search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Christy foods"

    சத்துணவு முட்டை ஊழல் தொடர்பாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில் கைப்பற்றப்பட்டுள்ள 100 பென்டிரைவ்களில் பல்வேறு முக்கிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. #Eggnutritioncorruption
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஆண்டிபாளையத்தில் கிறிஸ்டி புட்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது.

    இந்த நிறுவனம் தமிழக முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், அங்கன்வாடி மையங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் சத்துணவு முட்டை, சத்துமாவு, பருப்பு வினியோகம் செய்து வருகிறது.

    இந்நிறுவனம் போலி பெயரில் நிறுவனங்களை தொடங்கி வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறைக்கு புகார்கள் சென்றது. இதையடுத்து கடந்த 5-ந் தேதி அதிகாலை முதல் ஆண்டி பாளையத்தில் உள்ள அந்த நிறுவனம், வட்டூரில் உள்ள அதன் உரிமையாளர் குமாரசாமி வீடு, நாமக்கல், ராசிபுரம் பகுதிகளில் உள்ள நிறுவனத்திற்கு சொந்தமான ராசிநியுட்ரிபுட் என்ற பெயரில் இயங்கும் நிறுவனம், குடோன்கள், உறவினர்கள, நண்பர்கள் வீடுகள் உள்பட 78 இடங்களில் ஒரே நாளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    4-வது நாளாக நேற்று திருச்செங்கோடு ஆண்டி பாளையத்தில் உள்ள தலைமை அலுவலகம், சென்னை, மும்பை, பெங்களூரு உள்பட பல்வேறு இடங்களில் சோதனை நடந்தது. இந்த சோதனையில் கிறிஸ்டி நிறுவனத்தில் கைப்பற்றப்பட்ட சொத்து ஆவணங்கள் குறித்து வருமான வரித்துறையினர் கணக்கெடுத்து வருகிறார்கள்.

    ஒவ்வொரு மாதமும் நிறுவனத்தின் வரவு செலவு புத்தகங்கள், வங்கி இருப்பு குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. கடந்த 4 நாட்களாக நடந்த தொடர் சோதனையில் கிறிஸ்டி நிறுவனம் மற்றும் அதன் கிளை நிறுவனங்களில் இருந்து 17 கோடி ரொக்கப்பணம், 10 கிலோ தங்கம் மற்றும் வெளிநாடுகளில் பல ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் சிக்கியுள்ளது.

    இதற்கிடையே வருமான வரித்துறையினரின் விசாரணையில் இருந்து தப்பிக்க கிறிஸ்டி நிறுவனத்தின் கேஷியர் கார்த்திக்கேயன் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் படுகாயம் அடைந்த அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.


    முதுகு தண்டில் பலத்த காயம் ஏற்பட்டதால் நேற்று அவரை உறவினர்கள் கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவருக்கு சுய நினைவு திரும்பியுள்ளதால் அவரிடம் விசாரிக்க வருமான வரித்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

    திருச்செங்கோடு அருகே தோக்கவாடியில் உள்ள கணக்காளர் கார்த்திக்கேயன் வீட்டில் நேற்று அங்குலம், அங்குலமாக பல மணி நேரம் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள ஒரு கிணற்றில் ஆட்களை இறக்கி சோதனை செய்த போது 100-க்கும் மேற்பட்ட பென் டிரைவ்கள் அதிகாரிகளிடம் சிக்கியதாக கூறப்படுகிறது.

    இந்த பென் டிரைவ்களில் கிறிஸ்டி நிறுவனத்தின் வெளிநாடு மற்றும் உள் நாட்டு முதலீடுகள், தொழில் விவரங்கள், குமாரசாமியின் வங்கி கணக்குகள் உள்பட பல்வேறு முக்கிய தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனை பார்த்து அதிகாரிகளே திகைத்துள்ளனர்.

    குமாரசாமியின் நம்பிக்கைக்கு உரியவரான கேஷியர் கார்த்திக்கேயன் போலி நிறுவனங்கள் தொடங்கியதற்கான ஆவணங்கள் உள்பட பல்வேறு முக்கிய ஆவணங்கள் மற்றும் குமாரசாமியின் வங்கி கணக்குகளை பராமரித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதனை மோப்பம் பிடித்த வருமான வரித்துறை அதிகாரிகள் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது குமாரசாமியை காப்பாற்றும் வகையில் ரகசியங்கள் அடங்கிய பென்டிரைவ்களை வீட்டு கிணற்றில் வீசி விட்டு கார்த்திக்கேயன் தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது.

    மத்திய பிரதேசத்தில் பிடிக்கப்படட்ட குமாரசாமியை பெங்களூரு அழைத்து சென்று முதலில் விசாரணை நடத்தினர். நேற்று அவரை திருச்செங்கோட்டுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது பல்வேறு கிடுக்கிப்பிடி கேள்விளை அதிகாரிகள் கேட்டதாகவும், அதற்கு அவர் பதில் சொல்ல முடியாமல் திணறியதகாவும் கூறப்படுகிறது.

    இன்று குமாரசாமியை திருப்பூர், பொள்ளாச்சி, கோவை உள்பட பல்வேறு பகுதிகளுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்த உள்ளனர். இதே போல வரி ஏய்ப்புக்கு துணை போனதாக கூறி ஐ.ஏ.எஸ். அதிகாரியான சுதா தேவியிடம் இருந்து கைப்பற்றிய ஆவணங்களின் அடிப்படையில் அவரிடமும் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

    நிறுவனத்தின் கணக்கு வழக்கு மற்றும் அனைத்து தகவல்களையும் பென் டிரைவ் எக்ஸ்டர்னர் ஹார்டு டிஸ்க் மூலம் பரிவர்த்தனையை மேற்கொண்டுள்ளனர். அவற்றை மேலாளர், கணக்காளர், அக்கவுண்டன்ட் ஆகியோர் தங்களது பொறுப்பில் வைத்திருந்தனர்.


    திருச்செங்கோடு ஆண்டி பாளையத்தில் உள்ள கிறிஸ்டி நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் 5-வது நாளாக இன்று அங்குலம், அங்குலமாக சோதனை நடத்தி வருகிறார்கள். இதையொட்டி கூடுதல் போலீசார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டுள்ளதால் தொடர்ந்து அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.

    தற்போதைய சோதனையில் 100-க்கும் மேற்பட்ட பென் டிரைவ் கைப்பற்றப்பட்டுள்ளதால் அவற்றில் உள்ள பரிவர்த்தனைகள், ரகசிய ஆவணங்கள், வரவு செலவுகள் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்கள்.

    அந்த ஆய்வு முடிவில் கிறிஸ்டி நிறுவனம் எவ்வளவு வரி ஏய்ப்பு செய்துள்ளது, ரொக்கப்பணம் எங்கு பதுக்கி வைத்துள்ளனர் என்பது குறித்த முழு விவரங்கள் தெரிய வரும் என்பதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

    வருகிற 11-ந் தேதி தமிழக அரசுக்கு சத்துணவு முட்டை வினியோகத்திற்கு மாநில அளவிலான டெண்டர் நடக்கிறது. அதில் இந்நிறுவனம் பங்கேற்குமா? என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.

    கிறிஸ்டி நிறுவனத்திற்கு சொந்தமாக கோழிப்பண்ணைகள் இல்லாததால் தினமும் 50 லட்சம் முட்டைகளை நாமக்கல் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 400 பண்ணையாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்து சத்துணவு திட்டத்திற்கு வினியோகம் செய்து வருகிறது.

    முட்டைகள் வழங்கும் கோழிப்பண்ணைகளுக்கு அந்த நிறுவனம் சார்பில் ஒவ்வொரு வாரமும் வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்குக்கு பணம் அனுப்பப்படும்.

    வருமான வரித்துறை சோதனை 5-வது நாளாக இன்றும் நீடிப்பதால் நிறுவன வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இதனால் பண்ணையாளர்களுக்கு பணம் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வினியோகம் செய்த முட்டைக்கு உரிய பணம் கணக்கில் வரவு வைக்காததால் பண்ணையாளர்கள் பணம் கிடைக்குமா? என்ற தவிப்பில் உள்ளனர். #Eggnutritioncorruption  #ITRaid
    அரசு பள்ளிகளுக்கு முட்டை விநியோகம் செய்ததில் முறைகேடு என புகார் எழுந்துள்ளதால், முட்டை சப்ளை செய்யும் கிறிஸ்டி நிறுவனத்தில் நான்காவது நாளாக வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. #ITRaid
    திருச்செங்கோடு:

    திருச்செங்கோட்டை அடுத்த வட்டூரை சேர்ந்தவர் குமாரசாமி. இவர் ஆண்டிப் பாளையத்தில் கிறிஸ்டி கிரைடு கிராம் இண்டஸ்ட்ரி என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

    இந்த நிறுவனம் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி, அங்கன்வாடி மையங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் சத்துணவு முட்டை, சத்து மாவு, ரேசன் கடைகளுக்கு பருப்பு ஆகியவற்றை வினியோகம் செய்து வருகிறது.

    இந்த நிறுவனம் போலி கம்பெனிகள் மூலம் பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டு வரிஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறைக்கு ஏராளமான புகார்கள் குவிந்தன.

    இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 5-ந் தேதி முதல் திருச்செங்கோட்டில் உள்ள கிறிஸ்டி நிறுவனத்தில் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தி வருகிறார்கள்.

    வட்டூரில் உள்ள குமாரசாமி வீடு, அவரது உறவினர் வீடுகள், மற்றும் ஆடிட்டர்கள் ராமச்சந்திரன், சங்கர் ஆகியோரது வீடுகள் உள்பட நாமக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள கிறிஸ்டி நிறுவனத்திற்கு சொந்தமான கிடங்குகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் தனித்தனி குழுக்களாக பிரிந்து தீவிர சோதனை நடத்தினார்கள்.

    இந்த சோதனை சென்னை, நாமக்கல், திருச்செங்கோடு, கர்நாடகம், கேரளா, ஆந்திரா, டெல்லி என மொத்தம் 76 இடங்களில் ஒரே நேரத்தில் நடைபெற்றது.

    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் பருப்பு, சத்து மாவு ஆகியவை சப்ளை செய்யப்படுகிறது. இக்கழகத்தின் மேலாண்மை இயக்குனராக உள்ள ஐ.ஏ.எஸ். பெண் அதிகாரி சுதாதேவி, குமாரசாமியின் உறவினர் ஆவார்.

    இவரது சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம் ஆண்டிப்பாளையம் அருகே உள்ள கொல்லம்பட்டி ஆகும். இவர் பருப்பு, சத்து மாவு சப்ளை செய்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்,

    இதையடுத்து சென்னையில் உள்ள அவரது வீட்டிலும் வருமான வரி துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். 38 மணி நேரம் நடந்த இந்த சோதனையின் போது பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

    நேற்று 3-வது நாளாக குமாரசாமி வீடு, நிறுவனம் உள்பட 20 இடங்களில் சோதனை நடந்தது. இன்று 4-வது நாளாக கிறிஸ்டி நிறுவனத்தில் சோதனை நடந்து வருகிறது.

    இந்த சோதனையின்போது பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ஏற்கனவே முதல் நாள் நடந்த சோதனையில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று 3-வது நாளாக நடந்த சோதனையில் பலகோடி ரூபாய் கணக்கில் வராத பணமும், தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மொத்தம் 17 கோடி ரொக்கப்பணமும், 10 கிலோ தங்க நகைகளும் சிக்கியதாக கூறப்படுகிறது. இதில் வெளிநாட்டு பணங்களும் அடங்கும். மேலும் ஏராளமான சொத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    சத்துணவு திட்டத்திற்காக 2017-2018-ம் ஆண்டு 95 கோடி முட்டை சப்ளை செய்வதற்காக கிறிஸ்டி நிறுவனம் ஒரு முட்டை 434 காசு வீதம் 412 கோடி ரூபாய்க்கு டெண்டர் எடுத்துள்ளது. இதில் சில முக்கிய பிரமுகர்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதற்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த ஆவணங்களை மதிப்பீடு செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் இந்த பணி முழுவதும் முடிவடைந்த பின்னர் தான் வரி ஏய்ப்பு, போலி நிறுவனங்கள் மூலம் நடந்த பண பரிமாற்றம் ஆகியவை பற்றிய முழு விவரம் தெரியவரும் என வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கிறிஸ்டி நிறுவன அதிபர் குமாரசாமியிடம் வருமான வரித்துறையினர் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் சிலரிடம் விசாரணை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்காக அடுத்த வாரம் அவர்களை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்ப திட்டமிட்டுள்ளனர்.

    இதனால் கிறிஸ்டி நிறுவனத்துடன் தொடர்புடைய பிரமுகர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

    குமாரசாமி பல வங்கிகளில் ஏராளமான லாக்கர்களை பயன்படுத்தி வருகிறார். இந்த லாக்கர்களை திறந்து ஆய்வு செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதில் பல முக்கிய ஆவணங்கள் கிடைக்கலாம் என்று தெரிகிறது.

    வருமானவரித்துறையினர் நடத்திய சோதனையின் அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக தமிழக அரசிடம் மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதுவரை இல்லாத அளவிற்கு தொடர்ந்து 4 நாட்களாக நடைபெற்று வரும் சோதனை திருச்செங்கோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Eggnutritioncorruption
    சத்துணவு முட்டை கொள்முதலில் முறைகேடு தொடர்பான வருமான வரித்துறையினரின் விசாரணையில் சத்துமாவு நிறுவன ஊழியர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #Eggnutritioncorruption
    சேலம்:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் கிறிஸ்டி புட்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது.

    தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், பள்ளிகள், அங்கன்வாடிகளுக்கு தேவையான முட்டைகளை ஒப்பந்த அடிப்படையிலும், சத்து மாவு, பருப்பு வகைகள் போன்றவற்தை தயாரித்தும் மொத்தமாக வழங்கி வருகிறது.

    563 அங்கன் வாடிகள் மூலம் 21 லட்சம் குழந்தைகள், 3 லட்சம் வளரிளம் பெண்கள், 6 லட்சம் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த திட்டம் மூலம் பயன் பெற்று வருகிறார்கள்.

    இந்த நிறுவனத்திற்கு சொந்தமாக தமிழகம், கர்நாடகா, மும்பை, டெல்லி என நாடு முழுவதம் 76 இடங்களில் கிளைகள் உள்ளன. மேலும் உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்பட 7 மாநிலங்களுக்கு இந்த நிறுவனம் அரசுக்கு சத்துமாவு சப்ளை செய்து வருகிறது.

    இந்த நிறுவனம் கிளை நிறுவனங்களிடம் உணவு பொருட்கள் வாங்கியதாக பல கிளை நிறுவனங்களை போலியாக உருவாக்கி அதன் மூலம் பல கோடி ரூபாய் கணக்கு காட்டி மத்திய அரசுக்கு வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்ததது.

    சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் சத்துணவு முட்டை வழங்கும் ஒப்பந்தத்தை பெற்ற போது பண்ணை இல்லாத நிலையில் அதன் கூட்டமைப்பில் இல்லாத இந்த நிறுவனத்திற்கு எப்படி ஒப்பந்தம் கிடைத்தது என்பது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டது.

    நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு பருப்பு வினியோக ஒப்பந்தத்தில் கிறிஸ்டி மற்றும் அதன் கிளை நிறுவனங்கள் மட்டுமே போட்டியிட்டன. அப்போது சந்தை விலையை விட அதிகமாக பருப்பு வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. டெண்டரில் ஏற்பட்ட முறைகேடு தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    அப்போது கிறிஸ்டிக்கு டெண்டரை விட வேண்டும் என்ற நோக்கத்தில் அதிகாரிகள் துணையுடன் சில விதிமீறல்களும் நடந்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகு பல்வேறு நிறுவனங்களை தொடங்கி சத்துணவுக்கு பருப்பு, சத்துமாவு, முட்டை வினியோகம் செய்து வருகிறது.

    இந்த நிறுவனம் தினமும் 1300 மெட்ரிக் டன் சத்துமாவு தயாரித்து செய்து வருகிறது. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஒப்பந்தத்தை எளிதாக பெற்று வந்தனர். பண மதிப்பிழப்பிற்கு பிறகு திருச்செங்கோட்டில் ஒரு வங்கியில் கோடிக்கணக்கான பழைய 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முயன்றதாக புகார் எழுந்தது.

    முன்னாள் மத்திய மந்திரி சிதம்பரத்தின் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய போது கிறிஸ்டி புட்ஸ் நிறுவனம் ஏற்கனவே சிதம்பரம் குடும்பத்திடம் இருந்து ரூ.46 கோடிக்கு சொத்து வாங்கியது தொடர்பாக சில ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

    இந்த ஆவணங்கள் குறித்து விளக்கம் அளிக்கும் படி கிறிஸ்டி புட்ஸ் நிறுவனத்திற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்தினர். விசாரணையில் சரியாக பதில் அளிக்காததால் சிதம்பரம் குடும்பத்தினரிடம் இருந்து நிலம் வாங்கிய அக்னி பில்டர்ஸ் மற்றும் அவர்களிடம் இருந்து நிலத்தை வாங்கிய கிறிஸ்டி புட்ஸ் நிறுவனங்கள் குறித்து வருமான வரித்துறையினர் விசாரணையில் இறங்கினர்.

    அப்போது கிறிஸ்டி புட்ஸ் உரிமையாளர் குமாரசாமி தினமும் பல மணி நேரம் ஐ.ஏ.எஸ். அதிகாரி சுதா தேவியிடம் பேசி வந்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து கடந்த 5-ந் தேதி அதிகாலை முதல் கிறிஸ்டி புட்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான நிறுவனங்கள் உள்பட நாடு முழுவதும் 72 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் இறங்கினர்.

    அப்போது போலி நிறுவனங்களுக்கான ஆவணங்களும், அதற்காக யார், யாருக்கு பணம் கொடுக்கப்பட்டது என்பது தொடர்பான ஆவணங்களும் வருமான வரித்துறையினரிடம் சிக்கியதாக கூறப்படுகிறது.

    மேலும் சத்துமாவு மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகத்தின் மேலாண்மை இயக்குனரும், ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான சுதாதேவியின் சென்னை நெற்குன்றத்தில் உள்ள வீடு, அலுவலகம் மற்றும் அதிகாரிகள் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

    இந்த சோதனையில் சத்து மாவு மற்றும் முட்டை கொள்முதல் செய்ய சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு ஒப்பந்தம் விட பல கோடி ரூபாய் சட்டத்திற்கு புறம்பாக வங்கி கணக்குகளில் பரிமாற்றம் செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் சிக்கியுள்ளன.

    திருச்செங்கோடு ஆண்டிப்பாளையத்தில் சோதனை நடந்து வரும் சத்துமாவு நிறுவனத்தை படத்தில் காணலாம்.

    நாடு முழுவதும் நடந்த சோதனையில் மொத்தம் ரூ.7 கோடி ரொக்கப்பணம், பல லட்சம் அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பல கோடி ரூபாய் வெளி நாடுகளில் முதலீடு செய்ததற்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.

    இதற்கிடையே நிறுவனத்தின் உரிமையாளர் குமாரசாமியிடம் ரகசிய இடத்தில் வைத்து 2-வது நாளாக வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெங்களூர் மற்றும் சென்னை அழைத்துச் சென்று அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

    அடுத்தக்கட்டமாக இன்று குமாரசாமியை திருச்செங்கோடுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களை காண்பித்து அவரிடம் விசாரணை நடைபெற உள்ளது. இதில் முக்கிய தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

    இதற்கிடையே வரி ஏய்ப்புக்காக தொழில் அதிபர் குமாரசாமி கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் அதில் உண்மை இல்லை என்று வருமான வரித்துறை அதிகாரிகள் மறுத்தனர்.

    பணப் பரிமாற்றம் செய்யப்பட்டதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி, அதில் குற்றச்சாட்டுகள் உறுதியானால்தான் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது. தற்போது குமாரசாமி விசாரணை வளையத்துக்குள் மட்டுமே உள்ளார்.

    இதற்கிடையே கிறிஸ்டி புட்ஸ் நிறுவனத்தின் மேனேஜர் வீட்டின் கழிவறையில் இருந்து ஒரு சாவி கைப்பற்றப்பட்டது. அந்த சாவி மூலம் அங்குள்ள ஒரு வீட்டை திறந்து பார்த்த போது ஏராளமான இரும்பு பெட்டியில் ஆவணங்கள் இருந்துள்ளது. அந்த ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர்.

    திருச்செங்கோடு ஆண்டி பாளையத்தில் உள்ள கிறிஸ்டி பிரைடு கிராம் நிறுவனத்தின் காசாளரான கார்த்திக்கேயன் என்பவரை வருமான வரித்துறையினர் பிடித்து நிறுவனத்தின் பின்புறம் உள்ள ஒரு வீட்டில் விசாரணை நடத்தினர். அப்போது விசாரணைக்கு ஒத்துழைக்காத அவர் திடீரென தனக்கு மயக்கம் வருவதாகவும், தண்ணீர் குடித்து விட்டு வருவதாக கூறி சென்றார்.

    பின்னர் வீட்டின் முதல் மாடிக்கு வேகமாக சென்ற அவர் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுடன் அங்கிருந்து கீழே குதித்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வருமான வரித்துறையினர் அங்குள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    அவருக்கு முதுகு தண்டு வடத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து வருமான வரித்துறையினர் திருச்செங்கோடு புறநகர் போலீசில் கார்த்திக்கேயன் மீது புகார் கொடுத்தனர். அதில் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் தற்கொலைக்கு முயன்றதாக புகார் கூறி உள்ளனர்.

    இதையடுத்து கார்த்திக்கேயன் மீது தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீஸ் விசாரணையில் இருந்து தப்பிக்க அவர் தற்கொலை நாடகம் ஆடியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

    3-வது நாளாக இன்றும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்டி புட்ஸ் மற்றும் அதன் தொடர்பு நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகிறார்கள். இதையொட்டி அந்த பகுதியில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  #Eggnutritioncorruption 
    ×