என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vijayendrar Consulting In Kancheepuram"

    நெல்லை தாமிரபரணி புஷ்கரத் திருவிழா குறித்து காஞ்சீபுரத்தில் மடாதிபதிகளுடன் விஜயேந்திரர் ஆலோசனை நடத்தினார்.
    காஞ்சிபுரம்:

    திருநெல்வேலி குறுக்குத் துறையில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் தாமிரபரணி புஷ்கரத் திருவிழா வரும் அக்டோபர் மாதம் 12-ம் தேதி தொடங்கி 23-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

    இத்திருவிழா காஞ்சி சங்கர மட பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், தருமை ஆதினம் குருமகா சன்னிதானம் சண்முக தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், திருவாடு துறை ஆதினம் குருமகாசன்னி தானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், திருப்பனந்தாள் காசி மடத்து அதிபர் காசிவாசி முத்துக்குமார சுவாமிகள் உள்ளிட்டோர் முன்னிலையில் அக்டோபர் மாதம் 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    நாள்தோறும் பூஜைகள், ஹோமங்கள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ள நிலையில் தாமிரபரணி நதியில் பிரதிஷ்டை செய்து வழிபட தாமிரபரணி அன்னை சிலை செய்யப்படுகின்றது. இச்சிலை அமைக்கும் பணியினை கடந்த ஏப்ரல் மாதம் 14-ம் தேதி காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தொடங்கி வைத்தார்.

    விழாவினை சிறப்பாக நடத்துவது குறித்து காஞ்சி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தருமை ஆதினம் குருமகா சன்னிதானம் சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், திருவாடுதுறை ஆதினம் சார்பில் காஞ்சிபுரம் கிளை மடம் தம்பிரான் சுவாமிகள், திருப்பனந்தாள் ஆதின இளைய பட்டம் திருஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகள், கோவை காமாட்சிபுரி ஆதினம், தாமிர பரணி புஷ்கர ஏற்பாட்டாளர் மகாலட்சுமி சுப்பிரமணியம் உள்ளிட்டவர்களோடு ஆலோசனை நடத்தினர்.

    ஆலோசனைக்குப் பிறகு தருமபுரி இளைய சன்னிதானம் மாசிலாமணி தேசிச பரமாச்சாரிய சுவாமிகள் கூறியதாவது:-

    வட இந்தியாவில் சிறப்பாக நடைபெறும் கும்பமேளாவைப் போல் தாமிரபரணி ஆற்றில் புஷ்கரத் திருவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது.

    இதற்கு முன்பு மயிலாடுதுறையில் காவிரி புஷ்கரம் கொண்டாடப்பட்டது. அதே போல் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை விருச்சிக ராசியில் குருபகவான் சேரும் நேரத்தில் வற்றாத தாமிரபரணி தீர்த்தத்தில் நீராட வேண்டும். இதற்காக வரும் அக்டோபர் மாதம் 12-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை தொடர்ந்து 12 நாட்கள் விழா நடைபெறும். இது குறித்து ஆலோசனை மேற்கொண்டோம்.

    இந்த புஷ்கரத்தில் விருச்சிக ராசிக்காரர்கள் உள்ளிட்ட அனைத்து ராசிக்காரர்களும் நீராடினால் கர்ம பாவங்கள் தீரும் என்பது ஐதீகம்.

    மேலும் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் உள்ளிட்ட காரியங்கள் செய்யாமல் இருப்போர் புஷ்கரத்தில் நீராடினால் அதன் பலன் கிடைக்கும், இந்த விழாவில் நாடு முழுவதும் உள்ள சன்னியாசிகள், அனைத்து ஆதினகர்த்தர்கள், சங்கராச்சாரியார்கள், பீடாதிபதிகள் உள்ளிட்ட அனைவரும் நீராட உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×