என் மலர்
நீங்கள் தேடியது "மதுராந்தகம் கடத்தல் வழக்கு"
மதுராந்தகம்:
மதுராந்தகத்தை அடுத்த சோத்துப்பாக்கத்தைச் சேர்ந்தவர் முத்துகுமார்.
இவர் மதுராந்தகம் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாக்கம் என்ற இடத்தில் அரவிந்த் செராமிக்ஸ் என்ற டைல்ஸ் கடை நடத்தி வருகிறார்.
நேற்று கடைக்கு சென்ற அவர் இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் உறவினர்கள் அவர் செல்போனுக்கு தொடர்பு கொண்டனர். ஆனால் அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
இதையடுத்து கடைக்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சென்றனர். அப்பகுதியைச் சேர்ந்த சிலரிடம் கேட்டபோது, “முத்துக்குமார் கடையை பூட்டிவிட்டு காரில் ஏறும்போது 5 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து காருடன் கடத்தி சென்றதாக” தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மதுராந்தகம் போலீசில் புகார் செய்தனர். உடனே போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அனைத்து சாலைகளிலும் தற்காலிக சோதனைச் சாவடி அமைத்து விசாரணை நடத்தினர். முத்துக்குமாரின் செல்போன் சிக்னலை வைத்து அவர் எந்த பகுதியில் இருக்கிறார் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் தொழில் அதிபர் முத்துக்குமாரை பணம் கேட்டு மிரட்டுவதற்காக மர்ம கும்பல் கடத்தி சென்றதா? அல்லது தொழில் போட்டியில் கடத்தப்பட்டாரா? என்று விசாரித்து வருகிறார்கள்.
மேலும் அவருக்கு யாராவது விரோதிகள் இருக்கிறார்களா? என்று உறவினர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது. #Tamilnews






