என் மலர்
காஞ்சிபுரம்
அடையாறு மல்லிகைப்பூ நகர் தாமோதரபுரம் மீன் மார்க்கெட் பகுதியில் வசித்து வந்தவர் சுரேஷ் (வயது33). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார்.
இவரது மகனும், மகளும் அடையாறு இந்திரா நகரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார்கள். அவர்களை தினமும் சுரேஷ் மோட்டார்சைக்கிளில் அழைத்து சென்று விடுவது வழக்கம்.
இன்று காலை அவர் வழக்கம்போல் மகனையும், மகளையும் பள்ளிக்கு அழைத்துச் சென்றார். பின்னர் அவர் அங்கிருந்து மோட்டார்சைக்கிளில் திரும்பி வந்தார்.
பள்ளியில் இருந்து சிறிது தூரம் வந்தபோது ஆட்டோவில் வந்த மர்ம கும்பல் திடீரென சுரேசின் மோட்டார்சைக்கிள் மீது மோதினர். இதில் நிலை தடுமாறிய சுரேஷ் மோட்டார்சைக்கிளோடு கீழே விழுந்தார்.
உடனே மர்ம கும்பல் அரிவாளால் சரமாரியாக அவரை வெட்டினர். தலை, கழுத்தில் பலத்த காயம் அடைந்த சுரேஷ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.
அவர் இறந்ததை உறுதி செய்த கொலை கும்பல் அங்கிருந்து ஆட்டோவில் தப்பி சென்று விட்டனர்.
பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தகவல் அறிந்ததும் அடையார் போலீசார் விரைந்து வந்து சுரேசின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். கொலை நடந்த இடத்தின் அருகே ஒரு வீட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு இருந்தது. அதனை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
அதில் ரவுடி கும்பல் சுரேசை தாக்கும் காட்சி பதிவாகி இருந்தது. அதனை வைத்து கொலை கும்பலை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
கொலையுண்ட சுரேசுக்கு ரியல் எஸ்டேட் தொழிலில் பலருடன் மோதல் உள்ளது. இது தொடர்பாக அவர் மீதும் வழக்குகள் உள்ளது.
2 மாதத்திற்கு முன்பு அவருக்கு ஒருவருடன் தகராறு ஏற்பட்டது. இந்த மோதலில் சுரேசை தீர்த்து கட்ட மர்ம கும்பல் பின்தொடர்ந்து நோட்டமிட்டு வந்துள்ளனர்.
இதை அறிந்த சுரேஷ் மாமியார் வீட்டுக்கு வந்து தங்கியுள்ளார். அவர் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்வதை நோட்டமிட்ட கொலை கும்பல் தங்கள் திட்டத்தை நிறைவேற்றி விட்டனர்.
கொலையுண்ட சுரேசுக்கு கலைவாணி என்ற மனைவியும், கார்த்திகேயன், சாய் பிரதா என்ற மகன்-மகளும் உள்ளனர்.
சோழிங்கநல்லூர்:
பள்ளிக்கரணை அருகே உள்ள மேடவாக்கத்தை சேர்ந்தவர்கள் மனோகர், மகாலிங்கம், தேவதாஸ். சகோதரர்களான இவர்கள் அதே பகுதியில் 2 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இவர்களது விவசாய நிலத்தை சுற்றிவிதிமுறையை மீறி கட்டிடம் கட்ட அனுமதி வழங்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் விவசாய நிலத்திற்கு வரும் கால்வாயை ஆக்கரமித்து கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன.
இதன் காரணமாக அவர்களால் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. கால்வாய் ஆக்கிரமிப்பு பற்றி அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்று தெரிகிறது.
இந்த நிலையில் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரியும், நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்தும் இன்று காலை விவசாயிகள் மனோகர், மகாலிங்கம், தேவதாஸ் ஆகியோர் குடும்பத்துடன் திடீரென மேடவாக்கம் ஊராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சிட்லபாக்கம் போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இது குறித்து விவசாயி மனோகர் கூறும்போது, “அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக் கொண்டு திட்ட அனுமதி வழங்கியதால் விவசாய நிலத்தை சுற்றி அடுக்குமாடி வீடுகள் மற்றும் மதில் சுவர் கட்டப்பட்டுள்ளது.
கால்வாய் ஆக்கிரமிப்பால் விவசாய நிலத்துக்கு தண்ணீர் வருவதில்லை. அரசு ஆணையை மீறி வழங்கப்பட்ட திட்ட அனுமதியை திரும்ப பெற்று விவசாய நிலத்திற்கு வழிவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையெனில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம் நடத்துவோம்” என்றார்.
செங்கல்பட்டு:
சென்னை-சேலம் இடையே ரூ. 10 ஆயிரம் கோடி செலவில் 8 வழி பசுமைச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த சாலை காஞ்சீபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி வழியாக சேலம் வரை 274 கிலோ மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்பட உள்ளது.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் 42 கிராமங்கள் வழியாக இச்சாலை செல்கிறது. இதற்காக சுமார் 1,300 ஏக்கர் நிலம் கையகப்படுத்த அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.
நேற்று காஞ்சீபுரம் மாவட்டத்தில் நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கியது. படப்பை கரசங்கால், நாட்டரசன்பட்டு, ஒரத்தூர், வளையங்கரணை பகுதியில் 12.4 கிலோ மீடடர் தூரத்துக்கு நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு கல் நடப்பட்டது.
இந்த நிலையில் இன்று 2-வது நாளாக நிலம் கையகப்படுத்தும் பணி நடை பெற்றது. செங்கல்பட்டு அருகே உள்ள ஆப்பூர், பாலூர், கொளத்தாஞ்சேரி பகுதிகளில் வருவாய் கோட்டாட்சியர் முத்துவடி வேலு, தாசில்தார் ரமா மற்றும் அதிகாரிகள் நிலங்களை அளவீடு செய்து கல் நட்டினர். அப்பகுதியில் 19 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இதையொட்டி அங்கு டி.எஸ்.பி. கந்தன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் 8 வழிச்சாலை ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டு, உத்திரமேரூர் வட்டத்தில் உள்ள கிராமங்கள் வழியாக சுமார் 59 கிலோ மீட்டர் செல்வது குறிப்பிடத்தக்கது. #Greenwayroad
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-
1967-லேயே தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு சமாதி கட்டப்பட்டுவிட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். 1991-ல் காங்கிரசுடன் கெஞ்சி கூத்தாடி ஜெயலலிதா கூட்டணி வைத்தார். ராஜீவ் காந்தி உயிர்தியாகத்தால் ஜெயலலிதா மீண்டும் முதல்- அமைச்சர் ஆனார்.
எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.க.வுக்கு, ஜெயலலிதாவுடன் சேர்த்து சமாதி கட்டி விட்டார்கள். தற்போது பா.ஜனதாவின் பினாமி ஆட்சி, நிழல் ஆட்சிதான் நடைபெறுகிறது. பா.ஜனதாவை சந்தோஷப்படுத்துவதற்காக அமைச்சர் ஜெயக்குமாரும், அ.தி.மு.க.வினரும் காங்கிரசை விமர்சிக்கிறார்கள்.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் நடைபெறும் ஆட்சியில்தான் அதிக ஊழல் நடந்திருப்பதாக பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா கூறி இருக்கிறார். எனவே, இனி பா.ஜனதா தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்காது என்று கருதுகிறேன்.

அனைத்து கட்சி தலைவர்கள், சட்ட நிபுணர்களுடன் கலந்து பேசி சட்டத்தை நிறைவேற்றி இருக்க வேண்டும். இப்போது நிறைவேற்றியுள்ள லோக் ஆயுக்தா சட்டத்தால் எந்த பயனும் ஏற்படாது.
தமிழ்நாட்டில் அ.தி.மு.க. பற்றியும், அமைச்சர்கள் பற்றியும் எனக்கு நன்றாக தெரியும். காங்கிரசை பற்றி தேவை இல்லாமல் விமர்சித்தால் அமைச்சர்கள் குறித்து நான் பேசுவேன்.
இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார். #Congress #Thirunavukkarasar
ஸ்ரீபெரும்புதூர்:
சென்னை-சேலம் இடையே 8 வழி சாலை திட்டம் ரூ.10 ஆயிரம் கோடி செலவில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் வழியாக 277 கிலோ மீட்டர் தூரம் அமைக்கப்படுகிறது.
இதற்காக விவசாய நிலங்கள், வீடுகள், கையகப்படுத்தப்படுகிறது.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் 59.1 கிலோ மீட்டர் தூரம் சாலை அமைக்கப்படுகிறது. இதில் 1300 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது. காஞ்சீபுரம் மாவட்டம் தாம்பரத்தை அடுத்த கரசங்காலில் இருந்து தொடங்கி ஒரத்தூர், நாட்டரசன்பட்டு, வடக்குப்பட்டு, ஆப்பூர், குருவன்மேடு, பாலூர், அரும்புலியூர், ஆனம்பாக்கம், மணல்மேடு, ஒழுகரை, இளநகர், மாவட்ட எல்லையான பெருநகர் வழியாக திருவண்ணாமலை மாவட்டத்துக்குள் செல்கிறது.
8 வழி சாலை திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்த அளவீடு பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
நிலம் அளவிடும் போது விவசாயிகள் போராட்டம் நடத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. சிலர் தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டனர்.
அவர்களை பாதுகாப்புக்கு வந்த போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். விவசாயிகள், கிராமமக்கள் எதிர்ப்பையும் மீறி சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டங்களில் நிலம் அளவீடு நடந்து முடிந்து விட்டது. நிலம் அளவீடு பணியில் 90 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நிலம் அளவீடு பணி இன்று தொடங்கியது. தாம்பரம் அடுத்த கரசங்கால் பகுதியில் ஆர்.டி.ஓ ராஜூ தலைமையில் அதிகாரிகள் நிலத்தை அளந்தனர். அளவிடப்பட்ட இடத்தில் பள்ளம் தோண்டி கற்களை நட்டனர்.
காஞ்சீபுரம் மாவட்டத்திலும் 8 வழி சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து விவசாயிகள் போராட்டம் நடத்தக் கூடும் என்பதால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். போலீசார் பாதுகாப்புடன் நிலம் அளவீடும் பணி நடந்து வருகிறது.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் 8 வழிச்சாலைக்கு நிலம் கையப்படுத்தப்படுவது தொடர்பாக கலெக்டர் பொன்னையா நிரூபர்களிடம் கூறியதாவது:-
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டத்தில் 27 கிராமங்கள், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் 10 கிராமங்கள், செங்கல்பட்டு வட்டத்தில் 5 கிராமங்கள் என 42 கிராமங்கள் வழியாக 8 வழிச் சாலை அமைய உள்ளது.
இது சம்மந்தமாக கடந்த 10 நாட்களாக வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினர், கிராமங்கள் தோறும் சென்று விவசாயிகள், பொதுமக்கள் ஆகியோரிடம் 8 வழிச்சாலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்த சாலை 59.1 கிலோ மீட்ர் தூரத்தில் 110 மீட்டர் அகலத்தில் அமைய உள்ளது. இதற்காக மாவட்டத்தில் 80 வீடுகள் மட்டுமே காலி செய்யப்பட இருக்கிறது. அவர்களுக்கு உடனடியாக அதே கிராமத்தில் 1 கிலோ மீட்டர் தூரத்திற்குள் வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டு பசுமை வீடு கட்டித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும் விவசாய நிலங்கள் இரண்டாக பிரியும் பகுதிகளில் உள்ள விசவாயிகள் ஒன்று சேர்ந்து மனு அளித்தால் அந்த இடத்தில் சுரங்கப்பாதை அல்லது பாதை அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும்.
நேரடியாக அளவீடு செய்யும் போது தான் எத்தனை கிணறுகள், மரங்கள் பாதிக்கப்படுகின்றன என்பதை கணக்கீடு செய்ய முடியும். வனத்துறை வழியாக இந்த பாதை செல்வதால் வனத்துறை வழங்கும் இடத்திற்கு மாற்றாக இருமடங்கு இடம் வனத்துறைக்கு வழங்கப்படும். வெட்டப்படும் ஒரு மரத்திற்கு ஈடாக 10 மரக்கன்றுகள் நடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே கலெக்டர் பொன்னையாவிடம் அரும்புலியூர் கிராமத்தை சேர்ந்த ஏராளமானோர் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறி இருப்பதாவது:-
அரும்புலியூர் கிராமத்தின் வழியாக சென்னை-சேலம் 8 வழி பசுமைச் சாலை திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதன் காரணமாக அவ்வழியே 20 வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது.
இதனால் நாங்கள் எங்கள் உடமைகளை இழக்க நேரிடும், இழப்பீடு மற்றும் மாற்று இடம் எங்களுக்கு தேவையில்லை. இத்திட்டத்தை எங்கள் பகுதியில் செயல் படுத்த வேண்டாம். எங்கள் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Greenwayroad
சென்னை - சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 8 வழி பசுமை சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்படும் பணி நடந்து வருகிறது. 40 ஆயிரம் வீடுகள் இடிக்கப்படுகின்றன. 8 மலைகளும் உடைக்கப்படுகின்றன.
8 வழி பசுமை சாலைக்காக நிலம் அளவீடு செய்யும் பணிகள் கடந்த மாதம் 18-ந் தேதி தொடங்கியது. இதுவரை தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை மாவட்டங்களில் அளவீடு செய்யும் பணிகள் முடிந்துள்ளன.
நில அளவீட்டை பொறுத்தவரை 90 சதவீத பணிகள் முடிந்து விட்டன. இன்னும் 10 சதவீத பணிகளே உள்ளது.
இந்த நிலையில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் 8 வழிச்சாலைக்கான நிலம் அளவீடு செய்யும் பணி நாளை தொடங்குகிறது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் தாம்பரத்தை அடுத்த கரசங்கால் பகுதியில் இருந்து தொடங்கும் இந்த சாலை ஒரத்தூர், நாட்டரசன்பட்டு, வடக்குப்பட்டு, ஆப்பூர், குருவன்மேடு, பாலூர், அரும்புலியூர், ஆனம்பாக்கம், மணல்மேடு, ஒழுகரை, இளநகர் வழியாக சென்று மாவட்ட எல்லையான பெருநகர் வழியே திருவண்ணாமலை மாவட்டத்துக்குள் நுழைகிறது.
ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் தாம்பரம் அருகேயுள்ள கரசங்கால் பகுதியில் இருந்து நிலம் அளவீடு செய்யும் பணிகள் தொடங்குகின்றன. வருவாய்த்துறை மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் இந்த பணியில் ஈடுபட உள்ளனர்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நிலம் அளவீடு செய்வதற்கு ஏற்கனவே எதிர்ப்பு கிளம்பி விட்டது. உத்திரமேரூர், மணல்மேடு, ஒழுகரை, இளநகர், பெருநகர் விவசாயிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
4 ஏக்கர் நிலம் வைத்துள்ள விவசாயிகளின் நிலத்தின் மத்தியில் 8 வழிச்சாலை அமைகிறது. எனவே அந்த விவசாயிக்கு ரோட்டின் இருபுறமும் துண்டு துண்டாக விவசாய நிலம் மீதமாகிறது. இந்த 2 நிலத்திலும் விவசாயம் செய்ய சுமார் 10 கி.மீ. தூரம் வரை சுற்றி செல்ல வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நிலம் அளவீடு செய்வதை எதிர்த்து ஏராளமான விவசாயிகள் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர். தொடர்ந்து மனு கொடுத்தும் வருகிறார்கள். அவர்களிடம் கலெக்டர் பொன்னையா, “உங்களிடம் கருத்து கேட்டு உங்கள் சம்மதத்தை பெற்றுத் தான் நிலத்தை கையகப்படுத்துவோம் என்று கூறி வருகிறார்.
ஆனாலும் தொடர்ந்து விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தபடியே உள்ளனர். காஞ்சீபுரம் மாவட்ட விவசாயிகளும் கடந்த 6-ந்தேதி அரசாணை எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நிலம் அளவீடு செய்யும் பணியை தடுக்க எந்த மாதிரியான போராட்டம் நடத்துவது என்பது தொடர்பாக விவசாயிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். மேலும் காஞ்சீபுரம் மாவட்டத்தில் மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடிக்கலாம் என்று ஏற்கனவே உளவுத்துறை எச்சரித்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் 29 கிராமங்களில் 36 கிலோ மீட்டர் தூரத்துக்கு பசுமை வழிச்சாலை அமைக்கப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் 22 கிராமங்களில் 54 கி.மீ. தூரத்துக்கும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 கிராமங்களில் 2 கி.மீ. தூரத்துக்கும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 74 கிராமங்களில் 122 கி.மீ. தூரத்துக்கும், காஞ்சீபுரம் மாவட்டத்தில் 42 கிராமங்களில் 59 கி.மீ. தொலைவுக்கும் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் 1846 விவசாயிகளிடம் 439 ஹெக்டேர் விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. திருவண்ணாமலையில் 74 கிராமங்களில் 7237 பேரின் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளன. காஞ்சீபுரம் மாவட்டத்தில் 42 கிராமங்களில் 1300 ஏக்கர் அளவுக்கு தனியார் மற்றும் அரசு நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன.
8 வழிச்சாலைக்கு நிலம் அளவீடு செய்ய விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் நிலம் அளவீடு செய்வதை கண்டித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். விவசாய நிலங்களில் பெண்கள் உருண்டு புரண்டு அழுதனர். காலம் காலமாக உழைத்து பாதுகாத்த நிலம் பறி போகிறதே என்று பெண்கள் கண்ணீர் வடித்தனர்.
எதிர்ப்பு கிளம்பிய கிராமங்களில் எல்லாம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் நிலம் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர். குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிக எதிர்ப்பு கிளம்பியது. பல இடங்களில் விவசாயிகள் தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டனர். பல கிராமங்களில் நில அளவீடு பணியின்போது ரேஷன் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை அதிகாரிகள் முன்பு வீசி எறிந்தும் பொது மக்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். சிலர் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றினார்கள்.
கடந்த 6-ந்தேதி 5 மாவட்ட தலைநகரங்களில் 8 வழி பசுமை சாலைக்கான அரசாணையை எரித்தும் விவசாயிகள் போராட்டம் நடத்தி கைதானார்கள். #Greenexpressway
செங்கல்பட்டை அடுத்த சாலவாக்கம் அருகே உள்ள ஆலப்பாக்கத்தில் கடந்த ஒரு மாதமாக சரிவர குடிநீர் வழங்கப்படவில்லை. இதுபற்றி அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால் குடிநீர் கிடைக்காமல் பொது மக்கள் கடும் அவதி அடைந்தனர். கூடுதல் விலை கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் முறையாக குடிநீர் வழங்க கோரி அப்பகுதி பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் சாலவாக்கம் - செங்கல்பட்டு சாலையில் இன்று காலை திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
இதையடுத்து கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். பொது மக்களின் இந்த திடீர் மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
சேலத்தில் இருந்து சென்னை வரை 8 வழி சாலைக்கு சம்பந்தப்பட்ட பகுதி மக்களின் அனுமதி இல்லாமல் அவர்களை கட்டாயப்படுத்தியோ, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தோ, கைது செய்தோ ஒரு திட்டத்தை நிறைவேற்ற அரசு முயற்சிக்க கூடாது. மக்களின் சம்மதம் பெற உரிய நஷ்டஈடு வழங்கி, அதை மக்கள் ஏற்றுக்கொண்டு நிலத்தை கொடுத்தால்தான் செய்ய வேண்டும்.
பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்பவர்களை அச்சுறுத்தி நிலத்தை கையகப்படுத்துவது ஜனநாயக விரோத நடவடிக்கை ஆகும். மக்களுக்கான திட்டங்கள்தான் இருக்க வேண்டும். திட்டங்களுக்காக மக்கள் இருக்கக்கூடாது. மக்கள் சம்மதம் இன்றி கட்டாயப்படுத்தி திட்டத்தை திணிக்கக்கூடாது.
இந்த 8 வழி சாலைக்கு எதிராக கருத்து சொன்னதற்காக கைது செய்யப்படுவது பாசிச போக்கு ஆகும். இது கருத்து சுதந்திரத்தை நெரிக்க கூடிய செயலாகும். எனவே கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும்.
நீட் தேர்வினால் வட மாநிலத்தினர் அதிகமாக தேர்வு செய்யப்படுவது வருத்தப்படக்கூடியது. இதனால்தான் நீட் தேர்வு வேண்டாம், அதை சில காலம்வரை தள்ளி வைக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
லோக் அயுக்தா சட்டம் ஊழலை ஒழிக்க கொண்டு வரப்படும் சட்டமாகும். இதில் கட்சிகள் பிரச்சினை அல்ல. அரசு அதிகாரத்தில் ஊழல் செய்பவர்கள் பயப்படவேண்டும். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்கக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார். #GreenwayRoad #thirunavukkarasar
திருப்போரூர்:
திருப்போரூர் தெற்கு மாடவீதியில் சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது.
சார்பதிவாளராக சம்பத் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த அலுவலகத்தில் குடும்ப செட்டில்மென்ட், பாகப்பிரிவினை உள்ளிட்ட ஒருசில ஆவணங்கள் பதிவுசெய்ய அதிக பணம் வசூல் செய்யப்படுவதாகவும், மேலும் ஏதாவது ஒரு காரணத்தை கூறி ஆவணம் பதிவு செய்யாமல் திருப்பி அனுப்பப்படுவதாகவும், பல்வேறு புகார்கள் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு வந்தது.
இந்நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் ஆலந்தூர் லஞ்சஒழிப்பு டி.எஸ்.பி. லவக்குமார் தலைமையில் 4 இன்ஸ்பெக்டர்கள், போலீசார் உள்ளிட்ட 20 பேர் கொண்ட குழுவினர் சார்பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அலுவலகத்தின் உள்ளே ஆவணங்கள் வைக்கும் அறையில் கட்டுகட்டாக பணம் இருப்பதை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து அலுவலக ஊழியர்கள் சார்பதிவாளரிடம் விசாரணை செய்தனர். மேலும் பதிவு செய்த ஆவணங்களின் கணக்குகளை சரிபார்த்தனர். மாலை 5 மணிக்கு தொடங்கிய சோதனை நள்ளிரவு 1 மணிக்கு முடிந்தது. இதில் கணக்கில் காட்டப்படாத ரூ. 3 லட்சத்து 92 ஆயிரத்தை லஞ்சஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது லஞ்சப்பணமா? என்பது குறித்து சார்பதிவாளர் மற்றும் அலுவலக ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை கோர்ட்டு மூலமாக கருவூலத்தில் ஒப்படைத்ததாக தெரிகிறது.
கடந்த மாதம் 5-ந் தேதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 25 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது சார்பதிவாளர் அலுவலக சோதனையில் ரூ. 3 லட்சத்து 92 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது, “கணக்கில் காட்டப்படாத பணம் குறித்து கோர்ட்டில் விசாரணை நடைபெறும். மேலும் அவர்களுடைய துறை ரீதியாகவும் விசாரணை நடைபெறும். பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கு அவர்கள் கணக்கு காட்டப்படவில்லையென்றால் லஞ்சப் பணமாக கருதப்படும்” என்று கூறினார்.
விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் பஸ் நிலையம் அருகே சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று மாலை 6 மணிக்கு விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையின் போது சார்பதிவாளர் சந்திரா, உதவியாளர் சோலைமுத்து ஆகியோரிடம் இருந்தும் மற்றும் அலுவலக மேஜை டிராயரில் இருந்தும் கட்டுக்கட்டாக 1 லட்சத்து 30 ஆயிரத்து 730 ரூபாய் சிக்கியது.
இந்த பணத்துக்கு அவர்கள் உரிய கணக்கு காட்டாததால் அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். #Tamilnews
ஆலந்தூர்:
இலங்கையில் இருந்து இன்று அதிகாலை 3.30 மணிக்கு ஒரு பயணிகள் விமானம் வந்தது. அதில் பயணம் செய்தவர்களிடம் சுங்க இலாகா துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது இலங்கையை சேர்ந்த பெண்ணின் நடவடிக்கைகள் வித்தியாசமாக இருந்தது. எனவே அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்திய போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.
எனவே அவரை தனி அறையில் வைத்து அதிகாரிகள் சோதனையிட்டனர். அவர் உள்ளாடைகளில் மறைத்து 1 தங்க செயின், 4 வளையல்கள், ஒரு மோதிரம், கடத்திவந்தது தெரிய வந்தது. அவை பறிமுதல் செய்யப்பட்டது.250 கிராம் எடையுள்ளஅந்த நகைகளின் மதிப்பு ரூ.7.50 லட்சம் ஆகும்.
தங்க நகைகள் கடத்தி வந்த இலங்கை பெண் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் விசாரணை நடைபெறுகிறது.
பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் விசுவல் கம்யூனிகேசன் முதலாம் ஆண்டு படித்து வந்தவர் விக்னேஷ்வரன் (வயது 21). இவரது சொந்த ஊர் மதுரை.
நேற்று மாலை அவருடன் படிக்கும் நண்பர்கள் நித்யகணேஷ், நாராயணன், வெற்றி, ரீனிக்ஸ், பாலசுப்பிரமணி ஆகியோருடன் மாமல்லபுரத்துக்கு காரில் சென்றார். பின்னர் நள்ளிரவு அவர்கள் திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.
கானாத்தூர் அருகே வந்த போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் மீது மோதாமல் இருக்க காரை திருப்பினர். இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் இருந்த டிரான்ஸ்பார்மரில் மோதியது.
இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த விக்கேஷ்வரன் சம்பவ இடத்திலேயே பலியானார். உடன் இருந்த நித்யகணேஷ், நாராயணன், வெற்றி, ரீனிக்ஸ், பாலசுப்பிரமணி ஆகிய 5 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கார் மோதிய வேகத்தில் டிரான்ஸ்பார்மரின் ஒரு பக்க கம்பம் உடைந்து சரிந்தது. அதிர்ஷ்டவசமாக டிரான்ஸ்பார்மரில் இருந்த மின் கம்பிகள் அறுந்து விழாததால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.
இது குறித்து அடையாறு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






