என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    சென்னை விமான நிலையத்தில் டெல்லி போலீசாரால் தேடப்பட்டு வந்த குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.
    ஆலந்தூர்:

    ஹாங்காங்கில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு நேற்று நள்ளிரவு பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் பரி சோதித்தனர்.

    சென்னையை சேர்ந்த கோபி என்பவரது ஆவணங்களை சரிபார்த்த போது அவர் போலி பாஸ்போர்ட் வழக்கில் டெல்லி போலீசாரால் கடந்த 2 ஆண்டுகளாக தேடப்பட்ட குற்றவாளி என்பது தெரிந்தது. இதையடுத்து கோபியை கைது செய்தனர். இதுபற்றி விமான நிலைய போலீசார் டெல்லி போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். #tamilnews
    மாமல்லபுரம் விடுதியில் சென்னை வக்கீல் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மாமல்லபுரம்:

    மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்தவர் ரவீந்திரன் (வயது50). வக்கீலான இவர் தனது இரண்டாவது மனைவியுடன் சென்னை அண்ணாநகர் பகுதியில் வசித்து வந்தார்.

    கடந்த 7-ந்தேதி அவர் மாமல்லபுரம் அடுத்த வடநெம்மேலியில் உள்ள தனியார் விடுதியில் தனியாக வந்து தங்கியிருந்தார். அவரது அறை நேற்று மாலை வரை திறக்கவில்லை.

    சந்தேகம் அடைந்த விடுதி நிர்வாகத்தினர் மாமல்லபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அறைக்கதவை திறந்து பார்த்த போது அங்குள்ள கட்டிலில் ரவீந்திரன் இறந்து கிடந்தார். அருகில் வி‌ஷப்பாட்டிலும் கிடந்தது. அவர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து இருப்பது தெரிந்தது.

    ரவீந்திரன் எதற்காக வி‌ஷம் குடித்து தற்கொலை செய்தார் என்பது குறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கண்ணகி நகரில் பட்டாக்கத்தியுடன் சுற்றிய 7 ரவுடிகளை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சோழிங்கநல்லூர்:

    சென்னையில் குற்றச் செயல்களை தடுக்கவும், ரவுடிகளை பிடிக்கவும் போலீஸ் கமி‌ஷனர் விஸ்வநாதன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    இதையடுத்து இரவு நேரங்களில் போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி வருகிறார்கள். ரவுடிகள் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.

    இந்த நிலையில் கூடுதல் கமி‌ஷனர் சாரங்கன், தெற்கு மண்டல இணை கமி‌ஷனர் மகேஸ்வரி, அடையாறு துணை கமி‌ஷனர் சே‌ஷசாயி, துரைப்பாக்கம் சரக துணை கமி‌ஷனர் லோகநாதன் ஆகியோர் மேற்பார்வையில் கண்ணகி நகர் பகுதி இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் வசந்த ராஜா தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    ஒக்கியம், துரைப்பாக்கம் பாலம் அருகில் இன்று காலை 3 மோட்டார் சைக்கிளில் வந்த 7 பேரை நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் கண்ணகி நகரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, சிவக்குமார், ஜாகீர், நடராஜன், வெங்கடேசன், காளிதாஸ், அஸ்வின்குமார் என்பது தெரிந்தது.

    அவர்கள் பல்வேறு கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்றும் தெரிந்தது. அவர்கள் 7 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து பட்டாக்கத்திகள், 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதிகாலையில் பட்டாக்கத்திகளுடன் சுற்றியது ஏன்? யாரையேனும் கொலை செய்ய திட்டமிட்டார்களா? என்பது குறித்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் தொடர்ந்து நீடிக்கும் என்று முதல்-மந்திரி நாராயணசாமி நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #Parliamentelections #Narayanasamy

    ஆலந்தூர்:

    புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி பெங்களூர் செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது அவர் நிரூபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடி மாநில அரசும், மத்திய அரசும் இணைந்து செயல் பட வேண்டும் என்கிற கூட்டுறவு தத்தவத்தை சொல்லி வருகிறார்.

    இதைச் சொல்லித்தான் 4 ஆண்டுகளுக்கு முன்பாக பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தது. வந்த பிறகு மத்திய அரசு, மாநிலத்தின் உரிமைகளை பறிக்கின்ற செயலில் ஈடுபட்டு வருகிறது. கல்வி என்பது மாநில உரிமைக்கான சம்பந்தப்பட்டது. மத்திய அரசு அதை எடுத்து கொள்வதற்கு படிப்படியாக நீட் தேர்வை கொண்டு வந்தது. இதற்கு உச்சநீதிமன்றத்தை காரணம் காட்டுகிறது. இப்போது தேசிய உயர்கல்வி ஆணையம் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏற்கனவே யூ.ஜி.சி. சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    தேசிய உயர்கல்வி ஆணையம் மூலமாக யூ.ஜி.சி. மற்றும் மாநிலத்தின் உறவை தடுக்க செயல்பட்டு வருகிறது. அதன் மூலம் மத்திய அரசுக்கு வேண்டிய மாநிலங்களுக்கு கல்வி வளர்ச்சிக்கு நிதி கொடுக்க முடியும். வேண்டாத மாநிலங்களுக்கு நிதி கொடுக்காமல் இருக்க முடியும்.

    மத்திய அரசு, ஆளுனர் மற்றும் துணை நிலை ஆளுனர்களை கைப்பாவையாக வைத்துக் கொண்டு மாநில அரசின் அன்றாட செயல்பாடுகளில் தலையிடுகிறது. கூட்டாட்சி தத்துவம் வெறும் பேச்சாக இருக்கிறது. செயல்பாட்டில் இல்லை. அதனால் தான் மாநிலங்களுக்கு தனிப்பட்ட சுதந்திரம் இருக்க வேண்டும் என்று தி.மு.க. செயல் தலைவர் சொன்னதை நான் முழுமையாக வரவேற்கிறேன்.

     


    பாராளுமன்ற தேர்தலுக்காக தமிழ்நாட்டில் காங்கிரஸ் தலைமையில் 3-வது அணி அமைய வாய்ப்பு இருக்கிறது என்பது வெறும் வதந்தி. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் ஒரு அங்கமாக செயல்பட்டு வருகிறது. 3-வது அணிக்கு பேச்சு இல்லை. புதுச்சேரி மாநிலத்திலும் இதே நிலைதான்.

    மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் என்ன பேசுகிறார் என்று தெரியாமல் பேசுகிறார். பா.ஜ.க. மதம் சார்ந்த கட்சி காங்கிரஸ் மதசார்பற்ற கட்சி காங்கிரசின் கொள்கையே அனைத்து மதத்தையும் அரவணைத்து செல்வது தான். நாங்கள் இந்து கோவிலுக்கு போவோம், மசூதிக்கு போவோம், கிறிஸ்தவ ஆலயத்திற்கும் செல்வோம். ஆனால் பா.ஜ.க. ஒரே மதம், ஒரே நாடு என்று சொல்வார்கள்.

    காங்கிரசை விமர்சிப்பதற்கு பா.ஜ.க.விற்கு எந்த தகுதியும் அருகதையும் கிடையாது. புதுவை கவர்னர் கிரேண்பேடி என்னுடைய அதிகாரத்திற்கு உட்பட்டு தான் செயல்படுகிறேன் என்று சொல்லி வருகிறார்.

    இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. தீர்ப்பு வந்த பிறகுதான் அவருடைய அதிகாரத்தை பற்றி தெரியும். கிரேண்பேடி தலையிட்டால் புதுவை மாநிலத்தில் வளர்ச்சிக்கான பணிகள் எதுவும் தடைப்படவில்லை. தாமதம் தான் ஆகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #Parliamentelections #Narayanasamy

    காஞ்சீபுரத்தில் பசுமை வழிச்சாலையை எதிர்த்து போராடிய 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Greenwayroad

    காஞ்சீபுரம்:

    பசுமை வழிச்சாலைக்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நேற்று நிறைவடைந்தது.

    காஞ்சீபுரம் அடுத்த மணல்மேடு பகுதியில் நேற்று நிலம் அளவிடும் பணி நடைபெற்று வந்த நிலையில் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதிக்கு விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் வந்தனர்.

    அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காஞ்சீபுரம் ஏ.டி.எஸ்.பி. சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் நேரு, மற்றும் நிர்வாகிகள் மோகனன், சங்கர், கனகராஜ் உள்ளிட்ட 6 பேரை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

    போலீசார் அவர்களிடம் இருந்து செல்போன்களை பறித்து விட்டதாகவும் கூறப்படுகின்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காஞ்சீபுரம் ஏ.டி.எஸ்.பி. சந்திர சேகரன் ஒருமையில் பேசுவதாகவும் நில எடுப்பு பணிகள் நடைபெறும் இடத்தில் அதிக அளவில் போலீசாரை குவித்து மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாகவும் குற்றம் சுமத்தினர்.

    இந்த நிலையில் போராட்டக்காரர்களை அடைத்து வைத்திருந்த மாகரல் காவல் நிலையத்தினை ஏராளமானோர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனையடுத்து டி.எஸ்.பி. பஞ்சாட்சரம் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதனையடுத்து கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர். #Greenwayroad

    காஞ்சீபுரத்தில் பள்ளி மாடியில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் அடுத்த சித்தேரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன். அதேபகுதியில் டயர் பஞ்சர் கடை வைத்துள்ளார். இவரது மகன் ரகு (15). பெரிய காஞ்சீபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவர் படிப்பில் சரியாக கவனம் செலுத்தாமல் பாடங்களை ஒழுங்காக செய்யாமல் இருப்பதாக கூறப்படும் நிலையில் நேற்று மாலை வகுப்பு ஆசிரியர் ரகுவை வகுப்பிற்கு வெளியே நிற்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் மாடியில் இருந்து மாணவன் கீழே குதித்துள்ளான். அவரது அலறல் சத்தம் கேட்டு பள்ளி நிர்வாகத்தினர் காயமடைந்த ரகுவை சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது மாணவன் மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து சிவகாஞ்சி இன்ஸ்பெக்டர் பழனி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
    தமிழகத்தில் சத்துணவு முட்டையில் ரூ.5 ஆயிரம் கோடி ஊழல் நடந்திருப்பது குறித்து விசாரிக்க வேண்டும் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
    ஆலந்தூர்:

    மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    விசாகப்பட்டிணத்தில் கப்பல் போக்குவரத்து துறை சார்பாக மத்திய மந்திரி நிதின்கட்காரி மற்றும் இணை மந்திரி மாண்டியா ஆகியோர் தலைமையில் நடந்த ஆய்வு கூட்டத்தில் நான் கலந்து கொண்டேன்.

    அப்போது ஆந்திர மாநிலம் கோதாவரி நதியில் இருந்து 3000 டி.எம்.சி. தண்ணீர் கடலில் கலக்கிறது. அந்த தண்ணீரை காவிரியில் சேர்க்க முயற்சி எடுக்கப்படும் என்று நிதின்கட்காரி தெரிவித்தார்.

    ஆந்திர மாநில முதல்- மந்திரி சந்திரபாபு நாயுடுவிடம் தமிழகத்தில் காவிரி நீர் பிரச்சனை இருக்கிறது, அது தீரும் வரை தண்ணீர் தர வேண்டும் என்று கேட்டேன். அதற்கு அவர் ஆந்திர மாநிலத்தில் தண்ணீர் இல்லாத நேரத்தில் கூட சென்னைக்கு தண்ணீர் கொடுத்தேன் என்றார்.

    ஜி.எஸ்.டி. குறித்தான தி.மு.க. முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசாவின் பேச்சை ஒரு பொருட்டாக எடுக்கக் கூடாது.


    தமிழகத்தில் முட்டையிலும் பல கோடி ஊழல் நடந்திருக்கிறது என்று தெரிய வருகிறது. இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிப்பது குறித்து இப்போது சொல்ல முடியாது. தமிழக மக்கள் முட்டையால் மொட்டை போடப்பட்டு இருக்கிறார்கள். முட்டையில் ரூ.5 ஆயிரம் கோடி ஊழல் நடந்திருக்கிறது. அதை விசாரிக்க வேண்டும்.

    பா.ஜ.க.வின் தேசிய தலைவர் அமித்ஷா தமிழ்நாட்டில் ஊழல் பெருகுகிறது என்றுதான் சொன்னார். ஏற்கனவே ஆண்ட அரசையோ, தற்போது ஆளுகின்ற அரசையோ குறிப்பிட்டு சொல்லவில்லை. தற்போது தேர்தல் கூட்டணி பற்றி சொல்ல முடியாது. அதற்கு வெகுநாள் இருக்கிறது.

    தி.மு.க. பெரிய ஊழலில் திளைத்த கட்சி என்று எல்லோருக்கும் தெரியும். தி.மு.க. மத்தியில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருந்தபோது பெரிய ஊழலில் இருந்துள்ளது. ஆனால் தி.மு.க. மத்தியில் பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்திருந்தபோது ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட இல்லை. சேருகிற இடத்தை பொறுத்துதான் சேருபவர்கள் இருப்பார்கள்.

    டாக்டர் ராமதாஸ் காங்கிரசுடன் கூட்டணி வைத்தாலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று கூறியிருக்கிறார். இதைப்போல் வசனம் பேசுபவர்கள் கடைசி நேரத்தில் அதை மாற்றுவார்கள் என்று பார்த்து இருக்கிறோம்.

    அ.தி.மு.வை நடத்தும், அரசாங்கத்தை நடத்தும் தலைவர்கள், ஆளுகிறவர்கள் இருக்கிறார்கள். பா.ஜ.க. ஒட்டு மொத்தமாக ஊழலை எதிர்க்கின்ற கட்சி. தூய்மை, நேர்மை வழியில் நடக்கின்ற கட்சி.

    நடிகர் கமல் தன்னை பகுத்தறிவாளன் என்றும் ஊழல், ஏழ்மையை ஒழிக்க அரசியலுக்கு வந்திருப்பதாக சொல்கிறார். தமிழக மக்களை ஏழை ஆக்கக் கூடாது.

    பயங்கரவாதத்தை பற்றி நான் பேசியதால்தான் தமிழகத்தில் பலர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். பயங்கரவாதம் வெகுவாக குறைந்துள்ளது. தமிழகத்தில் 6 பயங்கரவாதிகள் மத்திய துறையால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். தமிழக அரசாலோ, தமிழக போலீசாராலோ கைது செய்யவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #PonRadhakrishnan #EggNutritionCorruption
    “என்னை போலி பகுத்தறிவுவாதி என்று கூற என்ன உரிமை இருக்கிறது” என்று தமிழிசை சவுந்தரராஜனுக்கு, கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்து உள்ளார். #KamalHassan #TamilisaiSoundararajan
    ஆலந்தூர்:    

    கமல்ஹாசன் அமாவாசை நாளில் கட்சியை தொடங்குகிறார், அமாவாசை அன்று கட்சி கொடி தொடங்குகிறார், ஆனால் பகுத்தறிவுவாதி போல போலி வேஷம் போடுகிறார் என பா.ஜ.க. தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருந்தார்.

    இந்நிலையில் இதுகுறித்து சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அமாவாசை தினத்தில் கொடியேற்றியது பற்றி தமிழிசை சவுந்தரராஜன் கூறுவது சரியாக இருக்கலாம். ஆனால் என்னை போலி பகுத்தறிவுவாதி என்று சொல்ல அவருக்கு என்ன உரிமை இருக்கிறது. நான் பகுத்தறிவாதி தான். மக்கள் நீதி மய்யத்தில் உள்ள அனைவரும் பகுத்தறிவுவாதிகள் என்று கூறமுடியாது. என்னுடைய கட்சியினர் இதுபோன்று ஏற்பாடு செய்திருந்தால் அவர்களை நான் கண்டிக்க கடமைப்பட்டு உள்ளேன்.

    பல்வேறு தரப்பினரும், பல்வேறு மதத்தினரும், பல்வேறு நம்பிக்கை உள்ளவர்களும் மக்கள் நீதி மய்யத்தில் உள்ளனர். என்னுடைய மகள் சுருதி பகுத்தறிவுவாதி என்று சொல்ல முடியாது. நான் அரசியலில் பகுத்தறிவு கொள்கையை பரப்பி மூடநம்பிக்கையை ஒழிக்க மட்டும் வந்திருந்தால் தவறாக இருக்கலாம். ஆனால் நான் ஏழ்மையை ஒழிப்பதற்கும், ஊழலை ஒழிப்பதற்கும் தான் வந்திருக்கிறேன். அதற்கு எல்லாருடைய உதவியும் தேவைப்படுகிறது.

    ‘ஆழ்வார்பேட்டை ஆண்டவா’ என்று அழைப்பது பழைய கூக்குரல். இது பற்றி வந்த எல்லாருடைய விமர்சனங்களும் சரியானது. இதை தவிர்க்க எல்லா முயற்சிகளையும் நான் எடுப்பேன். இனி இதுபோன்று நிகழாது என்று தொண்டர்கள் சார்பில் வாக்குறுதி தரலாம்.

    ஒரே நேரத்தில் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல் நடத்தக்கூடாது என்பது தான் மக்கள் நீதி மய்யத்தின் கருத்து.

    சத்துணவில் முட்டை வாங்குவதில் முறைகேடுகள் நடந்தது பற்றி ஓராண்டுக்கு முன்பு சுட்டிகாட்டியபோது அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை, பொய்யான குற்றச்சாட்டு, எங்கே நிரூபிக்க சொல்லுங்கள் என்று மார்தட்டியவர்கள் தான் தற்போது அதில் சிக்கி உள்ளனர். மீண்டும் அதை தான் தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

    இவற்றை ஒழிக்க வேண்டும் என்பது தான் எங்களுக்கு முக்கியமான வேலையாக இருக்கிறது. லோக் ஆயுக்தா மசோதாவில் நிறைய தண்ணீர் தான் இருக்கிறது. அதில் பாலை காணவில்லை. அதில் தண்ணீரை சேர்க்க கூடாது. அது பாலாகவே இருக்க வேண்டும்.

    கோவை கல்லூரியில் பேரிடர் ஒத்திகை பயிற்சி எடுத்த போது தள்ளிவிடப்பட்டதில் மாணவி இறந்தது கண்டிக்கத்தக்கது. அதுபோன்ற பயிற்சியை கல்லூரி நிர்வாகமே செய்திருப்பது ஆபத்தான செயல். கல்லூரி நிறுவனங்களின் மாடி உயர்ந்தால் மட்டும் போதாது. கல்வியின் தரம் உயர வேண்டும்.

    தமிழகத்தில் தாமரை மலரும் என்று பா.ஜ.க.வினர் கூறுவது, எந்த தாமரை என்று தெரியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #KamalHassan #TamilisaiSoundararajan
    ஏகாம்பரநாதர் கோவிலில் பராமரிப்பு பணியின் போது அழகிய சிற்பங்கள் மற்றும் சதுரங்கத் தூண்கள் 60, பல உருளைத் தூண்கள் காணாமல் போய் உள்ளன. இச்சம்பவம் காஞ்சீபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #KanchipuramEkambareswararTemple

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் கோவிலில் பல்லவ மன்னர் கலை நுட்பத்துடன் இரட்டை திருமாளிகையை உருவாக்கினார். இந்த திருமாளிகை சீரமைப்பு பணியில் முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இது குறித்து காஞ்சீபுரத்தைச் சேர்ந்த சிவபக்தர் அண்ணாமலை என்பவரின் மகன் டில்லிபாபு என்பவர் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-

    காஞ்சீபுரத்தில் உள்ள உலகப்பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் கடந்த 2014-ம் ஆண்டில் கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபம் மற்றும் இரட்டை திருமாளிகை ஆகியவற்றை புனரமைக்க 1.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    கோயில் நிர்வாகம் சார்பில் தன்னிச்சையாக எந்தவித திட்ட மதிப்பீடும் இல்லாமல் அரசு அங்கீகாரம் பெற்ற ஸ்தபதியின் கருத்து இல்லாமல் இணையதளம் மூலம் நன்கொடை வேண்டி விளம்பரம் செய்துள்ளனர்.

    பழங்கால கோயில் என்பதால் புனரமைப்புப் பணிக்கு நவீன இயந்திரங்களைப் பயன்படுத்தக்கூடாது. இந்த புனரமைப்புப் பணியின் போது அழகிய சிற்பங்கள், சதுரங்கத் தூண்கள் 60, பல உருளைத் தூண்கள் காணாமல் போய் உள்ளன.

    இது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பியும் உரிய பதில் கிடைக்கவில்லை. எனவே இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    இந்த வழக்கு நீதிபதி மீனாட்சி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள திருப்பணி ஆணையர் கவிதா, வேலூர் இணை ஆணையர் சிவாஜி, காஞ்சீபுரம் துணை ஆணையர் ரமணி, கோயில் செயல் அலுவலர் முருகேசன், பொறியியல் கண்காணிப்பாளர் பால சுப்பிரமணி, ஸ்தபதி நந்தகுமார் ஆகிய 6 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

    இச்சம்பவம் காஞ்சீபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #KanchipuramEkambareswararTemple

    உத்தரபிரதேசத்தில் காதல் திருமணம் செய்து கொண்டு சென்னையில் வசித்து வந்த தங்கையை சொந்த ஊருக்கு கடத்திச் செல்ல முயன்ற அண்ணனை விமான நிலைய போலீசார் அறிவுரைகள் கூறி அனுப்பி வைத்தனர்.
    ஆலந்தூர்:

    உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் மிதிஷ்குமார்(வயது 30). இவர், அதே பகுதியை சேர்ந்த நிலானி(27) என்ற பெண்ணை காதலித்து வந்தார். இவர்களின் காதலுக்கு இரு வீட்டினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனால் கடந்த ஆண்டு வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி, அங்குள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் மிதிஷ்குமார் தனது காதல் மனைவி நிலானியுடன் ரெயிலில் சென்னை வந்தார்.

    தற்போது சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் கணவன்-மனைவி இருவரும் வசித்து வருகின்றனர். மிதிஷ்குமார், பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார்.

    இந்தநிலையில் நிலானியின் அண்ணன் விஜய்சிங், காதல் திருமணம் செய்து கொண்ட தனது தங்கை நிலானியை தேடி நண்பர்களுடன் சென்னை வந்தார். தனது தங்கை சோழிங்கநல்லூரில் வசித்து வருவதை கண்டு பிடித்தார்.

    பின்னர் தங்கையின் வீட்டுக்கு சென்ற அவர், நைசாக பேசி தனது தங்கை நிலானியை உத்தரபிரதேசத்துக்கு அழைத்து செல்வதற்காக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் அழைத்து வந்தார். உள்நாட்டு முனையத்தில் இருந்து லக்னோவுக்கு செல்லும் விமானத்தில் தங்கையை அழைத்து செல்ல இருந்தார்.

    அப்போது நிலானி, திடீரென தன்னை கடத்திச் செல்வதாக கூறி கூச்சலிட்டார். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து விமான நிலைய போலீசார், விரைந்து சென்று அவரிடம் விசாரித்தனர்.

    போலீசாரிடம் நிலானி கூறும்போது, “காதல் திருமணம் செய்து கொண்ட என்னை, கணவரிடம் இருந்து பிரித்து, வலுக்கட்டாயமாக சொந்த ஊருக்கு கடத்திச் செல்ல எனது அண்ணன் முயற்சிக்கிறார். நான் எனது காதல் கணவருடன்தான் சேர்ந்து வாழ ஆசைப்படுகிறேன்” என்றார்.

    இதையடுத்து போலீசார், சோழிங்கநல்லூரில் இருந்த மிதிஷ்குமாரை வரவழைத்து அவருடன் நிலானியை அனுப்பி வைத்தனர். பின்னர் அவருடைய அண்ணன் விஜய்சிங் மற்றும் அவரது நண்பர்களுக்கு விமான நிலைய போலீசார் அறிவுரைகள் கூறி அனுப்பி வைத்தனர்.

    சேலம் சென்னை பசுமை வழி சாலைக்காக காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கியது. இன்று 3-வது நாளாக நிலம் கையகப்படுத்தப்பட்டது.
    காஞ்சீபுரம்:

    சென்னை-சேலம் இடையே 8 வழிச்சாலை சுமார் ரூ.10 ஆயிரம் கோடி செலவில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சாலை காஞ்சீபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி வழியாக சேலம் வரை 274 கி.மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்படுகிறது.

    காஞ்சீபுரம் தவிர மற்ற மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்தும் பணி முடிவடைந்து விட்டது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கியது. இன்று 3-வது நாளாக நிலம் கையகப்படுத்தப்பட்டது.

    உத்திரமேரூர் அருகே உள்ள குருமஞ்சேரி, அரும்புலியூர், சீத்தாவரம், படூர், மலையான்குள், மணல்மேடு ஆகிய பகுதிகளில் வருவாய் கோட்டாட்சியர் ராஜூ, தாசில்தார் அகிலாதேவி ஆகியோர் தலைமையில் வருவாய் துறையினர் நிலங்களை அளந்து கல் நட்டினர்.

    இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
    காஞ்சீபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று மாலை திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் மழை நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.
    காஞ்சீபுரம்:

    சென்னையில் நேற்று மாலை 6 மணி அளவில் திடீரென சூறைகாற்றுடன் பலத்த மழை கொட்டியது. இதனால் சாலைகளில மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    எழும்பூர், அயனாவரம், தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், கிண்டி, கோடம்பாக்கம், சூளைமேடு, தி.நகர், வேளச்சேரி உள்ளிட்ட இடங்களில் இரவு 10 மணி வரை சாரல் மழையாக நீடித்தது.

    இதேபோல காஞ்சீபுரம் - திருவள்ளூர் மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்தது.

    பொன்னேரி, மீஞ்சூர், திருப்பாலைவனம், மணலி புதுநகர், தச்சூர், பழவேற்காடு, அண்ணாமலைச்சேரி, காட்டூர் ஆகிய பகுதிகளில் நேற்று மாலையில் திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் மழை நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.

    பலத்த காற்றினால் தடப்பெரும்பாக்கம், வேன் பாக்கம், வஞ்சிவாக்கம், கோளூர், அண்ணாமலைச் சேரி, திருப்பாலைவனம் ஆவூர் காஞ்சி வாயல் ஆகிய பகுதிகளில் இரவு மின்சாரம் தடைபட்டது. பொது மக்கள் அவதிப்பட்டனர். ஒருசில இடங்களில் மின்கம்பிகள் அறுந்து விழுந்தன.

    ஊத்துக்கோட்டையில் நேற்று மாலை சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. மாலை 5 மணிக்கு தொடங்கிய மழை 6 மணி வரை நீடித்தது. மழை நீரில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. தாழ்வான பகுதிகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியது. பலத்த காற்று காரணமாக முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மின்சார வினியோகம் நிறுத்தப்பட்டது.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:-

    காஞ்சீபுரம் - 25.30
    செங்கல்பட்டு - 5.50
    மதுராந்தகம் - 3.00
    ஸ்ரீபெரும்புதூர் - 9.50
    தாம்பரம் - 7.00
    திருக்கழுக்குன்றம் - 11.00
    மாமல்லபுரம் - 5.20
    உத்திரமேரூர் - 8.00
    திருப்போரூர் - 8.80
    வாலாஜாபாத் - 7.40
    சோழிங்கநல்லூர் - 11.50
    ஆலந்தூர் - 33.00
    கேளம்பாக்கம் - 12.40

    திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:-

    செம்பரம்பாக்கம்- 30
    பொன்னேரி-23
    ஊத்துக்கோட்டை-17
    திருத்தணி-15
    பூந்தமல்லி-15
    அம்பத்தூர்-15
    ஆர்.கே.பேட்டை - 15
    சோழவரம்-14
    திருவாலங்காடு-14
    தாமரைப்பாக்கம்-13
    திருவள்ளூர்-12
    பூண்டி - 9.6
    புழல் - 8.4
    ×