search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அத்திவரதர்
    X
    அத்திவரதர்

    அத்திவரதரை தரிசிக்க ரூ.300 கட்டணத்தில் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் சேவை திட்டம்

    அத்திவரதரை தரிசிக்க ரூ.300 கட்டணத்தில் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் சேவை தரிசன திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரூ.300 டிக்கெட்டை இணைய தளம் மூலம் முன்பதிவு செய்யலாம்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதரை தரிசிக்க தினந்தோறும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

    20-வது நாளான இன்று இளம் சிவப்பு நிற பட்டாடையில் அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    விழா தொடங்கிய ஆரம்பத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்களே சாமி தரிசனம் செய்தனர். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகின்ற விழா என்பதால் இதற்கு தொடர்ந்து மவுசு அதிகரித்து வருகிறது. இதனால் தற்போது தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இதனால் நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    கடந்த 18-ந்தேதி கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் பலியானார்கள். அதன் பிறகும் பக்தர்கள் கூட்டம் குறைந்தபாடில்லை.

    இதனால் சின்ன காஞ்சிபுரம், முத்தியால்பேட்டை, அய்யம்பேட்டை, கருக்குப்பேட்டை, வாலாஜாபாத், செவிலிமேடு, சிறுகாவேரிப் பாக்கம், ஒலிமுகமது பேட்டை, பொன்னேரிக்கரை உள்ளிட்ட பகுதிகளில் வாகன நெரிசல் அதிகம் ஏற்படுகிறது.

    இன்று சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாளானதால் நள்ளிரவு முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருக்கோயிலை நோக்கி சென்றனர். கோயிலை நோக்கி செல்லும் சாலை பக்தர்களின் வெள்ளத்தால் திக்குமுக்காடி வருகின்றது.

    வெளியூர் மற்றும் வெளிமாநில வாகனங்களின் படையெடுப்பால் காலை முதலே நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. கடந்த சனிக்கிழமை தரிசனம் செய்த பக்தர்களின் எண்ணிக்கை 2½ லட்சத்தை தாண்டிய நிலையில் இன்று அதைவிட பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனத் தெரிகிறது.

    நகரப் பகுதிகளான வணிகர் தெரு, மடம்தெரு, காமராஜர் சாலை, காந்தி சாலை, திருக்கச்சி நம்பிதெரு, வளக்கொளி பெருமாள் கோவில் தெரு, கீரை மண்டபம், காவலான் கேட், மேட்டுத்தெரு, செங்கழுநீரோடை வீதி, பூக்கடை சத்திரம் உள்ளிட்ட தெருக்களில் அதிக அளவில் வாகனங்களை நிறுத்தி விட்டு அத்திவரதரை தரிசனம் செய்து வருகிறார்கள்.

    கிழக்கு, வடக்கு, தெற்கு மாட வீதிகளில் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து கிழக்கு கோபுர நுழைவுவாயிலுக்கு வந்து தரிசனம் செய்து வருகிறார்கள்.

    அத்திவரதரை தரிசிக்க காத்திருந்த பக்தர்கள்

    அத்திவரதரை தரிசிக்க அதிக பக்தர்கள் வருவதால் ஒலிமுகமது பேட்டை, ஓரிக்கை ஆகிய தற்காலிக பஸ் நிலையங்களில் இருந்து ரங்கசாமி குளம் வழியாக வரதராஜபெருமாள் கோவிலை அடைந்து பெரியார் நகர் வரை ஸ்மால் பஸ்கள் இயக்கப்பட்டன.

    இந்த நிலையில் வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து ரங்கசாமி குளம் வரை ஏராளமான பக்தர்கள் சாலையில் நடந்து செல்வதால் பஸ்கள் மற்றும் ஸ்மால் பஸ்களை இயக்க முடியவில்லை. இதையடுத்து ஒலிமுகமது பேட்டை, ஓரிக்கையில் இருந்து ரங்கசாமி குளம் வரையிலும், பெரியார் நகரில் இருந்து சுங்கச்சாவடி வரையிலும் மட்டுமே ஸ்மால் பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் பக்தர்கள் சுமார் 2 கி.மீ. தூரம் நடந்து சென்று தரிசனம் செய்கிறார்கள்.

    பொது தரிசன வரிசையில் கிழக்கு கோபுரத்தில் இருந்து வசந்த மண்டபம் வரை வரிசையில் வந்து அத்திவரதரை தரிசிக்க அதிகபட்சமாக 6 மணி நேரம் ஆகிறது. குறைந்தபட்சமாக 3½ மணி நேரத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்கிறார்கள்.

    அனுமதி சீட்டு இல்லாதவர்களை கண்டிப்பாக வி.ஐ.பி. தரிசன வரிசையில் அனுமதிக்கக் கூடாது என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதையடுத்து முக்கிய பிரமுகர்களுக்கான தரிசன வரிசை தற்போது சீராகியுள்ளது. வி.ஐ.பி. தரிசன வரிசையில் செல்பவர்கள் 3 மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்கிறார்கள்.

    வி.ஐ.பி. பக்தர்கள் வருகை அதிகரிப்பால் சாதாரண பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடிவதில்லை. இதன் காரணமாக வி.ஐ.பி. பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி வி.ஐ.பி. பக்தர்கள் மாலை 6 மணி வரையே அத்திவரதரை தரிசிக்க முடியும். மாலை 6 மணிக்கு மேல் வி.ஐ.பி. பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 6 மணி முதல் இந்த தடை அமலுக்கு வந்துள்ளது.

    அதற்கு பதிலாக ரூ.300 கட்டணத்தில் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் சேவை தரிசன திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரூ.300 கட்டணத்தில் வி.ஐ.பி.க்கள் செல்லும் வழியில் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை சென்று அதிவிரைவாக அத்திவரதரை தரிசனம் செய்யலாம். இந்த ரூ.300 டிக்கெட்டை இணைய தளம் மூலம் முன்பதிவு செய்யலாம்.

    அத்திவரதர் தரிசனத்துக்கு வந்த பக்தர்கள் நெரிசலில் சிக்கி இறந்ததால் அத்திவரதரை தரிசிக்க முதியவர்கள் வருவதை தவிர்க்க வேண்டும் என்று காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா அறிவித்துள்ளார். நெரிசல் காரணமாக உடல் தளர்ந்த முதியோர்கள் அத்திவரதரை தரிசிக்க வருவதை தவிர்க்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

    கலெக்டரின் இந்த அறிவிப்பு வயதான பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    1979 ம் ஆண்டு போதுமான அளவில் அத்திவரதர் குறித்த செய்திகளை அறிய வெளியூர் பக்தர்களுக்கு வாய்ப்பில்லை. எனவே 90 சதவீத வெளியூர் பக்தர்கள் அத்தி வரதரை தரிசனம் செய்திருக்க முடியாது. வயது முதிர்ந்தவர்களும் அத்திவரதரை தரிசித்திருக்க வாய்ப்பில்லை.

    இந்நிலையில் மூத்த குடிமக்கள் என அழைக்கப்பட்டு பல்வேறு சலுகைகளை பெறும் முதியவர்களை சாமி தரிசிக்க வரக்கூடாது என மாவட்ட நிர்வாகம் சொல்வது அதிர்ச்சி அளிக்கக் கூடியது ஆகும். முதிய பக்தர்களுக்கு உரிய வசதிகளை செய்து தர வேண்டிய மாவட்ட நிர்வாகம் இது போன்ற அறிவிப்பினை வெளியிட்டு இருப்பது பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    Next Story
    ×