என் மலர்
காஞ்சிபுரம்
வேல்ஸ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இஸ்ரோ தலைவர் கே.சிவன், நடிகர் பாண்டியராஜன் உள்ளிட்டோருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார்.
சென்னையை அடுத்த பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் 8-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. வேல்ஸ் அறிவியல் தொழில்நுட்ப உயர் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனரும், பல்கலைக்கழக வேந்தருமான டாக்டர் ஐசரி கே.கணேஷ் தலைமை தாங்கினார். பல்கலைக்கழக துணைவேந்தர் சுவாமிநாதன் அனைவரையும் வரவேற்றார்.
இந்த விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்துகொண்டு பட்டங்களை வழங்கினார். இஸ்ரோ தலைவர் கே.சிவன், பாரதீய நபிக்கிய வித்யுட் நிகாம் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான கல்லோல் ராய் ஆகியோருக்கு தங்களது துறைகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
நடிகர் பாண்டியராஜன்
தமிழ் திரைப்பட கலைஞர்களின் சமுதாய பங்களிப்பு தொடர்பான ஆய்வு கட்டுரைக்கு நடிகர் பாண்டியராஜனுக்கும், பல்வேறு துறைகளில் ஆய்வு செய்த 69 பேருக்கும் டாக்டர் பட்டங்கள் வழங்கப்பட்டது.
இந்த விழாவில், வேல்ஸ் பல்கலைக்கழக மாணவ-மாணவிகள் 2 ஆயிரத்து 217 பேர் பட்டங்கள் பெற்றனர். விழாவில் பல்கலைக்கழக திட்டம் மற்றும் வளர்ச்சிக்கான துணைத்தலைவர் ஜோதி முருகன், கல்விக்கான துணைத்தலைவர் ஆர்த்தி கணேஷ், பதிவாளர் வீரமணி, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெங்கட்ராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இஸ்ரோ தலைவர் சிவன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய அரசு ரூ.10,400 கோடி செலவில் 30 பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளையும், 10 கனரக ராக்கெட்டுகளையும் உருவாக்க ஒப்புதல் அளித்து உள்ளது. மத்திய அரசு இவ்வளவு அதிகமான தொகைக்கு நிதி ஒதுக்கியது இஸ்ரோ வரலாற்றில் இதுவே முதல்முறையாகும். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் இந்த செயல் மகிழ்ச்சி அளிக்கிறது.
இதன் மூலம் ஒவ்வொரு கிராமத்திற்கும் அதிநவீன இணையதள வசதி கிடைக்கும். விவசாயத்திற்காக சாட்டிலைட் உருவாக்கப்படும். நம் நாட்டில் அன்னிய செலாவணி சேமிக்கப்படும்.
மீனவர்களுக்கு நவீன கருவிகள்
இந்த ராக்கெட்டுகள் இந்தியாவில் உள்ள உபகரணங்களை கொண்டு உருவாக்கப்படுகிறது. இதனால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். நமது நாட்டில் உள்ள தொழிற்சாலைகளுக்கு பணிகள் அதிகமாக கிடைக்கும். ஜி.சாட் 29, ஜி.சாட் 11 ஆகிய செயற்கைகோள்கள் தயாராகி வருகிறது.
இந்த ஆண்டுகளுக்குள் இந்த பணிகள் முடிக்கப்பட்டு செயற்கைகோள்கள் விண்ணில் ஏவப்படும். இதேபோல் தகவல் தொழில்நுட்பத்திற்கான ராக்கெட்டுகளும் தயாராகி இருக்கிறது. மீனவர்களுக்கு தேவையான நவீன கருவிகள் உருவாக்கப்பட்டு உள்ளது. இதில் 500 கருவிகள் கேரள மாநிலத்திற்கும், 200 கருவிகள் தமிழக மீனவர்களுக்கும் என ஒதுக்கப்பட்டுள்ளது.
மீன்பிடி தடைகாலம் முடிந்ததும் இந்த கருவிகள் மீனவர்களிடம் வழங்கப்படும். இந்த ஆண்டின் இறுதிக்குள் சந்திராயன்-2 விண்ணில் ஏவப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சோழிங்கநல்லூரை அடுத்த செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதிக்குள் நேற்று இரவு மோட்டார்சைக்கிள்களில் 20-க்கும் மேற்பட்ட ரவுடிகள் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் புகுந்தனர்.
அவர்கள் கத்தி, அரிவாளுடன் ஒவ்வொரு தெருவாக அலறியபடி சுற்றி வந்தனர். இதனை பார்த்து பொதுமக்கள் அச்சத்துடன் ஓட்டம் பிடித்தனர்.
அப்போது சாலையில் நடந்து சென்ற அதே பகுதியைச் சேர்ந்த சுந்தர், அஜித் உள்ளிட்ட 3 பேரை அரிவாளால் வெட்டினர்.
பின்னர் அங்குள்ள திருமண வீட்டுக்குள் புகுந்து அங்கு போடப்பட்டு இருந்த நாற்காலிகளை அரிவாளால் வெட்டினர். மேலும் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டு இருந்த லோடு ஆட்டோவின் கண்ணாடியையும் நொறுக்கினர். இதைத் தொடர்ந்து ரவுடி கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பான நிலை ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் செம்மஞ்சேரி போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் அரிவாள் வெட்டில் காயம் அடைந்த 3 பேரையும் மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதற்கிடையே தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்யக்கோரி அப்பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானம் பேசி கலைந்து போகச் செய்தனர்.
அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிராவை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் ரவுடி கும்பல் அரிவாளால் வெட்டும் காட்சிகள் பதிவாகி உள்ளது. அதில் பதிவானவர்கள் பற்றி தீவிர விசாரணை நடத்தினர்.
இரண்டு ரவுடி கும்பலுக்கும் இடையே யார் பெரியவர் என்று காட்டுவதற்காக இந்த தாக்குதல் நடந்ததாக தெரிகிறது.
இந்த தாக்குதல் தொடர்பாக 8 பேரை போலீசார் பிடித்து உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. இதையடுத்து ரவுடி கும்பலை கூண்டோடு பிடிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர். #Tamilnews
காஞ்சீபுரம் அடுத்த ஓரிக்கை ராஜா நகர் பகுதியைச் சேர்ந்தவர் திருமுருகன் (வயது 48), கூலித் தொழிலாளி, இவரது மனைவி சுந்தரி.
இவர்களது மகன் கோவிந்தவாசன் கல்லூரியில் முதலாம் ஆண்டும், மகள் ராஜேஸ்வரி 10-ம் வகுப்பும் படித்து வருகிறார்கள்.
திருமுருகன் வேலைக்குச் சென்று சம்பாதிக்கும் பணத்தினை வீட்டிற்கு தராமல் மது குடித்து செலவழித்து வந்தார். மேலும் மது போதையில் வீட்டுக்கு வரும் அவர் மனைவி சுந்தரியிடம் தகராறு செய்வதை வழக்கமாகக் கொண்டு இருந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை முதலே மது போதையில் திருமுருகன் இருந்தார். மனைவியிடமும் ரகளையில் ஈடுபட்டார். இதனால் கணவன்-மனைவி இடையே தொடர்ந்து தகராறு ஏற்பட்டு வந்தது. அப்போது சுந்தரியை அவர் தாக்கியதாகவும் தெரிகிறது. இதனால் சுந்தரி மிகவும் மனவேதனை அடைந்தார்.
தினமும் மது குடித்து வரும் கணவனால் ஏற்படும் தொல்லையை தடுக்க அவரை தீத்துக்கட்டுவது என்று சுந்தரி முடிவு செய்தார்.
இரவு மகன் கோவிந்தவாசனும், ராஜேஸ்வரியும் அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தனர். இதையடுத்து நள்ளிரவில் மது போதையில் தூங்கி கொண்டிருந்த கணவர் திருமுருகனின் தலையில் அம்மிக்கல்லைப் போட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே திருமுருகன் பலியானார்.
இன்று காலை நீண்ட நேரம் வரை திருமுருகன் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தனர். அப்போது திருமுருகன் கொலை செய்யப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து காஞ்சீபுரம் தாலுக்கா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
இது தொடர்பாக சுந்தரியை போலீசார் கைது செய்தனர். கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. #Tamilnews
தாம்பரம்:
சென்னை தாம்பரம் சேலையூரை சேர்ந்தவர் முகமதுசபீர் (வயது 32). கார் டிரைவர்.
இவர் திருமுல்லைவாயிலை சேர்ந்த சாமுவேல் எபினேசர் என்பவரின் காரை லீசுக்கு எடுத்து ஓட்டி வருகிறார்.
லீசுக்கான பணத்தை அவர் கொடுக்கவில்லை. மேலும் மாத தவணையும் செலுத்தாமல் ஏமாற்றி வந்தார். சாமுவெல் எபினேசர் பலமுறை கேட்டும் முகமதுசபீர் பணம் கொடுக்கவில்லை.
இதையடுத்து அவரை கடத்திச் சென்று பணம் பறிக்க முடிவு செய்தார். நேற்று இரவு சாமுவேல் எபினேசர், அவரது நண்பர்கள் வண்ணாரப்பேட்டை கணேசமூர்த்தி, திருமுல்லைவாயல் சரவணன், வேங்கைவாசல் அப்துல், சந்தோஷபுரம் முகமதுஅலி, ஜெயபிரகாஷ், கிழக்கு தாம்பரம் முகமது சகால் ஆகியோர் காரில் முகமதுசபீர் வீட்டுக்கு சென்றனர்.
வீட்டில் இருந்த அவரை 7 பேரும் காரில் கடத்திச் சென்றனர். அத்துடன் லீசுக்கு விட்ட காரையும் எடுத்துச் சென்றனர்.
பின்னர் கடத்தல் கும்பல் முகமது சபீரின் தாயாருக்கு போன் செய்து ரூ.2 லட்சம் கொடுத்தால்தான் உங்கள் மகனை விடுவோம் என்று மிரட்டினார்கள். இதுகுறித்து அவர் சேலையூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் உடனடியாக புறநகர் போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த நிலையில் நள்ளிரவு 12 மணியளவில் காரையும், 7 பேரையும் போலீசார் மடக்கி பிடித்தனர். முகமது சபீரை மீட்டனர். 7 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னையை அடுத்த அனகாபுத்தூர் தேவராஜ் நகரில் அரசு மானியத்துடன் வட்டி இல்லா மகளிர் கடன் ஒவ்வொருவருக்கும் தரப்படும் என்று குன்றத்துரைச் சேர்ந்த ரகுராமன், ராஜ்குமார் (41) ஆகியோர் நிறுவனம் ஒன்றை தொடங்கினர்.
பம்மல், பொழிச்சலூர், நாகற்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மகளிர் கடன் குறித்த தகவல் பரவியது. இதில் உறுப்பினராக ரூ.200 செலுத்த வேண்டும் என்று மூன்று மாதத்தில் ரூ.1 லட்சம் கடன் தரப்படும் என்றும் அவர்கள் கூறியதால் ஆயிரக்கணக்கான பெண்கள் விண்ணப்பித்தனர்.
விண்ணப்பித்த சிலருக்கு ரூ.1 லட்சம் கடனும் கொடுத்ததால் ஏராளமான பெண்கள் இந்த நிறுவனத்தில் உறுப்பினராக சேர்ந்தனர். ஒருவரே தங்கள் குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் பெயரிலும் ரூ.200 வீதம் செலுத்தினர்.
அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் போட்டி போட்டுக்கொண்டு சேர்ந்தனர். பணத்தை பெற்றுக் கொண்ட 2 வாலிபர்களும் அலுவலகத்தை மூடி விட்டு ஒட்டம் பிடித்தனர்.
ஒரு மாதமாக அந்த அலுவலகம் மூடிக்கிடக்கிறது. அதன்பிறகுதான் மோசடி கும்பல் என தெரியவந்தது. சுமார் ஒரு கோடி வரையில் பெண்களிடம் பணம் பெற்றுக் கொண்டு ரகுமானும், ராஜ்குமாரும் தலைமறைவாகி விட்டனர்.
இந்த நிலையில் தலைமறைவாக இருந்த ராஜ்குமாரை பொதுமக்களே பிடித்து நேற்று தர்மஅடி கொடுத்தனர். பின்னர் சங்கர்நகர் போலீசில் ஒப்படைத்தனர்.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகியுள்ள ரகுமானை தேடி வருகின்றனர். மேலும் கடன் தருவதாக ஏமாந்த பெண்களிடம் புகார் மனுக்களையும் பெற்று வருகின்றனர். #Tamilnews
பரங்கிமலை போலீஸ் நிலையத்தில் உளவுத்துறை போலீஸ்காரராக பணிபுரிபவர் ராஜசேகர். அவர் நேற்று இரவு 10 மணியளவில் பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.
மடுவாங்கரை மேம்பாலத்தின் சர்வீஸ் ரோட்டில் சென்ற போது 3 பேர் சேர்ந்து வடமாநில வாலிபர்கள் 2 பேரை அடித்து உதைத்து கொண்டிருந்தனர். அதை பார்த்த ராஜசேகர் தனதுமோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தாக்குதலில் இருந்து அவர்களை காப்பாற்றினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள், அவர்களை காப்பாற்ற நீங்கள் யார்? என கேட்டனர். அதற்கு அவர் தான் போலீஸ்காரர் என்றார்.
உடனே அவரை அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ அருகே இழுத்து சென்று 3 பேரும் தாக்கினர். மேலும் அவரிடம் இருந்து 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். மர்ம நபர்கள் தாக்கியதில் காயம் அடைந்தார். அவர் குரோம்பேட்டை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து பரங்கிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆலந்தூர் சவுரி தெருவை சேர்ந்த வெங்கடேசன் (30), சந்திரன் (30) ஆகிய 2 பேரை கைது செய்தனர். நவீன் என்பவர் தலைமறைவாகி விட்டார். அவரை தேடி வருகின்றனர். #tamilnews
‘அந்த்யோதயா’ ரெயில் சேவை தொடக்க விழாவில் மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-
பயணிகள் ரெயில்களில் அனைத்து பெட்டிகளும் முன்பதிவு இல்லாத பெட்டிகளாக இருக்கும். ஆனால் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அனைத்து பெட்டிகளையும் முன்பதிவு இல்லாதவையாக, யார் வேண்டும் என்றாலும், எப்போது வேண்டும் என்றாலும் பயணிக்கலாம் என்று இயக்கப்படும் ‘அந்த்யோதயா’ ரெயில் பிரதமர் நரேந்திர மோடி சிந்தனையின் செயல்பாடு ஆகும்.
தமிழக ரெயில்வே திட்டங்களுக்கு கடந்த 2009-14-ம் காலத்தில் ஆண்டுதோறும் ரூ.879 கோடி மட்டும் ஓதுக்கீடு செய்யப்பட்டது. இந்த ஆண்டு மட்டும் மத்திய அரசு தமிழக ரெயில்வே துறைக்கு ரூ.2 ஆயிரத்து 548 கோடி ஒதுக்கி உள்ளது.
ரூ.20 ஆயிரத்து 64 கோடியில் 27 ரெயில்வே திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தின் முன்னேற்றத்தில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. இரட்டை ரெயில் பாதை மற்றும் மின்மயமாக்கல் பணிகளுக்காக பிரதமர் நரேந்திரமோடி ரூ.4 ஆயிரம் கோடி வழங்கி உள்ளார். இதில் பாதி நிதியை மாநில அரசு வழங்க வேண்டும். எனினும் மாநில அரசின் நிதி நெருக்கடியை கருத்தில் கொண்டு முழுத்தொகையை மத்திய அரசே ஏற்றுக்கொண்டுள்ளது.
தமிழகத்தில் தெற்கையும், வடக்கையும் இணைக்கக் கூடிய வகையில் கன்னியா குமரி எக்ஸ்பிரஸ் மட்டும் இயக்கப்படுகிறது. நிச்சயம் இன்னொரு ரெயில் தேவை. எனவே அந்த்யோதயா ரெயிலை கன்னியாகுமரி வரை ஏன் நீட்டிக்க கூடாது? என்று ரெயில்வே இணை மந்திரி ராஜென் கோஹெய்னிடம் நான் வேண்டுகோள் விடுத்தேன்.

சாலை போக்குவரத்தை பொறுத்தமட்டில் 4 வழிச்சாலைகள் அல்ல; 8 வழிச்சாலைகளுக்கும் மேல் அமைக்க வேண்டும். தாம்பரம், செங்கல்பட்டு, திண்டிவனம் வரையில் பறக்கும் சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய ரெயில்வே இணை மந்திரி ராஜென் கோஹெய்ன் பேசும்போது, ‘தெற்கு ரெயில்வே இரட்டை ரெயில் பாதை, தண்டவாளத்தை அகலப்படுத்தும் பணி, ரெயில்வே கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றில் முன்னோடியாக திகழ்கிறது. செங்கோட்டை-புனலூர் இடையே ரூ.390 கோடியில் தண்டவாளத்தை அகலப்படுத்தும் பணி முடிவடைந்துள்ளது. நாளை(இன்று) அது நாட்டுக்காக அர்ப்பணிக்கப்படும்.
பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்வதில் தெற்கு ரெயில்வே அதிகப்படியான வளர்ச்சியை அடைந்துள்ளது. ரெயில்களில் வேகத்தை மணிக்கு 25 கி.மீ அதிகரிப்பது குறித்து டெல்லியில் கருத்தரங்கம் நடத்தப்பட்டுள்ளது’ என்றார். #ponradhakrishnan
சென்னை தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு முன்பதிவு இல்லாத ‘அந்த்யோதயா’ எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படும் என்று கடந்த 2016-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி முன்னோட்டமாக கடந்த 2017-ம் ஆண்டு புத்தாண்டு அன்று தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரெயிலாக ‘அந்த்யோதயா’ ரெயில் இயக்கப்பட்டது. பயணிகள் மத்தியில் அமோக ஆதரவு கிடைத்ததால், தினசரி ரெயிலாக இயக்கப்படும் என்று தேதி குறிப்பிட்டு அறிவிப்பு வெளியானது. ஆனால் திடீரென்று அந்த அறிவிப்பு ரத்தானது.
இந்தநிலையில் தாம்பரம் ரெயில் நிலையம் ரூ.40.4 கோடி செலவில் 3-வது முனையமாக உருவாக்கப்பட்டது. இதையொட்டி தாம்பரம்- நெல்லை இடையே முன்பதிவு இல்லாத ‘அந்த்யோதயா’ எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை 8-ந்தேதி தொடங்கும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்தது.
அதன்படி தாம்பரம் ரெயில் முனையத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா மற்றும் ‘அந்த்யோதயா’ ரெயில் சேவை தொடக்க விழா சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தின் 8-வது நடைமேடையில் நேற்று மாலை நடைபெற்றது.
இந்த விழாவுக்கு மத்திய ரெயில்வே இணை மந்திரி ராஜென் கோஹெய்ன், நிதி மற்றும் கப்பல் துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர். தமிழக போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலை வகித்தார்.
அ.தி.மு.க. எம்.பி. கே.என்.ராமச்சந்திரன், தி.மு.க. எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.கே.குலசேத்திரா வரவேற்று பேசினார். சென்னை கோட்ட மேலாளர் நவீன் குலாட்டி நன்றி கூறினார்.
மத்திய இணை மந்திரிகள் ராஜென் கோஹெய்ன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கொடியசைத்து வைத்து ‘அந்த்யோதயா’ ரெயில் சேவையை தொடங்கி வைத்தனர். இதையடுத்து அந்த ரெயில் தாம்பரத்தில் இருந்து நெல்லையை நோக்கி புறப்பட்டு சென்றது.
ரெயில் 4.30 மணிக்கு புறப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. விழா தாமதாக தொடங்கியதாலும், நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதல் நேரம் பேசியதாலும் ரெயில் தாமதமாக 5.05 மணிக்கு புறப்பட்டது.
தொடக்க விழா என்பதால் ‘அந்த்யோதயா’ ரெயில் வண்ண மலர்கள், மா இலை, பலூன்கள் போன்றவற்றால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
‘பயோ’ கழிப்பறை, எல்.இ.டி. விளக்கு, புதிய வர்ணம், சோலார் மேற்கூரை, மெத்தை இருக்கை என ரெயிலின் உள்புற பகுதி அமைந்திருக்கிறது. எனவே பயணிகள் புதுவித அனுபவத்துடன் மகிழ்ச்சியாக பயணம் மேற்கொண்டனர்.
முன்பதிவு இல்லாத 16 பெட்டிகளில் 10 பெட்டிகளில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மற்ற பெட்டிகளில் சில பயணிகள் மட்டும் இருந்தனர். லக்கேஜ் பெட்டி உள்பட 2 பெட்டிகள் தனியாக உள்ளன.
சென்னையில் பணி மற்றும் வியாபாரம் நிமித்தமாக தென்மாவட்ட மக்கள் தங்கி உள்ளனர். குறிப்பாக தாம்பரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். எனவே தாம்பரம்- நெல்லை புதிய ரெயில் சேவைக்கு தென்மாவட்ட மக்கள் அமோக வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக சிலர் கூறும்போது, ‘தாம்பரம் ரெயில் நிலையம் 3-வது முனையமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், இங்கிருந்து தென்மாவட்டங்களுக்கு கூடுதலாக ரெயில்கள் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம். தற்போது நெல்லைக்கு ரெயில் இயக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த ரெயிலை விருத்தாசலம், அரியலூர் வழியாக இயக்கினால் கூடுதல் சிறப்பாக இருக்கும்.
கோவில்பட்டி, சாத்தூர், வாஞ்சி மணியாச்சி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லாது என்ற அறிவிப்பு ஏமாற்றத்தை தருகிறது. நெல்லை, முத்துநகர் போன்ற அதிவிரைவு ரெயில்களே அந்த ரெயில் நிலையங்களில் நின்று செல்கின்றன. எனவே விரைவு ரெயிலான அந்த்யோதயாவும் அந்த ரெயில் நிலையங்களில் நின்று செல்ல ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர். #tamilnews
சென்னையில் இருந்து கத்தாருக்கு இன்று அதிகாலை 3.30 மணியளவில் பயணிகள் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில் ஏற வந்த பயணிகளிடம் குடியுரிமை அதிகாரிகள் பாஸ்போர்ட் சோதனை நடத்தினர். அப்போது சென்னையை சேர்ந்த மணிவண்ணன் (53). என்பவர் பாஸ்போர்ட்டை எடுத்த போது அவரது சட்டைப்பையில் இருந்து மேலும் 2 பாஸ்போர்ட்டுகள் கீழே விழுந்தன.
இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரை தனி அறையில் வைத்து சோதனையிட்டனர். அவர் வைத்திருந்த கைப்பையில் மேலும் 10 பாஸ்போர்ட்டுகள் இருந்தன. அவை அனைத்தும் போலி என தெரிய வந்தது. எனவே இவருக்கும் வெளிநாடுகளில் இருக்கும் போலி பாஸ்போர்ட் தயாரிக்கும் கும்பலுக்கும் தொடர்பு இருக்கலாம் என கருதி மத்திய குற்ற புலனாய்வு பிரிவு போலீசாரிடம் இவர் ஒப்படைக்கப்பட்டார். #Tamilnews
ஆதம்பாக்கம் வருமான வரி துறை காலனி 1-வது தெருவை சேர்ந்தவர் தர்மராஜ் (29). இவர் தள்ளுவண்டியில் வைத்து பழ வியாபாரம் செய்கிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
எனவே ஒரு வீட்டில் தனியாக வாழ்கிறார். வீட்டை கவனித்துக் கொள்ள உதவியாளராக செஞ்சியை சேர்ந்த ஏழுமலை (50) என்பவரை தங்க வைத்துள்ளார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஏழுமலையின் மகன் கார்த்தி (30) என்பவர் தனது தந்தையை பார்க்க வந்தார். பின்னர் இங்கேயே தங்கிவிட்டார்.
இந்த நிலையில், தர்மராஜ் நேற்று பழ வியாபாரத்துக்கு வெளியே சென்று விட்டார். மாலையில் வீடு திரும்பினார். அப்போது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்ட நிலையில் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்து உள்ளே பார்த்த போது அங்கு வைத்திருந்த ரூ.7½ லட்சம் ரொக்க பணத்தை காணவில்லை.
மேலும் பீரோவில் இருந்த 15 பவுன் தங்க நகைகளும் ‘அபேஸ்’ செய்யப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் ஆதம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.
அக்கம் பக்கத்து வீடுகளில் உள்ள கண்காணிப்பு கேமராவின் வீடியோ பதிவுகளை பார்வையிட்டனர். அதில் ஏழுமலையின் மகன் கார்த்தி தனது லுங்கிக்குள் பணம் மற்றும் நகைகளை மடித்து எடுத்து சென்றது தெரியவந்தது. எனவே அவற்றை கொள்ளையடித்தது இவர்தான் என கண்டு பிடிக்கப்பட்டது.
அவரை பல இடங்களிலும் போலீசார் தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. எனவே அவரது தந்தை ஏழுமலையை பிடித்து போலீசார் செஞ்சிக்கு அழைத்து சென்றனர். அங்கும் கார்த்தி வரவில்லை. ஆகவே தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
உத்திரமேரூரை அடுத்த கன்னிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் கடம்பநாதன். இவரது மகன் மோகன் (வயது 38). விவசாயி. இவர்களது வீட்டுக்கு மதுராந்தகத்தை அடுத்த அதிமனம் கிராமத்தை சேர்ந்த உறவினர் முரளி வந்து இருந்தார்.
பின்னர் முரளியை உத்திரமேரூரில் பஸ் ஏற்றி விடுவதற்காக மோட்டார் சைக்கிளில் அழைத்துக் கொண்டு மோகன் சென்றார்.
திருப்புலிவனம் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள வேகத்தடையை தாண்டும் போது பின்னால் வந்த தனியார் பஸ் திடீரென மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இதில் மோகன் அதே இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். முரளிக்கு இரண்டு கால்களும் முறிந்தது. உடனடியாக முரளியை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
விபத்தால் கோபம் அடைந்த பொதுமக்கள் தனியார் பஸ்சின் கண்ணாடிகளை அடித்து உடைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
உத்திரமேரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மோகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலியான மோகனுக்கு மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். #Tamilnews






