search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Egg nutrition corruption"

    நாமக்கல் கிறிஸ்டி நிறுவனம் லஞ்சம் கொடுத்த விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சி பிரமுகர்கள், உயர் அதிகாரிகளிடம் விசாரணை நடத்த வருமானவரித்துறை முடிவு செய்துள்ளது. #Eggnutritioncorruption #ITRaid #ChristyFriedgramIndustry
    சேலம்:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஆண்டிபாளையத்தில் கிறிஸ்டி பிரைடு நிறுவனம் இயங்கி வருகிறது.

    இந்த நிறுவனம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் சத்துணவு திட்டங்களுக்கு முட்டை, சத்துமாவு, பருப்பு உள்பட பல்வேறு பொருட்களை ஒப்பந்த அடிப்படையிலும், ரேசன் கடைகளுக்கு பருப்பும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வினியோகம் செய்து வருகிறது.

    இந்தநிலையில் கடந்த ஜூலை மாதம் கிறிஸ்டி நிறுவனம் மீது வரி ஏய்ப்பு மற்றும் முட்டை வினியோகத்தில் முறைகேடு செய்வதாக புகார்கள் எழுந்தது. போலி நிறுவனங்கள் தொடங்கி பல ஆயிரம் கோடி பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்ததாகவும் கூறப்பட்டது.

    இதையடுத்து ஜூலை மாதம் 5-ந் தேதி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி உள்பட நாடு முழுவதும் உள்ள அந்த நிறுவனத்திற்கு சொந்தமான குடோன்கள் உள்பட 72 இடங்களில் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

    திருச்செங்கோடு வட்டூரில் உள்ள கிறிஸ்டி புட்ஸ் நிறுவன உரிமையாளர் பி.எஸ்.குமாராசாமி வீடு, ஆடிட்டர்கள் ராமச்சந்திரன், சங்கர், ஆகியோர் வீடுகளிலும் 7 நாட்களுக்கும் மேலாக சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் ஏராளமான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

    அப்போதைய தமிழ்நாடு நுகர்பொருள் வணிப கழக மேலாண்மை இயக்குனர் சுதாதேவி வீட்டில் நடந்த சோதனையில் அவர் பதவிக்கு வந்த பிறகு பல மடங்கு சொத்து அதிகரித்தற்கான ஆவணங்கள் மற்றும் கிலோ கணக்கில் தங்கம் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்பட்டது. ஐ.ஏ.எஸ். அதிகாரி சுதாதேவி நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடதக்கது.

    மேலும் ஆண்டிபாளையம் எஸ்.பி.எஸ்.நகர் குடியிருப்பில் வைத்து கிறிஸ்டி நிறுவன கணக்காளர் கார்த்திக்கேயனிடம் விசாரித்த போது அவர் மாடியில் இருந்து குதித்த தற்கொலைக்கு முயன்றார். அவர் அளித்த தகவல் படி திருச்செங்கோடு தேக்கவாடியில் உள்ள கார்த்திக்கேயன் வீட்டில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பென் டிரைவ்கள் கைப்பற்றப்பட்டன.

    இதைத்தொடர்ந்து நிறுவன உரிமையாளர் பி.எஸ்.குமாரசாமி மற்றும் அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடமும் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது.


    மேலும் கைப்பற்றப்பட்ட பென்டிரைவ்களில் சத்துணவு திட்டம், சத்து மாவு வினியோகம், முட்டை டெண்டர் விவகாரத்தில் பல கோடிகளை லஞ்சமாக பெற்ற அரசியல் கட்சி பிரமுகர்கள், உயர் அதிகாரிகள் பட்டியல் இடம் பெற்றிருந்ததாக அப்போது கூறப்பட்டது.

    இந்தநிலையில் வருமான வரித்துறையினரிடம் சிக்கிய ஆவணங்கள் மற்றும் பென் டிரைவ்களை தொடர்ந்து வருமான வரித்துறையினர் ஆய்வு செய்து வந்தனர். அப்போது சத்துணவு திட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக உயர் பதவிகளில் இருந்தவர்கள் மற்றும் அரசியல் முக்கிய பிரமுகர்களுக்கு ரூ.2400 கோடி பணத்தை லஞ்சமாக கொடுத்தது தொடர்பான பட்டியல் அதில் இருந்தது.

    வங்கிகளின் மூலமாகவும், ஆன்லைன் மூலமும் சிலருக்கு பணம் அனுப்பியதற்கான ஆவணங்களும் இதில் சிக்கியுள்ளது. குறிப்பாக முக்கிய அரசியல் வாதிகள் மற்றும் அதிகாரிகளின் டிரைவர்கள், வீட்டில் வேலை செய்பவர்கள் பெயரில் இந்த லஞ்சப்பணம் கைமாறி உள்ளதையும் வருமான வரித்துறையினர் கண்டு பிடித்துள்ளனர்.

    அரசியல் சத்துணவு திட்டத்திற்கு மத்திய அரசின் நிதி உதவியும் உள்ளது. இதனால் மத்திய அரசு அதிகாரிகளுக்கு எவ்வளவு லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பான ஆதாரங்களும் சிக்கியுள்ளது. இதனால் சத்துணவு திட்டத்தில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடநத்திருப்பதை பார்த்த வருமான வரித்துறை அதிகாரிகள் திகைத்துள்ளனர்.

    தற்போது லஞ்சப் பட்டியலில் தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்களுக்கும் வருமான வரித்துறை சார்பில் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் விரைவில் வருமான வரித்துறையினர் முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளனர். மேலும் தமிழக அரசிடமும் விளக்கம் கேட்க வருமான வரித்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

    ஏற்கனவே தமிழகத்தில் குட்கா விற்பனை செய்ய ரூ.40 கோடி பணத்தை உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்கள் லஞ்சம் பெற்றது தொடர்பான பட்டியல் சிக்கியதால் அந்த வழக்கு தற்போது சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

    தற்போது சத்துணவு திட்டத்திலும் முறைகேடு மற்றும் லஞ்சப்பட்டியல் சிக்கியுள்ளதால் இந்த வழக்கும் விரைவில் சி.பி.ஐ.க்கு மாற்றப்படும் என கூறப்படுகிறது. இதனால் இதில் தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்கள் பீதி அடைந்துள்ளனர். #Eggnutritioncorruption #ITRaid #ChristyFriedgramIndustry
    சத்துணவு முட்டை கொள்முதல் செய்வதற்கான டெண்டர் நடவடிக்கைகளை வரும் 20-ம் தேதி வரை நிறுத்திவைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #Eggnutritioncorruption #HighCourt
    சென்னை:

    தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தின் கீழ் நாள் ஒன்றுக்கு 48 லட்சம் முட்டைகளை கொள்முதல் செய்வதற்கான டெண்டர் அறிவிப்பாணை தொடர்பாக தமிழக அரசு கடந்த 20-ந்தேதி அரசாணை பிறப்பித்தது.

    இந்த அரசாணையை எதிர்த்தும், அரசாணைக்கு தடை விதிக்க கோரியும் சென்னை ஐகோர்ட்டில், கோழி பண்ணை உரிமையாளர்கள் பலர் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்குகள் நீதிபதி மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, ‘முட்டை கொள்முதல் விவகாரத்தில் தனது முடிவை மாற்றிக்கொள்ள அரசுக்கு உரிமை உள்ளது.

    இதில் குறிப்பிட்ட சிலருக்கு சாதகமாக செயல்படுவதற்காக இந்த அரசாணை பிறப்பிக்கப்படவில்லை. முட்டை கொள்முதலில் ஆரோக்கியமான போட்டியை உருவாக்கவும், இடைத்தரகர்களை முற்றிலுமாக ஒழிக்கவுமே பல்வேறு நிபந்தனைகள் விதித்து இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது’ என்று வாதிட்டார்.

    இதையடுத்து நீதிபதி, ‘மனுதாரர்களை டெண்டர் நடவடிக்கையில் அனுமதிக்கவில்லை என்று கூறுகின்றனர். இதுகுறித்து விரிவாக விசாரணை நடத்தவேண்டியதுள்ளது. அதனால், இந்த டெண்டர் நடவடிக்கையை 10 நாட்களுக்கு நிறுத்தி வைக்க வேண்டும். அல்லது மனுதாரர்களையும் இந்த டெண்டரில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்’ என்றார். இது குறித்து அரசின் கருத்தை கேட்டு தெரிவிப்பதாக அட்வகேட் ஜெனரல் நேற்று கூறினார்.


    இதையடுத்து இந்த வழக்கு இன்று நீதிபதி மகாதேவன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண் ஆஜராகி, ‘இந்த வழக்கில் தமிழக அரசின் கருத்தை தெரிவித்து விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய உள்ளோம். அதற்கு கால அவகாசம் வேண்டும்’ என்றார்.

    இந்த வழக்கை வருகிற 14-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறேன். இந்த வழக்கின் பதில் மனுவை தமிழக அரசு வருகிற 7-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்யவேண்டும். அந்த பதில் மனுவுக்கு, மனுதாரர்கள் தரப்பில் 12-ந்தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.

    இந்த வழக்கு விசாரணை முடியும் வரை, அதாவது வருகிற 20-ந்தேதி வரை முட்டை டெண்டர் நடவடிக்கைகள் அனைத்தையும் தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும்’.

    இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார். #Eggnutritioncorruption #HighCourt
    தமிழகத்தில் சத்துணவு முட்டையில் ரூ.5 ஆயிரம் கோடி ஊழல் நடந்திருப்பது குறித்து விசாரிக்க வேண்டும் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
    ஆலந்தூர்:

    மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    விசாகப்பட்டிணத்தில் கப்பல் போக்குவரத்து துறை சார்பாக மத்திய மந்திரி நிதின்கட்காரி மற்றும் இணை மந்திரி மாண்டியா ஆகியோர் தலைமையில் நடந்த ஆய்வு கூட்டத்தில் நான் கலந்து கொண்டேன்.

    அப்போது ஆந்திர மாநிலம் கோதாவரி நதியில் இருந்து 3000 டி.எம்.சி. தண்ணீர் கடலில் கலக்கிறது. அந்த தண்ணீரை காவிரியில் சேர்க்க முயற்சி எடுக்கப்படும் என்று நிதின்கட்காரி தெரிவித்தார்.

    ஆந்திர மாநில முதல்- மந்திரி சந்திரபாபு நாயுடுவிடம் தமிழகத்தில் காவிரி நீர் பிரச்சனை இருக்கிறது, அது தீரும் வரை தண்ணீர் தர வேண்டும் என்று கேட்டேன். அதற்கு அவர் ஆந்திர மாநிலத்தில் தண்ணீர் இல்லாத நேரத்தில் கூட சென்னைக்கு தண்ணீர் கொடுத்தேன் என்றார்.

    ஜி.எஸ்.டி. குறித்தான தி.மு.க. முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசாவின் பேச்சை ஒரு பொருட்டாக எடுக்கக் கூடாது.


    தமிழகத்தில் முட்டையிலும் பல கோடி ஊழல் நடந்திருக்கிறது என்று தெரிய வருகிறது. இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிப்பது குறித்து இப்போது சொல்ல முடியாது. தமிழக மக்கள் முட்டையால் மொட்டை போடப்பட்டு இருக்கிறார்கள். முட்டையில் ரூ.5 ஆயிரம் கோடி ஊழல் நடந்திருக்கிறது. அதை விசாரிக்க வேண்டும்.

    பா.ஜ.க.வின் தேசிய தலைவர் அமித்ஷா தமிழ்நாட்டில் ஊழல் பெருகுகிறது என்றுதான் சொன்னார். ஏற்கனவே ஆண்ட அரசையோ, தற்போது ஆளுகின்ற அரசையோ குறிப்பிட்டு சொல்லவில்லை. தற்போது தேர்தல் கூட்டணி பற்றி சொல்ல முடியாது. அதற்கு வெகுநாள் இருக்கிறது.

    தி.மு.க. பெரிய ஊழலில் திளைத்த கட்சி என்று எல்லோருக்கும் தெரியும். தி.மு.க. மத்தியில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருந்தபோது பெரிய ஊழலில் இருந்துள்ளது. ஆனால் தி.மு.க. மத்தியில் பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்திருந்தபோது ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட இல்லை. சேருகிற இடத்தை பொறுத்துதான் சேருபவர்கள் இருப்பார்கள்.

    டாக்டர் ராமதாஸ் காங்கிரசுடன் கூட்டணி வைத்தாலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று கூறியிருக்கிறார். இதைப்போல் வசனம் பேசுபவர்கள் கடைசி நேரத்தில் அதை மாற்றுவார்கள் என்று பார்த்து இருக்கிறோம்.

    அ.தி.மு.வை நடத்தும், அரசாங்கத்தை நடத்தும் தலைவர்கள், ஆளுகிறவர்கள் இருக்கிறார்கள். பா.ஜ.க. ஒட்டு மொத்தமாக ஊழலை எதிர்க்கின்ற கட்சி. தூய்மை, நேர்மை வழியில் நடக்கின்ற கட்சி.

    நடிகர் கமல் தன்னை பகுத்தறிவாளன் என்றும் ஊழல், ஏழ்மையை ஒழிக்க அரசியலுக்கு வந்திருப்பதாக சொல்கிறார். தமிழக மக்களை ஏழை ஆக்கக் கூடாது.

    பயங்கரவாதத்தை பற்றி நான் பேசியதால்தான் தமிழகத்தில் பலர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். பயங்கரவாதம் வெகுவாக குறைந்துள்ளது. தமிழகத்தில் 6 பயங்கரவாதிகள் மத்திய துறையால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். தமிழக அரசாலோ, தமிழக போலீசாராலோ கைது செய்யவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #PonRadhakrishnan #EggNutritionCorruption
    கிறிஸ்டி நிறுவனத்துடன் தொடர்புடைய அரசு அதிகாரிகள் மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்களிடம் விசாரிக்கவும், பலரது வீடுகளில் அதிரடி சோதனை நடத்தவும் வருமான வரித்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
    சேலம்:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த ஆண்டிபாளையத்தில் கிறிஸ்டி பிரைடு நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

    இந்த நிறுவனம் தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் முட்டை, சத்துமாவு மற்றும் ரேசன் கடைகளுக்கான பருப்பு உள்பட பல்வேறு பொருட்களை வினியோகம் செய்து வருகிறது.

    போலி நிறுவனங்களை தொடங்கி வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்ததையடுத்து கிறிஸ்டி நிறுவனம் மற்றும் அதன் தொடர்பு நிறுவனங்களிலும் வருமான வரித்துறையினர் கடந்த 5-ந் தேதி முதல் 5 நாட்கள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது கிறிஸ்டி நிறுவன உரிமையாளர் வீடு, அலுவலகம், ஆடிட்டர், கணக்காளர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது. மேலும் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக அலுவலகம், நெற்குன்றத்தில் உள்ள வாணிப கழக மேலாண்மை இயக்குனர் சுதாதேவி வீடு உள்பட நாடு முழுவதும் 76 இடங்களில் இந்த சோதனை நடந்தது.

    இதற்கிடையே மத்திய பிரதேசத்தில் இருந்த கிறிஸ்டி நிறுவன உரிமையாளர் குமாரசாமியை பெங்களூரு, திருச்செங்கோடு உள்பட பல்வேறு பகுதிகளுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். கிறிஸ்டி நிறுவன கணக்காளர் கார்த்திக்கேயனிடம் விசாரணை நடத்திய போது மாடியில் இருந்து குதித்து அவர் தற்கொலைக்கு முயன்றார்.

    5 நாட்களாக நடந்த இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள், 100-க்கும் மேற்பட்ட பென்டிரைவ்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் கணக்கில் காட்டப்படாத 20 கோடி ரூபாய் ரொக்கப் பணம், 10 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டது.

    கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து நிறுவனத்தின் சொத்து மதிப்பு, வரி ஏய்ப்பு மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் குறித்தும் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களாக ஆய்வு செய்தனர். அப்போது போலியாக நிறுவனங்களை தொடங்கி முறைகேடு செய்ததும், சிங்கப்பூர், மலேசியா உள்பட பல்வேறு நாடுகளில் இந்நிறுவனம் பல கோடி முதலீடு செய்ததும் தெரிய வந்தது.

    கைப்பற்றப்பட்ட முக்கிய ஆவணங்களின் படி கிறிஸ்டி மற்றும் அதன் தொடர்பு நிறுவனங்கள் 1350 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆய்வுகள் நடந்து வரும் நிலையில் கிறிஸ்டி நிறுவனத்துடன் தொடர்பில் இருந்த அரசு அதிகாரிகள் மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்களிடம் விசாரிக்கவும், பலரது வீடுகளில் அதிரடி சோதனை நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.


    சத்துணவு திட்டத்திற்கு தினமும் 50 லட்சம் முட்டை வழங்க ஆண்டுக்கு 480 கோடி ரூபாய்க்கு சமூக நலத்துறை சார்பில் நேற்று டெண்டர் நடத்தப்பட்டது. இதில் கிறிஸ்டி குழுமத்தை சேர்ந்த நேச்சுரல் புட், கிறிஸ்டி கிஷான், ஸ்வர்ண பூமி என்ற நிறுவனங்களும் ஒப்பந்த புள்ளி வழங்கி இருந்தன.

    இது தவிர ஸ்ரீமாருதி அக்ரோவ், நாமக்கல் சொசைட்டி ஆகிய நிறுவனங்களும் ஆந்திராவை சேர்ந்த ஸ்ரீதர்பாபு என்பவரும் ஒப்பந்த புள்ளி கொடுத்திருந்தனர். டெண்டர் திறப்பு நேற்று மாலை துறை இயக்குனர் முன்னிலையில் சென்னையில் நடந்தது. அப்போது கிறிஸ்டி குழுமத்தின் ஒப்பந்த புள்ளிகளை பரிசீலிக்க கூடாது என்று மற்ற நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.

    ஒவ்வொரு நிறுவனத்தினரையும் தனி தனியாக அழைத்து பேசிய அதிகாரிகள் டெண்டரில் பங்கேற்ற அனைத்து நிறுவனங்களின் ஒப்பந்த புள்ளிகளும் நிராகரிக்கப்பட்டதாகவும் டெண்டர் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவித்தனர்.

    மேலும் விரைவில் மறு டெண்டர் கோரப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பில் அறிவிக்கப்பட்டது. டெண்டர் ரத்து செய்யப்பட்டதற்கு கிறிஸ்டி நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனையின் போது கண்டு பிடிக்கப்பட்ட பல கோடி முறைகேடுகள் தான் காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் மீண்டும் எப்போது டெண்டர் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் இதில் தொடர்புடைய நிறுவனங்கள் உள்ளன. #EggNutritionCorruption #ITRaid
    தமிழக அரசு பள்ளிகளுக்கு முட்டை வினியோகம் செய்ததில் ரூ.5 ஆயிரம் கோடி ஊழல் நடந்திருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகள் சந்தேகிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Eggnutritioncorruption #ITRaid
    சேலம்:

    தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் சத்துணவு திட்டங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் முட்டை, சத்துமாவு ஆகியவற்றை நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஆண்டி பாளையத்தில் உள்ள கிறிஸ்டி பிரைடு நிறுவனம் வழங்கி வருகிறது.

    இது தவிர ஒப்பந்த அடிப்படையில், ரேசன் கடைகளுக்கு பருப்பு வினியோகமும் செய்து வருகிறது.

    கிறிஸ்டி நிறுவனம் மீது வரி ஏய்ப்பு, முட்டை வினியோகத்தில் முறைகேடு செய்வதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து கடந்த 5-ந்தேதி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சுமார் 500 பேர் பல்வேறு குழுக்களாக பிரிந்து நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி உள்பட நாடு முழுவதும் உள்ள அந்த நிறுவனத்திற்கு சொந்தமான 72 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினார்கள்.

    திருச்செங்கோடு வட்டூரில் உள்ள கிறிஸ்டி புட்ஸ் நிறுவன உரிமையாளர் குமாரசாமி வீடு, ஆடிட்டர்கள் ராமச்சந்திரன், சங்கர் ஆகியோர் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

    ஆண்டிபாளையம் எஸ்.பி.எஸ்.நகர் குடியிருப்பில் வைத்து கிறிஸ்டி நிறுவன கணக்காளர் கார்த்திக்கேயனிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

    இதில் அவரது முதுகு தண்டு வடம் பாதிக்கப்பட்டதால் கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதற்கிடையே திருச்செங்கோடு தேக்கவாடியில் உள்ள கார்த்திக்கேயன் வீட்டில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பென் டிரைவ்கள் கைப்பற்றப்பட்டன. இந்த பென் டிரைவ்களில் சத்துணவு முட்டை டெண்டர் விவகாரம், பல கோடிகளை லஞ்சமாக பெற்ற அரசியல் கட்சி முக்கிய பிரமுகர்கள், அதிகாரிகள் பட்டியல் உள்பட பல்வேறு முக்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

    அந்த ஆவணங்கள் அடிப்படையில் விசாரித்த போது ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், முக்கிய பிரமுகர்களுக்கு லஞ்சம் கொடுத்ததை குமாரசாமி ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் அதனை எழுத்து பூர்வமாக எழுதி தரும் படி கேட்டதற்கு அவர் மறுப்பு தெரிவித்து விட்டார்.

    முட்டை கொள்முதல், சத்து மாவு சப்ளையில் 5 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக வருமானவரித்துறை அதிகாரிகள் சந்தேகம் அடைந்துள்ளனர். எனவே இதில் தொடர்புடைய அனைவருக்கும் விரைவில் சம்மன் அனுப்பி விசாரணையை தீவிரப்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

    திருச்செங்கோட்டில் 5-வது நாளாக நடந்த சோதனை நேற்று நிறைவு பெற்றது. இந்த சோதனையில் 20 கோடிக்கு அதிகமான ரொக்கப்பணமும், 15 கிலோவுக்கு அதிகமான தங்க பிஸ்கட்டுகளும் வெளிநாட்டு கரன்சிகளும், கணக்கிட முடியாத அளவுக்கு ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.


    இதையடுத்து 10-க்கும் மேற்பட்ட கார்களில் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் அள்ளி சென்றனர். குமாரசாமி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்ட நிலையில் நேற்றிரவு அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

    அழைக்கும் போது விசாரணைக்கு வர வேண்டும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக மேலாண்மை இயக்குனர் சுதாதேவியும் கிறிஸ்டி நிறுவனர் குமாரசாமியும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள். இதனால் காஷ்மீரில் பணிபுரிந்த அவரை தனது அரசியல் பலத்தை வைத்து குமாரசாமி நுகர்பொருள் கழக மேலாண் இயக்குனர் பதவி சுதாதேவிக்கு கிடைக்க செய்தார்.

    சுதா தேவி பதவிக்கு வந்த பிறகு தான் கிறிஸ்டி புட்ஸ் நிறுவனம் பல போலி நிறுவனங்கள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் பல ஆயிரம் கோடி பணத்தை போலி வங்கி கணக்குகள் மூலம் குமாரசாமி வெளிநாடுகளில் முதலீடு செய்தது ஆவணங்கள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    குமாரசாமி, அவரது மனைவி நளினிசுந்தரி, மகள்கள் திவ்யா, கிறிஸ்டி ஆகியோரிடம் தனி தனியாக விசாரணை நடத்தினர். நிறுவனத்தின் ஊழியர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரி சுதாதேவி ஆகியோரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பென் டிரைவ்வில் உள்ள ஆவணங்கள் மற்றும் செல்போன் பேச்சு ஆகியவற்றின் உண்மை தன்மை குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

    நாமக்கல் முன்னாள் உயர் அதிகாரி உள்பட பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கும், அரசியல் பிரமுகர்களுக்கும் கிறிஸ்டி நிறுவனம் பல கோடி ரூபாயை கமி‌ஷனாக கொடுத்ததாக தெரிந்தது. அந்த அதிகாரிகளிடம் விசா ரணை நடத்த சம்மன் அனுப்ப வருமான வரித்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

    திருச்செங்கோட்டில் உள்ள நிறுவனத்தில் பணியாற்றும் 60-க்கும் மேற்பட்ட ஊழியர்களிடமும் நேற்று தனி தனியாக விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள் மூலமே பல்வேறு நபர்களுக்கு பணம் கொடுக்கல் வாங்கல் நடந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இந்த நிறுவனத்திற்கு சொந்தமான பவுண்ரி, நிட்டிங், கார்மெண்ட்ஸ் போன்ற நிறுவனங்களில் வைத்து முட்டை மற்றும் சத்துமாவு சம்பந்தமாக அதிகாரிகளுக்கு லஞ்ச பரிவர்த்தனைகள் நடந்ததையும் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். #Eggnutritioncorruption  #ITRaid
    முட்டை ஊழல் அணுகுண்டாக மாறும் என்று கோவையில் நடைபெற்ற கூட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறினார்.
    கோவை:

    கோவை மாநகர் தெற்கு, வடக்கு, கோவை புறநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கோவை கொடிசியா மைதானத்தில் பொதுக்கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:-

    ஜெயலலிதாவுடன் 30 ஆண்டுகளுக்கு மேலாக தாயாய், தோழியாய், தந்தையாய் இருந்த சசிகலா சொன்ன காரணத்தினால் தான் மீண்டும் அ.திமு.க. ஆட்சி தொடருகிறது.

    சசிகலா நினைத்திருந்தால் என்னை முதல்வராக ஆக்கி விட்டு சென்றிருக்க முடியும். ஆனால் கொங்கு மண்டலத்தை சேர்ந்தவரை முதல்-அமைச்சராக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடு இன்றைக்கு முதல்வராக இருக்கும் பழனிசாமியை நியமித்த காரணத்தினால் தான் அவர் முதல்வராக இன்று இருக்கிறார்.

    இன்று முதல்வராக இருக்கிற பழனிசாமியின் தாய் -தந்தை கூட அவரை முதல்வராக்கவில்லை. அவரை அமைச்சராக்கிய ஜெயலலிதா கூட அவரை அமைச்சராக தான் வைத்திருந்தாரே தவிர அவரை தாயை விட உயர்ந்த ஸ்தானத்தில் வைக்கக் கூடிய சசிகலாவை அவர் யாருக்கோ பயந்து கொண்டு கட்சியை விட்டு நீக்கிய காரணத்தினால் தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சி உருவானது. இந்த பகுதியை சேர்ந்த ஒரு அமைச்சர் சொல்கிறார். ஒரு தினகரன் அல்ல. ஆயிரம் தினகரன் வந்தால் கூட ஒன்றும் செய்ய முடியாது என்று சொல்கிறார்.

    இந்த ஒரு தினகரனையே ஆர்.கே.நகரில் எதிர்கொள்ள முடியவில்லை. உங்களுக்கு இரட்டை இலை சின்னம், கட்சியின் பெயர் கொடுக்கப்பட்டது. ஆட்சி அதிகாரம் உங்கள் கையில் இருந்தது. காவல் துறையையும், அரசு எந்திரத்தை வைத்துக் கொண்டு என்ன ஆட்டம் போட்டீர்கள் என்று தமிழக மக்களுக்கு தெரியும்.

    அந்த ஒரு தினகரனை ஆர்.கே.நகரில் எதிர்கொள்ள முடியாத நீங்கள் ஆயிரம் தினகரனை எப்படி சமாளிக்க போகிறீர்கள்.

    எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜெயலலிதாவை கர்நாடகத்துக்கு விரட்டி விடலாம் என்று நினைத்தனர். ஆனால் அப்போது அவருக்கு பாதுகாப்பு அளித்த காரணத்தினால் தான் 1999-ம் ஆண்டு என்னை பெரிய குளம் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட செய்தார். நான் ஒன்றும் புறவழியில் வந்தவன் அல்ல. நான் பெரிய குளம் தேர்தலில் வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல் என்னை பேரவை மாநில செயலாளராக நியமித்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் வந்தேன்.

    அப்போது என்னிடம் திருப்பூர் சிவசாமியால் அறிமுகப்படுத்தப்பட்டவர் தான் இந்த பகுதி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. அவரது தந்தை கட்சியில் இருக்கிறார். எனவே அவருக்கும் கட்சி பொறுப்பு வழங்க வேண்டும் என்று சிவசாமி என்னிடம் சொன்னார்.

    முன்னாள் மத்திய மந்திரி ஒருவர் எங்கள் குடும்பத்தை நீதிமன்றத்தில் தூணுக்கு தூண் அலைய விடுவோம் என்று சொன்னார். ஆனால் அவர் குடும்பத்தினர் தான் தற்போது நீதிமன்றத்தில் தூணுக்கு தூண் அலைந்துகொண்டிருக்கிறார்கள். நான் சிறைக்கு சென்றேனா? என்று சிலர் கேட்கிறார்கள். என்னை மாமியார் வீட்டுக்கு போகப்போகிறேன் என்று கூறுகிறார்கள். மாமியார் வீட்டுக்கு யார் போகப்போகிறார்கள் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். திருச்செங்கோட்டிலும், ராசிபுரத்திலும் வருமானவரி சோதனை ஆரம்பித்து விட்டது. முட்டை ரூபத்தில் வந்து இருக்கிறது. இந்த முட்டை அணுகுண்டாக மாறி உங்கள் துரோகத்தின் மீது விழும். உங்களுக்கு கட்டளையிட்டவர்களுக்கு தெரியாதா? தன்னை முதல்வராக்கியவருக்கே தாய் ஸ்தானத்தில் இருப்பவருக்கே துரோகம் செய்த நீங்கள் என்ன செய்வீர்கள் என்று அவர்களுக்கு தெரியாதா?


    இந்த பகுதியை சேர்ந்த 56 பேரை போலீசார் பொய்வழக்கு போட்டு கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கு காரணமானவர்களை நீங்கள் மன்னித்தாலும் நான் மன்னிக்க மாட்டேன். உப்பை தின்றவர்கள் நிச்சயம் தண்ணீர் குடிக்கும் காலம் ஆரம்பித்து விட்டது. இதுபோன்ற சோதனைகள் நிச்சயம் உண்மையை வெளிக்கொண்டு வரும். மடியில் கனத்தோடு கடந்த ஆண்டு என்னை அரசியலில் இருந்து வெளியேற சொன்னவர்கள் அரசியலில் இருந்தே வெளியேற்றப்படுவார்கள். அந்த காலம் வர இருக்கிறது. நான் நினைத்திருந்தால் 2001-ம் ஆண்டு ஜெயலலிதாவிடம் சொல்லி முதல்வராகியிருக்க முடியும். ஆனால் மற்றவர்களை முதல்வராக்கும் பெருந்தன்மை படைத்தவர்கள் தான் நானும், சசிகலாவும்.

    கூடா நட்பு கேடாய் முடியும் என்பார்கள். இன்றைக்கு துணை முதல்-அமைச்சராக இருப்பவர் எவ்வளவு கேவலப்படுத்தப்படுகிறார் என்று எல்லோருக்கும் தெரியும். இதை விட ஒரு தண்டனை அவருக்கு தேவையில்லை.

    234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி மறைந்த எம்.ஜிஆர். ஜெயலலிதா ஆகியோரின் ஆசியோடு, சசிகலா கட்டளையோடு வெற்றி பெற்று அவர் அனுமதித்தால் அங்கே போய் அமருவேன். இல்லை என்றால் என்றைக்கும் உங்களோடு பணி செய்கின்ற தொண்டனாகத் தான் தொடருவேனே தவிர பதவியை காப்பாற்றிக் கொள்வதற்காக கண்டவர் காலை பிடிப்பவன் அல்ல நான்.

    18 எம்.எல்.ஏ.க்களும் நிரபராதிகள் என்ற ஒரே தீர்ப்போடு நீதிமன்றத்துக்கு வருவார்கள். அப்போது சட்டமன்றம் காலி செய்யப்படும். மக்களுக்காகத் தான் திட்டங்களே தவிர திட்டங்களுக்காக மக்கள் அல்ல. ஜனநாயக நாட்டில் மக்கள் விரும்பாத எந்த திட்டமாக இருந்தாலும் அது மத்திய அரசாக இருந்தாலும் சரி, மாநில அரசாக இருந்தாலும் சரி அதை எதிர்த்து மக்கள் போரிட்டால் அவர்களுக்கு உறுதுணையோடு இருந்து போராடுவோம்.

    18 எம்.எல்.ஏ.க்கள் பதவி நீக்கம் செல்லாது என்று தீர்ப்பு வந்த பிறகு சட்டசபையில் அறுதி பெரும்பான்மை நிரூபிக்க வேண்டிய நிலைமை ஏற்படும். அதில் அவர்கள் தோற்கடிக்கப்பட்டு மீண்டும் நிச்சயம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆட்சியில் அமரும். 200 தொகுதிகளுக்கு மேல் நாங்கள் வெற்றிபெறுவோம்.

    இரட்டை சிலை சின்னம் துரோகிகள் கையில் சென்று விட்டதால் அந்த துரோகிகளை வீழ்த்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளோம். எனவே இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுப்பதற்காக தமிழகம் முழுவதும் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறுவோம்.

    இவ்வாறு டி.டி.வி. தினகரன் பேசினார்.

    முன்னதாக டி.டி.வி. தினகரனுக்கு வீரவாள் பரிசாக வழங்கப்பட்டது.

    பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் சண்முகவேலு, பழனியப்பன், திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் சிவசாமி, கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். #TTVDhinakaran
    சத்துணவு முட்டை ஊழல் தொடர்பாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில் கைப்பற்றப்பட்டுள்ள 100 பென்டிரைவ்களில் பல்வேறு முக்கிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. #Eggnutritioncorruption
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஆண்டிபாளையத்தில் கிறிஸ்டி புட்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது.

    இந்த நிறுவனம் தமிழக முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், அங்கன்வாடி மையங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் சத்துணவு முட்டை, சத்துமாவு, பருப்பு வினியோகம் செய்து வருகிறது.

    இந்நிறுவனம் போலி பெயரில் நிறுவனங்களை தொடங்கி வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறைக்கு புகார்கள் சென்றது. இதையடுத்து கடந்த 5-ந் தேதி அதிகாலை முதல் ஆண்டி பாளையத்தில் உள்ள அந்த நிறுவனம், வட்டூரில் உள்ள அதன் உரிமையாளர் குமாரசாமி வீடு, நாமக்கல், ராசிபுரம் பகுதிகளில் உள்ள நிறுவனத்திற்கு சொந்தமான ராசிநியுட்ரிபுட் என்ற பெயரில் இயங்கும் நிறுவனம், குடோன்கள், உறவினர்கள, நண்பர்கள் வீடுகள் உள்பட 78 இடங்களில் ஒரே நாளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    4-வது நாளாக நேற்று திருச்செங்கோடு ஆண்டி பாளையத்தில் உள்ள தலைமை அலுவலகம், சென்னை, மும்பை, பெங்களூரு உள்பட பல்வேறு இடங்களில் சோதனை நடந்தது. இந்த சோதனையில் கிறிஸ்டி நிறுவனத்தில் கைப்பற்றப்பட்ட சொத்து ஆவணங்கள் குறித்து வருமான வரித்துறையினர் கணக்கெடுத்து வருகிறார்கள்.

    ஒவ்வொரு மாதமும் நிறுவனத்தின் வரவு செலவு புத்தகங்கள், வங்கி இருப்பு குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. கடந்த 4 நாட்களாக நடந்த தொடர் சோதனையில் கிறிஸ்டி நிறுவனம் மற்றும் அதன் கிளை நிறுவனங்களில் இருந்து 17 கோடி ரொக்கப்பணம், 10 கிலோ தங்கம் மற்றும் வெளிநாடுகளில் பல ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் சிக்கியுள்ளது.

    இதற்கிடையே வருமான வரித்துறையினரின் விசாரணையில் இருந்து தப்பிக்க கிறிஸ்டி நிறுவனத்தின் கேஷியர் கார்த்திக்கேயன் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் படுகாயம் அடைந்த அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.


    முதுகு தண்டில் பலத்த காயம் ஏற்பட்டதால் நேற்று அவரை உறவினர்கள் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவருக்கு சுய நினைவு திரும்பியுள்ளதால் அவரிடம் விசாரிக்க வருமான வரித்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

    திருச்செங்கோடு அருகே தோக்கவாடியில் உள்ள கணக்காளர் கார்த்திக்கேயன் வீட்டில் நேற்று அங்குலம், அங்குலமாக பல மணி நேரம் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள ஒரு கிணற்றில் ஆட்களை இறக்கி சோதனை செய்த போது 100-க்கும் மேற்பட்ட பென் டிரைவ்கள் அதிகாரிகளிடம் சிக்கியதாக கூறப்படுகிறது.

    இந்த பென் டிரைவ்களில் கிறிஸ்டி நிறுவனத்தின் வெளிநாடு மற்றும் உள் நாட்டு முதலீடுகள், தொழில் விவரங்கள், குமாரசாமியின் வங்கி கணக்குகள் உள்பட பல்வேறு முக்கிய தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனை பார்த்து அதிகாரிகளே திகைத்துள்ளனர்.

    குமாரசாமியின் நம்பிக்கைக்கு உரியவரான கேஷியர் கார்த்திக்கேயன் போலி நிறுவனங்கள் தொடங்கியதற்கான ஆவணங்கள் உள்பட பல்வேறு முக்கிய ஆவணங்கள் மற்றும் குமாரசாமியின் வங்கி கணக்குகளை பராமரித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதனை மோப்பம் பிடித்த வருமான வரித்துறை அதிகாரிகள் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது குமாரசாமியை காப்பாற்றும் வகையில் ரகசியங்கள் அடங்கிய பென்டிரைவ்களை வீட்டு கிணற்றில் வீசி விட்டு கார்த்திக்கேயன் தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது.

    மத்திய பிரதேசத்தில் பிடிக்கப்படட்ட குமாரசாமியை பெங்களூரு அழைத்து சென்று முதலில் விசாரணை நடத்தினர். நேற்று அவரை திருச்செங்கோட்டுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது பல்வேறு கிடுக்கிப்பிடி கேள்விளை அதிகாரிகள் கேட்டதாகவும், அதற்கு அவர் பதில் சொல்ல முடியாமல் திணறியதகாவும் கூறப்படுகிறது.

    இன்று குமாரசாமியை திருப்பூர், பொள்ளாச்சி, கோவை உள்பட பல்வேறு பகுதிகளுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்த உள்ளனர். இதே போல வரி ஏய்ப்புக்கு துணை போனதாக கூறி ஐ.ஏ.எஸ். அதிகாரியான சுதா தேவியிடம் இருந்து கைப்பற்றிய ஆவணங்களின் அடிப்படையில் அவரிடமும் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

    நிறுவனத்தின் கணக்கு வழக்கு மற்றும் அனைத்து தகவல்களையும் பென் டிரைவ் எக்ஸ்டர்னர் ஹார்டு டிஸ்க் மூலம் பரிவர்த்தனையை மேற்கொண்டுள்ளனர். அவற்றை மேலாளர், கணக்காளர், அக்கவுண்டன்ட் ஆகியோர் தங்களது பொறுப்பில் வைத்திருந்தனர்.


    திருச்செங்கோடு ஆண்டி பாளையத்தில் உள்ள கிறிஸ்டி நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் 5-வது நாளாக இன்று அங்குலம், அங்குலமாக சோதனை நடத்தி வருகிறார்கள். இதையொட்டி கூடுதல் போலீசார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டுள்ளதால் தொடர்ந்து அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.

    தற்போதைய சோதனையில் 100-க்கும் மேற்பட்ட பென் டிரைவ் கைப்பற்றப்பட்டுள்ளதால் அவற்றில் உள்ள பரிவர்த்தனைகள், ரகசிய ஆவணங்கள், வரவு செலவுகள் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்கள்.

    அந்த ஆய்வு முடிவில் கிறிஸ்டி நிறுவனம் எவ்வளவு வரி ஏய்ப்பு செய்துள்ளது, ரொக்கப்பணம் எங்கு பதுக்கி வைத்துள்ளனர் என்பது குறித்த முழு விவரங்கள் தெரிய வரும் என்பதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

    வருகிற 11-ந் தேதி தமிழக அரசுக்கு சத்துணவு முட்டை வினியோகத்திற்கு மாநில அளவிலான டெண்டர் நடக்கிறது. அதில் இந்நிறுவனம் பங்கேற்குமா? என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.

    கிறிஸ்டி நிறுவனத்திற்கு சொந்தமாக கோழிப்பண்ணைகள் இல்லாததால் தினமும் 50 லட்சம் முட்டைகளை நாமக்கல் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 400 பண்ணையாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்து சத்துணவு திட்டத்திற்கு வினியோகம் செய்து வருகிறது.

    முட்டைகள் வழங்கும் கோழிப்பண்ணைகளுக்கு அந்த நிறுவனம் சார்பில் ஒவ்வொரு வாரமும் வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்குக்கு பணம் அனுப்பப்படும்.

    வருமான வரித்துறை சோதனை 5-வது நாளாக இன்றும் நீடிப்பதால் நிறுவன வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இதனால் பண்ணையாளர்களுக்கு பணம் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வினியோகம் செய்த முட்டைக்கு உரிய பணம் கணக்கில் வரவு வைக்காததால் பண்ணையாளர்கள் பணம் கிடைக்குமா? என்ற தவிப்பில் உள்ளனர். #Eggnutritioncorruption  #ITRaid
    வருமான வரித்துறையினரின் விசாரணையின் போது தற்கொலைக்கு முயன்ற முட்டை நிறுவன காசாளருக்கு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
    கோவை:

    தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகள், சத்துணவு மையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு முட்டை விநியோகம் செய்ததில் பல கோடி ரூபாய் முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இதனையடுத்து நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஆண்டிபாளையத்தில் உள்ள தனியார் மாவு நிறுவன தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது அந்த நிறுவனத்தில் காசாளர் கார்த்திகேயன் (வயது 32) என்பவரிடம் அதிகாரிகள் பின் பக்கம் உள்ள வீட்டில் வைத்து விசாரணை நடத்தினர். அப்போது கார்த்திகேயன் தண்ணீர் குடித்து வருவதாக கூறிவிட்டு சென்றார். திடீரென வீட்டில் முதல் மாடியில் இருந்து கீழே குதித்தார். இதனை பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

    காயங்களுடன் உயிருக்கு போராடிய கார்த்திகேயனை அதிகாரிகள் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த போது முதுகு தண்டுவடத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது.

    இதனையடுத்து அவரை மேல் சிகிச்சைக்காக கோவை சாய்பாபா காலனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு கார்த்திகேயன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். #EggNutritionCorruption
    நாமக்கல்லில் சத்துணவு திட்ட முட்டை முறைகேட்டில் 2 மந்திரிகளுக்கு அல்ல, பல மந்திரிகளுக்கு தொடர்பு இருக்கிறது என டி.டி.வி. தினகரன் கூறினார்.
    ஆட்டையாம்பட்டி:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக சேலம் ஒன்றிய செயலாளர் பாபநாசம் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்ள சேலம் நெய்காரப்பட்டிக்கு அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-

    சேலம்-சென்னை 8 வழி பசுமை சாலை திட்டம் மக்கள் மீது திணிக்கப்பட்ட திட்டம். மக்களுக்கு விருப்பம் இல்லாத திட்டங்களை மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா செயல்படுத்தவில்லை. அவரது ஆட்சி காலத்தில் மக்களுக்கு எதிரான மத்திய அரசின் திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்த விட்டது இல்லை. ஆனால் தற்போதைய அரசு மக்களுக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்துகிறது.

    விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து போராடுவோம். 8 வழிச்சாலை திட்டம் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்டு, அவர்கள் சம்மதத்துடன் நிறைவேற்ற வேண்டும். பொதுமக்கள், விவசாயிகள் எதிர்த்தால் நாங்களும் எதிர்ப்போம்.


    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் எங்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும். விரைவில் நல்ல தீர்ப்பு வரும் என்று நம்புகிறோம். ஐகோர்ட்டில் எங்களுக்கு எதிரான தீர்ப்பு வந்தால், சுப்ரீம் கோர்ட்டை அணுகுவோம். 18 தொகுதிகளிலும் தேர்தல் நடத்தினால் நாங்கள் போட்டியிட்டு வெற்றி பெறுவோம். நாடாளுமன்ற தேர்தலுடன், இந்த 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தினால் கூட அ.ம.மு.க. வெற்றி பெறும்.

    நாமக்கல்லில் சத்துணவு திட்ட முட்டை முறைகேட்டில் 2 மந்திரிகளுக்கு அல்ல, பல மந்திரிகளுக்கு தொடர்பு இருக்கிறது.

    இந்த ஆட்சியை எப்போது அகற்றுவீர்கள் என்று மக்கள் கேட்கிறார்கள். இந்த ஆட்சி அடுத்த ஆண்டு மே மாதம் வரை தான் நீடிக்கும். தமிழகத்தில் இந்த ஆட்சி தொடருவதற்கு மத்திய அரசு தான் தாங்கி பிடித்து உள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றது போல், 234 தொகுதிகளிலும் கூட்டணி இருந்தாலும், இல்லாவிட்டாலும் அ.ம.மு.க. அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்று மக்கள் விரும்பும் ஆட்சியை கொடுப்போம்.

    பதவியில் ஒட்டிக்கொண்டு இருப்பதற்காக துரோகம் செய்தவர் ஆட்சி நடத்துவற்கு, ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தினால் கூட அதை பெருமையாக தான் கருதுவார். தமிழகத்தில் உள்ள 70 சதவீத இளைஞர்கள், பெண்கள் எங்களுக்கு ஆதரவாக உள்ளனர்.

    இவ்வாறு டி.டி.வி. தினகரன் கூறினார். #TTVDhinakaran  #Eggnutritioncorruption
    சத்துணவு முட்டை விநியோகம் செய்யும் கிறிஸ்டி புட்ஸ் நிறுவன கிளைகளில் வருமான வரித்துறையினர் நடத்தி வரும் சோதனையில் இதுவரை 10 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
    சென்னை:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் கிறிஸ்டி புட்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், பள்ளிகள், அங்கன்வாடிகளுக்கு தேவையான முட்டைகளை ஒப்பந்த அடிப்படையிலும், சத்து மாவு, பருப்பு வகைகள் போன்றவற்தை தயாரித்தும் மொத்தமாக வழங்கி வருகிறது.

    இந்த நிறுவனம் கிளை நிறுவனங்களிடம் உணவு பொருட்கள் வாங்கியதாக பல கிளை நிறுவனங்களை போலியாக உருவாக்கி அதன் மூலம் பல கோடி ரூபாய் கணக்கு காட்டி மத்திய அரசுக்கு வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்ததது.

    இது தொடர்பாக வருமான வரித்துறையினர் பல்வேறு கட்ட விசாரணை மற்றும் ஆவணங்களை சரிபார்த்த பிறகு, கடந்த 5-ந் தேதி அதிகாலை முதல் கிறிஸ்டி புட்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான நிறுவனங்கள் உள்பட நாடு முழுவதும் 72 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் இறங்கினர்.

    அப்போது போலி நிறுவனங்களுக்கான ஆவணங்களும், அதற்காக யார், யாருக்கு பணம் கொடுக்கப்பட்டது என்பது தொடர்பான ஆவணங்களும் வருமான வரித்துறையினரிடம் சிக்கியதாக கூறப்படுகிறது. மூன்றாவது நாளாக இன்றும் சோதனை நீடிக்கிறது.

    இந்தி சோதனையின்போது இதுவரை 10 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டதால், வருமான வரித்துறையின் பிடி இறுகி உள்ளது. #Eggnutritioncorruption
    சத்துணவு முட்டை கொள்முதலில் முறைகேடு தொடர்பான வருமான வரித்துறையினரின் விசாரணையில் சத்துமாவு நிறுவன ஊழியர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #Eggnutritioncorruption
    சேலம்:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் கிறிஸ்டி புட்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது.

    தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், பள்ளிகள், அங்கன்வாடிகளுக்கு தேவையான முட்டைகளை ஒப்பந்த அடிப்படையிலும், சத்து மாவு, பருப்பு வகைகள் போன்றவற்தை தயாரித்தும் மொத்தமாக வழங்கி வருகிறது.

    563 அங்கன் வாடிகள் மூலம் 21 லட்சம் குழந்தைகள், 3 லட்சம் வளரிளம் பெண்கள், 6 லட்சம் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த திட்டம் மூலம் பயன் பெற்று வருகிறார்கள்.

    இந்த நிறுவனத்திற்கு சொந்தமாக தமிழகம், கர்நாடகா, மும்பை, டெல்லி என நாடு முழுவதம் 76 இடங்களில் கிளைகள் உள்ளன. மேலும் உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்பட 7 மாநிலங்களுக்கு இந்த நிறுவனம் அரசுக்கு சத்துமாவு சப்ளை செய்து வருகிறது.

    இந்த நிறுவனம் கிளை நிறுவனங்களிடம் உணவு பொருட்கள் வாங்கியதாக பல கிளை நிறுவனங்களை போலியாக உருவாக்கி அதன் மூலம் பல கோடி ரூபாய் கணக்கு காட்டி மத்திய அரசுக்கு வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்ததது.

    சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் சத்துணவு முட்டை வழங்கும் ஒப்பந்தத்தை பெற்ற போது பண்ணை இல்லாத நிலையில் அதன் கூட்டமைப்பில் இல்லாத இந்த நிறுவனத்திற்கு எப்படி ஒப்பந்தம் கிடைத்தது என்பது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டது.

    நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு பருப்பு வினியோக ஒப்பந்தத்தில் கிறிஸ்டி மற்றும் அதன் கிளை நிறுவனங்கள் மட்டுமே போட்டியிட்டன. அப்போது சந்தை விலையை விட அதிகமாக பருப்பு வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. டெண்டரில் ஏற்பட்ட முறைகேடு தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    அப்போது கிறிஸ்டிக்கு டெண்டரை விட வேண்டும் என்ற நோக்கத்தில் அதிகாரிகள் துணையுடன் சில விதிமீறல்களும் நடந்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகு பல்வேறு நிறுவனங்களை தொடங்கி சத்துணவுக்கு பருப்பு, சத்துமாவு, முட்டை வினியோகம் செய்து வருகிறது.

    இந்த நிறுவனம் தினமும் 1300 மெட்ரிக் டன் சத்துமாவு தயாரித்து செய்து வருகிறது. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஒப்பந்தத்தை எளிதாக பெற்று வந்தனர். பண மதிப்பிழப்பிற்கு பிறகு திருச்செங்கோட்டில் ஒரு வங்கியில் கோடிக்கணக்கான பழைய 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முயன்றதாக புகார் எழுந்தது.

    முன்னாள் மத்திய மந்திரி சிதம்பரத்தின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய போது கிறிஸ்டி புட்ஸ் நிறுவனம் ஏற்கனவே சிதம்பரம் குடும்பத்திடம் இருந்து ரூ.46 கோடிக்கு சொத்து வாங்கியது தொடர்பாக சில ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

    இந்த ஆவணங்கள் குறித்து விளக்கம் அளிக்கும் படி கிறிஸ்டி புட்ஸ் நிறுவனத்திற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்தினர். விசாரணையில் சரியாக பதில் அளிக்காததால் சிதம்பரம் குடும்பத்தினரிடம் இருந்து நிலம் வாங்கிய அக்னி பில்டர்ஸ் மற்றும் அவர்களிடம் இருந்து நிலத்தை வாங்கிய கிறிஸ்டி புட்ஸ் நிறுவனங்கள் குறித்து வருமான வரித்துறையினர் விசாரணையில் இறங்கினர்.

    அப்போது கிறிஸ்டி புட்ஸ் உரிமையாளர் குமாரசாமி தினமும் பல மணி நேரம் ஐ.ஏ.எஸ். அதிகாரி சுதா தேவியிடம் பேசி வந்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து கடந்த 5-ந் தேதி அதிகாலை முதல் கிறிஸ்டி புட்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான நிறுவனங்கள் உள்பட நாடு முழுவதும் 72 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் இறங்கினர்.

    அப்போது போலி நிறுவனங்களுக்கான ஆவணங்களும், அதற்காக யார், யாருக்கு பணம் கொடுக்கப்பட்டது என்பது தொடர்பான ஆவணங்களும் வருமான வரித்துறையினரிடம் சிக்கியதாக கூறப்படுகிறது.

    மேலும் சத்துமாவு மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகத்தின் மேலாண்மை இயக்குனரும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான சுதாதேவியின் சென்னை நெற்குன்றத்தில் உள்ள வீடு, அலுவலகம் மற்றும் அதிகாரிகள் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

    இந்த சோதனையில் சத்து மாவு மற்றும் முட்டை கொள்முதல் செய்ய சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு ஒப்பந்தம் விட பல கோடி ரூபாய் சட்டத்திற்கு புறம்பாக வங்கி கணக்குகளில் பரிமாற்றம் செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் சிக்கியுள்ளன.

    திருச்செங்கோடு ஆண்டிப்பாளையத்தில் சோதனை நடந்து வரும் சத்துமாவு நிறுவனத்தை படத்தில் காணலாம்.

    நாடு முழுவதும் நடந்த சோதனையில் மொத்தம் ரூ.7 கோடி ரொக்கப்பணம், பல லட்சம் அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பல கோடி ரூபாய் வெளி நாடுகளில் முதலீடு செய்ததற்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.

    இதற்கிடையே நிறுவனத்தின் உரிமையாளர் குமாரசாமியிடம் ரகசிய இடத்தில் வைத்து 2-வது நாளாக வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெங்களூர் மற்றும் சென்னை அழைத்துச் சென்று அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

    அடுத்தக்கட்டமாக இன்று குமாரசாமியை திருச்செங்கோடுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களை காண்பித்து அவரிடம் விசாரணை நடைபெற உள்ளது. இதில் முக்கிய தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

    இதற்கிடையே வரி ஏய்ப்புக்காக தொழில் அதிபர் குமாரசாமி கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் அதில் உண்மை இல்லை என்று வருமான வரித்துறை அதிகாரிகள் மறுத்தனர்.

    பணப் பரிமாற்றம் செய்யப்பட்டதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி, அதில் குற்றச்சாட்டுகள் உறுதியானால்தான் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது. தற்போது குமாரசாமி விசாரணை வளையத்துக்குள் மட்டுமே உள்ளார்.

    இதற்கிடையே கிறிஸ்டி புட்ஸ் நிறுவனத்தின் மேனேஜர் வீட்டின் கழிவறையில் இருந்து ஒரு சாவி கைப்பற்றப்பட்டது. அந்த சாவி மூலம் அங்குள்ள ஒரு வீட்டை திறந்து பார்த்த போது ஏராளமான இரும்பு பெட்டியில் ஆவணங்கள் இருந்துள்ளது. அந்த ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.

    திருச்செங்கோடு ஆண்டி பாளையத்தில் உள்ள கிறிஸ்டி பிரைடு கிராம் நிறுவனத்தின் காசாளரான கார்த்திக்கேயன் என்பவரை வருமான வரித்துறையினர் பிடித்து நிறுவனத்தின் பின்புறம் உள்ள ஒரு வீட்டில் விசாரணை நடத்தினர். அப்போது விசாரணைக்கு ஒத்துழைக்காத அவர் திடீரென தனக்கு மயக்கம் வருவதாகவும், தண்ணீர் குடித்து விட்டு வருவதாக கூறி சென்றார்.

    பின்னர் வீட்டின் முதல் மாடிக்கு வேகமாக சென்ற அவர் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுடன் அங்கிருந்து கீழே குதித்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வருமான வரித்துறையினர் அங்குள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    அவருக்கு முதுகு தண்டு வடத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து வருமான வரித்துறையினர் திருச்செங்கோடு புறநகர் போலீசில் கார்த்திக்கேயன் மீது புகார் கொடுத்தனர். அதில் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் தற்கொலைக்கு முயன்றதாக புகார் கூறி உள்ளனர்.

    இதையடுத்து கார்த்திக்கேயன் மீது தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீஸ் விசாரணையில் இருந்து தப்பிக்க அவர் தற்கொலை நாடகம் ஆடியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    3-வது நாளாக இன்றும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்டி புட்ஸ் மற்றும் அதன் தொடர்பு நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகிறார்கள். இதையொட்டி அந்த பகுதியில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  #Eggnutritioncorruption 
    ×