search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சத்துணவு திட்ட முறைகேட்டில் பல அமைச்சர்களுக்கு தொடர்பு- தினகரன்
    X

    சத்துணவு திட்ட முறைகேட்டில் பல அமைச்சர்களுக்கு தொடர்பு- தினகரன்

    நாமக்கல்லில் சத்துணவு திட்ட முட்டை முறைகேட்டில் 2 மந்திரிகளுக்கு அல்ல, பல மந்திரிகளுக்கு தொடர்பு இருக்கிறது என டி.டி.வி. தினகரன் கூறினார்.
    ஆட்டையாம்பட்டி:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக சேலம் ஒன்றிய செயலாளர் பாபநாசம் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்ள சேலம் நெய்காரப்பட்டிக்கு அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-

    சேலம்-சென்னை 8 வழி பசுமை சாலை திட்டம் மக்கள் மீது திணிக்கப்பட்ட திட்டம். மக்களுக்கு விருப்பம் இல்லாத திட்டங்களை மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா செயல்படுத்தவில்லை. அவரது ஆட்சி காலத்தில் மக்களுக்கு எதிரான மத்திய அரசின் திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்த விட்டது இல்லை. ஆனால் தற்போதைய அரசு மக்களுக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்துகிறது.

    விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து போராடுவோம். 8 வழிச்சாலை திட்டம் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்டு, அவர்கள் சம்மதத்துடன் நிறைவேற்ற வேண்டும். பொதுமக்கள், விவசாயிகள் எதிர்த்தால் நாங்களும் எதிர்ப்போம்.


    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் எங்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும். விரைவில் நல்ல தீர்ப்பு வரும் என்று நம்புகிறோம். ஐகோர்ட்டில் எங்களுக்கு எதிரான தீர்ப்பு வந்தால், சுப்ரீம் கோர்ட்டை அணுகுவோம். 18 தொகுதிகளிலும் தேர்தல் நடத்தினால் நாங்கள் போட்டியிட்டு வெற்றி பெறுவோம். நாடாளுமன்ற தேர்தலுடன், இந்த 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தினால் கூட அ.ம.மு.க. வெற்றி பெறும்.

    நாமக்கல்லில் சத்துணவு திட்ட முட்டை முறைகேட்டில் 2 மந்திரிகளுக்கு அல்ல, பல மந்திரிகளுக்கு தொடர்பு இருக்கிறது.

    இந்த ஆட்சியை எப்போது அகற்றுவீர்கள் என்று மக்கள் கேட்கிறார்கள். இந்த ஆட்சி அடுத்த ஆண்டு மே மாதம் வரை தான் நீடிக்கும். தமிழகத்தில் இந்த ஆட்சி தொடருவதற்கு மத்திய அரசு தான் தாங்கி பிடித்து உள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றது போல், 234 தொகுதிகளிலும் கூட்டணி இருந்தாலும், இல்லாவிட்டாலும் அ.ம.மு.க. அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்று மக்கள் விரும்பும் ஆட்சியை கொடுப்போம்.

    பதவியில் ஒட்டிக்கொண்டு இருப்பதற்காக துரோகம் செய்தவர் ஆட்சி நடத்துவற்கு, ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தினால் கூட அதை பெருமையாக தான் கருதுவார். தமிழகத்தில் உள்ள 70 சதவீத இளைஞர்கள், பெண்கள் எங்களுக்கு ஆதரவாக உள்ளனர்.

    இவ்வாறு டி.டி.வி. தினகரன் கூறினார். #TTVDhinakaran  #Eggnutritioncorruption
    Next Story
    ×