search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிறிஸ்டி நிறுவனம் லஞ்சம் கொடுத்த விவகாரம்- விஐபிக்களிடம் விசாரணை நடத்த வருமானவரித்துறை முடிவு
    X

    கிறிஸ்டி நிறுவனம் லஞ்சம் கொடுத்த விவகாரம்- விஐபிக்களிடம் விசாரணை நடத்த வருமானவரித்துறை முடிவு

    நாமக்கல் கிறிஸ்டி நிறுவனம் லஞ்சம் கொடுத்த விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சி பிரமுகர்கள், உயர் அதிகாரிகளிடம் விசாரணை நடத்த வருமானவரித்துறை முடிவு செய்துள்ளது. #Eggnutritioncorruption #ITRaid #ChristyFriedgramIndustry
    சேலம்:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஆண்டிபாளையத்தில் கிறிஸ்டி பிரைடு நிறுவனம் இயங்கி வருகிறது.

    இந்த நிறுவனம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் சத்துணவு திட்டங்களுக்கு முட்டை, சத்துமாவு, பருப்பு உள்பட பல்வேறு பொருட்களை ஒப்பந்த அடிப்படையிலும், ரேசன் கடைகளுக்கு பருப்பும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வினியோகம் செய்து வருகிறது.

    இந்தநிலையில் கடந்த ஜூலை மாதம் கிறிஸ்டி நிறுவனம் மீது வரி ஏய்ப்பு மற்றும் முட்டை வினியோகத்தில் முறைகேடு செய்வதாக புகார்கள் எழுந்தது. போலி நிறுவனங்கள் தொடங்கி பல ஆயிரம் கோடி பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்ததாகவும் கூறப்பட்டது.

    இதையடுத்து ஜூலை மாதம் 5-ந் தேதி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி உள்பட நாடு முழுவதும் உள்ள அந்த நிறுவனத்திற்கு சொந்தமான குடோன்கள் உள்பட 72 இடங்களில் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

    திருச்செங்கோடு வட்டூரில் உள்ள கிறிஸ்டி புட்ஸ் நிறுவன உரிமையாளர் பி.எஸ்.குமாராசாமி வீடு, ஆடிட்டர்கள் ராமச்சந்திரன், சங்கர், ஆகியோர் வீடுகளிலும் 7 நாட்களுக்கும் மேலாக சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் ஏராளமான முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

    அப்போதைய தமிழ்நாடு நுகர்பொருள் வணிப கழக மேலாண்மை இயக்குனர் சுதாதேவி வீட்டில் நடந்த சோதனையில் அவர் பதவிக்கு வந்த பிறகு பல மடங்கு சொத்து அதிகரித்தற்கான ஆவணங்கள் மற்றும் கிலோ கணக்கில் தங்கம் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்பட்டது. ஐ.ஏ.எஸ். அதிகாரி சுதாதேவி நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடதக்கது.

    மேலும் ஆண்டிபாளையம் எஸ்.பி.எஸ்.நகர் குடியிருப்பில் வைத்து கிறிஸ்டி நிறுவன கணக்காளர் கார்த்திக்கேயனிடம் விசாரித்த போது அவர் மாடியில் இருந்து குதித்த தற்கொலைக்கு முயன்றார். அவர் அளித்த தகவல் படி திருச்செங்கோடு தேக்கவாடியில் உள்ள கார்த்திக்கேயன் வீட்டில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பென் டிரைவ்கள் கைப்பற்றப்பட்டன.

    இதைத்தொடர்ந்து நிறுவன உரிமையாளர் பி.எஸ்.குமாரசாமி மற்றும் அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடமும் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது.


    மேலும் கைப்பற்றப்பட்ட பென்டிரைவ்களில் சத்துணவு திட்டம், சத்து மாவு வினியோகம், முட்டை டெண்டர் விவகாரத்தில் பல கோடிகளை லஞ்சமாக பெற்ற அரசியல் கட்சி பிரமுகர்கள், உயர் அதிகாரிகள் பட்டியல் இடம் பெற்றிருந்ததாக அப்போது கூறப்பட்டது.

    இந்தநிலையில் வருமான வரித்துறையினரிடம் சிக்கிய ஆவணங்கள் மற்றும் பென் டிரைவ்களை தொடர்ந்து வருமான வரித்துறையினர் ஆய்வு செய்து வந்தனர். அப்போது சத்துணவு திட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக உயர் பதவிகளில் இருந்தவர்கள் மற்றும் அரசியல் முக்கிய பிரமுகர்களுக்கு ரூ.2400 கோடி பணத்தை லஞ்சமாக கொடுத்தது தொடர்பான பட்டியல் அதில் இருந்தது.

    வங்கிகளின் மூலமாகவும், ஆன்லைன் மூலமும் சிலருக்கு பணம் அனுப்பியதற்கான ஆவணங்களும் இதில் சிக்கியுள்ளது. குறிப்பாக முக்கிய அரசியல் வாதிகள் மற்றும் அதிகாரிகளின் டிரைவர்கள், வீட்டில் வேலை செய்பவர்கள் பெயரில் இந்த லஞ்சப்பணம் கைமாறி உள்ளதையும் வருமான வரித்துறையினர் கண்டு பிடித்துள்ளனர்.

    அரசியல் சத்துணவு திட்டத்திற்கு மத்திய அரசின் நிதி உதவியும் உள்ளது. இதனால் மத்திய அரசு அதிகாரிகளுக்கு எவ்வளவு லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பான ஆதாரங்களும் சிக்கியுள்ளது. இதனால் சத்துணவு திட்டத்தில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடநத்திருப்பதை பார்த்த வருமான வரித்துறை அதிகாரிகள் திகைத்துள்ளனர்.

    தற்போது லஞ்சப் பட்டியலில் தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்களுக்கும் வருமான வரித்துறை சார்பில் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் விரைவில் வருமான வரித்துறையினர் முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளனர். மேலும் தமிழக அரசிடமும் விளக்கம் கேட்க வருமான வரித்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

    ஏற்கனவே தமிழகத்தில் குட்கா விற்பனை செய்ய ரூ.40 கோடி பணத்தை உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்கள் லஞ்சம் பெற்றது தொடர்பான பட்டியல் சிக்கியதால் அந்த வழக்கு தற்போது சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

    தற்போது சத்துணவு திட்டத்திலும் முறைகேடு மற்றும் லஞ்சப்பட்டியல் சிக்கியுள்ளதால் இந்த வழக்கும் விரைவில் சி.பி.ஐ.க்கு மாற்றப்படும் என கூறப்படுகிறது. இதனால் இதில் தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்கள் பீதி அடைந்துள்ளனர். #Eggnutritioncorruption #ITRaid #ChristyFriedgramIndustry
    Next Story
    ×