என் மலர்
காஞ்சிபுரம்
நேற்று காலையில் இருந்து மதியம் வரை பக்தர்கள் கூட்டம் அதிகமாகி கொண்டே இருந்ததால் போலீசார் பாதுகாப்பு கருதி பக்தர்களை திருப்பி அனுப்பினர். மறுநாள் (இன்று) தரிசனத்துக்கு வருமாறு கூறினர்.
இதனால் வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து சாமியை தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.
பக்தர்கள் பலரும் “வெகு தொலைவில் இருந்து வந்தும் சாமியை தரிசனம் செய்யவிடாமல் திருப்பி அனுப்புகிறீர்களே” என்று கூறி போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் ஊருக்கும் செல்ல முடியாமல், தரிசனத்துக்கும் செல்ல முடியாமல் தவித்தனர். அவர்கள் வாகனங்களிலேயே இரவை கழித்து இன்று மீண்டும் தரிசனத்துக்கு வந்ததை காண முடிந்தது. பல லட்சம் பக்தர்கள் குவியும் இடத்தில் போதுமான கழிவறை வசதி செய்து தரப்படவில்லை என்று பக்தர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்கள்.
இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் பொன்னையா கூறியதாவது:-
கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் பக்தர்களை ஒவ்வொரு இடத்திலும் நிறுத்தி, நிறுத்தி சாமி தரிசனம் செய்ய அனுப்பி வருகிறோம். யாரையும் திரும்பி போகச் சொல்லவில்லை.
ஆகஸ்டு 1-ந்தேதி முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சியளிக்க உள்ளதால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை முன் கூட்டியே செய்து வருகிறோம்.
150 கழிப்பறைகள் ஆரம்பத்தில் அமைக்கப்பட்டு இருந்தது. தற்போது 210 கழிப்பறைகள் உள்ளன. இன்னும் 2 நாட்களில் மேலும் 20 கழிப்பறைகளை அமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது.
அரசு சார்பில் 2 கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் நிலையை உன்னிப்பாக கண்காணித்து தேவையான நடவடிக் கைகளை எடுத்து வருகின்றனர். வடக்கு மாட வீதியிலும், டோல்கேட் பகுதியிலும் 16 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேர் வரை அமரும் வகையில் கூடுதலாக 2 பந்தல்கள் அமைக்கப்பட உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
108 திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் கடந்த 1-ந் தேதி முதல் அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். 28-வது நாளான நேற்று அத்திவரதர் முத்து கீரிடம், நீல நிற பட்டாடையில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
நேற்று பெருமாளுக்கு உகந்த ஏகாதசி ஆகும். மேலும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் அத்திவரதரை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
வரதராஜ பெருமாள் கோவில் கிழக்கு கோபுரம் இலவச தரிசன வரிசையில் லட்சக்கணக்கான பக்தர்கள் நின்றனர். ஒரு பக்தர் தரிசனம் செய்ய 8 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
அத்திவரதரை தரிசிக்க காத்திருக்கும் பக்தர்கள் வரிசையில் சென்றாலும் அருகே செல்லும்போது அதிக அளவில் பக்தர்கள் கூடுவதால் தள்ளுமுள்ளு ஏற்படுகிறது. அத்திவரதரின் அருகில் செல்லும்போது போலீசார் பக்தர்களை விரைவாக தள்ளிவிட்டு விடுகின்றனர்.
இதனால் அத்திவரதரை 8 மணி நேரம் காத்திருந்தும் கூட சரிவர தரிசனம் செய்ய முடியவில்லை என்று பக்தர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

நேற்று ஒரே நாளில் அத்திவரதரை 3 லட்சம் பக்தர்கள் தரிசித்தனர். நெரிசலில் சிக்கி 40 பக்தர்கள் மயக்கம் அடைந்தனர். அத்திவரதர் தரிசன விழாவில் இதுவரை 6,300 பக்தர்கள் மயக்கம் அடைந்துள்ளனர். இதுவரை 45 லட்சம் பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அத்திவரதரை தரிசிக்க நேற்று மதியம் பக்தர்கள் அதிக அளவில் காத்திருந்ததால் வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் நேற்று ஒருநாள் அத்திவரதர் தரிசனத்தை தவிர்க்கும்படி போலீசார் வேண்டுகோள் விடுத்தனர்.
அதிக அளவில் ஆட்டோ கட்டணம் வசூலிப்பதாக பக்தர்கள் குற்றம் சாட்டினர். பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிவறை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நேற்று அத்திவரரை மத்திய சுற்றுலா மற்றும் கலாசார துறை இணை அமைச்சர் பிரகலாத் சிங் படேல், ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு மற்றும் ஏராளமானோர் தரிசித்தனர்.
சென்னையை அடுத்த பல்லாவரம் பெரியபாளையத்தம்மன் கோவில் தெருவில் டிராவல் ஏஜென்சி நடத்தி வருபவர் முகமது பைசல் (40). இவர் ஐ.ஆர்.சி.டி.சி.யின் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்சியாக செயல்பட்டு வந்தார்.
ரெயிலில் பயணம் செய்ய விரும்புபவர்கள் இது போன்ற ஏஜென்சி உதவியுடன் முன்பதிவு செய்வது வழக்கம். ஐ.ஆர்.டி.சி.யின் இணைய தள முகவரியில் தான் ரெயில்வே ஏஜென்சிகள் முன்பதிவு செய்ய வேண்டும்.
ஆனால் முகமது பைசல் அவ்வாறு செய்யாமல் சொந்தமாக 20-க்கும் மேற்பட்ட இணைய தள முகவரிகளை உருவாக்கி அதன் மூலம் பலருக்கு முன்பதிவு டிக்கெட் பெற்று அதிக விலைக்கு விற்று வந்துள்ளார்.
அவசர தேவையை பொறுத்து பல மடங்கு அதிக விலைக்கு டிக்கெட்டுகளை முறைகேடாக விற்பனை செய்து வந்த தகவல் பரங்கிமலை ரெயில்வே போலீசாருக்கு தெரியவந்தது. ரெயில்வே இன்ஸ்பெக்டர் வீரேந்திரகுமார், சப்-இன்ஸ்பெக்டர் தனபால் ஆகியோர் முகமதுபைசல் அலுவலகத்திற்கு சென்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் அவர் முறைகேடாக டிக்கெட் முன்பதிவு செய்து ஐ.ஆர்.சி.டி.சி.க்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தி இருப்பது தெரிய வந்தது. போலி இ-மெயில் முகவரி மூலம் முறைகேடு செய்த முகமதுபைசலை கைது செய்து எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.
இந்த சோதனையின் போது அவரிடம் இருந்து லேப்டாப், 20 ஆயிரம் மதிப்புள்ள தக்கல் டிக்கெட்டுகள், சாப்ட்வேர் பிரிண்டர், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
தாம்பரம்:
பல்லாவரம் அடுத்த திரிசூலம் பகுதியை சேர்ந்தவர் அய்யனார். (37) லாரி டிரைவர். இவரது மனைவி கிருஷ்ணம்மாள் (26).
இருவரும் காதலித்து கடந்த 6 மாதத்துக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பின் தாம்பரத்தை அடுத்த பீர்க்கன்கரணை பகுதியில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தனர்.
அய்யனாருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
நேற்று இரவு ஏற்பட்ட தகராறில் கிருஷ்ணம்மாள் மண்எண்ணையை எடுத்து தன் உடலில் ஊற்றி தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினார். அப்போது அய்யனார், தானும் தற்கொலை செய்து கொள்வதாக கூறி தன் மீதும் மண்எண்ணெய் ஊற்றி பற்ற வைத்தார்.
பதறிப்போன மனைவி கணவனை காப்பாற்ற முயன்ற போது இருவருக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. இருவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்தனர். தீயில் கருகிய இருவரையும் மீட்டு அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த இருவரும் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து பீர்க்கன்காரனை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
பெருங்களத்தூர், பாரதி நகர் பஸ் நிலையம் அருகில் ஜவுளிக்கடை நடத்தி வருபவர் கவுரி.
நேற்று மதியம் 2 பெண்கள் இந்த கடைக்கு சென்று புடவைகள் வாங்குவதற்காக வந்தனர். நீண்ட நேரத்துக்கு பிறகு ஒரு புடவையை எடுத்துக் கொண்டு அதற்கான தொகை ரூ.800 செலுத்தினார்கள்.
பின்னர் ஒரு டாடா சுமோ காரில் ஏறி புறப்பட்டுச் சென்றனர்.
சந்தேகமடைந்த கவுரி சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார். அப்போது 2 பெண்களும் புடவை வாங்குவது போல நடித்து, 10-க்கும் மேற்பட்ட புடவைகளை தங்களுக்குள் மறைத்து எடுத்துக்கொண்டதும், ஒரு புடவைக்கு மட்டும் பணம் செலுத்தி விட்டு தப்பியதும் தெரிய வந்தது.
இது குறித்து கவுரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து பீர்க்கன்கரணை ரோந்து போலீசார் அப்பகுதியில் சென்ற டாடா சுமோ காரை மடக்கிப்பிடித்தனர். காரில் சென்ற 2 பெண்களை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
பீர்க்கன்கரணை போலீசார் பிடிபட்ட பெண்களான தேனியை சேர்ந்த லட்சுமி(38), நாகம்மாள்(60) ஆகியோரிடம் விசாரணை செய்தனர். அப்போது 2 பெண்களும் புடவைகளை தங்களுக்குள் மறைத்து எடுத்து கொண்டு தப்பியது தெரியவந்தது.
இதையடுத்து 2 பெண்களும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 12 புடவைகள், அவர்கள் சென்ற கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் தரிசன விழா நடந்து வருகிறது. இன்று 27-வது நாள் விழா நடக்கிறது.
நேற்று முக்கிய பிரமுகர்கள் செல்லும் வரிசையில் சாதாரண பக்தர்களும் சென்றதால் நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக போலீசாருக்கும், பக்தர்களுக்கும் தள்ளுமுள்ளு உருவானது. முக்கிய பிரமுகர்களின் வரிசையில் வந்த பக்தர்கள் வெளியில் வர முடியாமலும் வெளியில் இருக்கும் பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல முடியாமலும் அவதிப்பட்டனர்.
இதனால் முக்கிய பிரமுகர்கள் வரிசையில் சாமி தரிசனம் செய்ய சுமார் 3 மணிநேரத்துக்கும் மேலாக பக்தர்கள் காத்திருந்தனர். பொது தரிசன வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்ய 5 மணிநேரம் பக்தர்கள் காத்திருந்தனர். மீண்டும் கூட்டம் வந்ததையடுத்து நேற்று ஒரே நாளில் 2 லட்சம் பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்தனர்.
அத்திவரதரை தரிசனம் செய்ய நேற்று தெலுங்கானா மாநில கவர்னர் நரசிம்மன் தனது குடும்பத்தினருடன் வந்தார்.
அவரை காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா மற்றும் கோவில் பட்டாச்சாரியார்கள் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்று கோவிலுக்குள் அழைத்துச்சென்றனர். தரிசனம் செய்த அவருக்கு கோவில் நிர்வாகத்தினர் சார்பில் அத்திவரதர் திரு உருவபடமும், பிரசாதமும் வழங்கப்பட்டன.
அமைச்சர்கள் தங்கமணி, ராஜேந்திர பாலாஜி, பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா, நடிகை லதா ஆகியோரும் நேற்று அத்திவரதரை தரிசனம் செய்தனர்.
27-வது நாளான இன்று அத்திவரதர் சாம்பல் நிற பட்டாடையில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இன்று விடுமுறை நாள் என்பதாலும், பெருமாளுக்கு உகந்த சனிக்கிழமை என்பதாலும் அதிகாலை முதலே பக்தர்கள் அத்தி வரதரை தரிசனம் செய்ய குவிந்து நீண்ட வரிசையில் காத்துக்கிடந்தனர். இன்று அதிகாலையில் சுமார் 2½ கிலோ மீட்டர் தூரத்துக்கு பக்தர்கள் வரிசை காணப்பட்டது. அந்த 2½ கி.மீ தூரத்துக்கும் நிழலுக்காக மேற்கூரை அமைக்கப்பட்டிருந்தது.
இதுவரை பொது தரிசனத்துக்காக 3 வரிசையில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். இன்று முதல் கிழக்கு கோபுர வாயில் வழியாக 5 வரிசையில் பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டனர்.
தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் அத்திவரதர் தரிசனத்துக்காக கோவிலில் குவிந்துள்ளனர்.
ஆலந்தூர்:
ஆதம்பாக்கம் குன்றக்குடி நகரை சேர்ந்தவர் நவீன். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிகிறார். இவர் தனது மனைவியின் வளைகாப்புக்காக வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்று இருந்தார். அப்போது யாரோ சிலர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.40 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இதேபோல் ஆதம்பாக்கம் ஆண்டாள் நகர் 6-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ரங்கசாமி. கட்டிட மேஸ்திரி ஆக இருக்கிறார். வீட்டை பூட்டி சாவியை பூந்தொட்டியின் அடியில் வைத்து விட்டு வெளியே சென்று இருந்தார். திரும்பி வந்து பார்த்த போது வீடு திறந்து கிடந்தது. பீரோவில் இருந்த 7 பவுன் நகைகள், ரூ.15 ஆயிரம் ரொக்கத்தை காணவில்லை. யாரோ அதை கொள்ளையடித்து இருந்தது தெரிய வந்தது.
ஆதம்பாக்கம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்போரூர்:
திருப்போரூரை அடுத்த வெண்பேடு மேட்டுத்தெரு வில் வசித்து வந்தவர் கெங்கம்மாள் (வயது 70). இவருக்கு சங்கர், டில்லி என்ற 2 மகன்களும், 2 மகள்களும் இருந்தனர்.
மகன் டில்லி ஏற்கனவே இறந்து விட்டதால் அவருடைய மனைவியும், மருமகளான பார்வதியுடன் கெங்கம்மாளை வசித்து வந்தார். அவருக்கு மற்றொரு மகனான சங்கருடன் பேச்சு வார்த்தை இல்லை என்று கூறப்படுகிறது.
நேற்று காலை கெங்கம்மாள் மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றார். பின்னர் அவர் வீடு திரும்ப வில்லை. அவரை தேடி வந்தனர்.
இநத் நிலையில் கெங்கம்மாள் அப்பகுதியில் உள்ள மலைப்பகுதியில் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். காயார் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சொத்து பிரச்சனையில் கெங்கம்மாள் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இது தொடர்பாக கொலையான கெங்கம்மாளின் மகன் சங்கர் மற்றும் பேரன் கார்த்திக் ஆகிய இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் கடந்த 1-ந் தேதி முதல் அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார்.
40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் விழா என்பதால் தினந்தோறும் சுமார் 1½ லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள்.
விடுமுறை நாட்களில் பக்தர்களின் வருகை இருமடங்காக அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்சி 5 பேர் பலியானதை தொடர்ந்து கோவிலில் கூடுதல் பாதுகாப்பு, தரிசன முறையில் மாற்றம் செய்யப்பட்டது.
கடந்த 25 நாட்களில் இதுவரை 34 லட்சம் பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்து உள்ளனர்.
விழாவின் 26-வது நாளான இன்று அத்திவரதர் ரோஜா வண்ணநிற பட்டில் பாதாம், ஏலக்காய், வெட்டிவேர் ஆகிவற்றால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பா.ஜனதா தேசிய செயலாளர் இன்று எச்.ராஜா தரிசனம் செய்தார்.
அதிகாலை முதலே திரளான பக்தர்கள் கோவிலில் குவிந்து வருகின்றனர். எனினும் காலை 9 மணி நிலவரப்படி இலவச தரிசனத்துக்கு செல்லும் பக்தர்கள் சுமார் 2 மணி நேரத்திலேயே சாமி தரிசனம் முடித்து திரும்புகின்றனர்.
கூவத்தூரை அடுத்த கீழார் கொல்லை பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் சாராயத்தை பதுக்கி போலி மதுபானம் தயாரித்து பாண்டிச்சேரிக்கு அனுப்பப்பட்டு வருவதாக மதுவிலக்கு அமல் புலனாய்வு பிரிவு விழுப்புரம் சரக இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து மாமல்லபுரம் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் தேசிகன், சப்-இன்ஸ்பெக்டர் அழகிரி உள்பட புலனாய்வு பிரிவு போலீசார் பண்ணை வீட்டில் அதிரடியாக சோதனையிட்டனர்.
அப்போது அங்கு 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 50 கேன்களில் 1,750 லிட்டர் எரிசாராயம் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த பிரேம்குமார் என்பவரை பிடித்து விசாரணை நடத்தியபோது மேலும் ஒரு ரகசிய அறையில் போலி மதுபானம் தயாரிப்பது தெரிந்தது.
இதையடுத்து சாராயம் மற்றும் மதுபானம் தயாரிக்க பயன்படுத்திய இயந்திரங்கள், பாட்டல்கள், பாண்டிச்சேரி மதுபான வகை ஸ்டிக்கர் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.
பின்னர் பிரேம்குமாரை கூவத்தூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அவர் சென்னை கோபாலபுரத்தை சேர்ந்தவர் என்றும் சென்னை மேடவாக்கத்தை சேர்ந்த செல்வம் மாதம் 30 ஆயிரம் ரூபாய்க்கு பண்ணை வீட்டை வாடகைக்கு எடுத்து கொடுத்ததும், குமார் என்பவர் எரிசாராயம் சப்ளை செய்வதும் தெரிந்தது. அவர்களை போலீசார் தேடுகிறார்கள்.
பல்லாவரத்தை அடுத்த பம்மல், கிருஷ்ணா நகரில் சிண்டிகேட் வங்கி உள்ளது.
இன்று அதிகாலை 3 மணி அளவில் வங்கிக்குள் திடீரென தீப்பிடித்து கரும் புகை வெளியே வந்தது.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த வங்கியின் காவலர் சங்கர்நகர் போலீசுக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்தார்.
தாம்பரத்தில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
எனினும் இந்த தீ விபத்தில் 4 ஏ.சி., 3 கணினி மற்றும் முக்கிய ஆவணங்கள் எரிந்து சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. நகை-பணம் வைக்கப்பட்டிருந்த லாக்கரில் தீ பரவாததால் அவை தப்பியது.
மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆலந்தூர்:
சென்னை நங்கநல்லூர் ஸ்டேட் பேங்க் காலனியை சேர்ந்தவர் விஸ்வநாதன். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சித்ரா (52). நேற்று மதியம் வீட்டில் சாமி கும்பிட்டார். கற்பூரம் ஏற்றி சாமி கும்பிட்ட போது அவரது சேலையில் தீப்பிடித்து உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டது.
உயிருக்கு ஆபத்தான நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிர் இழந்தார்.
இது குறித்து நங்கநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






