என் மலர்
காஞ்சிபுரம்
ஆதம்பாக்கத்தில் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கரையில் மேடவாக்கம் செல்லும் மெயின் ரோட்டின் ஓரம் நில ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் மற்றும் கடைகள் கட்டப்பட்டுள்ளன.
அவற்றை இடித்து அகற்றப்போவதாக சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டது. அதன்படி இன்று காலை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.
ஆர்.டி.ஓ. சந்திரசேகர் தலைமையில், தாசில்தார் பெனடின் முன்னிலையில் வருவாய் மற்றும் பொதுப்பணித்துறையினர் இப்பணியில் ஈடுபட்டனர்.
இவர்களின் பாதுகாப்புக்காக பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் முத்துசாமி மேற்பார்வையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
முதல் கட்டமாக ஏரிக்கரையில் ஆக்கிரமித்து கட்டிய 24 கடைகள் புல்டோசர் மூலம் இடித்து அகற்றப்பட்டது. மற்றும் வீடுகளை இடிக்கும் பணி இன்னும் ஒரு வாரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அவர்களுக்கு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடுகள் ஒதுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஆக்கிரமிப்புகளை இடிக்கும் போது அதிகாரிகளுடன் பொது மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. #Tamilnews
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மாம்பாக்கம் ஊராட்சி தபால்மேடு பகுதியில் சுடுகாடு உள்ளது. இதன் அருகே தகரத்தால் ஆன கொட்டகையில் சுமார் 55 வயது மதிக்கதக்க ஆண் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ஸ்ரீபெரும்புதூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவில்லை.
பிணமாக கிடந்தவர் அப்பகுதியை சேர்ந்தவர் இல்லை என்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மர்ம நபர்கள் அவரை கடத்தி கொலை செய்து தூக்கில் தொங்க விட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
அவரை பற்றிய தகவல் தெரிந்தால் ஸ்ரீபெரும்புதூர் 9498151501, 9498100274 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இது தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மாயமானவர்கள் விபரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள். #tamilnews
ஆசிரியர்களுக்கான இடம் மாறுதல் கவுன்சிலிங் அனைத்து மாவட்ட கல்வி அலுவலகத்தில் நடந்து வருகிறது. இதே போல் காஞ்சீபுரம் பஸ் நிலையம் அருகே உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நேற்று காலை வழக்கம் போல் கவுன்சிலிங் தொடங்கியது.
இதில் மாவட்டத்தில் இருந்து சுமார் 400-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுடன் ஆசிரியைகள் பங்கேற்றனர்.
கவுன்சிலிங் தொடங்கி நீண்ட நேரம் வரை பலருக்கு இட ஒதுக்கீடு கிடைக்கவில்லை. மேலும் இரவு வரை இந்த கவுன்சிலிங் நீடித்தது. இதனால் இடமாறுதல் கேட்டு வந்த ஆசிரியர்கள் ஆவேசமடைந்தனர்.
அவர்கள் கவுன்சிலிங் தாமதமாக நடப்பதாக கூறி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்வி அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இரவு 10 மணி வரை ஆசிரியர்களின் போராட்டம் நீடித்தது. இதையடுத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர் செல்வி மற்றும் கல்வி அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தாமதமான ஆசிரியர்களுக்கு நாளை (இன்று) மீண்டும் கவுன்சிலிங் நடத்தப்படும் என்று தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் நள்ளிரவு வரை முதன்மை கல்வி அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.
இது குறித்து கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது கூறியதாவது:-
இப்போது ஆன்லைன் மூலமே கவுன்சிலிங் நடந்து வருகிறது. இதனால் சர்வரில் ஏற்படும் பிரச்சினையால் காலதாமதம் ஆகிறது. ஒரு ஆசிரியருக்கு சுமார் ½ மணி நேரம் கவுன்சிலிங் நடத்தும் நிலை உள்ளது. இதனால்தான் கால தாமதம் உள்ளது. துறை வாரியாக அனைத்து ஆசிரியர்களுக்கும் இடமாறுதல் கவுன்சிலிங் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில் இன்று காலை கவுன்சிலிங்கில் பங்கேற்க ஏராளமான ஆசிரியர்கள் முதன்மை கல்வி அலுவலகத்துக்கு வந்திருந்தனர். இதில் நேற்று விடுபட்ட ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். தொடர்ந்து கவுன்சிலிங் நடந்து வருகிறது.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான டி.டி.வி.தினகரன், சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தலைமை நீதிபதியிடம் வாபஸ் மனு தாக்கல் செய்தால் 3-வது நீதிபதி நியமிப்பதில் காலதாமதம் ஏற்படும் என்பதால் 3-வது நீதிபதி முன் விசாரணைக்கு வரும்போது வாபஸ் மனு தாக்கல் செய்ய முடிவு செய்து உள்ளார்.
இதனால் ஆண்டிப்பட்டி தொகுதியில் அரசியல் ரீதியாக சவாலாக ஏற்று பணியாற்ற ஒரு வாய்ப்பாக இருக்கும். ஜெயலலிதா தொகுதியில் நான் வெற்றி பெற்றது போல், எம்.ஜி.ஆர். தொகுதியில் தங்கதமிழ்ச்செல்வன் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் துரோக ஆட்சியாளர்களுக்கு இரட்டை இலைக்கு சொந்தக்காரர்கள் நாங்கள்தான் என்பதை நிரூபிக்க வாய்ப்பாக இருக்கும்.
18 பேரும் முதல்-அமைச்சரை மாற்ற வேண்டும் என்பதில் ஒன்றாக உள்ளனர். எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு வரை சென்று போராடுவோம்.
டெல்லிக்கு முதல்-அமைச்சர் செல்வது பெரியவிஷயம் அல்ல. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா டெல்லி சென்றால் அது பெரிய விஷயமாக இருக்கும்.
தூத்துக்குடியில் பலியானவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறி இருந்தால் நல்ல முதல்-அமைச்சராக அவரை ஏற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார். #RajivMurderCase #President #RamnathKovind #TTVDhinakaran
மாமல்லபுரம் பகுதியில் ஓட்டல்கள் மற்றும் சுற்றுலா விடுதிகள் ஏராளமாக உள்ளன. இங்கிருந்து கழிவு நீரை பெற்று வெளி இடத்துக்கு கொண்டு சென்று ஊற்ற தனியார் டேங்கர் லாரிகள் அதிக அளவு பணம் வசூலித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் லாரிகளில் கொண்டு வரப்படும் கழிவுநீரை தடை செய்யப்பட்ட பகுதியான மாமல்லபுரம் பக்கிங்காம் கால்வாய் சாலையோரத்தில் டிரைவர்கள் ஊற்றி வருகிறார்கள்.
இதனால் சாலைகளில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கடும் துர்நாற்றம் வீசுகிறது. அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகிறார்கள். இதை தட்டிக் கேட்கும் பொது மக்களை டேங்கர் லாரி டிரைவர்கள் மிரட்டும் சம்பவமும் அடிக்கடி நடந்து வருகிறது.
கழிவுநீரால் அண்ணா நகர், சூளைமேடு பகுதியில் குடியிருக்கும் பொது மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
எனவே சாலையோரத்தில் கழிவுநீரை கொட்டுபவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #tamilnews
ஆலந்தூர்:
தி.மு.க. எம்.பி. கனிமொழி சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஒரு அரசாங்கத்தில் முதல்- அமைச்சர், அமைச்சர்கள் எல்லோருக்குமே கூட்டுப் பொறுப்பு உண்டு. ஜாக்டோ- ஜியோ அமைப்பின் போராட்டம் தொடர்பாக செங்கோட்டையனிடம் கேள்வி எழுப்பியதற்கு முதல்-அமைச்சர் பதில் சொல்வார் என்று அவர் கூறி தனது பொறுப்பை தட்டிக் கழித்து இருக்கிறார்.
இந்த அரசு என்ன நினைக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது. போராட்டம் நடத்துபவர்களை அழைத்து இந்த அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்துவதே கிடையாது. இதுவரை நடந்த போராட்டங்களுக்கு எந்த தீர்வும் கண்டதில்லை.

போக்குவரத்துகழக ஊழியர்கள் பிரச்சினை, ஸ்டெர்லைட் பிரச்சினை எதற்கும் சரியான தீர்வு கண்டதில்லை. இந்த அரசின் செயல் கேலி கூத்தாக இருக்கிறது. இந்த அரசு நல்லது செய்யும் என்று நாம் எதிர்பார்ப்பது தவறு.
எத்தனை நாளைக்கு டெல்லிக்கு காவடி தூக்கி இந்த அரசாங்கத்தை தொடர முடியும். மக்களை சுரண்டி பணம், சொத்து சேர்ப்பதில் தான் கவனமாக இருக்கிறார்கள். நிர்வாகத்தில் இந்த அரசுக்கு அக்கறை கிடையாது.
முதல்வர் உள்பட அரசில் உள்ள அனைவர் மீதும் குற்றச்சாட்டு இருக்கிறது.
இவ்வாறு அவர்கூறினார். #kanimozhi #tngovernment #sterliteprotest
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் ரெயில்வே சாலையில் அரசு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு இருந்தது. இதனால் பாதிக்கப்பட்ட பெண்களும், பொதுமக்களும் மதுக்கடையை மூட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை மனுவும் அளித்தனர். மேலும் மதுக்கடையை மூடும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்து இருந்தனர்.
இந்தநிலையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் கடையினை அகற்ற மாவட்ட கலெக்டர் பொன்னையா அதிரடியாக உத்தரவிட்டார்.
கலெக்டரின் இந்த அறிவிப்பினால் பொதுமக்களும் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் கலெக்டர் பொன்னையாவுக்கு பாராட்டு தெரிவித்து உள்ளனர்.
ஆலந்தூர்:
அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் தினகரன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று மக்கள் போராட்டம் நடத்தினார்கள். அப்போது கண்டு கொள்ளாத அரசு துப்பாக்கிசூடு நடத்தி 13 பேரை படுகொலை செய்தது. மக்களை பற்றி இந்த அரசுக்கு கவலை இல்லை.
படுகொலை நடந்த பிறகு அரசாணை போட்டு ஆலையை மூடுவோம் என்றனர். பின்னர் நிரந்தரமாக மூடுவோம் என்று சொல்லி இருக்கிறார்கள்.
அதேபோல் தான் சேலத்தில் 8 வழி பசுமை சாலையை அமைக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் அங்கிருக்கும் மக்கள் விவசாய நிலம் பாதிக்கப்படுகிறது. பசுமை வழிச் சாலை வேண்டாம் என்று சொல்கிறார்கள்.
சென்னை - பெங்களூர் சாலையில் அதிக போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதை 8 வழிச் சாலையாக அரசு மாற்றினால் பரவாயில்லை. அதைவிட்டுவிட்டு போக்குவரத்தே இல்லாத சேலத்தில் சாலை அமைக்கிறார்கள்.
மற்றொரு தூத்துக்குடி போல சேலம் மாற வேண்டும் என்று முதல்வர் விரும்புகிறாரா? அவர் நினைப்பது நடக்காது. அதற்குள் இந்த அரசாங்கத்துக்கு முடிவு வரும்.

சட்டசபையில் டாஸ்மாக் பற்றி நான் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதில் கொடுக்கிறார். அதற்கு விளக்கம் தர நான் எழுந்த போது அவர் உங்களையும் பற்றி சொல்லவில்லை என்று சபாநாயகர் சொன்னதால் நான் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தேன்.
பின்பு சபாநாயகருக்கு கடிதம் எழுதினேன். அதில் உறுப்பினர் உரிமையை நீங்கள் தான் பாதுகாக்க வேண்டும். பேசுவதற்கு வாய்ப்பு தர வேண்டும் என்று கூறி இருந்தேன். சட்டசபையில் எதிர்க்கட்சியினர் பேச வாய்ப்பு மறுக்கப்படுகிறது.
எஸ்.வி.சேகரை ஏன் கைது செய்யவில்லை என்று முதல்-அமைச்சரிடம் தான் கேட்க வேண்டும். மத்திய அரசின் ஆதரவு இருப்பதால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று மாநில அரசு நினைத்துக் கொண்டிருக்கிறது.
காவல் துறையை தங்கள் இஷ்டத்துக்கு அரசு பயன் படுத்தி வருகிறது. அரசை கண்டு காவல்துறை பயப்படுகிறது. மக்கள் இதை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.
இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran #Thoothukudishooting
சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியில் நைஜீரிய நாட்டை சேர்ந்த 25 வயது இளம்பெண் மேற்படிப்பு படித்து வருகிறார்.
இவர் வண்டலூர் அருகே உள்ள ஓட்டேரி பகுதியில் தங்கியுள்ளார். நேற்று மாலையில் மாணவி நடைபயிற்சி மேற்கொண்டார்.
அப்போது அங்குள்ள முட்புதர் நிறைந்த பகுதியில் 2 வாலிபர்கள் மது அருந்திக் கொண்டிருந்தனர். அவர்கள் இருவரும் நைஜீரிய மாணவியை பார்த்ததும் அருகில் சென்று பேச்சு கொடுத்தனர்.
திடீரென இருவரும் சேர்ந்து அவரது வாயை பொத்தி புதர் மண்டிய பகுதிக்கு தூக்கி சென்று பாலியல் தொல்லை கொடுத்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி கூச்சல் போட்டார். இதனை தொடர்ந்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் திரண்டு வந்து சத்தம் கேட்ட இடத்தை நோக்கி ஓடினர்.
அப்போது 2 வாலிபர்களும் போதை தலைக்கேறிய நிலையில் மாணவியிடம் தகாத முறையில் நடந்து கற்பழிக்க முயன்றனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் வாலிபர்களை பிடித்து அடித்து உதைத்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் 2 பேரையும் ஓட்டேரி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். ஒருவரது பெயர் தமிழரசன், இன்னொருவரது பெயர் ஜெயவேல் என்பது தெரிய வந்தது. காட்டுமன்னார் கோவிலை சேர்ந்த தமிழரசன், திருவல்லிக்கேணியில் தங்கி இருந்து தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
ஜெயவேல் ஓட்டேரி பகுதியை சேர்ந்தவர். நண்பரான இவரை பார்ப்பதற்கு நேற்று மாலையில் தமிழரசன் சென்றுள்ளார். அப்போது தான் 2 பேரும் சேர்ந்து மது குடித்துவிட்டு போதையில் கற்பழிப்பு முயற்சியில் ஈடுபட்டது அம்பலமானது.
2 பேரையும் கைது செய்த போலீசார் பெண்கள் வன்கொமை தடுப்பு சட்டம், கற்பழிக்க முயற்சி செய்தது உள்ளிட்ட 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். #Tamilnews
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரும் விமானங்களில் தங்கம் கடத்தப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து சார்ஜாவில் இருந்து வந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது ஆந்திராவை சேர்ந்த சீனிவாசன் (வயது 32) என்பவர் வந்தார். அவரை சோதனை செய்தபோது, உள்ளாடைகளில் மறைத்து வைத்திருந்த ரூ.11 லட்சம் மதிப்புள்ள 359 கிராம் தங்கம் கடத்தி வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
அதேபோல், மலேசியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் ராமநாதபுரத்தை சேர்ந்த முத்து (36) என்பவர் வந்தார். அவரது உடைமைகளை சோதனை செய்தபோது, அதில் ரூ.12½ லட்சம் மதிப்பிலான 400 கிராம் தங்க கம்பிகள் கடத்தி வந்தது தெரியவந்தது.
மேலும் துபாயில் இருந்து வந்த விமானத்தில் சென்னையை சேர்ந்த யூனுஸ் (40) என்பவர் வந்தார். இவரது உடைமைகளை சோதனை செய்தபோது விளையாட்டு பொருட்களில் ரூ.12½ லட்சம் மதிப்பிலான 400 கிராம் தங்கம் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து 3 பேரிடம் இருந்தும் ரூ.36 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை துரைப்பாக்கம், கண்ணகிநகர், மேட்டுக்குப்பம், பெருங்குடி, கந்தன் சாவடி, சோழிங்கநல்லூர் போன்ற பகுதியில் குட்கா உள்ளிட்ட போதை பொருள் விற்பனை அதிகமாக நடைபெறுவதாக துரைப்பாக்கம் உதவி ஆணையாளர் லோகநாதனுக்கு தகவல் வந்தது.
இதைத்தொடர்ந்து உதவி ஆணையாளர் லோகநாதன் தலைமையில் தனிப்படையினர் துரைப்பாக்கம், பெருங்குடி, சோழிங்க நல்லூர் சுற்று வட்டார பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
தனிப்படை போலீசாருக்கு துரைப்பாக்கம் அடுத்த மேட்டுக்குப்பம் வி.ஜி.பி. அவென்யூவில் ஒரு வீட்டில் குட்கா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற தனிப்படை போலீசார் அந்த வீட்டில் இருந்து 300 கிலோ போதை பாக்குகள், குட்கா, புகையிலை உள்ளிட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். இங்கு போதை பொருட்களை தயார் செய்து கடைகளுக்கு விநியோகம் செய்து வந்த நித்யானந்தம், சரவணன் ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
அதேபோல் நீலாங்கரையிலும் சந்தேகத்தின் அடிப்படையில் ஆட்டோ ஒன்றை சோதனையிட்டதில் 2 குட்கா மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆட்டோவில் இருந்த அய்யனார் என்பவரிடம் விசாரித்த போது அனுமன் காலனி ஈஞ்சம்பாக்கத்தில் ஒரு வீட்டில் பதுக்கிவைத்திருந்த 6 மூட்டை குட்கா, புகையிலை உள்ளிட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்து அய்யனார் கைது செய்யப்பட்டார். சுமார் 80 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. #Tamilnews






