search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரியில்   சுற்று சூழல் பூங்கா போல மாற்றப்பட்டுள்ள மாசுக்கட்டுப்பாட்டு வாரிய  அலுவலகம்
    X

    பசுமைப்பூங்காவாக காட்சியளிக்கும் தருமபுரி மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை படத்தில் காணலாம்.

    தருமபுரியில் சுற்று சூழல் பூங்கா போல மாற்றப்பட்டுள்ள மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம்

    • தருமபுரி மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் பொலிவுபடுத்தப்பட்டுள்ளது.
    • இதனால் பொதுமக்கள் சுற்றுலா போல வந்து ரசிக்கின்றனர்.

    தருமபுரி,

    தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் கீழ் இயங்கும் மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளர் அலுவலகம் முன்பு கிருஷ்ணகிரியில் அமைந்திருந்தது. இவ்வலுவலகம் மூலம் இரு மாவட்டங்களுக்கான சுற்றுச் சூழல் தொடர்பான பணிகள் நிர்வகிக்கப்பட்டன. பின்னர் 2016-ம் ஆண்டில் தருமபுரி மாவட்டத்துக்கென தனி அலுவலகம் பிரிக்கப்பட்டு தருமபுரி அப்பாவு நகர் பகுதியில் இதற்கான அலுவலகம் செயல்பட்டு வந்தது.

    இந்நிலையில், இந்த அலுவலகத்துக்கென அதியமான்கோட்டை புறவழிச் சாலையில் ஏ.ரெட்டிஅள்ளி ஊராட்சி பகுதியில் சோகத்தூர் அருகே மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளர் அலுவலகத்துக்கென புதிய கட்டிடம் கட்டப்பட்டது, கடந்த 2021 நவம்பர் முதல் அங்கு செயல்பட்டு வருகிறது. 33 சென்ட் பரப்பளவு கொண்ட வளாகத்தில் அலுவலகங்களுக்கென 2500 சதுர அடி பரப்பு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதர காலியிடங்கள் முழுவதும் சூழல் பூங்காவாக மாற்றப்பட்டுள்ளது.

    ஒருபுறம் நொச்சி, சிறியா நங்கை, கருந்துளசி, சீனித்துளசி உள்ளிட்ட மூலிகைச் செடிகள் தோட்டம். மற்றொருபுறம் வாழை, கொய்யா, நெல்லி, அத்தி, மா, பலா, சீத்தா, கொடுக்காப்புளி, கடுக்காய் என பழ மரத்தோட்டம், அலுவலக முகப்பில் புல் தரையுடன் கூடிய மலர் மற்றும் அலங்கார தாவரங்கள், வாகன நிறுத்தத்தை ஒட்டிய பகுதியில் கூண்டுகளில் புறா, நாட்டுக்கோழி, வாத்து, முயல் போன்ற வளர்ப்பு உயிரினங்கள், இவைதவிர, பிரதான சாலையில் இருந்து அலுவலகம் வரை செல்லும் சாலையை ஒட்டி இருபுறமும் நாட்டு ரக மரக்கன்றுகள், அதேபோல அலுவலக மதில் சுவரை ஒட்டிய காலியிடத்தில் வலது மற்றும் இடது புறங்களில் மூன்றடுக்கு வரிசையில் நாட்டு ரக மரக்கன்றுகள், இவையனைத்தும் சேர்ந்து இந்த அலுவலக வளாகத்துக்கு ஒரு சூழல் பூங்கா போன்ற தோற்றத்தை உருவாக்கித் தந்துள்ளது. இவையனைத்தும், கடந்த 6 மாத காலங்களில் உண்டாக்கப்பட்ட மாற்றங்கள் ஆகும்.

    இவைமட்டுமன்றி பொருளாசையின் தீமைகள், அன்பின் பலம், அறிவுத் தேடலின் முக்கியத்துவம், அறத்தின் வலிமை, சூழலின் அவசியம் போன்றவற்றை 'நறுக்'கென உணர்த்தும் வகையிலான வாசகங்களும், தலைவர்களின் பொன்மொழிகளும் அலுவலக சுற்றுச்சுவர் மற்றும் உட்பகுதி சுவர்கள் என பல இடங்களிலும் இடம்பெற்று விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.

    தொழிற் சாலைகளுக்கான அனுமதி, உரிமம் புதுப்பிப்பு, சூழல் பிரச்சினைகள் தொடர்பான புகார் போன்ற தேவைகளுக்கானவர்கள் மட்டுமே இந்த அலுவலகத்தை நாடும் நிலை மாறி, மேற்கண்ட சூழலால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வந்து பார்வையிட்டு, ரசித்துச் செல்லும் இடமாக மாறியிருக்கிறது. சுற்றுச் சூழல் பொறியாளர் அலுவலகம். அலுவலகத்தை நாடி வரும் அனைவரும் 10-க்கும் மேற்பட்ட மூலிகை பொடிகளைக் கொண்டு தயாரிக்கப்படும் தேநீரை பருகாமல் செல்ல முடிவதில்லை. குழந்தைகளுக்கு மட்டும் பிரத்தியேக ஐஸ் க்ரீம் உபசரிப்பு.

    மேலும், மாவட்ட அரசுப் பள்ளிகளின் 600 ஆசிரியர்களுக்கு சூழல் முக்கியத்துவம் குறித்து இதுவரை பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 251 ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் இவ்வாறான பயிற்சியை வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    Next Story
    ×