர் மாயமானார்.
இதுகுறித்து பத்தனம்திட்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜேஸ்னாவை தேடிவந்தனர். இந்த வழக்கில் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படவில்லை. காணாமல்போன கல்லூரி மாணவி ஜோஸ்னா குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்தது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டை அடுத்த பழவேலி பகுதியில் எரிந்து கரிக்கட்டையாக கிடந்த பெண்ணின் உடலை தாலுகா போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அவர் எரித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று போலீசார் தீவிரமாக விசாரித்து வந்தனர்.
கேரள மாநிலத்தில் காணாமல்போன ஜேஸ்னாவின் வயது, உயரம், எடை உடலில் குறிப்பிட்ட சில அடையாளங்கள் கொல்லப்பட்ட பெண்ணின் உடலிலும் காணப்பட்டது. இதனால் சந்தேகத்தின் அடிப்படையில் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி, கேரள போலீசாரிடம் இந்த கொலை தொடர்பாக தகவல் தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் கேரள போலீசார் காஞ்சீபுரம் மாவட்டத்திற்கு விசாரணை மேற்கொள்ள வருகின்றனர். அவர்கள் வந்து அந்த உடலை பார்வையிட்ட பின்னரே அது மாணவி ஜோஸ்னாவா என்பது தெரியவரும்.
திருவான்மியூர்:
நீலாங்கரையை அடுத்த ஈஞ்சம்பாக்கம், சாய்பாபா கோவில் தெருவில் வசித்து வருபவர் பட்டுவர்தன். மகராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த இவர் அங்குள்ள மாநகராட்சியில் ஊழியராக இருந்து ஓய்வு பெற்றவர்.
நேற்று மாலை அவர் வீட்டை பூட்டி விட்டு மகளுடன் வெளியில் சென்றார். இரவு திரும்பி வந்த போது வீட்டின் பின்பக்க சமையல் அறை கதவு உடைந்து கிடந்தது.
உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 94 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் ரொக்கம் கொள்ளை போய் இருப்பது தெரிந்தது. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்ம கும்பல் நகை-பணத்தை சுருட்டி சென்று உள்ளனர்.
இது குறித்து நீலாங்கரை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கொள்ளையில் ஈடுபட்டது அப்பகுதியை சேர்ந்த நபர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பாலவாக்கம் பல்கலை நகரில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் 80 பவுன் நகை கொள்ளை போனது. இந்த வழக்கில் இதுவரை குற்றவாளிகள் சிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews
வேடந்தாங்கலை சேர்ந்தவர் கன்னியப்பன். இவரது மகள் தீபா (வயது 16). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிளஸ்-1 தேர்வு முடிவு வெளியானது. இதில் தீபா 4 பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை. இதனால் அவர் மனவருத்தத்தில் இருந்தார். அவரை பெற்றோர் சமாதானப்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை தீபா பள்ளிக்கு சென்று வந்தார். பள்ளியில் இருந்து வந்தது முதல் அவர் யாரிடமும் பேசவில்லை. பெற்றோர் கேட்டபோதும் எதுவும் கூற மறுத்துவிட்டார்.
நேற்று மாலை வீட்டில் இருந்து வெளியே சென்ற தீபா திரும்பி வரவில்லை. அவரை தேடி வந்தனர்.
இதற்கிடையே இன்று காலை அதே பகுதியில் உள்ள கிணற்றில் தீபா பிணமாக கிடப்பது தெரிந்தது. 4 பாடங்களில் தேச்சி பெறாததால் அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து இருப்பது தெரிந்தது.
கோவளத்தை அடுத்த வட நெம்மேலியை சேர்ந்தவர் ஷமியா (23). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 30-ந் தேதி அவர் உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்தார். உடல் கருகிய அவர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
சேலம் சூரமங்கலம் ஆண்டிப்பட்டி, மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம். கொத்தனார். இவரது மகள் ரபீனா (வயது 18). மேச்சேரியில் உள்ள தனது பாட்டி அம்மாசி வீட்டில் தங்கி இருந்து அங்குள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
கோடை விடுமுறையில் ரபீனா மாதா கோவில் தெருவில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்தார்.
பிளஸ்- 1 தேர்வில் ரபீனா தோல்வி அடைந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டில் இருந்த மண்எண்ணை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளித்தார்.
அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
கூடுவாஞ்சேரியை அடுத்த காரணை புதுச்சேரியை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் அபிநயா (14). 7-ம் வகுப்பு படித்து வந்தார்.
சம்பவத்தன்று வீட்டு வேலை செய்யும்படி அபினயாவை பெற்றோர் கண்டித்தனர். இதில் மனவேதனை அடைந்த அபினயா உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.#tamilnews






