என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    திருவிடந்தையில் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் இன்று காலை கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தையில் நித்ய கல்யாண பெருமாள் கோவில் உள்ளது.

    இது 108 வைணவ கோவில்களில் 62-வது கோவிலாகும். இங்கு ஆதிவராக பெருமாள், அகிலவல்லி தாயாருடன் நித்ய கல்யாண பெருமாள், கோமளவல்லி தாயார் உற்சவர் என பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர்.

    திருமண தடை நீக்கம் மற்றும் ராகு, கேது தோ‌ஷங்களின் பரிகார கோவிலாகவும் இது விளங்குகிறது. இந்து சமய அறநிலையத் துறை மற்றும் மத்திய தொல்லியல்துறை இணைந்து இந்த கோவிலை நிர்வாகம் செய்து வருகின்றனர்.

    கோவிலில் புதிதாக கொடிமரம் அமைத்து கடந்த மூன்று ஆண்டுகளாக திருப்பணிகள் நடந்து வந்தது. பணிகள் முழுவதும் முடிந்து இன்று (வியாழக்கிழமை) கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதையொட்டி பிரதிஷ்டை, யாகம், வாஸ்து சாந்தி, அஷ்டபந்தனம் சாற்றுதல் வழிபாடுகள் தொடங்கி நடந்தது. காலை 9.45 மணியளவில் வேதபுஷ் பன்னர்கள் கோபுர கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.



    விழாவில் இந்து சமய அற நிலையத்துறை ஆணையர் அசோக்குமார், காஞ்சிபுரம் மாவட்ட எம்.பி மரகதம், குமரவேல், இந்து அறநிலையத்துறை ஆணையர் ஆர்.ஜெயா வேலூர் ஆணையர் அசோக்குமார் கலந்து கொண்டனர்.

    கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, பஸ் வசதி செய்யப்பட்டு இருந்தது.
    அரசுக்கு எதிராக போராடும் பொதுமக்களை ஜனநாயகத்திற்கு விரோதமாக கைது செய்வதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    8 வழி சாலையாக என்றாலும் சரி, மக்களுக்கு எதிரான அரசு நடவடிக்கைகள் கண்டித்து அரசியல் கட்சிகளோ பொது மக்களோ போராடுகிறபோது பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் முயற்சி செய்ய வேண்டுமே தவிர பிரச்சினையை மக்களுக்காக எழுப்புபவர்களை அடக்குகிறவிதமாக வழக்கு போடுவது, கைது செய்வது ஜனநாயக விரோதமான ஃபாஸிச போக்கு. அதை காங்கிரஸ் கட்சி சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.

    8 வழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராடுகிறார்கள். சிறு குறு விவசாயிகள் தங்கள் நிலங்களை கட்டாயப்படுத்தி எடுக்கப்படுவதால் போராடுகிறார்கள். அவர்களுடைய பிரச்சினையை கையில் எடுப்பது அரசியல் கட்சியின் கடமையாகும். அதற்காக கைது செய்வது தவறானது. இதுவரை நடைமுறையில் இல்லாத போராட்டங்களை நசுக்குகிற செயலை வன்மையாக கண்டிக்கிறேன்.

    நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டமன்றத்தில் மசோதா கொண்டுவரப்படுவது காலதாமதமாக இருந்தாலும் நான் வரவேற்கிறேன். இதில் முதலமைச்சர் உள்பட அனைவரையும் விசாரிக்கும் வகையில் இருக்க வேண்டும்.

    தமிழகத்தில் எய்மஸ் மருத்துவமணை வருகிறதை வரவேற்கிறேன். இதற்கு மத்திய அரசு நிதியை உடனடியாக அளிக்க வேண்டும். மாநில அரசு நிதி பெற மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.

    ஜெயலலிதா அறிவித்த திட்டங்களை ஏன் அரசு நிறுத்தி உள்ளது என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். ஜெயலலிதா கொண்டு வந்த திட்டம் தவறா? அல்லது தற்போது அரசு செய்துள்ளது தவறா? என்பதை அமைச்சர் தங்கமணி தெரிவிக்க வேண்டும்.

    18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கை விசாரித்து காலதாமதமின்றி விரைவாக தீர்ப்பு வர வேண்டும். உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாததால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளதால் தேர்தல் விரைவாக நடத்தப்பட வேண்டும். ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முடிவில் அனைத்து கட்சிகளையும் அழைத்து ஆலோசனை செய்து முடிவு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    மு.க.ஸ்டாலினை விட பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ் உணர்வு அதிகம் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். #ponradhakrishnan #mkstalin
    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நேபாளத்திற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள சுமார் 1,500 பக்தர்கள் நிலச்சரிவில் சிக்கியுள்ளனர். இதில் தமிழகத்தை சேர்ந்தவர்களும் உள்ளனர். அவர்களை மீட்க வெளியுறவுத்துறை தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இதில் பிரதமரின் அலுவலகம் முழுமையாக கவனம் செலுத்திவருகிறது. எந்தவித பிரச்சினையுமின்றி அவர்களை மீட்டு வரமுடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

    ஸ்டாலினுக்கு இருக்கும் தமிழ் உணர்வைவிட பிரதமர் மோடிக்கு நூறு மடங்கு அதிகமாக இருக்கிறது. இதை தி.மு.க. செயல் தலைவர் புரிந்து கொள்ள வேண்டும். ஏறத்தாழ 30 ஆண்டுகள் மத்தியில் காங்கிரஸ், பாரதீய ஜனதா ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அரசில் இருந்த தி.மு.க. ஒருமுறையாவது தமிழுக்காக பேசியதுண்டா? தி.மு.க.வை சார்ந்து இருந்த எந்த பிரதமராவது, மந்திரியாவது பேசியதுண்டா?

    தமிழ் உணர்வில் நல்ல தமிழ் பற்றாளர் எப்படியிருப்பாரோ அந்த உணர்வு பிரதமர் மோடியிடம் உள்ளது. இதற்கு நாம் பெருமைப்பட வேண்டும். சமஸ்கிருதத்தைவிட பழமையான மொழி தமிழ் என்று பிரதமர் சொன்னபோது ஒரு தமிழ் உணர்வாளராவது பாராட்டினார்களா? தமிழை பற்றி பேசுவதற்கு இவர்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது.



    தூத்துக்குடி சம்பவம் குறித்து தமிழக அரசு தனது துறையின் மீது நம்பிக்கை வைத்து விசாரணை நடத்திக்கொண்டு இருக்கிறது. தமிழக அரசின் எந்த துறையாக இருந்தாலும் அதில் பணியாற்றி ஓய்வுபெறுபவர்களுக்கு தேவையின்றி காலநீட்டிப்பு செய்வது சரியாக இருக்காது.

    இவ்வாறு அவர் கூறினார். #ponradhakrishnan #mkstalin
    உலக நாடுகள் மத்தியில் வானத்திலேயே உலாவி கொண்டிருக்கக்கூடிய பிரதமருக்கு கஷ்டப்படக் கூடியவர்களின் சிரமங்கள் தெரியவில்லை என வைகோ விமர்சித்துள்ளார். #MDMK #Vaiko #Modi
    ஆலந்தூர்:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சென்னை விமான நிலையத்தில் கூறியதாவது:-

    காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகத்திற்கு ஜூலை மாதம் கொடுக்கப்பட வேண்டிய தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று கர்நாடகாவிற்கு அறிவித்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆணையத்தின் அறிவிப்பினை ஏற்று தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்து விடவேண்டிய பொறுப்பும், கடமையும் கர்நாடக அரசுக்கு இருக்கிறது. நல்லதே நடக்கும் என்று எதிர்பார்ப்போம்.



    ஜி.எஸ்.டி.யால் சிறு, குறு தொழில் செய்பவர்கள், வணிகர்கள், பொதுமக்கள், தொழில் முனைவோர்கள் பாதிப்படைந்திருக்கிறார்கள். உலக நாடுகள் மத்தியில் வானத்திலேயே உலாவி கொண்டிருக்கக்கூடிய பிரதமருக்கு கஷ்டப்படக் கூடியவர்களின் சிரமங்கள் தெரியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #CauveryIssue #MDMK #Vaiko
    நெல்லை தாமிரபரணி புஷ்கரத் திருவிழா குறித்து காஞ்சீபுரத்தில் மடாதிபதிகளுடன் விஜயேந்திரர் ஆலோசனை நடத்தினார்.
    காஞ்சிபுரம்:

    திருநெல்வேலி குறுக்குத் துறையில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் தாமிரபரணி புஷ்கரத் திருவிழா வரும் அக்டோபர் மாதம் 12-ம் தேதி தொடங்கி 23-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

    இத்திருவிழா காஞ்சி சங்கர மட பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், தருமை ஆதினம் குருமகா சன்னிதானம் சண்முக தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், திருவாடு துறை ஆதினம் குருமகாசன்னி தானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், திருப்பனந்தாள் காசி மடத்து அதிபர் காசிவாசி முத்துக்குமார சுவாமிகள் உள்ளிட்டோர் முன்னிலையில் அக்டோபர் மாதம் 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    நாள்தோறும் பூஜைகள், ஹோமங்கள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ள நிலையில் தாமிரபரணி நதியில் பிரதிஷ்டை செய்து வழிபட தாமிரபரணி அன்னை சிலை செய்யப்படுகின்றது. இச்சிலை அமைக்கும் பணியினை கடந்த ஏப்ரல் மாதம் 14-ம் தேதி காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தொடங்கி வைத்தார்.

    விழாவினை சிறப்பாக நடத்துவது குறித்து காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தருமை ஆதினம் குருமகா சன்னிதானம் சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், திருவாடுதுறை ஆதினம் சார்பில் காஞ்சிபுரம் கிளை மடம் தம்பிரான் சுவாமிகள், திருப்பனந்தாள் ஆதின இளைய பட்டம் திருஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகள், கோவை காமாட்சிபுரி ஆதினம், தாமிர பரணி புஷ்கர ஏற்பாட்டாளர் மகாலட்சுமி சுப்பிரமணியம் உள்ளிட்டவர்களோடு ஆலோசனை நடத்தினர்.

    ஆலோசனைக்குப் பிறகு தருமபுரி இளைய சன்னிதானம் மாசிலாமணி தேசிச பரமாச்சாரிய சுவாமிகள் கூறியதாவது:-

    வட இந்தியாவில் சிறப்பாக நடைபெறும் கும்பமேளாவைப் போல் தாமிரபரணி ஆற்றில் புஷ்கரத் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது.

    இதற்கு முன்பு மயிலாடுதுறையில் காவிரி புஷ்கரம் கொண்டாடப்பட்டது. அதே போல் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை விருச்சிக ராசியில் குருபகவான் சேரும் நேரத்தில் வற்றாத தாமிரபரணி தீர்த்தத்தில் நீராட வேண்டும். இதற்காக வரும் அக்டோபர் மாதம் 12-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை தொடர்ந்து 12 நாட்கள் விழா நடைபெறும். இது குறித்து ஆலோசனை மேற்கொண்டோம்.

    இந்த புஷ்கரத்தில் விருச்சிக ராசிக்காரர்கள் உள்ளிட்ட அனைத்து ராசிக்காரர்களும் நீராடினால் கர்ம பாவங்கள் தீரும் என்பது ஐதீகம்.

    மேலும் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் உள்ளிட்ட காரியங்கள் செய்யாமல் இருப்போர் புஷ்கரத்தில் நீராடினால் அதன் பலன் கிடைக்கும், இந்த விழாவில் நாடு முழுவதும் உள்ள சன்னியாசிகள், அனைத்து ஆதினகர்த்தர்கள், சங்கராச்சாரியார்கள், பீடாதிபதிகள் உள்ளிட்ட அனைவரும் நீராட உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காஞ்சீபுரம் அருகே வாலிபரை தாக்கி செல்போன் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரத்தை அடுத்த பெருநகர் அருகே தனியார் நிறுவன ஊழியர் ஸ்ரீதர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது 3 வாலிபர்கள் அவரை வழி மறித்து தாக்கி செல்போனை பறித்தனர்.

    இது பற்றி அவர் கிராம மக்களிடம் தெரிவித்தார். திரண்டு வந்தபொதுமக்கள் வழிப்பறியில் ஈடுபட்ட 3 வாலிபர்களை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அவர்களை பெருநகர் போலீசில் ஒப்படைத்தனர். 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னையில் இருந்து ஜெர்மனி வழியாக கனடாவுக்கு போலி பாஸ்போர்ட்டில் செல்ல முயன்ற 3 பெண்கள் உள்பட 19 பேரை குடியுரிமை அதிகாரிகள் கைது செய்து குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு முனையத்தில் இருந்து ஜெர்மனி செல்லும் விமானத்தில் குஜராத், ராஜஸ்தான், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த 3 பெண்கள் உள்பட 19 பேர் குழுவாக செல்ல வந்திருந்தனர்.

    அவர்கள் குடியுரிமை சோதனைக்கு வந்தபோது, சந்தேகம் அடைந்த குடியுரிமை அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது ஜெர்மனி சென்று அங்கிருந்து கனடா நாட்டுக்கு சினிமா படப்பிடிப்பில் கலந்துகொள்ள செல்லவதாக கூறினார்கள். ஆனால் குழுவில் இருந்தவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினார்கள்.

    கடந்த சில மாதங்களாக சினிமா படப்பிடிப்பு என்ற பெயரில் போலி பாஸ்போர்ட்டில் குழுக்களாக சென்று வேலைகளில் ஈடுபடுத்தப்படுவதாக புகார்கள் வருவதால், குடியுரிமை அதிகாரிகள் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்தனர். அப்போது 19 பேரின் பாஸ்போர்ட்களும் போலியானது என்று தெரியவந்தது.

    அவர்கள் ஜெர்மனி சென்று அங்கிருந்து கனடா நாட்டுக்கு வேலைக்கு செல்ல ஏஜெண்டுகளிடம் பணம் தந்து ஏமாந்தவர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஏஜெண்டுகள் பற்றி குடியுரிமை அதிகாரிகள் விசாரித்தனர்.

    ஆனால் ஏஜெண்டுகள் பற்றி எந்தவித துப்பும் கிடைக்காததால் 19 பேரின் விமான பயணத்தை அதிகாரிகள் ரத்து செய்தனர். 19 பேரும் கைது செய்யப்பட்டு, சென்னை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

    குற்றப்பிரிவு போலீசார், இதன் பின்னணியில் உள்ளவர்கள் பற்றி விசாரித்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன் குற்றப்பிரிவு போலீசார் போலி பாஸ்போர்ட் தயாரித்து குழுக்களாக அனுப்பிய கும்பலை கைது செய்தது குறிப்பிடத்தக்கது. #tamilnews
    சென்னை விமானத்தில் தங்க நகை கடத்திய பெண்கள் உள்பட 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலந்தூர்:

    சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு இன்று அதிகாலை 3 மணியளவில் பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது சென்னையை சேர்ந்த ராஜேஸ்வரி, பேகம், சிவகங்கையை சேர்ந்த சுரேஷ் அருண் ஆகியோரின் கைப்பைகளில் விலை உயர்ந்த செல்போன்கள், தங்க நகைகள், மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிந்தது.

    இதையடுத்து மொத்தம் 87 செல்போன்கள், 400 கிராம் தங்கநகை பறிமுதல் செய்யப்பட்டது. செல்போனின் மதிப்பு ரூ 25 லட்சம் ஆகும். தங்க நகையின் மதிப்பு ரூ 12 லட்சம் ஆகும்.

    அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுபற்றி பிடிபட்ட 4 பேரிடமும் அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். #Tamilnews

    ஸ்டாலின் மற்றும் தினகரனால் அ.தி.மு.க.வை அசைக்க முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். #MKStalin #ADMK

    காஞ்சீபுரம்:

    உத்திரமேரூரில் காவிரி நதிநீர் வெற்றி குறித்து நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நடந்தது. காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர்கள் வி.சோமசுந்தரம், மைதிலி திருநாவுக்கரசு, காஞ்சீபுரம் எம்.பி. மரகதம் குமரவேல் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    அமைச்சர் பென்ஜமின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு புதுப்பிக்கப்பட்ட எம்.ஜி.ஆர். சிலையை திறந்து வைத்து பேசினார். அவர் கூறியதாவது:-

    இது வரலாற்று சிறப்பு மிக்க நாள். தீய சக்திகளை வீட்டுக்கு அனுப்பிய நாள் இந்த நாள். எம்.ஜி.ஆர். தமிழகத்தில் தீய சக்திகளை விரட்டி ஆட்சி அமைத்த நாள். அந்த நாளில் எம்.ஜி.ஆரின் சிலையை உத்திரமேரூரில் திறந்து வைப்பது பொருத்தமான நாள். 90 கிலோ மீட்டர் தூரம் உள்ள உத்திரமேரூர் வருவதற்கு 4 மணி நேரம் ஆகிறது.

    இதனால் 8 வழி பசுமை சாலை வந்தால் சேலத்திற்கே 5 மணிநேரத்தில் போகும்போது 1 மணி நேரத்திற்குள் உத்திரமேரூர் வந்துவிடலாம். இப்போது இரண்டரை கோடி வாகனங்கள் உள்ளது. வரும் வருடத்தில் 5 கோடி வாகனங்கள் பெருகிவிடும். இந்த மக்கள் தொகை அடிப்படையில் வருங்கால தேவையை சிந்தித்து அமைக்கப்படுவதுதான் இந்த பசுமை வழிச்சாலை திட்டம்.

    ஒரு திட்டம் நிறைவேற்ற நிலம் எடுக்கும்போது சில பாதிப்புகள் ஏற்படும். அப்போது அந்த நில உரிமையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்வது ஒரு அரசின் கடமை. அதன்படி ஒரு ஹெக்டேருக்கு ரூ.1 கோடி முதல் ரூ.9 கோடிவரை கொடுக்கப்படுகிறது.

    பொதுமக்கள் நலன்கருதி செயல்படுத்தப்படுவதுதான் இந்த திட்டம். அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அரசு எந்த திட்டம் கொண்டு வந்தாலும் எதிர்ப்பதற்கென்றே ஒரு கூட்டம் உள்ளது.

    சமூக ஆர்வலர் என்ற பெயரில் ஒருவர் எனது வீட்டில் செத்துபோன நண்டை எடுத்து வந்து போராட்டம் செய்கிறார். உயிரோடு உள்ள நண்டை எடுத்து வந்தாலும் குழம்பு வைத்து சாப்பிட்டு இருப்போம்.

    ஜெயலலிதா அமைத்த இந்த அரசு கலைக்கப்பட வேண்டும் என்று செயல்படுபவர் துரோகி. அந்த துரோகி தான் தினகரன். இப்போது தி.மு.க.வுடன் சேர்ந்து கொண்டு இந்த அரசை எப்படியாவது கலைத்து விட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் செயல்படுகிறார். எத்தனை தினகரன், ஸ்டாலின் வந்தாலும் இந்த இயக்கத்தை அசைக்க முடியாது.

    ஸ்டாலின் வந்தாலும், அவருடன் தினகரன் சேர்ந்தாலும் இன்னும் 100 ஆண்டுகள் இந்த ஆட்சிதான் மலரும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட பேரவை செயலாளர் கே.யூ.எஸ்.சோமசுந்தரம், மாவட்ட மாணவரணி செயலாளர் வீ.வள்ளிநாயகம், நிர்வாகிகள் அத்திவாக்கம் செ.ரமேஷ், பிரகாஷ்பாபு, தும்பவனம் ஜீவானந்தம், நாகராஜன், குண்ணவாக்கம் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, தென்னேரி வரதராஜூலு உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் நிரூபர்களிடம் கூறியதாவது:-

    1995-ல் சட்டமன்றத்தில் ஆளுனர் குறித்து விவாதிக்கலாம் என்று ஒரு தீர்மானத்தை ஜெயலலிதா கொண்டு வந்தார். 1999-ல் தி.மு.க. ஆளுனர் மீதுள்ள அதிகாரத்தில் யாரும் தலையிடக் கூடாது, ஆளுனர் குறித்து பேசவே கூடாது. சட்டமன்றத்தில் விவாதிக்க கூடாது என்று கூறியது தி.மு.க.தான். தற்போது ஆளுனர் குறித்து விவாதிக்க கூறினால் அது முடியவில்லை.

    அரசு நிர்வாகத்தில் எந்த தலையீடும் இல்லாமல் அவரது பணிகளை தூய்மை இந்தியா என்ற பல்வேறு திட்டங்களை பார்த்துக்கொண்டு வருகிறார். அரசியல் ரீதியாக அவரை எதிர்க்கணும், அவர்களை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ரீதியில் தி.மு.க.வினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார். #MKStalin #ADMK

    மதுராந்தகம் அருகே தொழில் அதிபர் காரில் கடத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுராந்தகம்:

    மதுராந்தகத்தை அடுத்த சோத்துப்பாக்கத்தைச் சேர்ந்தவர் முத்துகுமார்.

    இவர் மதுராந்தகம் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாக்கம் என்ற இடத்தில் அரவிந்த் செராமிக்ஸ் என்ற டைல்ஸ் கடை நடத்தி வருகிறார்.

    நேற்று கடைக்கு சென்ற அவர் இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் உறவினர்கள் அவர் செல்போனுக்கு தொடர்பு கொண்டனர். ஆனால் அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    இதையடுத்து கடைக்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சென்றனர். அப்பகுதியைச் சேர்ந்த சிலரிடம் கேட்டபோது, “முத்துக்குமார் கடையை பூட்டிவிட்டு காரில் ஏறும்போது 5 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து காருடன் கடத்தி சென்றதாக” தெரிவித்தனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மதுராந்தகம் போலீசில் புகார் செய்தனர். உடனே போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அனைத்து சாலைகளிலும் தற்காலிக சோதனைச் சாவடி அமைத்து விசாரணை நடத்தினர். முத்துக்குமாரின் செல்போன் சிக்னலை வைத்து அவர் எந்த பகுதியில் இருக்கிறார் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் தொழில் அதிபர் முத்துக்குமாரை பணம் கேட்டு மிரட்டுவதற்காக மர்ம கும்பல் கடத்தி சென்றதா? அல்லது தொழில் போட்டியில் கடத்தப்பட்டாரா? என்று விசாரித்து வருகிறார்கள்.

    மேலும் அவருக்கு யாராவது விரோதிகள் இருக்கிறார்களா? என்று உறவினர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது. #Tamilnews

    “மக்கள் பா.ஜ.க.வை விமர்சிக்கவில்லை எதிர்கட்சிகள் தான் விமர்சிக்கின்றனர்” என்று தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்திர ராஜன் கூறினார். #TamilisaiSoundararajan #BJP
    ஆலந்தூர்:

    தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்திர ராஜன் டெல்லியில் இருந்து சென்னை திரும்பினார். அப்போது மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    டெல்லிக்கு 3 மந்திரிகளை சந்திக்க சென்றேன் அதன்படி அவர்களை சந்தித்தேன். மந்திரி நிதின்கட்காரி சேலம் பசுமை 8 வழிசாலை குறித்து சில விளக்கங்கள் கொடுத்துள்ளார். அதில் மக்களுக்கு பலன் உள்ளது. பசுமை சாலை அமைப்பதற்கு பல வழிமுறைகள் உண்டு. அதன்படி தான் அந்த பணி நடந்து கொண்டிருக்கிறது.

    சாலை போடுவதற்கு 5 மலைகளில் எந்த மலையையும் குடையவில்லை. சேலம் பைபாஸ் தவிர வேறு எந்த இடத்திலும் சுரங்கம் உருவாக்கவில்லை. இந்த திட்டத்தினால் சேலம், சென்னை, பெங்களூர், மதுரை ஆகிய நெடுந்சாலைகளில் 30 சதவீத விபத்து தடுக்கப்படும். ஆரம்பத்தில் எந்த திட்டமும் தவறாக தான் புரிந்து கொள்ளப்படும்.

    பசுமை சாலை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தபடும். மாநில அரசு இத்திட்டத்தை குறித்து மக்களிடம் எச்சரிக்கையோடு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும், இதையும் மீறி அவர்களுக்கு மன வருத்தம் இருந்தால் அது என்ன என்று பரிசீலிக்கப்படும்.

    விவசாயிகளிடம் கோரிக்கை மனு வாங்கும் நிகழ்ச்சி நடத்தப்படும். தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு பல நல்ல திட்டங்கள் வரும். மக்கள் பாஜகவை விமர்சிக்கவில்லை. எதிர்கட்சிகள் தான் விமர்சிக்கின்றனர். இதை தாண்டி தமிழக மக்களுக்கு நல்ல திட்டங்கள் கொண்டு வரப்படும்.

    மாநில அரசு பசுமை சாலை குறித்த சந்தேகங்களை விளக்க வேண்டும். வைகோவின் விமர்சனங்களுக்கு பதில் கொடுத்து கொண்டிருந்தால் ஆக்கபூர்வமான காரியங்கள் எதுவும் செய்ய முடியாது. மத்திய அரசின் திட்டங்களை வைகோ ஆதரித்தால் தான் ஆச்சரியம். இவர்களுக்கு எந்த திட்டமும் முதலில் தவறாகவும் பின்னர் சரியாகவும் தெரியும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TamilisaiSoundararajan #BJP

    கொசுவர்த்தி சுருளில் இருந்து தீப்பற்றி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாம்பரம்:

    மேற்கு தாம்பரம் ரங்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் அபீத் முகமது (90). இவருடைய 3 மகன்கள், 2 மகள்கள் திருமணம் முடிந்து தனியாக உள்ளனர்.

    தற்போது, அபீத்முகமது அவரது மகள் மெகர்நிசா வீட்டில் தங்கி இருக்கிறார். நேற்று இரவு அபீத்முகமது வீட்டில் உள்ள ஒரு அறையில் கட்டிலில் படுத்து தூங்கினார். அவரது மகள் மெகர்நிஷா பாயில் படுத்து இருந்தார்.

    வீட்டில் இருந்த மற்றவர்கள் வேறு அறையில் தூங்கினார்கள். இந்த நிலையில் அமீத்முகமது மெகர்நிஷா ஆகியோர் படுத்து இருந்த அறையில் இருந்து நள்ளிரவு கரும்புகை வந்தது.

    உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும், அடுத்த அறையில் இருந்தவர்களும் அங்கு சென்றனர். அப்போது அங்கு இருந்த பொருட்கள் எரிந்து கொண்டிருந்தன. அபீத்முகமது, மெகர்நிஷா ஆகியோர் உடல் கருகிய நிலையில் மயங்கி கிடந்தனர்.

    உடனே அவர்களை குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் சென்னை கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதில் அபீத்முகமது பரிதாபமாக உயிர் இழந்தார். மெகர் நிசாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இந்த சம்பவம் குறித்து தாம்பரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வீட்டில் இருந்த கொசு வத்தி சுருளில் இருந்து தீ பரவியதால் இந்த தீ விபத்து ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் விசாரணை நடைபெறுகிறது.

    ×