search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Christy company"

    தமிழக அரசு பள்ளிகளுக்கு முட்டை வினியோகம் செய்ததில் ரூ.5 ஆயிரம் கோடி ஊழல் நடந்திருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகள் சந்தேகிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Eggnutritioncorruption #ITRaid
    சேலம்:

    தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் சத்துணவு திட்டங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் முட்டை, சத்துமாவு ஆகியவற்றை நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஆண்டி பாளையத்தில் உள்ள கிறிஸ்டி பிரைடு நிறுவனம் வழங்கி வருகிறது.

    இது தவிர ஒப்பந்த அடிப்படையில், ரேசன் கடைகளுக்கு பருப்பு வினியோகமும் செய்து வருகிறது.

    கிறிஸ்டி நிறுவனம் மீது வரி ஏய்ப்பு, முட்டை வினியோகத்தில் முறைகேடு செய்வதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து கடந்த 5-ந்தேதி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சுமார் 500 பேர் பல்வேறு குழுக்களாக பிரிந்து நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி உள்பட நாடு முழுவதும் உள்ள அந்த நிறுவனத்திற்கு சொந்தமான 72 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினார்கள்.

    திருச்செங்கோடு வட்டூரில் உள்ள கிறிஸ்டி புட்ஸ் நிறுவன உரிமையாளர் குமாரசாமி வீடு, ஆடிட்டர்கள் ராமச்சந்திரன், சங்கர் ஆகியோர் வீடுகளிலும் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

    ஆண்டிபாளையம் எஸ்.பி.எஸ்.நகர் குடியிருப்பில் வைத்து கிறிஸ்டி நிறுவன கணக்காளர் கார்த்திக்கேயனிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

    இதில் அவரது முதுகு தண்டு வடம் பாதிக்கப்பட்டதால் கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதற்கிடையே திருச்செங்கோடு தேக்கவாடியில் உள்ள கார்த்திக்கேயன் வீட்டில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பென் டிரைவ்கள் கைப்பற்றப்பட்டன. இந்த பென் டிரைவ்களில் சத்துணவு முட்டை டெண்டர் விவகாரம், பல கோடிகளை லஞ்சமாக பெற்ற அரசியல் கட்சி முக்கிய பிரமுகர்கள், அதிகாரிகள் பட்டியல் உள்பட பல்வேறு முக்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

    அந்த ஆவணங்கள் அடிப்படையில் விசாரித்த போது ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், முக்கிய பிரமுகர்களுக்கு லஞ்சம் கொடுத்ததை குமாரசாமி ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் அதனை எழுத்து பூர்வமாக எழுதி தரும் படி கேட்டதற்கு அவர் மறுப்பு தெரிவித்து விட்டார்.

    முட்டை கொள்முதல், சத்து மாவு சப்ளையில் 5 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக வருமானவரித்துறை அதிகாரிகள் சந்தேகம் அடைந்துள்ளனர். எனவே இதில் தொடர்புடைய அனைவருக்கும் விரைவில் சம்மன் அனுப்பி விசாரணையை தீவிரப்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

    திருச்செங்கோட்டில் 5-வது நாளாக நடந்த சோதனை நேற்று நிறைவு பெற்றது. இந்த சோதனையில் 20 கோடிக்கு அதிகமான ரொக்கப்பணமும், 15 கிலோவுக்கு அதிகமான தங்க பிஸ்கட்டுகளும் வெளிநாட்டு கரன்சிகளும், கணக்கிட முடியாத அளவுக்கு ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.


    இதையடுத்து 10-க்கும் மேற்பட்ட கார்களில் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் அள்ளி சென்றனர். குமாரசாமி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்ட நிலையில் நேற்றிரவு அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

    அழைக்கும் போது விசாரணைக்கு வர வேண்டும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக மேலாண்மை இயக்குனர் சுதாதேவியும் கிறிஸ்டி நிறுவனர் குமாரசாமியும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள். இதனால் காஷ்மீரில் பணிபுரிந்த அவரை தனது அரசியல் பலத்தை வைத்து குமாரசாமி நுகர்பொருள் கழக மேலாண் இயக்குனர் பதவி சுதாதேவிக்கு கிடைக்க செய்தார்.

    சுதா தேவி பதவிக்கு வந்த பிறகு தான் கிறிஸ்டி புட்ஸ் நிறுவனம் பல போலி நிறுவனங்கள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் பல ஆயிரம் கோடி பணத்தை போலி வங்கி கணக்குகள் மூலம் குமாரசாமி வெளிநாடுகளில் முதலீடு செய்தது ஆவணங்கள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    குமாரசாமி, அவரது மனைவி நளினிசுந்தரி, மகள்கள் திவ்யா, கிறிஸ்டி ஆகியோரிடம் தனி தனியாக விசாரணை நடத்தினர். நிறுவனத்தின் ஊழியர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரி சுதாதேவி ஆகியோரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பென் டிரைவ்வில் உள்ள ஆவணங்கள் மற்றும் செல்போன் பேச்சு ஆகியவற்றின் உண்மை தன்மை குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

    நாமக்கல் முன்னாள் உயர் அதிகாரி உள்பட பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கும், அரசியல் பிரமுகர்களுக்கும் கிறிஸ்டி நிறுவனம் பல கோடி ரூபாயை கமி‌ஷனாக கொடுத்ததாக தெரிந்தது. அந்த அதிகாரிகளிடம் விசா ரணை நடத்த சம்மன் அனுப்ப வருமான வரித்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

    திருச்செங்கோட்டில் உள்ள நிறுவனத்தில் பணியாற்றும் 60-க்கும் மேற்பட்ட ஊழியர்களிடமும் நேற்று தனி தனியாக விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள் மூலமே பல்வேறு நபர்களுக்கு பணம் கொடுக்கல் வாங்கல் நடந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இந்த நிறுவனத்திற்கு சொந்தமான பவுண்ரி, நிட்டிங், கார்மெண்ட்ஸ் போன்ற நிறுவனங்களில் வைத்து முட்டை மற்றும் சத்துமாவு சம்பந்தமாக அதிகாரிகளுக்கு லஞ்ச பரிவர்த்தனைகள் நடந்ததையும் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். #Eggnutritioncorruption  #ITRaid
    ×