search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Noon meal Programs"

    அரசு பள்ளிகளுக்கு முட்டை விநியோகம் செய்ததில் முறைகேடு என புகார் எழுந்துள்ளதால், முட்டை சப்ளை செய்யும் கிறிஸ்டி நிறுவனத்தில் நான்காவது நாளாக வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. #ITRaid
    திருச்செங்கோடு:

    திருச்செங்கோட்டை அடுத்த வட்டூரை சேர்ந்தவர் குமாரசாமி. இவர் ஆண்டிப் பாளையத்தில் கிறிஸ்டி கிரைடு கிராம் இண்டஸ்ட்ரி என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

    இந்த நிறுவனம் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி, அங்கன்வாடி மையங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் சத்துணவு முட்டை, சத்து மாவு, ரேசன் கடைகளுக்கு பருப்பு ஆகியவற்றை வினியோகம் செய்து வருகிறது.

    இந்த நிறுவனம் போலி கம்பெனிகள் மூலம் பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டு வரிஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறைக்கு ஏராளமான புகார்கள் குவிந்தன.

    இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த 5-ந் தேதி முதல் திருச்செங்கோட்டில் உள்ள கிறிஸ்டி நிறுவனத்தில் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தி வருகிறார்கள்.

    வட்டூரில் உள்ள குமாரசாமி வீடு, அவரது உறவினர் வீடுகள், மற்றும் ஆடிட்டர்கள் ராமச்சந்திரன், சங்கர் ஆகியோரது வீடுகள் உள்பட நாமக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள கிறிஸ்டி நிறுவனத்திற்கு சொந்தமான கிடங்குகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் தனித்தனி குழுக்களாக பிரிந்து தீவிர சோதனை நடத்தினார்கள்.

    இந்த சோதனை சென்னை, நாமக்கல், திருச்செங்கோடு, கர்நாடகம், கேரளா, ஆந்திரா, டெல்லி என மொத்தம் 76 இடங்களில் ஒரே நேரத்தில் நடைபெற்றது.

    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் பருப்பு, சத்து மாவு ஆகியவை சப்ளை செய்யப்படுகிறது. இக்கழகத்தின் மேலாண்மை இயக்குனராக உள்ள ஐ.ஏ.எஸ். பெண் அதிகாரி சுதாதேவி, குமாரசாமியின் உறவினர் ஆவார்.

    இவரது சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம் ஆண்டிப்பாளையம் அருகே உள்ள கொல்லம்பட்டி ஆகும். இவர் பருப்பு, சத்து மாவு சப்ளை செய்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்,

    இதையடுத்து சென்னையில் உள்ள அவரது வீட்டிலும் வருமான வரி துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். 38 மணி நேரம் நடந்த இந்த சோதனையின் போது பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

    நேற்று 3-வது நாளாக குமாரசாமி வீடு, நிறுவனம் உள்பட 20 இடங்களில் சோதனை நடந்தது. இன்று 4-வது நாளாக கிறிஸ்டி நிறுவனத்தில் சோதனை நடந்து வருகிறது.

    இந்த சோதனையின்போது பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ஏற்கனவே முதல் நாள் நடந்த சோதனையில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று 3-வது நாளாக நடந்த சோதனையில் பலகோடி ரூபாய் கணக்கில் வராத பணமும், தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மொத்தம் 17 கோடி ரொக்கப்பணமும், 10 கிலோ தங்க நகைகளும் சிக்கியதாக கூறப்படுகிறது. இதில் வெளிநாட்டு பணங்களும் அடங்கும். மேலும் ஏராளமான சொத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    சத்துணவு திட்டத்திற்காக 2017-2018-ம் ஆண்டு 95 கோடி முட்டை சப்ளை செய்வதற்காக கிறிஸ்டி நிறுவனம் ஒரு முட்டை 434 காசு வீதம் 412 கோடி ரூபாய்க்கு டெண்டர் எடுத்துள்ளது. இதில் சில முக்கிய பிரமுகர்களுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதற்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த ஆவணங்களை மதிப்பீடு செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் இந்த பணி முழுவதும் முடிவடைந்த பின்னர் தான் வரி ஏய்ப்பு, போலி நிறுவனங்கள் மூலம் நடந்த பண பரிமாற்றம் ஆகியவை பற்றிய முழு விவரம் தெரியவரும் என வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கிறிஸ்டி நிறுவன அதிபர் குமாரசாமியிடம் வருமான வரித்துறையினர் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் சிலரிடம் விசாரணை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்காக அடுத்த வாரம் அவர்களை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்ப திட்டமிட்டுள்ளனர்.

    இதனால் கிறிஸ்டி நிறுவனத்துடன் தொடர்புடைய பிரமுகர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

    குமாரசாமி பல வங்கிகளில் ஏராளமான லாக்கர்களை பயன்படுத்தி வருகிறார். இந்த லாக்கர்களை திறந்து ஆய்வு செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதில் பல முக்கிய ஆவணங்கள் கிடைக்கலாம் என்று தெரிகிறது.

    வருமானவரித்துறையினர் நடத்திய சோதனையின் அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக தமிழக அரசிடம் மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதுவரை இல்லாத அளவிற்கு தொடர்ந்து 4 நாட்களாக நடைபெற்று வரும் சோதனை திருச்செங்கோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Eggnutritioncorruption
    ×