என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    ஸ்ரீபெரும்புதூர் அருகே தொழில் அதிபர்களை மிரட்டி பணம் பறித்து காரில் ஆயுதங்களுடன் சுற்றிய 4 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள சோமங்கலத்தை அடுத்த நடுவீரப்பட்டு பகுதியை சேர்ந்தவன் லெனின் (28). பிரபல ரவுடியான இவன் மீது கொலை, கொலை முயற்சி, அடிதடி வழக்குகள் உள்ளன. தொழில் அதிபர்களை மிரட்டி பணம் பறித்ததாகவும் இவன் மீது குற்றம் சாட்டப்பட்டது.

    கூட்டாளிகளுடன் காரில் சுற்றி கைவரிசை காட்டும் இவன் படப்பை பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூர் ஏ.எஸ்.பி. ராஜேஷ் கண்ணன், மணிமங்கலம் இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் தனிப்படை போலீசார் லெனினையும், அவனது கூட்டாளிகளையும் பிடிக்க வலைவிரித்தனர். இதன்படி ரவுடிகள் பதுங்கி இருந்த இடத்தை சுற்றி வளைத்த போலீசார் துப்பாக்கி முனையில் லெனினை கைது செய்தனர்.

    அவனது கூட்டாளிகளான கரசங்கால் பகுதியை சேர்ந்த கோபி, எறுமையூர் பழனி, குரோம்பேட்டை ரகு ஆகியோரும் பிடிபட்டனர்.

    இவர்கள் பயன்படுத்திய கார், மோட்டார் சைக்கிள் ஆகியவையும், காரில் பதுக்கி வைத்திருந்த கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதனையடுத்து 4 பேரையும் ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் வேலூர் சிறையில் அடைத்தனர். போலீஸ் பிடியில் சிக்கிய போது ரவுடி லெனின் தப்பி ஓட முயன்றான். அப்போது கால்வாயில் தவறி விழுந்த அவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து லெனினை ஆஸ்பத்திரியில் அனுமதித்து போலீசார் சிகிச்சை அளித்தனர். இதன் பின்னர் அவர் ஜெயிலுக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    ரவுடிகள் பயன்படுத்திய ஸ்கார்பியோ காரில் ஸ்ரீபெரும்புதூர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பழனியின் கார் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. இந்த ஸ்டிக்கரை ரவுடிகள் பல இடங்களில் தவறாக பயன்படுத்தி உள்ளனர். அது பற்றியும் விசாரணை நடக்கிறது. போலியாக எம்.எல்.ஏ. ஸ்டிக்கரை தயாரித்து ரவுடிகள் காரில் ஒட்டி உள்ளனர். இதன் பின்னணி குறித்தும் விசாரணை நடக்கிறது.

    ஸ்ரீபெரும்புதூர் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட ரவுடி உள்பட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மாம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கமலேஷ்குமார். தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் வேலை முடித்து வீட்டிற்கு நடந்து சென்றார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 5 மர்ம நபர்கள் கமலேஷ் குமாரை கத்தி முனையில் மிரட்டி, பணம், செல்போனை பறித்து சென்றனர்.

    இது குறித்து கமலேஷ் குமார் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்கு பதிவு செய்து வழிப்பறி கொள்ளையர்களை தேடி வந்தார்.

    இந்த நிலையில் போந்தூர் டாஸ்மாக் பாரில் சந்தேகத்திற்கிடமான 5 பேர் மது அருந்துவதாக போலீசுக்கு தகவல் வந்தது.

    போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் நடுவீரபட்டு பகுதியை சேர்ந்த நரேஷ்பாபு, சுரேஷ்பாபு, மாடம்பாக்கத்தை சேர்ந்த பரத், ஆனந்த், தாம்பரத்தை சேர்ந்த ஐசக் என்பதும், கத்தி முனையில் வழிப்பறி, நகை பறிப்பில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

    இதில் நரேஷ்பாபு என்பவர் பிரபல ரவுடியான நடுவீரபட்டு லெனினின் கூட்டாளி ஆவார்.

    கைதான 5 பேரிடம் இருந்து 4 கத்தி, ரூ. 3 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களை போலீசார் ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    மடிப்பாக்கத்தில் வேலை வாங்கி தருவதாக கல்லூரி மாணவர்களிடம் மோசடியில் ஈடுப்பட்ட வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலந்தூர்:

    மடிப்பாக்கத்தைச் சேர்ந்தவர் இன்பென்ட்ராஜ். கல்லூரி மாணவர். இவர் மடிப்பாக்கம் போலீசில் அளித்த புகாரில், “வாலிபர் ஒருவர் தனக்கு டேட்டா எண்டரி ஆபரேட்டர் வேலை வாங்கி தருவதாக பணம் ஏமாற்றி விட்டதாக” கூறி இருந்தார்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் மடிப்பாக்கம் அருணாச்சலம் நகரைச் சேர்ந்த மேத்யூஸ் மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது.

    அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது 500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ-மாணவிகளிடம் பகுதி நேரமாகவும், நிரந்தரமாகவும் டேட்டா எண்டரி ஆபரேட்டர் வேலை தருவதாக பணம் வசூல் செய்து ஏமாற்றி இருப்பது தெரிந்தது. சுமார் ரூ.3 லட்சம் வரை மாணவ-மாணவிகளிடம் வசூல் செய்துள்ளார்.

    இதுதொடர்பாக அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலுக்காக 5520 வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டுவரப்பட்டன.

    காஞ்சீபுரம்:

    பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலுக்காக 10 ஆயிரத்து 170 வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கப்பட்டன.

    இந்த மின்னணு எந்திரங்கள் அதன் அடிப்படையில் பெங்களூரில் இருந்து இரண்டு கண்டெய்னர் லாரிகள் மூலம் 5520 புதிய வாக்கு பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டன. முதற்கட்டமாக கடந்த 16-ந் தேதி 4650 எந்திரங்கள் காஞ்சீபுரத்திற்கு வந்தது.

    இந்நிலையில் புதிய வாக்கு பதிவு எந்திரங்களை மாவட்ட கலெக்டர் பொன்னையா ஆய்வு செய்தார். வாக்கு பதிவு எந்திரங்கள் காஞ்சீபுரம் அரசு கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இந்த ஆய்வின் போது வருவாய் கோட்ட அலுவலர் ராஜூ, அதிமுக மேற்கு மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், நிர்வாகி கே.யு.எஸ். சோமசுந்தரம், மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜீவீ. மதியழகன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ரவிச் சந்திரன், தனி வட்டாட்சியர் சீதா உள்ளிட்டோர் உடனிருந்தனர். #Tamilnews

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான சிறுதாவூர் பங்களாவில் ஏற்பட்ட தீ நள்ளிரவு 1 மணி அளவில் முழுமையாக அணைக்கப்பட்டது. பங்களாவை சுற்றி உள்ள சவுக்கு மரங்கள் முற்றிலும் எரிந்து நாசமானது.
    திருப்போரூர்:

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களா, திருப்போரூரை அடுத்த சிறுதாவூரில் உள்ளது.



    இங்கு 10-க்கும் மேற்பட்ட தனியார் பாதுகாவலர்கள் மற்றும் 5-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பங்களாவை சுற்றிலும் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் காலி இடம் உள்ளது. இதில் அதிக அளவு சவுக்கு மரங்கள், புற்கள் காணப்படுகின்றன.

    இந்த நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் சிறுதாவூர் பங்களா வளாகத்தில் இருந்த புற்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. காற்றின் வேகத்தில் தீ மளமளவென காய்ந்து கிடந்த இலைச்சருகளில் பரவி காட்டுத்தீயாக பற்றி எரிந்தது. மேலும் அங்கிருந்த சவுக்கு மரங்களும் தீப்பிடித்து எரிந்தன.

    தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் அப்பகுதி முழுவதும் கடும் புகை மூட்டம் ஆனது. ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்ததும் சிறுசேரி, திருக்கழுக்குன்றம், கல்பாக்கம், மறைமலைநகர், செங்கல்பட்டு தீயணைப்பு நிலையங்களில் இருந்து 10-க்கும் மேற்பட்ட வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் வந்தனர். அவர்கள் ரசாயன கலவை கலந்த நீரை பீய்ச்சி அடித்தனர்.

    ஏக்கர் கணக்கில் தீப்பற்றி எரிந்ததாலும், இரவு நேரம் என்பதாலும் அவர்களால் தீயை உடனடியாக அணைக்க முடியவில்லை. சுமார் 6 மணி நேரம் கடுமையான போராட்டத்துக்கு பிறகு நள்ளிரவு 1 மணி அளவில் தீ முழுமையாக அணைக்கப்பட்டது.

    எனினும் பங்களாவை சுற்றி பல ஏக்கர் பரப்பளவில் இருந்த ஏராளமான சவுக்கு மரங்கள் முற்றிலும் எரிந்து நாசமானது.

    தீப்பிடித்த இடத்துக்கும், பங்களா உள்ள இடத்துக்கும் சுமார் ½ கிலோ மீட்டர் இடைவெளி இருந்தது. எனவே மரங்களில் பற்றிய தீ பங்களாவில் பரவவில்லை. இதனால் பெரிய அளவிலான சேதம் தவிர்க்கப்பட்டது.

    புதர்களில் தீப்பிடித்ததால் வெப்பம் தாங்காமல் அங்கு பதுங்கி இருந்த ஏராளமான பாம்புகள் படையெடுத்து வெளியே வந்தன.

    தீ விபத்து நடந்த இடத்தை வருவாய்த்துறை மற்றும் போலீசார் பார்வையிட்டனர். தீ விபத்துக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. காய்ந்த புற்களுக்கு மர்ம நபர்கள் யாரேனும் தீ வைத்தனரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சிறுதாவூர் பங்களா வளாகத்தில் இதற்கு முன்பு 2 முறை இதேபோல் தீ விபத்து நடந்தது. அப்போது உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரிய அளவில் சேதம் ஏற் படவில்லை. தற்போது 3-வது முறையாக பெரிய அளவில் தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது. இதில் பல லட்சம் மதிப்பிலான சவுக்கு மரங்கள் நாசமாகி உள்ளன.
    வேளச்சேரி பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் தடை செய்யப்பட்ட போதை பொருள் விற்பனை செய்த ஊழியர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    ஆலந்தூர்:

    கிண்டி மற்றும் வேளச்சேரி பகுதிகளில் உள்ள ஓட்டல்களில் தடை செய்யப்பட்ட ஹுக்கா என்ற போதைப் பொருள் விற்கப்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து கிண்டி போலீசார் நேற்று இரவு கிண்டி மற்றும் வேளச்சேரி பகுதிகளில் உள்ள ஓட்டல்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    வேளச்சேரி செக்போஸ்ட் அருகே உள்ள ஒரு ஓட்டலில் சோதனை நடத்தியபோது அங்கு தடை செய்யப்பட்ட ஹுக்கா என்ற போதைப் பொருளை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்வது தெரியவந்தது.

    இதையடுத்து ஓட்டல் ஊழியர்களான சவுகார் பேட்டையை சேர்ந்த மோகித் (வயது 25), பஜன்லால் (27), மற்றொரு பஜன்லால் (24), சந்தீப் (29) ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ரூ. ஆயிரம், ரூ.2 ஆயிரம் கோடி கமி‌ஷனுக்காக சென்னை- சேலம் 8 வழி சாலை அமைக்கப்படுகிறது என்று திருநாவுக்கரசர் குற்றம் சாட்டியுள்ளார். #thirunavukkarasar #chennaisalem8wayproject

    தாம்பரம்:

    காஞ்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி செயல் வீரர்கள் கூட்டம் மாவட்ட தலைவர் ரூபி மனோகரன் தலைமையில் தாம்பரத்தில் நடைபெற்றது.

    இதில் கலந்து கொண்ட தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரை சுமார் 200-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் இரு சக்கர வாகனத்தில் பேரணியாக சென்று குதிரை வண்டியில் அழைத்து வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பின்னர் புதிய நிர்வாகிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கிய திருநாவுக்கரசர் மக்கள் பணிகள் எதுவாக இருந்தாலும் அந்தந்த பகுதி காங்கிரஸ் நிர்வாகிகள்தான் முதலில் நின்று உதவ வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சேலம் 8 வழி சாலை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் காட்டு மரங்களை விளை நிலங்களை குன்றுகளை அழித்து சாலை அமைக்க வேண்டிய அவசியம் என்ன. தமிழகத்தில் சாலையே இல்லாத இடங்கள் மற்றும் ஒரு வழிசாலை இரு வழி சாலை ஆகியவற்றை மேம்படுத்தலாம்.

    ரூ. ஆயிரம், ரூ.2 ஆயிரம் கோடி கமி‌ஷன் பெற ஒரு சிலரிடம் காண்ட்ராக்ட் கொடுத்து 10 ஆயிரம் கோடி செலவில் சாலை அமைக்கும் பெயரில் மக்களுக்கு தொல்லை கொடுக்க கூடாது. போராடும் மக்களை கைது செய்வது பாசிச நடவடிக்கை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது. மக்கள் தொகைக் கேற்ப காவலர்களை நியமித்து அவர்கள் பணியாற்ற சுதந்திரம் தந்து மக்களை பாதுகாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் சாதனை புத்தகத்தை திருநாவுக்கரசர் வெளியிட முன்னாள் எம்.எல்.ஏ. யசோதா பெற்றுக் கொண்டார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. விஸ்வநாதன், சிறுபான்மை பிரிவு மாநில துணைத் தலைவர் பிரின்ஸ் தேவசகாயம், மாவட்ட பொருளாளர் சிவா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். #thirunavukkarasar #chennaisalem8wayproject

    இந்தியாவில் மோடி ஆட்சியால் பெண்களுக்கு மட்டுமல்ல யாருக்குமே பாதுகாப்பு இல்லை என கனிமொழி எம்.பி. கூறியுள்ளார். #DMK #Kanimozhi
    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் கனிமொழி எம்.பி. இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் நடக்கும் ஆட்சி பெண்ணின் பெயரால் நடப்பதாக கூறுகிறார்கள். ஆனால் எந்த அளவு மோசமான ஆட்சி நடக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும்.

    இந்தியா பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடு என்று செய்தி வெளியாகி உள்ளது. இந்த நாட்டில் பெண்களுக்கு மட்டுமல்ல யாருக்கும் பாதுகாப்பு இல்லை.

    தமிழ்நாட்டில் ஆட்சியாளர்கள் மக்களுக்கு தேவையான எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. தங்களுக்கு தேவையான திட்டங்களை மட்டுமே கொண்டு வருகிறார்கள்.

    8 வழி சாலை திட்டத்தை நிறைவேற்றுவதில் அவசரம் காட்டுகிறார்கள். மக்களுடைய கருத்தை கேட்கவில்லை. இதற்கான பேச்சு வார்த்தை நடைபெறவில்லை. எதிர்ப்பு தெரிவிப்பவர்கள், கேள்வி கேட்பவர்களை கைது செய்கிறார்கள்.

    மதுரவாயல்- துறைமுகம் விரைவு சாலை திட்டம் வளர்ச்சி திட்டம் இல்லையா? அதை நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டு இருப்பது ஏன்? முக்கியமான இந்த திட்டத்தை நிறைவேற்ற அவசரம் காட்டவில்லையே. இது மிகவும் முக்கியமான வளர்ச்சி திட்டம் என்பது தெரியாதா?

    சட்டசபையில் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நாங்களும் திராவிட கட்சிதான். மதசார்பின்மை இல்லாதவர்கள் என்று கூறி இருக்கிறார். இது நல்ல நகைச்சுவை.

    தமிழ்நாட்டில் தீவிரவாதிகள் இருப்பதாகவும், அதை தடுக்க வேண்டும் என்றும் பா.ஜனதா சொல்லி வருகிறது. பா.ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ்.-ம்தான் தீவிரவாதம் கொண்டவை. அதை தடுக்க வேண்டும்.

    ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் இரும்பு தொழிற்சாலை அமைக்க மத்திய அரசு கொடுத்த வாக்குறுதியை உடனே நிறைவேற்றக் கோரி தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.யான சி.எம்.ரமேஷ் கடந்த 21-ந் தேதி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். அவரது போராட்டம் இன்று 7-வது நாளாக நீடிக்கிறது.

    இந்த நிலையில் தி.மு.க. எம்.பி. கனிமொழி கடப்பாவுக்கு சென்று உண்ணாவிரதம் இருக்கும் தெலுங்கு தேசம் எம்.பி. ரமேசை சந்தித்து பேசி ஆதரவு தெரிவித்தார்.

    இறையாண்மையை பாதுகாக்கவும், முறையான நிதி பெறவும் மத்தியில் உள்ள பா.ஜனதா அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு போராட வேண்டிய நேரம் இது.

    இன்றைக்கு இந்த நாடு, மாநில உரிமை பற்றியும், பா.ஜனதா ஆட்சி இல்லாத மாநில மக்களை பற்றியும் அக்கறை கொள்ளாத அரசால் ஆட்சி செய்யப்பட்டு கொண்டிருக்கிறது.

    பிரதமர் மோடி வெளிநாட்டுக்கு பயணம் மேற்கொண்டே இருக்கிறார். அவர் பாராளுமன்ற கூட்டத்தில் பங்கேற்பதில்லை. மக்களின் பிரச்சினையில் கவனம் செலுத்துவதில்லை என்றார். #DMK #Kanimozhi
    நியூட்ரினோ திட்டத்தை தொடங்குவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கிடைக்கவில்லை என்று இந்திய அணுசக்தி கழக தலைவர் சேகர்பாசு கூறினார்.
    ஆலந்தூர்:

    இந்திய அணுசக்தி கழக தலைவர் சேகர்பாசு சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2 யூனிட்டுகளில் மின் உற்பத்தி நடக்கிறது. மேலும் 4 யூனிட்டுகள் தொடங்குவதற்கான பணி நடைபெறுகிறது. இன்னும் 5 அல்லது 6 ஆண்டுக்குள் இந்த பணி முழுவதும் முடிவடையும்.



    கூடங்குளத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு தேவைக்கு அதிகமாக மின்சாரம் கிடைக்கிறது. எனவே தமிழ்நாட்டில் மின் பற்றாக்குறை ஏற்படாது.

    கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் நடைபெறும் பணிகள் மெதுவாக நடைபெற்றாலும் சரியான முறையில் நடக்கிறது.

    தற்போது நியூட்ரினோ திட்டத்தை தொடங்குவதற்கு தாமதம் ஏற்பட்டு உள்ளது. அதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. அதில் முக்கியமாக சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் இருந்து இன்னும் அனுமதி கிடைக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஸ்ரீபெரும்புதூர் தேசிய நெடுஞ்சாலையில் கோழி ஏற்றிவந்த லாரி, மற்றொரு கண்டெய்னர் லாரி மீது பயங்கரமாக மோதி தீப்பிடித்ததில் டிரைவர் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே கருதி பரிதாபமாக உயிரிழந்தார்கள்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூரை அடுத்த தண்டலம் அருகே சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை கோழிகள் ஏற்றிய லாரி சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது.

    தேனி மாவட்டம் ராயப்பன் பட்டியை சேர்ந்த டிரைவர் சகாயம் (வயது 38) லாரியை ஓட்டினார். திருவண்ணாமலை மாவட்டம், நாயுடு மங்களத்தை சேர்ந்த மனோகரன் (42), தர்மபுரி மாவட்டம் அஞ்சல்வாடி பகுதியை சேர்ந்த வெற்றிவேல் (24) ஆகியோர் உடன் இருந்தனர்.

    அதிகாலை 5மணி அளவில் தண்டலம் பகுதியில் லாரி வந்த போது சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர் லாரியை டிரைவர் இயக்க முயன்றார்.

    அப்போது பின்னால் கோழி ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து கண்டெய்னர் லாரியின் மீது பயங்கரமாக மோதியது. இதில், கோழி ஏற்றிய லாரியின் முன்பகுதி நசுங்கியது. மேலும் தீப்பிடித்தது. இதனால் காயம் அடைந்த டிரைவர் சகாயம் மற்றும் மனோகரன், வெற்றிவேல் ஆகியோரால் வெளியே வர முடியவில்லை. சிறிது நேரத்தில் தீயில் சிக்கிய அவர்கள் 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார்கள்.


    இந்த விபத்தில் கண்டெய்னர் லாரியும் கவிழ்ந்தது. அதில் இருந்த பேரம்பாக்கத்தை சேர்ந்த டிரைவர் சங்கர் படுகாயம் அடைந்தார். லாரி தீப்பிடித்ததில் அதில் இருந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட கறிக்கோழிகள் கருகி இறந்தன.

    விபத்து குறித்து அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்து பலியான 3 பேரின் உடலையும் மீட்டனர். காயமடைந்த சங்கருக்கு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விபத்து காரணமாக சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து ஸ்ரீபெரும் புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மஸ்கட்டில் இருந்து சென்னை வந்த விமானத்தில் செல்போன் கவரில் மறைத்து வைத்து கடத்தி வந்த 3 கிலோ தங்கக்கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக விமான நிறுவன ஊழியர் உள்பட 2 பேரை கைது செய்தனர்.
    ஆலந்தூர்:

    மஸ்கட்டில் இருந்து சென்னை வந்த விமானத்தில் செல்போன் கவரில் மறைத்து வைத்து கடத்தி வந்த 3 கிலோ தங்கக்கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக விமான நிறுவன ஊழியர் உள்பட 2 பேரை அதிகாரிகள் கைது செய்தனர்.

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரும் விமானங்களில் தங்கம் கடத்தப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்துக் கொண்டு இருந்தனர். அப்போது மஸ்கட்டில் இருந்து விமானம் ஒன்று சென்னைக்கு வந்தது.

    இந்த விமானத்தில் வந்த பயணிகளை அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது கேரள மாநிலம் காசர்கோடுவை சேர்ந்த ரசீத் (வயது35) என்பவர் வெளியே வந்தார். அவருடன் விமான நிறுவன ஊழியர் விஜய் என்பவரும் வந்தார்.

    3 கிலோ தங்கம் பறிமுதல்

    இவர்களை சுங்க இலாகா அதிகாரிகளும், பாதுகாப்பு அதிகாரிகளும் 2 பேரையும் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது இருவரிடம் செல்போன்கள் இருந்தன. அவற்றை அதிகாரிகள் பிரித்து பார்த்தபோது செல்போனிற்கு பதிலாக அதில் தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தன.

    2 செல்போன் கவர்களில் இருந்து 3 கிலோ எடை கொண்ட தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.93 லட்சம் ஆகும்.

    இதையடுத்து கேரளா வாலிபர் ரசீத் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த விமான நிறுவன ஊழியர் விஜய் ஆகியோரை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    கிண்டி ஐ.டி.ஐ. மாணவர் கொலை சம்பவம் தொடர்பாக கைதான 2 மாணவர்கள் பரபரப்பான வாக்குமூலம் அளித்துள்ளனர்.
    ஆலந்தூர்:

    கிண்டியில் ஐ.டி.ஐ. மாணவர் சிவக்குமார் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    கிண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் தனிப்படை அமைத்து நடத்திய விசாரணையில் கொலை பற்றி துப்பு துலங்கியது.

    சிவக்குமாருடன் ஐ.டி.ஐ.யில் படித்து வந்த சக மாணவர்களான அலமாதியைச் சேர்ந்த சதீஷ் (20), நெற்குன்றத்தைச் சேர்ந்த முகமது (20) ஆகிய இருவரும் சேர்ந்தே அவரை கொலை செய்தது தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். சிவக்குமாரை கொலை செய்தது ஏன்? என்பது பற்றி சதீஷ், முகமது இருவரும் பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளனர்.

    சில நாட்களுக்கு முன் எங்களுக்கும், சிவக்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் சிவக்குமார் எங்களை சரமாரியாக தாக்கினான். இதனால் ஏற்பட்ட ஆத்திரம் காரணமாகவே சிவக்குமாரை கொலை செய்தோம் என்று கூறியுள்ளனர்.

    கடந்த 22-ந்தேதி அன்று நாங்கள் நடந்து சென்றபோது சிவக்குமார் எங்களை பார்த்து முறைத்தான். இதனால் 2 பேரும் சேர்ந்து அவனை விரட்டி விரட்டி தாக்கி பீர் பாட்டிலால் குத்தியும், கல்லால் தாக்கியும் கொலை செய்தோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

    கைது செய்யப்பட்ட மாணவர்கள் இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.
    ×