என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்ய முன்வருவோர் நன்கொடை அளிக்கலாம் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் விழா கடந்த 1-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. தமிழகம் மட்டும் இல்லாமல் வெளிமாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் பக்தர்கள் குவிந்து வருகிறார்கள்.

    சாதாரண நாட்களில் சுமார் 1½ லட்சம் பேரும், விடுமுறை நாட்களில் 2½ லட்சம் பக்தர்களும் அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர்.

    இதைத் தொடர்ந்து அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு கோவிலில் கூடுதல் வசதி, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    அத்திவரதரை தரிசித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி


    இதற்கிடையே நேற்று மாலை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அத்தி வரதரை தரிசனம் செய்தார். அப்போது வரிசையில் காத்திருந்த பக்தர்களிடம் கோவிலில் செய்யப்பட்டு உள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

    இந்நிலையில் அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்ய முன்வருவோர் நன்கொடை அளிக்கலாம் என்று தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

    பக்தர்களுக்கு அன்னதானம் செய்ய முன்வருவோர் ‘தேவராஜ சுவாமி திருக்கோயில் காஞ்சிபுரம்’ என்ற முகவரிக்கு பணமாகவோ, காசோலையாகவோ அனுப்பலாம் என்று அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

    முன்னதாக அத்திவரதர் உற்சவத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 
    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களின் காணிக்கையாக கடந்த 22 நாட்களில் மொத்தம் ரூ. 1.28 கோடி வரை உண்டியல் வசூலாகி உள்ளது.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் விழா கடந்த 1-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.

    தமிழகம் மட்டும் இல்லாமல் வெளிமாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் பக்தர்கள் குவிந்து வருகிறார்கள்.

    சாதாரண நாட்களில் சுமார் 1½ லட்சம் பேரும், விடுமுறை நாட்களில் 2½ லட்சம் பக்தர்களும் அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர்.

    கடந்த வாரம் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 5 பக்தர்கள் பலியானார்கள். இதையடுத்து கூடுதல் வசதி, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

    இதைத் தொடர்ந்து அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு கோவிலில் கூடுதல் வசதி, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு 750 சக்கர நாற்காலிகள் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வந்தன. தற்போது மேலும் 500 சக்கர நாற்காலிகள் கொண்டு வரப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

    கோவில் வளாகத்தில் 2600 மீட்டர் நீளத்துக்கு பக்தர்கள் வசதிக்காக தற்காலிக நிழற் பந்தலும், சுமார் 8 ஆயிரம் பேர் இளைப்பாறிச் செல்லும் வகையில் பந்தலும் அமைக்கப்பட்டு உள்ளது.

    கடந்த 22 நாளில் இதுவரை சுமார் 30½ லட்சம் பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்து இருக்கிறார்கள். அத்திவரதர் விழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தில் 10 உண்டியல்கள் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டு உள்ளன.

    அவற்றை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செந்தில்வேலன் தலைமையில் திறந்து கோவில் ஊழியர்கள் எண்ணினர்.

    இதுபற்றி இணை ஆணையர் செந்தில்வேலன் கூறும் போது, ‘22 நாட்களாக கோவிலில் வைக்கப்பட்டு உள்ள உண்டியல்களில் இருந்து மொத்தம் ரூ. 1.28 கோடி வரை வசூலாகி உள்ளது.

    மேலும் 42 கிராம தங்கம், 457 கிராம் வெள்ளியும் கிடைத்தன. தொடர்ந்து உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை, பணம் எண்ணப்பட்டு வருகிறது’ என்றார்.

    இதற்கிடையே நேற்று மாலை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அத்தி வரதரை தரிசனம் செய்தார். அப்போது வரிசையில் காத்திருந்த பக்தர்களிடம் கோவிலில் செய்யப்பட்டு உள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

    பின்னர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் கூறும்போது, ‘அத்திவரதர் ஜூலை 1-ந் தேதி முதல் சயன கோலத்தில் காட்சி அளித்து வருகிறார்.

    வருகிற ஆகஸ்டு 1-ந்தேதி முதல் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்’ என்றார்.

    அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கும் போது பக்தர்கள் அதிக அளவில் தரிசனத்துக்கு வருவார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதையடுத்து கூடுதல் பாதுகாப்பு வசதிகள் செய்வது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    48 நாட்கள் நடைபெறும் விழாவில் அத்திவரதர் சிலை முதல் 24 நாட்கள் சயன கோலத்திலும், மீதம் உள்ள 24 நாட்கள் நின்ற கோலத்திலும் காட்சி அளிப்பது வழக்கம். அதன்படி நாளை (25-ந் தேதி) நின்ற கோலத்தில் அத்திவரதர் அருள்பாலிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    முதல்-அமைச்சரின் அறிவிப்பையடுத்து வருகிற 1-ந் தேதி முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் அருள் பாலிக்க உள்ளார். அத்திவரதர் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் நாட்கள் ஒருவாரம் குறைந்ததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.

    விழாவின் 24-ம் நாளான இன்று அத்திவரதர் மாம்பழ நிற பட்டாடையில் அருள் பாலித்தார். அதிகாலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகிறார்கள். தொடர்ந்து பக்தர்கள் வருகை அதிகரித்த படி உள்ளது.
    கர்நாடகாவில் தாமரை மலரும்போது தென் இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களிலும் பா.ஜனதா வலுப்பெறும் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
    ஆலந்தூர்:

    பா.ஜனதா மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தூத்துக்குடி செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    கர்நாடகாவில் குமாரசாமியின் காங்கிரஸ் அரசு கவிழ்ந்து இருக்கிறது. மக்களின் தீர்ப்பு நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. மக்கள் பா.ஜனதாவுக்கு வாக்களித்து இருக்கிறார்கள். ஆனால் மிக குறைந்த இடங்களை பெற்ற குமாரசாமி கட்சிக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்தது.

    தற்போது மக்கள் எந்த ஆட்சி அமைய வேண்டும் என்று நினைக்கிறார்களோ அது நடந்து இருக்கிறது. கர்நாடகாவில் தாமரை மலரும்போது தென் இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களிலும் பா.ஜனதா வலுப்பெறும்.

    தமிழை நாங்கள் தான் காப்பாற்றி வருகிறோம் என்று மு.க.ஸ்டாலின் சொல்லி வருகிறார். இது தமிழ்தாய்க்கு பொறுக்காது. தமிழை யாரும் காப்பாற்ற வேண்டிய அவசியம் இல்லை. தமிழ் ஒரு முதுமொழி. என்றும் இளமையான மொழி.

    இந்தியை மத்திய அரசு திணிக்க வேண்டிய அவசியம் இல்லை. தபால்துறை, ரெயில்வே துறையிலும் இந்தியை திணிக்க வேண்டிய எண்ணம் மத்திய அரசுக்கு கிடையாது. தமிழின் பெருமையை போற்றுவதில் பா.ஜனதா முதன்மையான கட்சியாக இருக்கும்.

    முக ஸ்டாலின்

    தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி, ஸ்டாலின் பெருமை டெல்லிக்கு தெரிகிறது. தமிழ்நாட்டுக்கு தெரியவில்லை என்று கூறி இருக்கிறார். அவருடைய பெருமை ஜப்பான் மற்றும் சர்வதேச அளவில் தெரிந்தால் சந்தோஷம் தான். ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டு தண்ணீர் பற்றாக்குறை வருவதற்கு தி.மு.க. தான் காரணம்.

    தமிழ்நாட்டில் பலமுறை ஆட்சியில் இருந்த தி.மு.க. தண்ணீரை சேமிப்பதற்கான எந்த ஒரு தொலைநோக்கு பார்வையிலும் திட்டத்தை செய்யவில்லை.

    தமிழகத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கிற கொலை சம்பவங்கள் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. தி.மு.க.வை சேர்ந்தவர்களின் 2-வது கொலை இது. மாணவர்கள், பொதுமக்கள் பயணிக்கும் பேருந்தில் கத்தியுடன் சண்டைபோட்டது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. இதை காவல்துறை தடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    திருப்போரூரில் உள்ள ஏரியில் குளித்த போது சேற்றில் சிக்கி 2 மாணவர்கள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்போரூர்:

    திருப்போரூர் அடுத்த சிறுச்சேரியை சேர்ந்தவர் ராஜன். அவரது மகன் மோகன்ராஜ் (வயது 15). ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தான்.

    அதே பகுதியை சேர்ந்த டேவிட் என்பவரது மகன் திலீபன் (10). ஐந்தாம் வகுப்பு படித்து வந்தான். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மாலை தனது நண்பர்கள் 4 பேருடன் அப்பகுதியில் உள்ள ஏரிக்கு குளிக்க சென்றனர்.

    அங்கு மோகன்ராஜ், திலீபன் உள்பட நண்பர்கள் 6 பேரும் குளித்த போது, எதிர்பாராதவிதமாக மோகன்ராஜ் மற்றும் திலீபன் ஆகிய 2 பேரும் ஏரியில் உள்ள சேற்றில் சிக்கினர். உடனே, இதனைப்பார்த்து மற்ற நண்பர்கள் கூச்சலிட்டதால், அருகில் இருந்த கிராம மக்கள் ஓடிவந்து, உயிருக்கு போராடி கொண்டிருந்தவர்களை மீட்டனர்.

    ஆனால், திலீபனை சோதித்தபோது அவன் இறந்து விட்டது தெரியவந்தது. ஆனால் மோகன்ராஜ் மயக்க நிலையில் இருந்ததால், அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மோகன்ராஜை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து, 2 மாணவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், திலீபனின் பெற்றோர்கள் அவனது கண்ணை மருத்துவமனைக்கு தானம் செய்தனர்.

    பின்னர் தாழம்பூர் போலீசார் 2 பேரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 
    23 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் என்னை வலுக்கட்டாயமாக பாராளுமன்ற மேல்சபை எம்.பி. ஆக்கினார் என வைகோ கூறியுள்ளார்.
    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் இன்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    23 ஆண்டுகளுக்கு பிறகு பாராளுமன்ற மேல்சபை எம்.பி.யாக பதவிப் பிரமாணம் செய்துகொள்ள இருக்கிறேன். நான் முதன் முறையாக எம்.பி. ஆன போது பாராளுமன்றத்தில் முரசொலிமாறன் என்னை ஆதரித்தார். அதன்பிறகு 3 முறை கலைஞர் என்னை எம்.பி. ஆக்கினார்.

    இப்போது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் என்னை வலுக்கட்டாயமாக பாராளுமன்ற மேல்-சபை எம்.பி. ஆக்கி டெல்லிக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அவருக்கு எனது நன்றி.

    முக ஸ்டாலின்


    தற்போது தமிழகம் பல்வேறு அபாயங்களை எதிர்நோக்கி இருக்கிறது. மேகதாது அணை வந்தால் தமிழ்நாட்டில் காவிரி பாழாகும். ஹைட்ரோ கார்பன் திட்டம் வந்தால் தமிழகம் மெதுவாக சகாரா பாலைவனமாகும்.

    தமிழ்நாட்டில் அணு கழிவை கொட்டுவதன் மூலம் 100 அணுகுண்டுகள் வெடிக்கும் ஆபத்து ஏற்படும். நியூட்ரினோ திட்டத்தால் முல்லைப்பெரியார், இடுக்கி அணைகளுக்கு ஆபத்து ஏற்படும். இவை வந்தால் தமிழகம் சுடுகாடு ஆகிவிடும்.

    நீட் தேர்வை தொடர்ந்து மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு நெக்ஸ்ட் என்னும் அபாய திட்டத்தை மத்திய அரசு கொண்டுவர இருக்கிறது. எல்லா துறைகளிலும் இந்தி, சமஸ்கிருதம் மொழிகளை திணிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் மத சார்பின்மையை சீர் குலைக்கும் நோக்கத்தில் மத்திய அரசு செயல்படுகிறது. 22 மொழிகளையும் ஆட்சி மொழியாக்கும் வரையில் ஆங்கிலம் தொடர்பு மொழியாக இருக்க வேண்டும் என்று ராஜாஜி சொன்னார். தமிழ்மொழி இந்தியாவின் ஆட்சி மொழியாக வேண்டும்.

    நான் சட்ட நகலை கொழுத்தி சிறை சென்று இருக்கிறேன். பொடா சட்டத்தில் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டேன். நீண்ட இடை வெளிக்குப்பிறகு மீண்டும் எம்.பி.யாக டெல்லி செல்கிறேன்.

    தற்போது பாராளுமன்றத்தில் எம்.பி.யாக இருப்பவர்களுடன் எனக்கு பழக்கம் இல்லை. தமிழகத்தின் உரிமையை காப்பதற்கு குரல் கொடுப்பேன்.

    இவ்வாறு வைகோ கூறினார்.
    ஆகமவிதிகளின்படி அத்திவரதரை வேறு இடத்தில் வைப்பது என்பது சாத்தியமில்லை என்று திருக்கோயிலின் மூத்த பட்டர் தெரிவித்தார்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் விழா கடந்த 1-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது.

    தினந்தோறும் சுமார் 1 லட்சத்துக்கும் மேலான பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்து வருகிறார்கள். சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் பக்தர்கள் வருகை 2 மடங்காக அதிகரித்து உள்ளது.

    கடந்த வாரம் பக்தர்கள் வருகை எதிர்பார்த்ததைவிட அதிகமானதால் கடும் நெரிசல் ஏற்பட்டது. இதில் 5 பக்தர்கள் பலியானார்கள்.

    இதனால் கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து விமர்சனங்கள் எழுந்தன. கூட்டநெரிசலை கட்டுப்படுத்தவும், பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதைத்தொடர்ந்து அத்திவரதர் விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    அப்போது அத்திவரதர் தரிசன இடத்தை மாற்றலாமா? என்று ஆலோசிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து நேற்று காலை தலைமை செயலாளர் சண்முகம், டி.ஜி.பி. திரிபாதி ஆகியோர் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஆய்வு செய்தனர்.

    பின்னர் தலைமைச் செயலாளர் சண்முகம் நிருபர்களிடம் கூறும்போது, "அத்தி வரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு தேவையான சிறப்பு ஏற்பாடுகள், பாதுகாப்பு பணியில் கூடுதல் தன்னார்வலர்கள், முதியோர் ஓய்வு எடுக்க நாற்காலி இருக்கை உள்ளிட்ட வசதிகள் செய்யப்படும்” என்று தெரிவித்தார்.

    எடப்பாடி பழனிசாமி

    இதேபோல் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “பக்தர்கள் கூட்ட நெரிசலை தவிர்க்க அத்தி வரதர் தரிசன இடம் மாற்றம் குறித்து அர்ச்சகர்களிடம் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும்” என்று கூறினார்.

    இதைத்தொடர்ந்து அத்திவரதர் தரிசன இடத்தை மாற்றலாமா? என்று அறநிலையத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். கோவில் அர்ச்சகர்களிடமும் ஆலோசனை கேட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து திருக்கோயிலின் மூத்த பட்டர் ஒருவர் மாலைமலர் நிருபரிடம் தெரிவித்ததாவது:-

    அத்தி வரதர் விழா 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. ஆகமவிதிகளின்படி அத்தி வரதரை வேறு இடத்தில் வைப்பது என்பது சாத்தியமில்லை.

    மேலும் தற்போது அத்தி வரதர் திருமேனி சிறிது பின்னப்பட்டுள்ளது (சேதம்).

    எதிர்காலத்தில் நமது சந்ததியினரும் எம்பெருமானை வழிபட வேண்டும் என்பதால் எம்பெருமான் திருமேனியினை 48 நாட்கள் கழித்து பத்திரமாக திருக்குளத்தில் வைக்க வேண்டும். எனவே திருமேனியினை அடிக்கடி எடுத்து கையாள வாய்ப்பில்லை.

    மேலும் எம்பெருமானை நின்றகோலத்தில் வைக்க 2 நாட்கள் ஆகும். அப்போது பக்தர்களும் தரிசனம் செய்ய முடியாது. மேலும் திருமேனி பின்னப்பட்டுள்ளதால் 24 நாட்கள் நின்ற கோலத்தில் வைக்க சாத்தியமில்லை. எனவே கடைசி 10 நாட்கள் மட்டுமே எம்பெருமானை நின்ற கோலத்தில் வைக்க யோசனை செய்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதே கருத்தை கோவில் அர்ச்சகர்கள் பலரும் கூறினார்கள்.

    விழாவின் 22-வது நாளான இன்று அத்தி வரதர் இளம் பச்சை நிற பட்டாடையில் அருள்பாலித்தார்.

    காஞ்சிபுரத்தில் இன்று காலை சாரல் மழை பெய்தது. கொட்டும் மழையில் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். வழக்கம் போல் பக்தர்கள் வருகை இன்றும் அதிகமாக காணப்பட்டது.

    கூடுதல் போலீசாரும், தன்னார்வலர்களும் பக்தர்களை வரிசைப்படுத்தி அனுப்பினர். இதனால் நெரிசல் தவிர்க்கப்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த என்.சி.சி. மாணவர்களை ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    வரிசையில் நிற்கும் முதியோர்கள் அமர்ந்து ஓய்வு எடுக்க நாற்காலிகள் போடப்பட்டு இருந்தன. இதனை பக்தர்கள் பெரிதும் வரவேற்று உள்ளனர்.
    ஸ்ரீபெரும்புதூர் அருகே வாலிபர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூரை அடுத்த வெங்காடு ஊராட்சியில் வயல்வெளியோரம் உள்ள முட்புதரில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் ஸ்ரீபெரும்புதூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திக்கு சென்று வாலிபர் உடலை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    வாலிபரை மர்ம கும்பல் கழுத்தை அறுத்து கொலை செய்து இருப்பது தெரியவந்தது. கிராம மக்களிடம் விசாரித்த போது பிணமாக கிடந்தவர் அப்பகுதியை சேர்ந்தவர் இல்லை என்பது தெரிய வந்தது. எனவே அவரை வேறு எங்கேயோ கொலை செய்துவிட்டு உடலை வாகனத்தில் கொண்டு வந்து முட்புதரில் வீசி சென்று உள்ளனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபர் குறித்து விசாரித்து வருகின்றனர். பக்கத்து கிராமங்களில் யாராவது மாயமாகி உள்ளார்களா என்றும் விசாரிக்கிறார்கள்.

    அத்திவரதரை தரிசிக்க ரூ.300 கட்டணத்தில் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் சேவை தரிசன திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரூ.300 டிக்கெட்டை இணைய தளம் மூலம் முன்பதிவு செய்யலாம்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதரை தரிசிக்க தினந்தோறும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

    20-வது நாளான இன்று இளம் சிவப்பு நிற பட்டாடையில் அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    விழா தொடங்கிய ஆரம்பத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்களே சாமி தரிசனம் செய்தனர். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகின்ற விழா என்பதால் இதற்கு தொடர்ந்து மவுசு அதிகரித்து வருகிறது. இதனால் தற்போது தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இதனால் நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    கடந்த 18-ந்தேதி கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் பலியானார்கள். அதன் பிறகும் பக்தர்கள் கூட்டம் குறைந்தபாடில்லை.

    இதனால் சின்ன காஞ்சிபுரம், முத்தியால்பேட்டை, அய்யம்பேட்டை, கருக்குப்பேட்டை, வாலாஜாபாத், செவிலிமேடு, சிறுகாவேரிப் பாக்கம், ஒலிமுகமது பேட்டை, பொன்னேரிக்கரை உள்ளிட்ட பகுதிகளில் வாகன நெரிசல் அதிகம் ஏற்படுகிறது.

    இன்று சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாளானதால் நள்ளிரவு முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருக்கோயிலை நோக்கி சென்றனர். கோயிலை நோக்கி செல்லும் சாலை பக்தர்களின் வெள்ளத்தால் திக்குமுக்காடி வருகின்றது.

    வெளியூர் மற்றும் வெளிமாநில வாகனங்களின் படையெடுப்பால் காலை முதலே நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. கடந்த சனிக்கிழமை தரிசனம் செய்த பக்தர்களின் எண்ணிக்கை 2½ லட்சத்தை தாண்டிய நிலையில் இன்று அதைவிட பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனத் தெரிகிறது.

    நகரப் பகுதிகளான வணிகர் தெரு, மடம்தெரு, காமராஜர் சாலை, காந்தி சாலை, திருக்கச்சி நம்பிதெரு, வளக்கொளி பெருமாள் கோவில் தெரு, கீரை மண்டபம், காவலான் கேட், மேட்டுத்தெரு, செங்கழுநீரோடை வீதி, பூக்கடை சத்திரம் உள்ளிட்ட தெருக்களில் அதிக அளவில் வாகனங்களை நிறுத்தி விட்டு அத்திவரதரை தரிசனம் செய்து வருகிறார்கள்.

    கிழக்கு, வடக்கு, தெற்கு மாட வீதிகளில் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து கிழக்கு கோபுர நுழைவுவாயிலுக்கு வந்து தரிசனம் செய்து வருகிறார்கள்.

    அத்திவரதரை தரிசிக்க காத்திருந்த பக்தர்கள்

    அத்திவரதரை தரிசிக்க அதிக பக்தர்கள் வருவதால் ஒலிமுகமது பேட்டை, ஓரிக்கை ஆகிய தற்காலிக பஸ் நிலையங்களில் இருந்து ரங்கசாமி குளம் வழியாக வரதராஜபெருமாள் கோவிலை அடைந்து பெரியார் நகர் வரை ஸ்மால் பஸ்கள் இயக்கப்பட்டன.

    இந்த நிலையில் வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து ரங்கசாமி குளம் வரை ஏராளமான பக்தர்கள் சாலையில் நடந்து செல்வதால் பஸ்கள் மற்றும் ஸ்மால் பஸ்களை இயக்க முடியவில்லை. இதையடுத்து ஒலிமுகமது பேட்டை, ஓரிக்கையில் இருந்து ரங்கசாமி குளம் வரையிலும், பெரியார் நகரில் இருந்து சுங்கச்சாவடி வரையிலும் மட்டுமே ஸ்மால் பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் பக்தர்கள் சுமார் 2 கி.மீ. தூரம் நடந்து சென்று தரிசனம் செய்கிறார்கள்.

    பொது தரிசன வரிசையில் கிழக்கு கோபுரத்தில் இருந்து வசந்த மண்டபம் வரை வரிசையில் வந்து அத்திவரதரை தரிசிக்க அதிகபட்சமாக 6 மணி நேரம் ஆகிறது. குறைந்தபட்சமாக 3½ மணி நேரத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்கிறார்கள்.

    அனுமதி சீட்டு இல்லாதவர்களை கண்டிப்பாக வி.ஐ.பி. தரிசன வரிசையில் அனுமதிக்கக் கூடாது என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதையடுத்து முக்கிய பிரமுகர்களுக்கான தரிசன வரிசை தற்போது சீராகியுள்ளது. வி.ஐ.பி. தரிசன வரிசையில் செல்பவர்கள் 3 மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்கிறார்கள்.

    வி.ஐ.பி. பக்தர்கள் வருகை அதிகரிப்பால் சாதாரண பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடிவதில்லை. இதன் காரணமாக வி.ஐ.பி. பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி வி.ஐ.பி. பக்தர்கள் மாலை 6 மணி வரையே அத்திவரதரை தரிசிக்க முடியும். மாலை 6 மணிக்கு மேல் வி.ஐ.பி. பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 6 மணி முதல் இந்த தடை அமலுக்கு வந்துள்ளது.

    அதற்கு பதிலாக ரூ.300 கட்டணத்தில் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் சேவை தரிசன திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரூ.300 கட்டணத்தில் வி.ஐ.பி.க்கள் செல்லும் வழியில் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை சென்று அதிவிரைவாக அத்திவரதரை தரிசனம் செய்யலாம். இந்த ரூ.300 டிக்கெட்டை இணைய தளம் மூலம் முன்பதிவு செய்யலாம்.

    அத்திவரதர் தரிசனத்துக்கு வந்த பக்தர்கள் நெரிசலில் சிக்கி இறந்ததால் அத்திவரதரை தரிசிக்க முதியவர்கள் வருவதை தவிர்க்க வேண்டும் என்று காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா அறிவித்துள்ளார். நெரிசல் காரணமாக உடல் தளர்ந்த முதியோர்கள் அத்திவரதரை தரிசிக்க வருவதை தவிர்க்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

    கலெக்டரின் இந்த அறிவிப்பு வயதான பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    1979 ம் ஆண்டு போதுமான அளவில் அத்திவரதர் குறித்த செய்திகளை அறிய வெளியூர் பக்தர்களுக்கு வாய்ப்பில்லை. எனவே 90 சதவீத வெளியூர் பக்தர்கள் அத்தி வரதரை தரிசனம் செய்திருக்க முடியாது. வயது முதிர்ந்தவர்களும் அத்திவரதரை தரிசித்திருக்க வாய்ப்பில்லை.

    இந்நிலையில் மூத்த குடிமக்கள் என அழைக்கப்பட்டு பல்வேறு சலுகைகளை பெறும் முதியவர்களை சாமி தரிசிக்க வரக்கூடாது என மாவட்ட நிர்வாகம் சொல்வது அதிர்ச்சி அளிக்கக் கூடியது ஆகும். முதிய பக்தர்களுக்கு உரிய வசதிகளை செய்து தர வேண்டிய மாவட்ட நிர்வாகம் இது போன்ற அறிவிப்பினை வெளியிட்டு இருப்பது பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    குரோம்பேட்டையில் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாம்பரம்:

    குரோம்பேட்டை வேதாந்தம் காலனியை சேர்ந்தவர் ரிஷி (85). இவரது மனைவி கமலா. இவர்கள் 2 பேரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள். கடந்த 12-ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு மேடவாக்கத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்று இருந்தனர்.

    இன்று காலை திரும்பி வந்தனர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே பீரோவும் உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 10 பவுன் நகைகள், ரூ.6 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. பூஜை அறையில் இருந்து 1 கிலோ எடையுள்ள வெள்ளி குத்து விளக்கு மற்றும் தட்டு போன்றவையும் திருடப்பட்டிருந்தன.இது குறித்து குரோம்பேட்டை போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரத்தில் அத்திவரதர் தரிசன நெரிசலில் சிக்கி மேலும் ஒரு பக்தர் பரிதாபமாக இறந்தார்.
    காஞ்சிபுரம்:

    108 திவ்ய தேசங்களில் ஒன்று காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவில். இந்த கோவிலில் கடந்த 1-ந் தேதி முதல் அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். தினமும் ஏராளமான பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அத்திவரதரை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். 100-க்கும் அதிகமான பக்தர்கள் நெரிசலில் சிக்கி மயக்கம் அடைந்தனர். அவர்களில் பலர் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த நடராஜன் (வயது 61), ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த கங்காலட்சுமி (47), சென்னை ஆவடியை சேர்ந்த நாராயணி (55), சேலத்தை சேர்ந்த ஆனந்தவேல் (50) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    19-வது நாளான நேற்று அத்திவரதர் நீல நிற பட்டாடையில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். நேற்றும் அத்திவரதரை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். நேற்று மதியம் நெரிசலில் சிக்கி சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த ஆறுமுகம் (42) மயக்கம் அடைந்தார். உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கூட்ட நெரிசல் காரணமாக ஆம்புலன்ஸ் வருவதில் தாமதம் ஏற்பட்டது. அதன் பின்னர் அவர் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சின்ன காஞ்சிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    நேற்று மதியம் கடும் வெயில் வாட்டியதால் அத்திவரதரை தரிசிக்க வந்த பக்தர்கள் அவதிக்கு உள்ளானார்கள். இந்த நிலையில் வரதராஜ பெருமாள் கோவில் குளம் அருகே பதிக்கப்பட்டிருந்த கற்களில் நடந்து சென்ற 5 வயது சிறுமிக்கு வெப்பம் காரணமாக காலில் கொப்புளம் ஏற்பட்டது. இதுகுறித்து ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்திலும் ஆம்புலன்ஸ் வர தாமதம் ஆனது. அதன் பின்னர் அந்த சிறுமி சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    காஞ்சிபுரத்தை சேர்ந்த கந்தகுருசித்தர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அத்திவரதரை தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசித்துவிட்டு செல்கின்றனர். இவ்வாறு தரிசனம் செய்யும்போது, அவர்களுக்கு அந்த இடத்தில், குடிநீர் கூட தரவில்லை என்று கேள்விப்பட்டேன். தமிழக அரசு உடனடியாக அவர்களுக்கு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று இந்த நேரத்தில் கேட்டு கொள்கிறேன். நெரிசலில் சிக்கி மரணம் அடைந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தாம்பரத்தை அடுத்த பழைய பெருங்களத்தூர் பழமையான மங்கள் ஏரியை தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    தாம்பரம்:

    தாம்பரத்தை அடுத்த பழைய பெருங்களத்தூர் கண்ணதாசன் தெரு பகுதியில் பழமையான மங்கள் ஏரி குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தை சுற்றி குறிஞ்சி நகர், கண்ணதாசன் தெரு, காமராஜர் நெடுஞ்சாலை உட்பட 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.

    இந்த குளத்தில் உள்ள நீரை பிடித்து இப்பகுதி மக்கள் தங்களது தேவைகளை பூர்த்தி செய்து வந்தனர். கடந்த சில ஆண்டுகளாக இந்த குளம் தூர் வாரப்படாமல் உள்ளது.

    மேலும் பெருங்களத்தூர் பேரூராட்சி இப்பகுதியில் சுற்றியுள்ள குடியிருப்பில் இருந்து வெளியேறும் கழிவுநீரை குளத்தில் கலக்கச் செய்வதால் தற்போது குளத்தினை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு பயனற்றுக் கிடக்கிறது.

    மேலும் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாததாலும் கழிவுநீர் தேங்கி கிடப்பதாலும் குளம் முழுவதும் செடி, கொடிகள் மூடி காணப்படுகிறது.

    கழிவுநீரால் கடும் துர்நாற்றமும் வீசுவதால் இப்பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகள் மற்றும் குளத்தின் அருகே உள்ள சிவன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் பலன் இல்லை. இந்த குளத்தை தூர்வார ரூ. 20 லட்சம் மதிப்பில் நிதி ஒதுக்கப்பட்டும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.

    சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இதுபற்றி கேட்டும் சரிவர பதில் அளிக்கவில்லை.

    எனவே நிதி ஒதுக்கப்பட்டும் கிடப்பில் போடப்பட்டுள்ள குளம் சீரமைப்பு பணியை உடனே தொடங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அத்திவரதரை தரிசிக்க ரவுடி வரிச்சியூர் செல்வத்துக்கு வி.ஐ.பி. பாஸ் கொடுத்தது அதிமுக பிரமுகர், போலீஸ் அதிகாரி என்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தில் அத்தி வரதர் விழா கடந்த 1-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.

    தினந்தோறும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் ஆரம்பத்தில் 3 மணி நேரம் காத்திருந்தவர்கள் தற்போது சுமார் 6 மணி நேரம் வரை வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகின்றனர்.

    சாதாரண பொதுமக்கள் பல மணி நேரம் காத்திருக்கும் நிலையில் மதுரையைச் சேர்ந்த ரவுடி வரிச்சியூர் செல்வமும் அவரது நண்பர்களும் முக்கிய பிரமுகர்கள் செல்லும் நுழைவு வாயில் வழியாக சென்று அத்திவரதரை தரிசித்த சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    வரிச்சியூர் செல்வத்தை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சிலை அருகே அமர வைத்து சிறப்பு மரியாதை அளித்து உள்ளனர். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

    இதுபற்றி விசாரணை நடத்த மாவட்ட கலெக்டர் பொன்னையா உத்தரவிட்டு உள்ளார். இதையடுத்து வரிச்சியூர் செல்வம் கோவிலுக்கு வந்தது முதல் அவரை உபசரித்து அழைத்து சென்றவர்கள் யார்? யார்? என்று கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை வைத்து சேகரித்து வருகிறார்கள்.

    ரவுடி வரிச்சியூர் செல்வத்துக்கு வி.ஐ.பி. பாஸ் கிடைத்தது எப்படி? அது போலியானதா? அதனை வழங்கியவர்கள் யார்? என்றும் விசாரணை நடக்கிறது. ஆனால் இதுவரை இந்த விவகாரத்தில் யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இதற்கிடையே ரவுடி வரிச்சியூர் செல்வத்துக்கு வி.ஐ.பி. பாஸ் கொடுத்தது அ.தி.மு.க. பிரமுகர் மற்றும் போலீஸ் அதிகாரி ஒருவர் என்பது தெரியவந்துள்ளது.

    இது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    வரிச்சியூர் செல்வம் வி.ஐ.பி. பாசை அ.தி.மு.க. பிரமுகர் மற்றும் ஒரு போலீஸ் அதிகாரியிடம் இருந்து பெற்று உள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்கள்தான் வரிச்சியூர் செல்வத்தையும் அவரது நண்பர்களையும் கோவிலுக்குள் சகல மரியாதையுடன் செல்ல உதவி உள்ளனர்.

    இது தொடர்பாக அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    போலி வி.ஐ.பி. பாசை கூடுதல் விலை கொடுத்து வாங்கி தரிசனத்துக்கு வந்த 9 பேர் இதுவரை சிக்கி உள்ளனர். அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஆனால் அந்த போலி வி.ஐ.பி. பாசை தயார் செய்து விற்கும் கும்பல் இதுவரை கைது செய்யப்படவில்லை. அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் கோவில் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    விழாவில் 18-வது நாளான இன்று அத்திவரதர் நீலநிற வண்ண பட்டாடையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நடிகர் பாண்டியராஜன் குடும்பத்துடன் வந்து தரிசனம் செய்தார்.

    வழக்கத்துக்கு மாறாக இன்று அதிகாலை முதலே கூடுதலாக பக்தர்கள் குவிந்தனர். வெளியூர் பக்தர்கள் வருகை அதிகரித்ததால் காஞ்சிபுரம் நகரம் முழுவதும் வாகனங்கள் நிரம்பி காணப்பட்டன. இதனால் சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    ×