என் மலர்
செய்திகள்

பசுமை வழிச்சாலையால் வீடு இழந்த 16 பேருக்கு வீட்டுமனை பட்டா: காஞ்சீபுரம் கலெக்டர் வழங்கினார்
சென்னை - சேலம் இடையே பசுமை வழிச்சாலையால் வீடு இழந்த 16 பேருக்கு வீட்டுமனை பட்டா மற்றும் பசுமை வீடுகள் கட்டுவதற்கான ஆணைகளை மாவட்ட கலெக்டர் பொன்னையா வழங்கினார்.
காஞ்சீபுரம்:
சென்னை - சேலம் இடையே ரூ. 10 ஆயிரம் கோடி செலவில் 8 வழிச்சாலை அமைக்க திட்டமிட்டப்பட்டு உள்ளது. இந்த சாலை காஞ்சீபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி வழியாக சேலம் வரை 274 கிலோ மீட்டர் தூரம் செல்கிறது. இதற்காக 5 மாவட்டங்களிலும் நிலம் கையகப்படுத்தும் பணி விரைந்து நடந்து வருகிறது.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் 8 வழி பசுமை வழிச்சாலைக் காக 59.100 கிலோ மீட் டர் நீளத்துக்கு சாலை அமைப் பதற்கு நிலம் கையகப்படுத்துவதற்கான அளவீடு முடிவடைந்துள்ளது.
இந்த அளவீட்டின்படி 26 வீடுகள் கையகப்படுத்தப்பட உள்ளன. இவற்றில் வளையக் காரணை கிராமத்தில் கையகப்படுத்தப்பட உள்ள 7 வீடுகளில் 6 வீடுகளுக்கு ஏற்கனவே வீட்டுமனை பட்டா மற்றும் பசுமை வீடுகள் கட்டித்தருவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் பசுமை வழிச்சாலைக்காக வீடுகளை இழந்த உத்திரமேரூர் வட்டம், வெங்காரம் கிராமத் தைச் சேர்ந்த 9 பேருக்கும், மானாம்பதி கிராமத்தை சேர்ந்த 7 பேருக்கும் என மொத்தம் 16 பேருக்கு வீட்டு மனை பட்டா மற்றும் பசுமை வீடுகள் கட்டுவதற்கான ஆணைகளை மாவட்ட கலெக்டர் பொன்னையா வழங்கினார்.
அப்போது கலெக்டர் பொன்னையா கூறும்போது, மீதமுள்ள 4 பேருக்கு அருகில் நிலம் இல்லாததால் நில எடுப்பு பிரிவின் மூலம் வேறு இடத்தல் நிலம் கையகப்படுத்தப்பட்டு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த 22 பேருக்கும் 3 மாதத்திற்குள் வீடு கட்டி முடிக்கப்பட்டு புதிய வீட்டில் குடியேறியபின் அவர்கள் வீடு கையகப்படுத்தப்படும்.
உத்தேச மதிப்பீடு அடிப்படையில் தென்னை மரத்திற்கு ரூ. 40 ஆயிரம், மாமரத்திற்கு ரூ. 16 ஆயிரத்து 600, கொய்யா மரத்துக்கு ரூ. 10 ஆயிரத்து 20, தைல மரத்துக்கு ரூ. 2 ஆயிரத்து 500, தேக்கு மரம் வனத்துறை மூலம் அளவீடு செய்யப்பட்டு அவர்கள் மதிப்பீட்டின்படி இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் நூர் முகம்மது, தேசிய நெடுஞ்சாலை மாவட்ட வருவாய் அலுவலர் நர்மதா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயக்குமார், வருவாய் கோட்டாட்சியர் ராஜூ கலந்து கொண்டனர்.
Next Story