search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "magalir loan"

    பல்லாவரம் அருகே மகளிர் கடன் தருவதாக கூறி பல பெண்களிடம் ரூ.1 கோடி மோசடியில் ஈடுபட்ட வாலிபரை பொதுமக்களே பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
    தாம்பரம்:

    சென்னையை அடுத்த அனகாபுத்தூர் தேவராஜ் நகரில் அரசு மானியத்துடன் வட்டி இல்லா மகளிர் கடன் ஒவ்வொருவருக்கும் தரப்படும் என்று குன்றத்துரைச் சேர்ந்த ரகுராமன், ராஜ்குமார் (41) ஆகியோர் நிறுவனம் ஒன்றை தொடங்கினர்.

    பம்மல், பொழிச்சலூர், நாகற்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மகளிர் கடன் குறித்த தகவல் பரவியது. இதில் உறுப்பினராக ரூ.200 செலுத்த வேண்டும் என்று மூன்று மாதத்தில் ரூ.1 லட்சம் கடன் தரப்படும் என்றும் அவர்கள் கூறியதால் ஆயிரக்கணக்கான பெண்கள் விண்ணப்பித்தனர்.

    விண்ணப்பித்த சிலருக்கு ரூ.1 லட்சம் கடனும் கொடுத்ததால் ஏராளமான பெண்கள் இந்த நிறுவனத்தில் உறுப்பினராக சேர்ந்தனர். ஒருவரே தங்கள் குடும்பத்தில் உள்ள மற்றவர்கள் பெயரிலும் ரூ.200 வீதம் செலுத்தினர்.

    அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் போட்டி போட்டுக்கொண்டு சேர்ந்தனர். பணத்தை பெற்றுக் கொண்ட 2 வாலிபர்களும் அலுவலகத்தை மூடி விட்டு ஒட்டம் பிடித்தனர்.

    ஒரு மாதமாக அந்த அலுவலகம் மூடிக்கிடக்கிறது. அதன்பிறகுதான் மோசடி கும்பல் என தெரியவந்தது. சுமார் ஒரு கோடி வரையில் பெண்களிடம் பணம் பெற்றுக் கொண்டு ரகுமானும், ராஜ்குமாரும் தலைமறைவாகி விட்டனர்.

    இந்த நிலையில் தலைமறைவாக இருந்த ராஜ்குமாரை பொதுமக்களே பிடித்து நேற்று தர்மஅடி கொடுத்தனர். பின்னர் சங்கர்நகர் போலீசில் ஒப்படைத்தனர்.

    இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகியுள்ள ரகுமானை தேடி வருகின்றனர். மேலும் கடன் தருவதாக ஏமாந்த பெண்களிடம் புகார் மனுக்களையும் பெற்று வருகின்றனர்.  #Tamilnews
    ×