என் மலர்
செய்திகள்

மேடவாக்கம் ஊராட்சி அலுவலகத்தில் விவசாயிகள் குடும்பத்துடன் திடீர் போராட்டம்
சோழிங்கநல்லூர்:
பள்ளிக்கரணை அருகே உள்ள மேடவாக்கத்தை சேர்ந்தவர்கள் மனோகர், மகாலிங்கம், தேவதாஸ். சகோதரர்களான இவர்கள் அதே பகுதியில் 2 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இவர்களது விவசாய நிலத்தை சுற்றிவிதிமுறையை மீறி கட்டிடம் கட்ட அனுமதி வழங்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் விவசாய நிலத்திற்கு வரும் கால்வாயை ஆக்கரமித்து கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன.
இதன் காரணமாக அவர்களால் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. கால்வாய் ஆக்கிரமிப்பு பற்றி அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்று தெரிகிறது.
இந்த நிலையில் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரியும், நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்தும் இன்று காலை விவசாயிகள் மனோகர், மகாலிங்கம், தேவதாஸ் ஆகியோர் குடும்பத்துடன் திடீரென மேடவாக்கம் ஊராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சிட்லபாக்கம் போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இது குறித்து விவசாயி மனோகர் கூறும்போது, “அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக் கொண்டு திட்ட அனுமதி வழங்கியதால் விவசாய நிலத்தை சுற்றி அடுக்குமாடி வீடுகள் மற்றும் மதில் சுவர் கட்டப்பட்டுள்ளது.
கால்வாய் ஆக்கிரமிப்பால் விவசாய நிலத்துக்கு தண்ணீர் வருவதில்லை. அரசு ஆணையை மீறி வழங்கப்பட்ட திட்ட அனுமதியை திரும்ப பெற்று விவசாய நிலத்திற்கு வழிவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இல்லையெனில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம் நடத்துவோம்” என்றார்.






