என் மலர்
காஞ்சிபுரம்
மாமல்லபுரம்:
கல்பாக்கம் அடுத்த மெய்யூர் குப்பத்தை சேர்ந்தவர் சேகர். மீனவர். இவரது மகன் புகழேந்தி (வயது19) பிளஸ்2 முடித்துள்ளார். நீட் தேர்வு எழுதி தேர்ச்சிப் பெற்று இருந்தார்.
இவர் குடும்பத்தினருடன் மாமல்லபுரம் அடுத்த கடம்பாடி மாரி சின்னம்மன் கோவிலுக்கு வந்தார். அப்போது அங்குள்ள தெப்பகுளத்தில் குளிக்க சென்றபோது படிக்கட்டில் வழுக்கி விழுந்தார். இதில் புகழேந்தி குளத்தில் மூழ்கினார். அவரை உறவினர்கள் மீட்டு மாமல்லபுரம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே புகழேந்தி உயிரிழந்தார்.
கடம்பாடி கோவில் தெப்பகுளத்தில் பக்தர்களின் பாதுகாப்பிற்காக தடுப்பு கம்பிகள் வைக்கப்பட்டிருந்தால் இந்த உயிர் பலி நடந்திருக்காது என்று பக்தர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
வேலூர் மாவட்டம் பொய்கை கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது40).
இவர் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தார். அந்த பகுதியிலேயே அறை எடுத்து தங்கி இருந்தார். இவர் பணியில் சேர்ந்து 1 வாரமே ஆகிறது.
இந்த நிலையில் சுங்குவார் சத்திரம் திருமங்கலம் கருப்புகை பகுதியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் போலீஸ்காரர் மோகன்ராஜ் பிணமாக கிடந்தார்.
அவரது தலையில் பலத்த காயம் இருந்தது. அவரை மர்ம ஆசாமிகள் தலையில் அடித்தும் மதுபாட்டிலை உடைத்து கழுத்தில் குத்தியும் கொலை செய்திருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து சுங்குவார் சத்திரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டி.எஸ்.பி. (பொறுப்பு) பஞ்சாட்சரம், இன்ஸ்பெக்டர் ஜான்விக்டர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
மோப்ப நாய் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது. அது சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் ஓடி நின்றது. தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். பிணத்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸ்காரர் மோகன் ராஜை யார் கொலை செய்தது என்பது தெரியவில்லை. மது குடித்தபோது ஏற்பட்ட மோதலில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொலையுண்ட போலீஸ்காரர் மோகன்ராஜுக்கு அன்பு ரோஜா என்ற மனைவியும், அஸ்வின் என்ற மகனும், அவினாசி, அஜயா என்ற மகள்களும் உள்ளனர். #tamilnews
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு அடுத்த ஆப்பூர், சேந்தமங்கலத்தில் வசித்து வந்தவர் மாசுபி (வயது25). மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த இவர் அதே பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வீட்டு வேலை பார்த்து வந்தார். இன்று காலை அவர் தங்கியிருந்த வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து பாலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் மாவட்ட விவசாயிகளின் குறைதீர் கூட்டம் மாவட்ட கலெக்டர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
இதில் காஞ்சீபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத், மதுராந்தகம், செய்யூர் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் திரளாக விவசாயிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பாலாற்றில் தடுப்பணை கட்டுதல், கரும்புக்கு கூலி, சென்னை- சேலம் 8 வழிச்சாலை திட்ட மறுபரிசீலினை, உரங்கள் வழக்க கோருதல், கறவை மாடுகள் வாங்குவதற்கு கடன் கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினர்.
பின்னர் மாவட்ட கலெக்டர் பொன்னையா பேசியபோது:-
மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் குறைகளை நிவர்த்தி செய்து பொருளாதார முன்னேற்றம் அடையும் வகையில் இக்குறை தீர் கூட்டம் நடத்தப்படுகிறது. ஈசூர், வள்ளிபுரம், உள்ளாவூர் ஆகிய இடங்களில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கு கருத்துரு இறுதிவடிவம் பெறும் வகையில் தடுப்பணை கட்டும் முழு விவரம் அதற்கு ஆகும் செலவு குறித்த விவரம் அனைத்தும் நிதித்துறைக்கு அனுப்பபட்டுள்ளது.
அதன்படி நிதித்துறையில் இருந்து நிதி ஒதுக்கும் பட்சத்தில் தடுப்பணை கட்டும் பணிகள் விரைந்து தொடங்கப்படும்.
இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பணை கட்டும் பணிகள் தொடங்கப்படும். மேலும் சென்னை-சேலம் 8 வழிச் சாலை பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன் படி நிலம் கையப்படுத்தும்போது அரசு விதிமுறைகளை பின்பற்றி விவசாயிகளுக்கு தெரிவிக்கப்படும். அதோடு விவசாயிகளிடம் கருத்து கேட்பு நடத்தப்படும். அதன்பிறகு முறையாக 8 வழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் லதாபானுமதி, பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் தேவராஜன் உள்ளிட்ட பல்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். #GreenWayRoad
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னை-சேலம் 8 வழி பசுமை சாலை திட்டத்துக்கு நில ஆர்ஜிதம் செய்வதை நிறுத்தக்கோரி நாளை சேலத்தில் நடைபெற இருக்கும் போராட்டத்தில் நான் கலந்து கொள்ளவில்லை.
இதில் 3 மாவட்டச் செயலாளர்கள் மற்றும் துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் பங்கேற்கிறார்கள்.
புழல் சிறையில் ஒரு கைதி கொலை செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு எந்த அளவுக்கு உள்ளது என்பதை இது எடுத்துக்காட்டுகிறது.
தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகிறார்.
இன்று இந்த கருத்தை கூறும் அவர் நாளை என்ன கருத்தை வெளியிடுவார் என தெரிகிறது.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை கமல்ஹாசன் சந்தித்து பேசியது குறித்து உங்கள் யூகங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
தாம்பரம் ராஜாஜி ரோடு, காந்தி சாலை, கக்கன் தெரு பகுதியில் உள்ள பழக்கடைகளில் இன்று காலை காஞ்சீபுரம் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது 2 கடைகளில் ரசாயன பவுடர் மூலம் மாம்பழங்கள் பழுக்க வைத்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கடைகளில் இருந்த சுமார் 7½ டன் மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அதனை லாரியில் ஏற்றிச்சென்று குப்பை கிடங்கில் கொட்டி அழித்தனர். அதிகாரிகளின் சோதனைக்கு வியாபாரிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. #Tamilnews
சேலையூரை அடுத்த மானம்பாக்கம் முதல் குறுக்குத்தெருவில் வசித்து வருபவர் நன்னப்பன், ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர். கடந்த 4-ந்தேதி அவர் வீட்டை பூட்டி விட்டு ஆவடியில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றார்.
நேற்று இரவு திரும்பி வந்த போது வீட்டின் கதவு பூட்டு உடைந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 32 பவுன் நகையை காணவில்லை.
வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நகையை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது. இதில் ஈடுபட்டது அதே பகுதியை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று தெரிகிறது.
இது குறித்து சேலையூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.
துப்பாக்கி சூடு குறித்து பேஸ்புக், வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைத்தளங்களிலும் பல்வேறு விமர்சனங்கள் வெளியாகின. இதில் போலீசாரை கடுமையாக விமர்சனம் செய்து பேஸ்புக்கில் ஒரு விமர்சனம் வெளியானது.
அதில், ‘தூத்துக்குடியில் அப்பாவி மக்களை சுட்டுக் கொன்ற போலீசாரை சும்மாவிடக்கூடாது. போலீஸ் நிலையத்தை தாக்க வேண்டும். போலீஸ் வாகனங்களை உடைக்க வேண்டும். போலீசாரின் குடும்பத்தையும் விடக்கூடாது’’ என்று குறிப்பிட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
பேஸ்புக்கில் இதை பதிவு செய்தவர் யார் என்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
இதில் போலீசுக்கு எதிராக இந்த கருத்தை பதிவு செய்தவர் கூடுவாஞ்சேரியை அடுத்த காரணைபுதுச்சேரியை சேர்ந்த பாலாஜி (31) என்பது தெரியவந்தது. இவர் நாம் தமிழர் கட்சி பிரமுகர்.
இதையடுத்து பாலாஜியை கூடுவாஞ்சேரி போலீசார் கைது செய்தனர். அவர் மீது போலீசுக்கு எதிராக கலவரம் செய்ய பொது மக்களை தூண்டியதாக கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்தார்.
பின்னர் நாம் தமிழர் கட்சி பிரமுகர் பாலாஜி செங்கல்பட்டு 2-வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அதை தொடர்ந்து நீதிபதி உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். #ThoothukudiProtest
துபாய், சார்ஜாவில் இருந்து சென்னைக்கு ‘லேப்-டாப்’பில் மறைத்து கடத்தி வரப்பட்ட 2 கிலோ தங்கக்கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 வாலிபர்கள் சிக்கினர். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. இதில் வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது கேரளாவை சேர்ந்த வர்கீஸ் (வயது 29) என்பவரின் உடமைகளை சோதனை செய்தனர்.
அவரிடம் இருந்த ‘லேப்-டாப்’பின் எடை வழக்கத்தை விட சற்று அதிகமாக இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அதனை பிரித்து பார்த்தனர். அப்போது அதில் 9 தங்கக்கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர். இதனையடுத்து ரூ.13 லட்சம் மதிப்புள்ள 450 கிராம் தங்கக்கட்டிகளை கைப்பற்றினார்கள். இதுதொடர்பாக கேரள வாலிபரிடம் சுங்க இலாகா அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சார்ஜாவில் இருந்து சென்னைக்கு மற்றொரு விமானத்தில் வந்த சென்னையை சேர்ந்த அஸ்மத் (31) என்பவரின் உடமைகளை சோதனை செய்தபோது அவரது ‘லேப்-டாப்’பும் எடை அதிகமாக இருந்ததால் அதனை பிரித்து பார்த்தனர்.
அப்போது அதில் தங்கக்கட்டிகள் இருந்தன. அவரிடம் இருந்து ரூ.47 லட்சம் மதிப்புள்ள 1½ கிலோ தங்கக்கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அஸ்மத்தை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கடத்தலில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளிக்கரணை விஜய சந்திரன் நகரில் அடுக்கு மாடி குடியிருப்புகள் உள்ளன.
இங்குள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் நடராஜ். இவருடைய மகன் ஆனந்த் (32). இவர் சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள பல்நோக்கு அரசு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வந்தார். நேற்று இரவு பள்ளிக்கரணையில் உள்ள அடுக்கு மாடி வீட்டில் ஆனந்த் இருந்தார்.
இரவு 11 மணி அளவில் டாக்டர் ஆனந்த் 4-வது மாடியில் இருந்து கீழே குதித்தார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த ஆனந்தை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து பள்ளிக்கரணை போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து ஆனந்த் உடல் மருத்துவ பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
டாக்டர் ஆனந்துக்கு பதவி உயர்வு கிடைக்க இருந்தது. இந்த நிலையில் அவர் 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது ஏன்? என்பது குறித்து பள்ளிக்கரணை போலீசார் விசாரணை நடத்திவருகிறார்கள். #Tamilnews
காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் 47-வது பிறந்த நாள்விழா இன்று கொண்டாடப்பட்டது.
இதை முன்னிட்டு காஞ்சீபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீ பெரும்புதூர், மதுராந்தகம், செய்யூர், திருப்போரூர் ஆகிய பகுதிகளில் காங்கிரஸ் கட்சியினர் கட்சிக்கொடி ஏற்றியும், பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கியும் கொண்டாடினர்.
மாவட்டத்தில் உள்ள சர்வ மதக் கோயில்களிலும் ராகுல் காந்தி நீடுழி வாழவும் அடுத்த பாரதப் பிரதமராகப் பதவி ஏற்க வேண்டியும் சிறப்பு அபிஷேகம் மற்றும் பிரார்த்தனைகள் நடத்தப்பட்டது. மேலும் பல்லாயிரக்கணக்கானோருக்கு அன்னதானமும் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதி முன்னாள் எம்பி விஸ்வநாதன் காஞ்சிபுரம் நகரமன்ற அலுவலகத்திற்கு எதிரே காங்கிரஸ் கட்சிக் கொடியினை ஏற்றி வைத்து ராகுல் காந்தி நீடுழி வாழ வேண்டி பிரம்மாண்ட கேக் வெட்டி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
மேலும் ஆயிரம் பேருக்கு பிரியாணி விருந்தும் வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு பழங்களும் பெட் ஷீட்டுகளும் வழங்கப்பட்டது.
திருக்கச்சி நம்பி தெருவில் அமைந்துள்ள திருவள்ளுவர் குருகுலத்தில் தங்கி பயின்று வரும் மாணவர்களுக்கு பிரியாணி விருந்து வழங்கப்பட்டது.
இதே போல் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட திருப்போரூர் பூஞ்சேரி கூட்டுச் சாலையிலும், மகாபலிபுரம் கூட்டுச்சாலை கானாத்தூரிலும், மதுராந்தகம், செங்கல்பட்டு, உத்திரமேரூர் உள்ளிட்ட பகுதிகளிலும் முன்னாள் எம்பி பெ,விஸ்வநாதன் தலைமையில் காங்கிரஸ் கட்சிக் கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிகளில் காஞ்சீபுரம் முன்னாள் எம்.பி. விஸ்வநாதன், நிர்வாகிகள் எஸ்.எல்.என்.எஸ்.விஜயகுமார், சாலபோகம் அருண், கோபால், வழக்கறிஞர்கள் சத்தியநாராயணன், மணிகண்டன், கிளார்குமார், விசு, முத்தியால்பேட்டை ராஜசேகர், சாதிக்பாட்சா, செந்தில, இசிஆர். அச்சுகன், ஓஎம்ஆர். சின்னராசா, டிராவல்ஸ் ராஜேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட தலைவர் காஞ்சி. ஜீவீ. மதியழகன் தலைமையில் மேற்கு மாவட்டம் முழுவதும் காங்கிரஸ் கட்சிக்கொடியேற்றப்பட்டு பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. மேலும் காஞ்சிபுரத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கட்சிக்கொடி ஏற்றி பிரம்மாண்ட கேக் வெட்டி ஏழை எளிய மக்களுக்கு வேட்டி சேலைகள் உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கினர்.
இதில் காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் காஞ்சி ஜீவீ. மதியழகன், நிர்வாகிகள் சேரன், வீரபத்ரன், பச்சையப்பன், இராம.நீராளன், தென்னேரி சுகுமார், சம்பத், நாதன், சுகுமாரன், லோகநாதன், சந்தானம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். #Congress #HappyBirthdayRahulGandhi
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் பஸ் நிலையம் எதிரே மறைந்த தி.மு.க. தெற்கு மாவட்ட அவைத் தலைவர் சி.வி.எம்.அ. பொன் மொழியின் படத்திறப்பு விழா நடைபெற்றது.
தெற்கு மாவட்ட அவைத் தலைவர் சுந்தர் எம்.எல்.ஏ தலைமை தாங்கினார். அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, வடக்கு மாவட்ட செயலாளர் தா.மோ. அன்பரசன் எம்எல்ஏ முன்னிலை வகித்தனர். மாநில மாணவரணி செயலாளர் எழிலசரன் எம்.எல்.ஏ வரவேற்புரை நிகழ்தினார்.
நிகழ்ச்சியில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பொன் மொழியின் படத்தை திறந்து வைத்து பேசியதாவது:-
தற்போது தமிழ்நாட்டில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அரசு ஊழியர்கள், மாணவர்கள், நெசவாளர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் போராடி வருகின்றனர். ஆனால் நாட்டு மக்களைப் பற்றி இந்த அரசுக்கு கவலை இல்லை. சமீபத்தில் மக்கள் நீதிமன்றத்தின் ஒரு தீர்ப்பினை ஆவலோடு எதிர்ப்பார்த்திருந்தனர். ஆனால் அந்தத் தீர்ப்பு வேடிக்கையாகவும் விசித்திரமாகவும் இருந்தது. இன்னும் சொல்லப் போனால் நாட்டு மக்களுக்கு ஆபத்தாக இருந்தது.
18 எம்.எல்.ஏ.க்கள் பதவி பறிப்பு வழக்கில் அவர்கள் அரசினை எதிர்த்து வாக்களிக்கவில்லை. முதல்வரை மாற்ற வேண்டும் என்றுதான் கவர்னரிடம் மனு அளித்தனர். அதற்காக அவர்களது பதவி பறிக்கப்பட்டுள்ளது.
ஆனால் 11 எம்.எல்.ஏ.க் கள் அரசினை எதிர்த்து வாக்களித்தனர். அவர்கள் இன்று துணை முதல்வராகவும் அமைச்சர்களாகவும் உள்ளர். 18 எம்.எல்.ஏ க்கள் வழக்கில் மாறுபாடான தீர்ப்பு வந்திருக்கிறது.
ஆர்.கே. நகர் தொகுதியில் ஜெயலலிதா இறந்து 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் சுயேட்சை வேட்பாளர் தினகரன் வெற்றி பெற்றார். இதுதான் இடைத் தேர்தல் விதிமுறை. ஆனால் 18 எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிக்கப்பட்டு 10 மாதங்களாக அத்தொகுதிகள் அனாதை ஆக்கப்பட்டள்ளன.
இதற்குக் காரணம் மத்தியில் ஆளும் மோடி அரசே என பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன்.
மக்களிடம் இருக்கக்கூடிய உணர்வுகள் எல்லாம், நீங்கள் எப்போது ஆட்சி வரப்போகிறீர்கள் என்று கேட்பவர்களை விட, எப்போது இந்த ஆட்சியை கவிழ்க்கப்போகிறீர்கள் என்ற கேள்விதான். அத்தோடு இல்லை, இன்னொன்றும் சொல்கிறார்கள், தலைவர் இருந்தால் விட்டிருக்க மாட்டார். இந்நேரம் முடிதிருப்பார் என்று சொல்லுகிறார்கள். அவர்கள் எல்லாம் தலைவர் கலைஞரை பார்த்தவர்கள், நாங்கள் கலைஞரோடு பழகிக் கொண்டிருக்கக்கூடியவர்கள். கலைஞர் அவர்கள் எங்களைப் பக்குவப்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள்.
கலைஞர் அவர்கள் எப்போது எதை செய்வார் என்று நாங்களும் தெரிந்து வைத்திருக்கிறோம். எனவே, விரைவிலே கலைஞர் பொறுத்திருந்து எதைச் செய்வாரோ நாங்களும் பொறுத்திருந்து செய்ய காத்திருக்கிறோம். எனவே, மக்களாகிய நீங்களும் தயாராக இருங்கள்
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் நகரச் செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம், கழக வர்த்தக அணி துணைத் தலைவர் வி.எஸ்.ராம கிருஷ்ணன்,வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய செயலாளர் சிறுவேடல் செல்வம், காஞ்சி ஒன்றிய கழகப் பொருளாளர் தசரதன், நிர்வாகிகள் பி.எம்.குமார், சுகுமார், ஜெகந் நாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். #MKStalin #Karunanidhi






