search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Saree Theft"

    • சேலை திருடிய பெண்கள் அனைவரும் ஆந்திர மாநிலம், விஜயவாடாவை சேர்ந்தவர்கள் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
    • தாங்கள் திருடிய ரூ.7 லட்சம் மதிப்புள்ள சேலைகள் அனைத்தையும் கொரியர் பார்சல் மூலம் பெசன்ட்நகர் போலீசாருக்கு அனுப்பி வைத்தனர்.

    சென்னை:

    தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் மக்களின் அவசரத்தையும், கூட்ட நெரிசலையும் பயன்படுத்தி திருடும் கும்பல் எல்லா இடங்களிலும் நடமாடி வருகிறது. அண்டை மாநிலங்களில் இருந்தும் இங்கே வந்து கைவரிசை காட்டுகிறது. அதில் சில திருட்டுப்பெண்களும் கைதேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.

    சென்னை பெசன்ட்நகரில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் கடந்த 28-ந் தேதி ஒரு திருட்டுச் சம்பவம் நடந்து இருக்கிறது. அந்த காட்சிகள் அங்கு உள்ள சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகி இருக்கிறது.

    6 அல்லது 7 பெண்கள் இருக்கலாம். அவர்களைப் பார்த்தால் யாரும் திருடிகள் என்று நினைக்கத் தோன்றாது. அந்த அளவில் அழகாக சேலை அணிந்து, பட்டுச்சேலைகள் பிரிவுக்கு வருகிறார்கள். 2 பெண்கள் சேலை எடுப்பது போல், ஒவ்வொன்றாக பிரித்துப்பார்க்கிறார்கள். 2 பெண்கள் அவர்களைச் சுற்றி பாதுகாப்பாக நிற்கிறார்கள். மற்ற 2 பெண்கள் யாராவது நம்மை கவனிக்கிறார்களா? என்று நோட்டமிடுகிறார்கள்.

    இந்த நேரத்தில் சேலையை தேர்வு செய்வதுபோல் நடிக்கிற பெண்கள், விலை உயர்ந்த பட்டுச்சேலைகளை தாங்கள் அணிந்து இருக்கும் உடைகளுக்கு உள்ளே மறைத்துக்கொண்டு நைசாக வெளியேறிவிடுகிறார்கள்.

    மேற்கண்ட காட்சிகள் சி.சி.டி.வி.யில் பதிவாகி இருந்தது.

    இதுபற்றி அந்த ஜவுளிக்கடை உரிமையாளர் சென்னை பெசன்ட்நகரில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    சேலை திருடிய பெண்கள் அனைவரும் ஆந்திர மாநிலம், விஜயவாடாவை சேர்ந்தவர்கள் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதுபற்றி விஜயவாடா போலீசாருடன் பேசி சேலை திருடிய பெண்கள் குறித்து பெசன்ட்நகர் போலீசார் தகவல் சேகரித்துள்ளனர். அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் விஜயவாடாவுக்கு செல்லவும் தயாரானார்கள்.

    இந்த நிலையில் சென்னை போலீசார் தங்களை பிடிக்க வருவதை எப்படியோ தெரிந்துகொண்ட அந்த பெண்கள், நூதன நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். தாங்கள் திருடிய ரூ.7 லட்சம் மதிப்புள்ள சேலைகள் அனைத்தையும் கொரியர் பார்சல் மூலம் பெசன்ட்நகர் போலீசாருக்கு அனுப்பி வைத்தனர்.

    "நாங்கள் திருடிய சேலைகள் அனைத்தையும் அனுப்பி வைத்துவிட்டோம். எனவே எங்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது" என்ற கடிதம் ஒன்றும் கொரியர் பார்சலில் இருந்தது. இதனை பார்த்த பெசன்ட்நகர் போலீசார் வியப்பும், அதிர்ச்சியும் அடைந்தனர்.

    பெசன்ட்நகர் போலீஸ் நிலையத்துக்கு அவர்கள் அனுப்பி இருக்கும் திருட்டு சேலைகளின் மதிப்பு ரூ.7 லட்சம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    ஒவ்வொரு சேலையும் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் மதிப்பு கொண்டவை என்பதும், ஒரு கடையில் ரூ.2 லட்சம் மதிப்பிலான சேலைகளும், மீதம் ரூ.5 லட்சம் மதிப்பிலான சேலைகள் வேறு கடைகளிலும் அவர்கள் கைவரிசை காட்டியதாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    சேலையை திருப்பி அனுப்பினாலும், திருடிய குற்றத்துக்காக அந்த பெண்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் விஜயவாடா செல்வார்கள் என்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் சென்னை போலீசில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதுபோன்ற ஒரு சம்பவம் ஏற்கனவே சென்னை போலீசில் நடந்தது. கொள்ளை ஆசாமி ஒருவர், தான் திருடிய நகைகளை தபால் மூலம் போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்து, போலீசாருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார். அதுபோன்ற ஒரு சம்பவம் தற்போதும் அரங்கேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×