என் மலர்
ஈரோடு
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதி தற்போது கோடையின் பிடியில் சிக்கி உள்ளது.
இதனால் வனப்பகுதியில் உள்ள யானைகள் உள்பட வனவிலங்குகள் வெளியே நடமாட தொடங்கி உள்ளது.
குறிப்பாக வனப் பகுதி ரோட்டோர தரைப்பாலத்தின் பள்ளத்திலும் ரோட்டையொட்டி உள்ள குட்டையில் தண்ணீர் இருப்பதால் யானைகள் தண்ணீர் தேடி இப்போது வெளியே நடமாடத் தொடங்கி உள்ளது.
குறிப்பாக தலமலை, ஆசனூர், கேர்மாளம் வனப்பகுதியில் பட்டப் பகலிலும் யானைகள் வெளியே நடமாட தொடங்கி உள்ளது.
ஆசனூர் வனப்பகுதியில் கேர்மாளத்திலிருந்து கர்நாடக மாநிலம் கொள்ளேகால் செல்லும் ரோடு மிகவும் அடர்ந்த வனப்பகுதியாகும். இந்த பகுதியில்தான் காட்டு யானைகள் சர்வ சாதாரணமாக ரோட்டை நடக்கிறது. ரோட்டோரமாக மேய்ந்து வருகிறது.
இதில் கடந்த சில நாட்களாக ஒற்றை யானை ஒன்று அப்பகுதியில் அடிக்கடி பிளிறியபடி ரோட்டை கடந்து செல்கிறது.
இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளையும் அப்பகுதி வழியாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களும் கவனமாக செல்லும்படியும் வனத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
ரோட்டில் யானை, காட்டெருமை மற்றும் வேறு எந்த வன விலங்குகளும் நடமாடினாலோ ரோட்டை கடக்க முயலும் போதோ வாகன ஓட்டிகள் அதிக ஒலி எழுப்ப வேண்டாம், விலங்குகள் ரோட்டை கடந்து போன பிறகு ரோட்டை கடந்து செல்ல வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மேலும் அடர்ந்த வனப்பகுதியில் வன விலங்குகளை பார்க்கும் ஆவலில் வண்டியை விட்டு இறங்க வேண்டாம். புகைப்படமும் எடுக்க வேண்டாம் எனவும் வன அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு அரசு ஊழியர் சங்கத்தை சேர்ந்த ஊழியர்கள், ஊராட்சி செயலாளர்கள், சத்துணவு பணியாளர்கள் உள்ளிட்டோர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மேற்கொண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மொடக்குறிச்சி வட்டக்கிளை தலைவர் முருகன் தலைமை தாங்கினார். சத்துணவு ஊழியர்கள் சங்க மாவட்ட செயலாளர் மூர்த்தி முன்னிலை வகித்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி முருகன் பேசினார்.
அவர் கூறும்போது, “தமிழக அரசு அரசு அலுவலகங்களில் கீழ்நிலைப்பணியாளர் இடங்களை நிரப்பாமல் அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு தருவதாக ஏமாற்றி வருகிறது. பதவி உயர்வு வழங்கப்பட்டதும், காலியான இடங்களை நிரப்புவதில்லை.
இதனால் இருக்கும் ஊழியர்களுக்கு பணிச்சுமை மற்றும் மன உளைச்சல் ஏற்படுகிறது. பல்வேறு பணிகள் தேங்கி கிடக்கிறது. இதனை தவிர்க்க காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். ஆள் பற்றாக்குறையை நீக்க முன்வர வேண்டும்” என்று பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை செயலாளர் பூபதி, சத்துணவு ஊழியர்கள் சங்க தலைவர் அருள்மாணிக்கம், ஊராட்சி செயலாளர்கள், சத்துணவு ஊழியர்கள் உள்ளிட்ட 12பெண்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். #tamilnews
அம்மாபேட்டை:
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள ஊமாரெட்டியூர் சுந்தராம் பாளையம் பகுதியை சேர்ந்தவர குப்புசாமி. இவரது மனைவி மேகலா (வயது24).
கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் வழக்கம் போல் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாம். இதனால் மனமுடைந்த மேகலா வீட்டில் இருந்த டீசலை எடுத்து தன் உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார்.
இதனால் அவர் அலறினார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்து தண்ணீரை ஊற்றி அணைத்தனர். பிறகு 108 ஆம்புலன்சு மூலம் பவானி அரசு அஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட மேகலா அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோபி:
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் தா.பாண்டியன் ஈரோடு மாவட்டம் கோபி வந்தார்.
அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
தேனி மாவட்டம் குரங்கணி வனப்பகுதியில் பிடித்த காட்டு தீயில் 9 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. மேலும் இந்த மலையேறும் பயிற்சியில் 7 வயது 10 வயது குழந்தைகளையும் அழைத்து சென்றது. மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.
வருங்காலத்தில் இதை ஆராய்ந்து தடுக்க வேண்டும். இந்த தீ விபத்தில் சிக்கியவர்களை மலைவாழ் மக்களால் தான் மீட்க முடியும்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதை மத்திய- மாநில அரசுகள் மதிக்காமல் உள்ளது. இதை கண்டித்து போராட்டம் நடத்த உள்ளோம்.
ராகுல்காந்தி ராஜீவ் கொலையாளிகளை மன்னித்து விட்டதாக கூறி இருப்பது அவரது மனிதாபிமானத்தை காட்டுகிறது. கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டில் என்கவுண்டர், கொலைகள் அதிகரித்து உள்ளன. நாட்டில் உள்ள தலைவர்களின் சிலைகளை உடைப்பது நாகரீகமானது அல்ல. இதை ஏற்று கொள்ள முடியாது.
இவ்வாறு தா.பாண்டியன் கூறினார்.
தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 39 பேர் சிக்கினர்.
மலை ஏறும் குழுவினரான இவர்களில் சென்னை மற்றும் ஈரோடு, கோவை மாவட்டத்தை சேர்ந்த 9 பேர் கருகி பலியாகி விட்டனர்.
இந்த தீ விபத்தால் பலியான விவேக் (வயது 25) புது மாப்பிள்ளை ஆவார். ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி ஆஸ்பத்திரி வீதியைச்சேர்ந்தவர். இவரது மனைவி பெயர் திவ்யா (25). இவர்களுக்கு திருமணமாகி 6 மாதமே ஆகிறது.
பலியான விவேக் என்ஜீனியர் ஆவார். இவரது தந்தை பெயர் நடராஜன். ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் எலக்ட்ரிக் கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு இன்னொரு மகனும் உள்ளார். அவர் பெங்களூரில் பணிபுரிகிறார்.

மலையேற்ற பயிற்சிக்கு தேனி வனப்பகுதிக்கு மனைவியுடன் புதுமாப்பிள்ளை விவேக் சென்றிருந்தார். அங்கு பிடித்த காட்டுத்தீயில் விவேக் கடுமையாக சிக்கி கொண்டு உயிரை இழந்தார். மனைவி திவ்யா தீக்காயத்துடன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளார்.
தீ விபத்தில் விவேக் கருகி பலியான சம்பவம் கிடைத்ததும் கவுந்தப்பாடியில் உள்ள அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
இன்று காலை அவர்கள் வீட்டை பூட்டிவிட்டு அனைவரும் புறப்பட்டு சென்று விட்டனர்.
மேலும் இந்த தீ விபத்தில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த தமிழ்செல்வன் (25), கண்ணன் (26), சென்னிமலை பிரபு (30) செந்தில் குமார், இவரது மனைவி கவிதா (35), மகள் நேகா (9) உள்பட 10-க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். #Tamilnews
ஈரோடு:
மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல் ஹாசன் இன்று 2-வது நாளாக ஈரோடு மாவட்டத் தில் தனது சுற்றுப் பயணத்தை தொடங்கினார்.
முதல் நிகழ்ச்சியாக ஈரோடு அருகே உள்ள மொடக்குறிச்சிக்கு இன்று காலை 9 மணிக்கு வந்தார். அவரை பார்க்க காலை 7 மணிக்கே பொதுமக்களும், கட்சி தொண்டர்களும் அங்கு குவிந்திருந்தனர்.
மொடக்குறிச்சி நால் ரோட்டில் கட்சி கொடியை கமல்ஹாசன் ஏற்றினார். அப்போது கூடி இருந்த தொண்டர்கள் கமல் வாழ்க, வருங்கால முதல்வர் வாழ்க என்று கோஷமிட்டு ஆரவாரம் செய்தனர்.
அவர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்ட கமல்ஹாசன் அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஏறி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இங்கே கூடி இருக்கும் கூட்டத்தை காணும்போது தமிழகத்தில் பெரிய எழுச்சி மாற்றம் ஏற்படுவது எனக்கு தெள்ளத்தெளிவாக தெரிகிறது.
இப்போது உள்ள தமிழக அரசு சரியில்லை. சரியாக செயல்படவும் இல்லை. இதனால்தான் நாம் இங்கே கூடி இருக்கிறோம். இதற்காகத்தான் நானும் அரசியலுக்கு வந்துள்ளேன்.
சரியில்லாத அரசை நாம் இணைந்து சரி செய்வோம். மொடக்குறிச்சியில் பஸ் நிலையம் இல்லை என்றார்கள். பஸ் நிலையத்தை நாம் கொண்டு வருவோம்.
இங்கு 100 ஆண்டு பழமை வாய்ந்த தொடக்கப்பள்ளி உள்ளது. அதனை வேறு இடத்துக்கு மாற்றி அங்கே பஸ் நிலையம் கட்டப்போவதாக சொல்கிறார்கள்.
அதை நீங்கள் (மக்கள்) எதிர்க்கிறீர்கள். பள்ளிக்கூடத்தை இடிக்கக்கூடாது என்றும் கூறுகிறீர்கள். அந்த பழமையான பள்ளிக் கூடத்தை இடிக்க விடாமல் உங்களுடன் சேர்ந்து நானும் போராட தயாராக உள்ளேன்.
இவ்வாறு கமல்ஹாசன் பேசினார். #tamilnews #kamalhaasan #tngovt #makkalneethimaiyam
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே தேசிய நெடுஞ்சாலையில் சரளை என்ற இடத்தில் வருகிற 24, 25-ந் தேதிகளில் ஈரோடு மண்டல தி.மு.க. மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டு திடலை கனிமொழி எம்.பி. இன்று பார்வையிட்டார். மாநாட்டு மேடை அமைக்கும் பணி, தொண்டர்கள் அமரும் இடம், மாநாட்டு பந்தல் முகப்பு அமைக்கும் பணி ஆகியவற்றை அவர் பார் வையிட்டார்.
பின்னர் மாநில, மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. அதில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மாநாட்டில் 50 சதவீதத்துக்கு மேல் பெண்கள்தான் இருக்க வேண்டும். அதற்காக அனைத்து பகுதிகளில் இருந்தும் மகளிர் அணி அமைப்பாளர்கள் பெண்களை அழைத்து வர வேண்டும்.
மாநாட்டையொட்டி மகளிருக்கான பாதுகாப்புக்காக 6 ஆம்புலன்சுகள் தயார் நிலையில் நிறுத்தப்படும். உடல் நிலை கோளாறு ஏற்பட்டால் பார்க்க 4 மருத்துவ மையங்கள் மாநாட்டு திடலில் செயல்படும். ஒவ்வொரு மையத்திலும் 2 படுக்கை வசதிகள் செய்யப்படும்.
பெண்களுக்காக மற்றும் தொண்டர்களுக்காக 150 கழிவறைகள் அமைக்கப்படுகிறது. மேலும் அதிக கழிவறைகள் அமைக்கவும், குடிநீர் வசதி செய்யவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
பெண்களுக்கு சானிட்டரி நாப்கின் வழங்கும் மையமும் அமைக்கப்படும். பெண்கள் பாதுகாப்புக்காக 600 பேர் கொண்ட மகளிர் பாதுகாப்பு படை செயல்படும். குறைந்த கட்டணத்தில் உணவுக்கூடம் செயல்படும்.

ஸ்டாலின் உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு செய்து கொடுத்தார். அதை நாம் கருத்தில் கொண்டு மாநாட்டுக்கு ஏராளமான பெண்களை அழைத்து வரவேண்டும்.
முக்கிய கால கட்டத்தில் இந்த மாநாடு நடக்கிறது. தமிழகம், இந்தியாவே இந்த மாநாட்டை உன்னிப்பாக கவனித்து வருகிறது. செயல் பாடற்ற அரசு தற்போது செயல்படுகிறது. இந்த மாநாட்டின் மூலம் இந்த ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும்.
பணம், பாத்திரத்தை பெற்றுக்கொண்டு 5 வருடத்துக்கு நாம் ஓட்டுரிமையை அடமானம் வைக்கிறோம். அவ்வாறு செய்யாமல் பெண்கள் விழிப்புடன் இருந்து சரியான நபரை தேர்வு செய்ய வேண்டும்.
கூட்டத்தில் மாநாட்டுக்குழு தலைவரும் முன்னாள் அமைச்சருமான சுப்புலட்சுமி ஜெகதீசன், ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளரும், மாநாட்டு வரவேற்பு குழு தலைவருமான முத்துசாமி, ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம், பெருந்துறை ஒன்றிய செயலாளர் கே.பி.சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். #tamilnews #kanimozhi #vote

அந்தியூர்:
அந்தியூர் வெள்ளை பிள்ளையார் கோவில் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி என்கிற முருகன் (வயது 55). சமையல் தொழிலாளி. இவர் இன்று காலை அந்தியூர் பெரியஏரி பகுதிக்கு சென்றார். ஏரி தண்ணீரில் கால் கழுவுவதற்காக இறங்கினார். அவருக்கு அடிக்கடிவலிப்பு நோய் ஏற்படுமாம். அது போன்று அவர் ஏரி தண்ணீரில் இறங்கியதும் வலிப்பு நோய் ஏற்பட்டது. இதனால் பெரியசாமி தண்ணீருக்குள் விழுந்தார்.
அருகில் மற்றொரு இடத்தில் ஏரி தண்ணீரில் பெரியசாமியின் தம்பி பழனிச்சாமி துணி துவைத்துக் கொண்டு இருந்தார். யாரோ தண்ணீருக்குள் விழுவதை அறிந்த பழனிச்சாமி சம்பவ இடத்துக்கு ஓடிவந்து பார்த்தார்.
அப்போது தண்ணீரில் விழுந்தது தனது அண்ணன் பெரியசாமி என்பதை அறிந்த பழனிச்சாமி அதிர்ச்சி அடைந்தார். அவர் தண்ணீரில் இறங்கி மீட்பதற்குள் பெரியசாமி ஏரி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
தகவல் கிடைத்ததும் அந்தியூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பெரியசாமியின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பலியான பெரியசாமிக்கு தேவகி என்ற மனைவியும், ஞானசேகர் (17), சந்தோஷ்குமார் (13) ஆகிய 2 மகன்களும் உள்ளனர். #tamilnews
ஈரோடு:
ஈரோடு சூரம்பட்டி வலசு, அணைக்கட்டு எம்.எஸ்.கே. நகரை சேர்ந்தவர் விஜய சேகர். இவரது மகள் பிரியா (வயது 14). இவர் டீச்சர்ஸ் காலனியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். பிரியா தனது பள்ளி பாடங்களை சரியாக படிக்கவில்லை என தெரிகிறது.
எனவே பிரியாவின் தாயார் கண்டிப்பு செய்தார். இந்த நிலையில் கடந்த 4-ந் தேதி இரவு வீட்டில் அனைவரும் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றனர். இரவு 10.30 மணி அளவில் விஜயசேகர் எழுந்து பார்த்தார். அப்போது பிரியாவை காணவில்லை. அக்கம் பக்கம் பிரியாவை தேடி பார்த்தனர்.
உறவினர் வீடுகளுக்கும் சென்று பார்த்தனர். ஆனால் கடந்த 6 நாட்களாக பிரியாவை பற்றி எந்த ஒரு தகவலும் கிடைக்க வில்லை. எனவே பிரியா மாயமானது குறித்து விஜயசேகர் ஈரோடு தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகுமார் வழக்குப்பதிவு செய்தார். மாயமான அன்று பிரியா ரோஸ் நிறத்தில் சுடிதார் டாப்பும், புளு நிறத்தில் பேண்ட்டும் அணிந்திருந்தார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள். #tamilnews
கோபி:
ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் முப்பெரும் விழா கோபியில் இன்று நடந்தது. இதில் பங்கேற்ற பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்த அரசுக்கு நிதி நெருக்கடி இருந்தாலும் ஒவ்வொரு பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்க சொல்லி உள்ளாட்சித்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இந்த விழாவில் சங்கத்தினர் கூறிய கோரிக்கைகள் முதல்வர் மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சரிடம் எடுத்து சொல்லப்படும்.
வறட்சி திட்டங்களை நிறைவேற்ற நாங்கள் ஆயத்த மாகி உள்ளோம். பள்ளிகளுக்கு கோடை விடுமுறை எத்தனை நாட்கள் என்பது கோடை வெப்பத்தை பொறுத்து முடிவு எடுக்கப்படும்.
வெப்பம் குறைந்தால் ஆண்டு தோறும் விடுமுறை விடுவது போல விடுமுறை விடப்படும். கூடுதலாக வெப்பம் இருந்தால் பெற்றோர் கோரிக்கை வைத்தால் முதல்வருடன் கலந்து ஆலோசித்து கூடுதல் நாட்கள் விடுமுறை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அவரிடம் தனியார் மழலை பள்ளிகளில் பாடத் திட்டங்கள் உள்ளது போல அங்கன் வாடி குழந்தைகளுக்கும் பாடத்திட்டம் உருவாக்கப்படுமா? என்று கேட்டபோது, ‘‘இது குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார். #tamilnews #ministersengottaiyan #schoolstudent #summerholiday
ஈரோடு:
தமிழ்நாடு உழவர் பேரியக்கம் சார்பில் அனைத்து விவசாயிகளும் கலந்து கொண்ட காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்த கலந்தாய்வு கூட்டம் ஈரோட்டில் இன்று நடந்தது.
பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு பேசியதாவது:-
காவிரி பிரச்சினை என்பது விவசாயிகளின் பிரச்சினை மட்டுமல்ல. தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதார பிரச்சினை ஆகும். காவிரி நீர் மூலம் 19 மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்சினை தீர்கிறது.
மேலும் 5 கோடி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது. 50 லட்சம் விவசாய நிலம் பயனடைகிறது. இந்த காவிரி நீர் பிரச்சினை 145 ஆண்டுகளாக நடந்து வரும் பிரச்சினையாகும்.
1892-ம் ஆண்டு முதல் ஒப்பந்தம் போடப்பட்டது. இதில் தமிழ்நாட்டுக்கு 575 டி.எம்.சி. தண்ணீர் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. பின்னர் 1972-ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தில் 489 டி.எம்.சி. ஆக குறைந்தது. 2007-ம் ஆண்டு 419 ஆக குறைந்தது.
சமீபத்தில் அது கோர்ட்டு தீர்ப்பு படி 404 டி.எம்.சி. ஆகியுள்ளது. இவ்வாறாக கடந்த 92 ஆண்டுகளில் மட்டும் 170 டி.எம்.சி. தண்ணீரை இழந்துள்ளோம். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசு அக்கறையுடன் செயல்பட வில்லை. தற்போது கர்நாடகாவில் தேர்தல் நடைபெற உள்ளதால் அதை மனதில் வைத்து மத்திய அரசு செயல்படுகிறது.
சமீபத்தில் முதல்வர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. அந்த கூட்ட தீர்மானத்தின்படி முதல்வர் தலைமையில் அனைத்து கட்சி தலைவர்களும் பிரதமர் மோடியை சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்த நேரம் கேட்கப்பட்டது.
ஆனால் பிரதமர் நீர்வளத்துறை மந்திரியை சந்திக்க கூறி விட்டார். நேற்று கூட 4 மாநில அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் டெல்லியில் நடந்தது. அதில் பேசிய நீர்வள செயலாளர் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து கோர்ட்டு தெளிவாக கருத்து கூறவில்லை என்கிறார்.
விவசாய சங்கத்தினர் அனைவரும் ஒன்று திரண்டு வாருங்கள். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வெற்றி பெற்றதுபோல் இதிலும் நாம் வெற்றி பெறலாம். அரசியலுக்கு அப்பாற்பட்டு இதில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பிரச்சினையில் நான் எனது பதவியில் இருந்து விலகவும் தயாராக உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி, மாநில துணை பொதுச்செயலாளர்கள் போ.வை.ஆறுமுகம், வேலுசாமி, மாநில துணை செயலாளர் வடிவேல், ஒருங்கிணைப்பாளர் வெங்கடாச்சலம், மத்திய மாநகர மாவட்ட செயலாளர் கிருபாகரன், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க மாநில தலைவர் அய்யாகண்ணு உள்பட பலர் கலந்து கொண்டனர். #tamilnews






