என் மலர்
செய்திகள்

ஸ்டாலின் - தினகரனால் அ.தி.மு.க.வை அசைக்க முடியாது - அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு
காஞ்சீபுரம்:
உத்திரமேரூரில் காவிரி நதிநீர் வெற்றி குறித்து நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நடந்தது. காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர்கள் வி.சோமசுந்தரம், மைதிலி திருநாவுக்கரசு, காஞ்சீபுரம் எம்.பி. மரகதம் குமரவேல் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
அமைச்சர் பென்ஜமின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு புதுப்பிக்கப்பட்ட எம்.ஜி.ஆர். சிலையை திறந்து வைத்து பேசினார். அவர் கூறியதாவது:-
இது வரலாற்று சிறப்பு மிக்க நாள். தீய சக்திகளை வீட்டுக்கு அனுப்பிய நாள் இந்த நாள். எம்.ஜி.ஆர். தமிழகத்தில் தீய சக்திகளை விரட்டி ஆட்சி அமைத்த நாள். அந்த நாளில் எம்.ஜி.ஆரின் சிலையை உத்திரமேரூரில் திறந்து வைப்பது பொருத்தமான நாள். 90 கிலோ மீட்டர் தூரம் உள்ள உத்திரமேரூர் வருவதற்கு 4 மணி நேரம் ஆகிறது.
இதனால் 8 வழி பசுமை சாலை வந்தால் சேலத்திற்கே 5 மணிநேரத்தில் போகும்போது 1 மணி நேரத்திற்குள் உத்திரமேரூர் வந்துவிடலாம். இப்போது இரண்டரை கோடி வாகனங்கள் உள்ளது. வரும் வருடத்தில் 5 கோடி வாகனங்கள் பெருகிவிடும். இந்த மக்கள் தொகை அடிப்படையில் வருங்கால தேவையை சிந்தித்து அமைக்கப்படுவதுதான் இந்த பசுமை வழிச்சாலை திட்டம்.
ஒரு திட்டம் நிறைவேற்ற நிலம் எடுக்கும்போது சில பாதிப்புகள் ஏற்படும். அப்போது அந்த நில உரிமையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்வது ஒரு அரசின் கடமை. அதன்படி ஒரு ஹெக்டேருக்கு ரூ.1 கோடி முதல் ரூ.9 கோடிவரை கொடுக்கப்படுகிறது.
பொதுமக்கள் நலன்கருதி செயல்படுத்தப்படுவதுதான் இந்த திட்டம். அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அரசு எந்த திட்டம் கொண்டு வந்தாலும் எதிர்ப்பதற்கென்றே ஒரு கூட்டம் உள்ளது.
சமூக ஆர்வலர் என்ற பெயரில் ஒருவர் எனது வீட்டில் செத்துபோன நண்டை எடுத்து வந்து போராட்டம் செய்கிறார். உயிரோடு உள்ள நண்டை எடுத்து வந்தாலும் குழம்பு வைத்து சாப்பிட்டு இருப்போம்.
ஜெயலலிதா அமைத்த இந்த அரசு கலைக்கப்பட வேண்டும் என்று செயல்படுபவர் துரோகி. அந்த துரோகி தான் தினகரன். இப்போது தி.மு.க.வுடன் சேர்ந்து கொண்டு இந்த அரசை எப்படியாவது கலைத்து விட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் செயல்படுகிறார். எத்தனை தினகரன், ஸ்டாலின் வந்தாலும் இந்த இயக்கத்தை அசைக்க முடியாது.
ஸ்டாலின் வந்தாலும், அவருடன் தினகரன் சேர்ந்தாலும் இன்னும் 100 ஆண்டுகள் இந்த ஆட்சிதான் மலரும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட பேரவை செயலாளர் கே.யூ.எஸ்.சோமசுந்தரம், மாவட்ட மாணவரணி செயலாளர் வீ.வள்ளிநாயகம், நிர்வாகிகள் அத்திவாக்கம் செ.ரமேஷ், பிரகாஷ்பாபு, தும்பவனம் ஜீவானந்தம், நாகராஜன், குண்ணவாக்கம் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, தென்னேரி வரதராஜூலு உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் நிரூபர்களிடம் கூறியதாவது:-
1995-ல் சட்டமன்றத்தில் ஆளுனர் குறித்து விவாதிக்கலாம் என்று ஒரு தீர்மானத்தை ஜெயலலிதா கொண்டு வந்தார். 1999-ல் தி.மு.க. ஆளுனர் மீதுள்ள அதிகாரத்தில் யாரும் தலையிடக் கூடாது, ஆளுனர் குறித்து பேசவே கூடாது. சட்டமன்றத்தில் விவாதிக்க கூடாது என்று கூறியது தி.மு.க.தான். தற்போது ஆளுனர் குறித்து விவாதிக்க கூறினால் அது முடியவில்லை.
அரசு நிர்வாகத்தில் எந்த தலையீடும் இல்லாமல் அவரது பணிகளை தூய்மை இந்தியா என்ற பல்வேறு திட்டங்களை பார்த்துக்கொண்டு வருகிறார். அரசியல் ரீதியாக அவரை எதிர்க்கணும், அவர்களை அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ரீதியில் தி.மு.க.வினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார். #MKStalin #ADMK






