என் மலர்tooltip icon

    செய்திகள்

    அத்திவரதர்
    X
    அத்திவரதர்

    அத்திவரதரை ஒரேநாளில் 2 லட்சம் பேர் தரிசித்தனர்

    மீண்டும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததையடுத்து நேற்று ஒரே நாளில் 2 லட்சம் பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்தனர்.
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் தரிசன விழா நடந்து வருகிறது. இன்று 27-வது நாள் விழா நடக்கிறது.

    நேற்று முக்கிய பிரமுகர்கள் செல்லும் வரிசையில் சாதாரண பக்தர்களும் சென்றதால் நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக போலீசாருக்கும், பக்தர்களுக்கும் தள்ளுமுள்ளு உருவானது. முக்கிய பிரமுகர்களின் வரிசையில் வந்த பக்தர்கள் வெளியில் வர முடியாமலும் வெளியில் இருக்கும் பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல முடியாமலும் அவதிப்பட்டனர்.

    இதனால் முக்கிய பிரமுகர்கள் வரிசையில் சாமி தரிசனம் செய்ய சுமார் 3 மணிநேரத்துக்கும் மேலாக பக்தர்கள் காத்திருந்தனர். பொது தரிசன வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்ய 5 மணிநேரம் பக்தர்கள் காத்திருந்தனர். மீண்டும் கூட்டம் வந்ததையடுத்து நேற்று ஒரே நாளில் 2 லட்சம் பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்தனர்.

    அத்திவரதரை தரிசனம் செய்ய நேற்று தெலுங்கானா மாநில கவர்னர் நரசிம்மன் தனது குடும்பத்தினருடன் வந்தார்.

    அவரை காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா மற்றும் கோவில் பட்டாச்சாரியார்கள் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்று கோவிலுக்குள் அழைத்துச்சென்றனர். தரிசனம் செய்த அவருக்கு கோவில் நிர்வாகத்தினர் சார்பில் அத்திவரதர் திரு உருவபடமும், பிரசாதமும் வழங்கப்பட்டன.

    அமைச்சர்கள் தங்கமணி, ராஜேந்திர பாலாஜி, பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா, நடிகை லதா ஆகியோரும் நேற்று அத்திவரதரை தரிசனம் செய்தனர்.

    27-வது நாளான இன்று அத்திவரதர் சாம்பல் நிற பட்டாடையில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இன்று விடுமுறை நாள் என்பதாலும், பெருமாளுக்கு உகந்த சனிக்கிழமை என்பதாலும் அதிகாலை முதலே பக்தர்கள் அத்தி வரதரை தரிசனம் செய்ய குவிந்து நீண்ட வரிசையில் காத்துக்கிடந்தனர். இன்று அதிகாலையில் சுமார் 2½ கிலோ மீட்டர் தூரத்துக்கு பக்தர்கள் வரிசை காணப்பட்டது. அந்த 2½ கி.மீ தூரத்துக்கும் நிழலுக்காக மேற்கூரை அமைக்கப்பட்டிருந்தது.

    இதுவரை பொது தரிசனத்துக்காக 3 வரிசையில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். இன்று முதல் கிழக்கு கோபுர வாயில் வழியாக 5 வரிசையில் பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் அத்திவரதர் தரிசனத்துக்காக கோவிலில் குவிந்துள்ளனர்.
    Next Story
    ×