என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    ஆலத்தூர் அருகே மினிவேன் கவிழ்ந்த விபத்தில் கை துண்டான மாணவனுக்கு நிவாரணம் கேட்டு பள்ளி மாணவ -மாணவிகள் மறியலில் ஈடுபட்டனர்.

    திருப்போரூர்:

    திருப்போரூர் அரசு மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் சுமார் 30 பேரை கூவத்தூர் அருகில் உள்ள பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு போட்டிக்காக நேற்று முன்தினம் உடற்கல்வி ஆசிரியர் அன்பரசு என்பவர் தன்னுடைய சொந்த மினிவேனில் அழைத்துச் சென்றார்.

    ஆலத்தூர் அருகே சென்றபோது மினிவேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவன் பிரகாஷ்ராஜின் வலது கை துண்டானது. மேலும் பல மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது. வண்டியை ஓட்டிச்சென்ற உடற்கல்வி ஆசிரியர் காயம் ஏற்படாமல் தப்பினார்.

    இது குறித்து திருப்போரூர் போலீசார் வழக்குபதிவு செய்து ஆசிரியர் அன்பரசுவை கைது செய்து நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மாணவனுக்கு உயர் சிகிச்சை மற்றும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் மற்றும் பள்ளி மாணவ-மாணவிகள் இன்று காலை பள்ளி எதிரில் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்ததும் திருப்போரூர் போலீசார், வட்டாட் சியர் ராஜ்குமார் ஆகியோர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து மாணவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    தமிழ்நாட்டில் தற்போது ஊழல் உச்சத்தில் இருக்கிறது. தலை விரித்தாடுகிறது என்று வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #vaiko #Corruption

    ஆலந்தூர்:

    ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ மலேசிய சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று நள்ளிரவு சென்னை திரும்பினார்.

    விமான நிலையத்தில் வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் நடந்த வருமான வரி சோதனையில் பெருமளவு பணம், தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக அறிந்தேன். பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத் துறை, டெண்டர் எடுக்கும் காண்டிராக்டரிடம் இது கைப்பற்றப்பட்டது. இதில் முதல்-அமைச்சரின் உறவினருக்கும் தொடர்பு உண்டு என்று பத்திரிகைகள், ஊடகங்கள் மூலமாக அறிந்தேன்.

    தமிழகம் தற்போது நாசகரமான வழியில் சென்று கொண்டிருக்கிறது. இதுபோன்று தவறான வழியில் பணம் சேர்த்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வருமான வரி சோதனை மூலம் இதுவரை கைப்பற்றப்பட்ட பணம், தங்கம் ஆகியவை வெறும் செய்தியாக மட்டும் இருந்து விடக் கூடாது. இதற்கு காரணமானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் தற்போது ஊழல் உச்சத்தில் இருக்கிறது. தலை விரித்தாடுகிறது.

    ஊழல் செய்தவர்கள் உரிய முறையில் தண்டிக்கப்படா விட்டால், ஜனநாயகம் கேலிக்கூத்தாகி விடும். மக்களுக்கு ஜனநாயகத்தின் மீது இருந்த நம்பிக்கை போய் விடும். எனவே ஊழலுக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியது அவசியம்.

    அதிகாரத்தை பயன் படுத்தி இதுபோன்ற பணம் குவிப்பவர்களால் தமிழகத்துக்கு பெரும்கேடு சூழந்து இருக்கிறது. தமிழ்நாட்டில் நிர்வாக சீர்கேடு ஏற்பட்டு ஊழல் மலிந்து இருப்பது வேதனையை ஏற்படுத்துகிறது.

    மக்களை யாரும் ஏமாற்ற முடியாது. மத்திய அரசு வருமான வரிசோதனை நடத்தியதற்கு காரணம் கற்பித்து குறை கூறக்கூடாது. தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டியது மத்திய அரசின் கடமை. அதை நிறைவேற்ற வேண்டும்.

    11 வயது சிறுமி பாலியல் கொடுமை செய்யப்பட்டிருப்பது தமிழ்நாட்டுக்கே அவமானம், இழிவு. இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மிருகங்களை விட கொடியவர்கள்.

    பெண்களை தெய்வமாக வழிபடும் நாட்டில் இது போன்ற கொடும் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும். இந்த சம்பவம் மிகவும் வேதனை தருகிறது.

    இவ்வாறு வைகோ கூறினார். #vaiko #Corruption

    சென்னை - சேலம் இடையே பசுமை வழிச்சாலையால் வீடு இழந்த 16 பேருக்கு வீட்டுமனை பட்டா மற்றும் பசுமை வீடுகள் கட்டுவதற்கான ஆணைகளை மாவட்ட கலெக்டர் பொன்னையா வழங்கினார்.
    காஞ்சீபுரம்:

    சென்னை - சேலம் இடையே ரூ. 10 ஆயிரம் கோடி செலவில் 8 வழிச்சாலை அமைக்க திட்டமிட்டப்பட்டு உள்ளது. இந்த சாலை காஞ்சீபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி வழியாக சேலம் வரை 274 கிலோ மீட்டர் தூரம் செல்கிறது. இதற்காக 5 மாவட்டங்களிலும் நிலம் கையகப்படுத்தும் பணி விரைந்து நடந்து வருகிறது.

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் 8 வழி பசுமை வழிச்சாலைக் காக 59.100 கிலோ மீட் டர் நீளத்துக்கு சாலை அமைப் பதற்கு நிலம் கையகப்படுத்துவதற்கான அளவீடு முடிவடைந்துள்ளது.

    இந்த அளவீட்டின்படி 26 வீடுகள் கையகப்படுத்தப்பட உள்ளன. இவற்றில் வளையக் காரணை கிராமத்தில் கையகப்படுத்தப்பட உள்ள 7 வீடுகளில் 6 வீடுகளுக்கு ஏற்கனவே வீட்டுமனை பட்டா மற்றும் பசுமை வீடுகள் கட்டித்தருவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் பசுமை வழிச்சாலைக்காக வீடுகளை இழந்த உத்திரமேரூர் வட்டம், வெங்காரம் கிராமத் தைச் சேர்ந்த 9 பேருக்கும், மானாம்பதி கிராமத்தை சேர்ந்த 7 பேருக்கும் என மொத்தம் 16 பேருக்கு வீட்டு மனை பட்டா மற்றும் பசுமை வீடுகள் கட்டுவதற்கான ஆணைகளை மாவட்ட கலெக்டர் பொன்னையா வழங்கினார்.

    அப்போது கலெக்டர் பொன்னையா கூறும்போது, மீதமுள்ள 4 பேருக்கு அருகில் நிலம் இல்லாததால் நில எடுப்பு பிரிவின் மூலம் வேறு இடத்தல் நிலம் கையகப்படுத்தப்பட்டு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த 22 பேருக்கும் 3 மாதத்திற்குள் வீடு கட்டி முடிக்கப்பட்டு புதிய வீட்டில் குடியேறியபின் அவர்கள் வீடு கையகப்படுத்தப்படும்.

    உத்தேச மதிப்பீடு அடிப்படையில் தென்னை மரத்திற்கு ரூ. 40 ஆயிரம், மாமரத்திற்கு ரூ. 16 ஆயிரத்து 600, கொய்யா மரத்துக்கு ரூ. 10 ஆயிரத்து 20, தைல மரத்துக்கு ரூ. 2 ஆயிரத்து 500, தேக்கு மரம் வனத்துறை மூலம் அளவீடு செய்யப்பட்டு அவர்கள் மதிப்பீட்டின்படி இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் நூர் முகம்மது, தேசிய நெடுஞ்சாலை மாவட்ட வருவாய் அலுவலர் நர்மதா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயக்குமார், வருவாய் கோட்டாட்சியர் ராஜூ கலந்து கொண்டனர்.
    காண்ட்ராக்டர் வீடுகளில் நடத்தப்பட்ட வருமானவரி சோதனை குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
    ஆலந்தூர்:

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் லண்டனில் இருந்து இன்று காலை சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சம்பந்தி, அவருடைய பங்குதாரர் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டு அதில் 180 கோடி ரொக்கமும், 100 கிலோ தங்கமும் பறிமுதல் செய்திருப்பதாக ஊடகங்களில் செய்திகளை பார்த்தேன். நெடுஞ்சாலைத் துறை அமைச்சராகவும், முதல்-அமைச்சராகவும் இருப்பவர் எடப்பாடி பழனிசாமி.

    இதுவரை முதல்-அமைச்சரின் உறவினர்களுக்கு டெண்டர் கொடுத்ததாக வரலாறு இல்லை. இந்த செய்தி வெளிவந்த பிறகும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாய் திறக்காமல் அமைதியாக மவுனமாக இருக்கிறார். மவுனம் சம்மதத்திற்கு அறிகுறி.

    வருமானவரி சோதனையின் விசாரணை ஒரு நம்பிக்கையோடு முழு சுதந்திரமாக நடைபெற வேண்டும். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதற்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்வது சாலப்பொருந்தும்.

    இந்த பிரச்சனையை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க வேண்டும்.


    முன்னாள் தலைமை செயலாளர் ராம்மோகன் ராவ், அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சேகர் ரெட்டி ஆகியோர் வீடுகளிலும் அலுவலகங்களிலும் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. அந்த விசாரணையெல்லாம் என்ன ஆனது என்பது கேள்விக்குறியாக உள்ளது. அதைப் போல அல்லாமல் காண்ட்ராக்டர் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனை நீர்த்து போகாமல் முழுமையாக விசாரணை நடைப்பெற வேண்டும்.

    தி.மு.க. காலத்திலும் இப்படிப்பட்ட காண்ட்ராக்டர்கள் இருந்தார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் சொல்லி இருக்கிறார். தி.மு.க. காலத்தில் இப்படிப்பட்ட அக்கிரமங்கள் நடைபெறவில்லை.

    தற்போது கொள்ளை அடித்துள்ளனர். வருமான வரிசோதனையில் முதல்- அமைச்சரின் சம்பந்தியே இதில் சம்பந்தப்பட்டு இருக்கிறாரே? இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் என்ன பதில் சொல்லப்போகிறார்.

    நீட் தேர்வில் தமிழ் வழியில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் அளிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு கூறியிருக்கிறது. இதற்கு காரணம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி., டி.கே.ரங்கராஜன் தான் இதை கூட தமிழக அரசு செய்யவில்லை.

    இனிமேலும் நீட் விவகாரத்தில் தமிழக அரசு மெத்தமனமாக இருக்காமல் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்த இந்த நேரத்தில் முறையான வக்கீலை வைத்து வழக்கு நடத்த வேண்டும்.

    தி.மு.க. சார்பில் ஓ.பன்னீர் செல்வம் மீது சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. சட்டப்படி இதற்கு உரிய நடவடிக்கையை மேற்கொள்வேன். இதில் அரசு அதிகாரிகள் யாரும் சம்பந்தப்பட்டு இருந்தாலும் அவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #DMK #MKStalin
    தாய்லாந்தில் இருந்து சென்னை வந்த விமானத்தில் சூட்கேசுக்குள் கம்பியாக வளைத்து கடத்திய ரூ.12 லட்சம் மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    ஆலந்தூர்:

    தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு இன்று அதிகாலை பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    சென்னையை சேர்ந்த இஸ்மாயில் என்பவரிடம் விசாரணை செய்த போது முன்னுக்குப்பின் முரணாக பேசினார். சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரது சூட்கேசை சோதனை செய்தனர்.

    அப்போது சூட்கேசின் உள் பகுதியில் உள்ள விளிம்பில் தங்கத்தை கம்பியாக வளைத்து வைத்து கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து 400 கிராம் தங்க கம்பியை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.12 லட்சம் ஆகும்.

    தங்கம் யாருக்கு கடத்தி வரப்பட்டது. இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்-யார்? என்று இஸ்மாயிலிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். #ChennaiAirport
    சென்னை விமான நிலையத்துக்கு வரவேண்டிய லண்டன் விமானம் 6 மணி நேரம் தாமதமாக வந்ததால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். #ChennaiAirport
    ஆலந்தூர்:

    லண்டனில் இருந்து அதிகாலை 3.30 மணிக்கு சென்னை வரும் பயணிகள் விமானம் மீண்டும் காலை 5.30 மணிக்கு புறப்பட்டு செல்லும். ஆனால் லண்டனில் இருந்து வர வேண்டிய விமானம் குறிப்பிட்ட நேரத்துக்கு சென்னைக்கு வரவில்லை. காலதாமதமாக விமானம் வரும் என அறிவிக்கப்பட்டது.

    இதனால் விமான நிலையத்திலேயே பயணிகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்கிடையே அந்த விமானம் காலை 9.45 மணிக்கு வந்து 11.30 மணிக்கு புறப்பட்டு சென்றது. இதனால் லண்டன் செல்லும் பயணிகள் சென்னை விமான நிலையத்தில் 6 மணி நேரம் தவித்தனர். #ChennaiAirport
    தாம்பரத்தில் 5 டன் கலப்பட டீ தூளை பறிமுதல் செய்த போலீசார் அதனை தயாரித்த குரோம்பேட்டையைச் சேர்ந்த ராம் என்பவரை கைது செய்தனர்.
    தாம்பரம்:

    சென்னை மேற்கு தாம்பரத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே ஒரு வீட்டில் கலப்பட டீ தூள் பதுக்கி வைத்திருப்பதாக காஞ்சீபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதனை தொடர்ந்து காஞ்சீபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ராமகிருஷ்ணன் தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவினர் அந்த வீட்டில் சோதனை நடத்தினர்.

    அங்கு கலப்பட டீ தூள் மூட்டைகளில் பாக்கெட் செய்து வைக்கப்பட்டு இருந்தது. ரூ.5 லட்சம் மதிப்புள்ள கலப்பட டீ தூளை பறிமுதல் செய்தனர். அதனை தயாரித்த குரோம்பேட்டையைச் சேர்ந்த ராம் என்பவரை கைது செய்தனர்.

    கலப்பட டீ தூள், தயாரித்து விற்பனை செய்ததில் யார்-யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கைப்பற்றப்பட்ட கலப்பட டீ தூளில் மரப்பட்டைகள், முந்திரி தோள் போன்றவை கலந்துள்ளன. அதனை மூன்றில் ஒரு பங்கு உண்மையான டீத்தூளுடன் கலந்து அட்டை பெட்டையில் அடைத்து ஒரிஜினல் டீத்தூள் போல கடைகளுக்கு வினியோகம் செய்துள்ளனர்.

    இதுகுறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகையில், “கலப்பட டீ தூளை சாதாரண தண்ணீரில் போட்டாலே நிறம் மாறி விடும். உண்மையான டீத்தூளை தண்ணீரில் போட்டால் நிறம் மாறாது.

    மேலும் இது போன்ற கலப்படம் உணவில் இருப்பது கண்டறியப்பட்டால் உடனடியாக உணவு பாதுகாப்பு துறை வாட்ஸ்அப் எண். 9444042322-க்கு பொது மக்கள் தெரியப்படுத்த வேண்டும். தகவல் தருவோரின் பெயர் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்” என்றார்.
    தமிழகத்தில் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற பா.ஜனதாவின் ஆசைக்காக மக்கள் ஓட்டு போட மாட்டார்கள் என்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை கூறினார். #ThambiDurai #BJP
    ஆலந்தூர்:

    பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    கடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் 23 நாட்கள் காவிரி பிரச்சினைக்காக குரல் கொடுத்தோம். தற்போது காவிரி நீர் தமிழகம் வந்துள்ளது. இதே போல் பாராளுமன்றத்தில் தமிழக உரிமைக்காக போராடுவோம்.

    தேர்தல் கூட்டணி பற்றி தலைமை கழகம்தான் முடிவு செய்யும். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சொன்னதுபோல ஏற்கனவே பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தை தொடங்கி விட்டோம்.

    8 வழிச்சாலை குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சரியாக கையாளுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    பா.ஜனதா தமிழகத்தில் ஆட்சியை பிடிப்போம் என்று கூறி வருகிறது. அது பா.ஜனதாவின் ஆசைதான். ஆனால் ஆசைக்காக மக்கள் ஓட்டு போட மாட்டார்கள்.



    அமித்ஷா தமிழகத்தில் ஊழல் என்று கூறுகிறார். ராகுல்காந்தி பா.ஜனதாவில் ஊழல் என்றும், ஸ்டாலின், அ.தி.மு.க.வில் ஊழல் என்றும் கூறுகிறார்கள். அவர்கள் ஆட்சியை பிடிக்க தங்கள் இஷ்டம்போல் பேசி வருகிறார்கள்.

    ஆளும் கட்சி மீது ஆதாரங்கள் இல்லாமல் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

    தமிழகத்தில் சமுதாயம், மொழி, கலை, பண்பாடு ஆகியவற்றை திராவிட கட்சிகளால்தான் காப்பாற்ற முடியும். தேசிய கட்சிகளால் காப்பாற்ற முடியாது.

    இவ்வாறு தம்பித்துரை கூறினார். #ThambiDurai #BJP


    காஞ்சீபுரம் கோவிலில் சாமி சிலைகள் குறித்து சமீப காலமாக பரபரப்பு சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது அம்மன் கோயிலில் சாமி சிலை வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    காஞ்சிபுரம்:

    பெரிய காஞ்சிபுரம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற கைலாசநாதர் கோவிலில் அருகே கங்கையம்மன் கோவில் உள்ளது.

    இங்கு பணிபுரியும் அர்ச்சகர் பணிக்கு வராததால் நேற்று இரவு கோவிலை பூட்ட அப்பகுதி மக்கள் சென்றனர்.

    அப்போது உட்பிரகாரக் கதவு அருகே ஒன்றரை அடி உயரமும் 10 கிலோ எடையும் கொண்ட அர்த்தநாரீஸ்வரர் தோற்றம் கொண்ட உலோகச் சிலை இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் ஏராளமானோர் கோவிலில் குவிந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுபற்றி சிவகாஞ்சி இன்ஸ்பெக்டர் பழனி மற்றும் போலீசார் அதே பகுதியை சேர்ந்த பன்னீர் செல்வத்திடம் விசாரணை நடத்திய போது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தது. அவர் போலீசாரிடம் கூறும் போது “எனது மகன் மகேந்திரன், திருப்போரூர் பகுதியில் இருந்து இந்த சாமி சிலையை வாங்கி வந்து கடந்த 6 மாதமாக வீட்டில் வைத்து பூஜை செய்தான்.

    வீட்டிற்கு வந்த உறவினர்கள் சிலர் இந்த சிலையை வீட்டில் வைத்திருக்கக் கூடாது என்று கூறியதால் அதனை அம்மன் கோயிலில் வைத்தான்” என்று கூறினார்.

    இதையடுத்து பன்னீர் செல்வம் அவரது மகன் மகேந்திரன் ஆகியோரை காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சாமி சிலை எங்கு வாங்கப்பட்டது? விற்றவர்கள் யார்? எதற்காக வாங்கப்பட்டது என்று அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    காஞ்சீபுரம் கோவிலில் சாமி சிலைகள் குறித்து சமீப காலமாக பரபரப்பு சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது அம்மன் கோயிலில் சாமி சிலை வைக்கப்பட்ட சம்பவம் காஞ்சீபுரம் நகரில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    விளையாட்டு போட்டிக்கு அழைத்து சென்றபோது ஆலத்தூர் அருகே மினி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30 மாணவர்கள் அதிர்ஷ்வசமாக உயிர் தப்பினர்.
    திருப்போரூர்:

    திருப்போரூர், செங்கல்பட்டு சாலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள்.

    இன்று காலை கூவத்தூரில் உள்ள பள்ளியில் விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக திருப்போரூர் அரசு பள்ளியில் இருந்து 30-க்கும் மேற்பட்ட மாணவர்களை மினி லாரியில் அழைத்து சென்றனர். உடன் உடற்கல்வி ஆசிரியர் அனபரசனும் சென்றார்.

    ஆலத்தூர் அருகே வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி சாலையோரத்தில் கவிழ்ந்தது. இதில் சிக்கிய மாணவர்கள் கூச்சலிட்டனர். அலறல் சத்தம் கேட்டு வந்த அவ்வழியே சென்றவர்கள் லாரியில் சிக்கி இருந்த மாணவர்களை மீட்டனர்.

    இடிபாடுகளில் சிக்கிய ஆலத்தூரை சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவன் பிரகாஷ் ராஜின் ஒரு கை துண்டானது. மேலும் 30 மாணவர்கள் படுகாயம் அடைந்திருந்தனர். ஆசிரியர் அன்பரசனுக்கும் காயம் ஏற்பட்டு இருந்தது.

    அவர்கள் அனைவரும் உடனடியாக கேளம் பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கை துண்டான மாணவர் பிரகாஷ்ராஜ் ஸ்டான்லி அரசு ஆஸ்த்திரியில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    விபத்து பற்றி தகவல் அறிந்ததும் மாணவர்களின் பெற்றோர் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் திருப்போரூர் அரசு பள்ளி முன்பு திரண்டனர். பாதுகாப்பு இல்லாமல் மினி லாரியில் மாணவர்களை அழைத்து சென்றதாக ஆசிரியர்கள் மீது குற்றம்சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்ததும் திருப்போரூர் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மாணவர்களின் பெற்றோர் கலைந்து சென்றனர்.
    சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில் வெளியூர் சென்றிருந்த வியாபாரியின் வீட்டு பூட்டை உடைத்து 50 பவுன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
    செங்கல்பட்டு:

    சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி மோகன பிரியா நகரில் வசித்து வருபவர் அலாவுதீன் பிச்சை (வயது 52). வியாபாரி.

    வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் திண்டுக்கல்லுக்கு சென்றிருந்தார். இன்று காலையில் வீடு திரும்பியபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

    உள்ளே சென்று பார்த்த போது பீரோவும் திறந்து கிடந்தது. அதில் இருந்த 50 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் ரூ.40 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவை கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து கூடுவாஞ்சேரி போலீசில் அலாவுதீன் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கைரேகை நிபுணர்களும் தடயத்தை பதிவு செய்தனர்.

    வியாபாரி வெளியூர் சென்றிருந்ததை நோட்டமிட்டு மர்ம நபர்கள் இந்த கொள்ளையில் ஈடுபட்டு உள்ளனர்.
    மாமல்லபுரத்தில் இன்று அதிகாலை பெட்ரோல் பங்க் அருகே வேன் தீப்பிடித்து எரிந்தது. இதில் வேன் முற்றிலும் எரிந்து நாசமானது.
    மாமல்லபுரம்:

    மாமல்லபுரத்தில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு சுற்றுலா பயணிகளை ஏற்றுவதற்காக இன்று அதிகாலை தனியார் வேன் சென்றது. டிரைவர் செந்தில்குமார் வேனை ஓட்டினார்.

    மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரி கூட்டுரோடு டோல்கேட் அருகே ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் எதிரே வந்தபோது திடீரென வேனின் முன்பகுதியில் இருந்து புகை வந்தது.

    அதிர்ச்சி அடைந்த டிரைவர் செந்தில்குமார், வேனை நிறுத்திவிட்டு அருகில் உள்ள பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் உதவி கேட்டு ஓடினார்.

    இதற்குள் வேனில் பிடித்த தீ மளமளவென பரவி பற்றி எரிந்தது. தகவல் அறிந்ததும் திருக்கழுக்குன்றம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். எனினும் வேன் முற்றிலும் எரிந்து நாசமானது.

    முக்கிய சாலையில் வேன் தீப்பிடித்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பெட்ரோல் பங்கில் இருந்து சுமார் 50 அடி தூரத்தில் வேன் தீப்பற்றியதால் அதிர்ஷ்டவசமாக பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை. வேனில் தீப்பிடித்த உடன் டிரைவர் இறங்கியதால் அவர் உயிர் தப்பினார்.

    இது குறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
    ×