என் மலர்
ஈரோடு
அதேபோல இந்த ஆண்டும் குண்டம் விழா சிறப்பாக நடக்கிறது. நேற்று நள்ளிரவு பூச்சாட்டு நிகழ்ச்சியுடன் குண்டம் விழா முறைப்படி தொடங்கியது. முன்னதாக கோவில் தலைமை பூசாரி படைகலம் (மாலை மற்றும் பூஜை பொருட்கள்) சுமந்து கோவிலுக்கு வந்தார். அப்போது ஏராளமான பக்தர்களும் ஊர்வலமாக வந்தனர்.
பூச்சாட்டு நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் பலர் மேளம் அடித்தபடி வந்தனர். பிறகு தெப்பகுளம் அருகே சிவலிங்கத்துக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது.
பூச்சாட்டு நிகழ்ச்சி முடிந்த கையோடு இன்று மாலை பண்ணாரி அம்மன், சருகு மாரியம்மன் உற்சவர் சிலைகள் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வைக்கப்பட்டு வீதி உலா வருகிறது.
பண்ணாரி சுற்றி உள்ள சிக்கரசம்பாளையம், வெள்ளியம்பாளையம், சத்தியமங்கலம் உள்பட பல்வேறு ஊர்களுக்கு அம்மன் சிலைகள் வீதி உலா நடக்கிறது. சிலைகளுக்கு முன் ஒவ்வொரு ஊர்களிலும் சாமி சிலைகள் முன் குவிந்து பக்தர்கள் வழிபடுவார்கள்.
27-ந் தேதி இரவு கோவிலில் கம்பம் சாட்டப்படுகிறது. இதையடுத்து ஒவ்வொரு மலை கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் அம்மன் புகழ் பாடி ஆடிப்பாடி மகிழ்வார்கள்.
பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் குண்டம் இறங்கி தீ மிதிக்கும் விழா ஏப்ரல் மாதம் 3-ந் தேதி அதிகாலை நடக்கிறது. கோவில் பூசாரிகள் முதலில் குண்டம் இறங்க நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தீ மிதிக்கிறார்கள்.
ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர், திருச்சி உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்களும், கர்நாடக மாநில பக்தர்களும் என 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதிக்கிறார்கள்.
பக்தர்கள் தீ மிதித்த பிறகு அதே குண்டத்தில் மாடுகள், ஆடுகள் என கால்நடைகளும் குண்டம் இறங்கி தீ மிதிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
சத்தியமங்கலம் வனப் பகுதியில் யானைகள், காட்டெருமைகள், புலி, சிறுத்தை என ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.
கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வனப்பகுதி காயத் தொடங்கியது. மரம் செடி கொடிகள் எல்லாம் காய்ந்து கிடக்கிறது. மேலும் வனவிலங்குகள் எல்லாம் உணவும் தண்ணீரும் கிடைக்காமல் காட்டை விட்டு வெளியேற தொடங்கி உள்ளது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக சத்தியமங்கலம், கடம்பூர் மற்றும் அந்தியூர், பர்கூர் வனப்பகுதியில் மழை பெய்தது. இந்த மழையால் வனப்பகுதி தற்போது லேசாக குளிர தொடங்கி காய்ந்து போன செடி-கொடிகள் எல்லாம் கொஞ்சம்... கொஞ்சமாக புத்துயிர் பெற்று வருகிறது.
இந்த கோடை மழை இன்னும் 2 நாட்கள் தொடர்ந்து பெய்தால் வனப்பகுதி மேலும் குளிர்ந்து விடும். வனவிலங்குகளின் குடிநீர் பஞ்சமும் தீர்ந்து போகும் தொடர்ந்து மழை பெய்தால் வறட்சியின் பிடியிலிருந்து வனமும் தப்பி விடும்.
இதற்கிடையே வனப் பகுதிகளில் உள்ள குட்டைகளில் தண்ணீர் ஓரளவில் உள்ளது. குறைவான இந்த குட்டைகளில் மேலும் தண்ணீரை நிரப்பி மேலும் யானை உள்பட வன விலங்குகள் தொற்று நோயிலிருந்து தப்பிக்க உப்புக் கட்டிகள் வைக்க வேண்டும் என வன ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ளது. தயிர்பாளையம். இந்த ஊரை சேர்ந்தவர் ராஜூ (வயது 52). இவரது மனைவி ஜெயமணி (48).
இவர்களுக்கு தனுஷ்யா (19), பவித்ரா (13) என்ற 2 மகள்கள் உள்ளனர். தனுஷ்யா ஈரோட்டில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். பவித்ரா 8-ம் வகுப்பும் படித்து வருகிறார்.
இவர்களது வீடு தனியாகவும் தோட்டம் தனியாகவும் உள்ளது. நேற்று இரவு ராஜூ தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்ச தோட்டத்துக்கு சென்று விட்டார்.
இன்று காலை ராஜூ தோட்டத்திலிருந்து வீட்டுக்கு வந்தார். அப்போது உள்ளே புகை மண்டலமாக காட்சி அளித்தது.
உடனே அவர் அதிர்ச்சி அடைந்து கூக்குரலிட்டார். பிறகு வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றார்.
உள்ளே வீட்டில் இருந்து கியாஸ் சிலிண்டர் லீக்காகி வெடித்து இருந்தது. அருகே ராஜூ மனைவி ஜெயமணி மற்றும் 2 மகள்களும் உடல் கருகிய நிலையில் பிணமாக கிடந்தனர். இதை கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்த ராஜூ கதறி அழுதார். பிறகு அவரும் மூர்ச்சை அடைந்து மயங்கி விழுந்தார்.
இது பற்றி தகவல் கிடைத்ததும் அங்கு பொதுமக்கள் திரண்டனர். உடனடியாக கவுந்தப்பாடி போலீசாருக்கும் தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் இறந்து கிடந்த 3 பேரின் உடல்களையும் மீட்டனர்.
மயங்கி கிடந்த ராஜூவை கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் கணவர் ராஜூ தோட்டத்துக்கு சென்ற சமயத்தில் கியாஸ் சிலிண்டரை திறந்து வெடிக்க வைத்து தாயும் 2 மகள்களும் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
மேலும் சம்பவ இடத்துக்கு கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வமும் சென்று விசாரணை நடத்தி வருகிறார்.
2 மகள்களுடன் தாய் சிலிண்டரை வெடிக்க வைத்து தற்கொலை செய்து கொண்டது ஏன்? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் சம்பவம் நடந்தபோது கணவர் ராஜு வீட்டில் இல்லை. இதனால் தாய் மற்றும் மகள்களை சிலிண்டர் வெடிக்க வைத்து கொலை செய்யப்பட்டார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
ஈரோடு:
ஈரோடு கருங்கல்பாளையம் கே.என்.கே. ரோட்டில் இன்று காலை ஒரு வாலிபர் ரோட்டில் இறந்து கிடந்தார். இதை கண்ட அந்த வழியாக சென்ற பொதுமக்கள் கருங்கல் பாளையம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி சோதனை செய்தனர். அப்போது அவரிடம் செல்போன் இருந்தது. அதை எடுத்து அதில் இருந்து போன் எண்ணுக்கு தகவல் கொடுத்தனர். பிறகு விசாரணை நடத்தினர். அவர் கோவை சாய்பாபா காலனி பகுதியை சேர்ந்த ஞானகுருசாமி மகன் கண்ணன் என தெரியவந்தது. அவர் ஈரோடு மூலப்பட்டறையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்த தாகவும் அவர் விஷம் குடித்து இறந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
போலீசார் அவரது உடலை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அவர் எதற்காக விஷம் குடித்தார்? என்ற விபரம் தெரியவில்லை. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரு கிறார்கள்.
ஈரோடு வீரப்பன்சத்திரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கிழக்கு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.83.50 லட்சம் மதிப்பில் 6 புதிய வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழாவும், நவீன கழிப்பிடங்கள், மிதி வண்டி நிறுத்தம் அரங்கம் திறப்பு விழாவும் இன்று நடந்தது.
சிறப்பு விருந்தினராக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய வகுப்பறைகள், கட்டிடங்களை திறந்து வைத்தனர்.
பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-
நிதிநிலை அறிக்கையில் கல்வித்துறைக்கு ரூ.27 ஆயிரத்து 250 கோடியே 33 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 5 லட்சத்து 40 ஆயிரம் மாணவ- மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இந்த ஆண்டு மாணவர்களுக்கு ஒரு அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளது. அதில் உயர் நிலை பள்ளி படிக்கும் மாணவர்கள் மேல் நிலைப்பள்ளியில் எந்த கல்வியை தேர்ந்தெடுத்து படிக்கலாம் என்பது குறித்தும், மேல்நிலை வகுப்பு படிக்கும் மாணவர்கள் எந்த கல்லூரியில் என்ன பாடம் எடுத்து படிக்கலாம் என்பது குறித்தும் குறிப்பிட்டிருக்கும். இதன் மூலம் மேல்நிலை கல்வியில் சிறப்பான தொழிற்கல்வியை மாணவர்கள் பெற முடியும்.
மத்திய அரசு கொண்டு வரும் எந்த ஒரு தேர்வையும் எதிர் கொள்ளும் வகையில் நீட் தேர்வுக்கான 412 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு பிளஸ்-2 படித்து முடிக்கும் மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கென்று தனி தேர்வு நடத்தப்படும். அதில் வெற்றி பெறும் 4 ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு 8 கல்லூரிகளில் 25 நாட்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.
மத்திய அரசின் போட்டி தேர்வுகள் எந்த மாநிலங்களில் நடைபெறுகிறது என்பதை தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews
ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த சரள பகுதியில் கோவை நெடுஞ்சாலையோரம் தி.மு.க. மண்டல மாநாடு வரும் 24 மற்றும் 25-ந்தேதி நடக்கிறது.
இதற்காக பிரம்மாண்ட மாநாட்டு மேடையும் பந்தலும் அமைக்கப்பட்டு வருகிறது. மாநாட்டு பந்தலில் சுமார் 2 லட்சம் பேர் அமர இருக்கைகளும் போடப்பட்டு வருகிறது.
இன்று மாநாட்டு பணிகளை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டிருந்த தி.மு.க. வரலாற்று புகைப்பட கண்காட்சியை மு.க.ஸ்டாலின் ரசித்து பார்த்தார். பின்னர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
கேள்வி:- பா.ஜனதா கூட்டணியில் இருந்து தெலுங்குதேசம் கட்சி விலகி இருக்கிறதே?
பதில்:- சந்திரபாபு நாயுடு ஏற்கனவே பிரதமர் மோடி தந்த எந்த உறுதி மொழிகளையும், வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டினார். இந்த சூழ்நிலையில் பா.ஜனதா கூட்டணியில் இருப்பது முறையல்ல என்பதை சந்திரபாபு நாயுடு உணர்ந்த காரணத்தினால்தான் அவரது கட்சியின் சார்பில் பதவி வகித்த மத்திய அமைச்சர்கள் விலகி இருக்கிறார் கள்.
விலகியது மட்டுமல்ல அந்த கூட்டணிக்கு இனி ஆதரவே தரமாட்டோம். பா.ஜனதா கட்சிக்கு ஆதரவு தருவதை இத்தோடு நிறுத்திக் கொள்கிறோம் என்ற அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறார்கள்.
இந்த உணர்வு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் வரவில்லையே என்பதுதான் வேதனையாக இருக்கிறது.
காவிரி பிரச்சனையில் மத்திய அரசு தமிழக விவசாயிகளை, தமிழக மக்களை வஞ்சித்துக் கொண்டிருக்கிறது. நீட் பிரச்சனையில் எவ்வளவு வேகமாக மத்திய அரசு நடந்து கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் இப்போது ஆட்சி நடத்திக் கொண்டிருப்பவர்கள் சந்திரபாபு நாயுடுவை பார்த்தாவது உணருவார்களா என்பதை எனது கேள்வியாக வைக்கிறேன்.
கே:- ராமர் பாலத்தை நிறைவேற்றுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளதே?
ப:- ராமர் பாலத்தை அகற்றாமல் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவதையும் வரவேற்கிறோம். சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது தான் அண்ணாவின் லட்சியம். கலைஞரின் லட்சியம். தி.மு.க.வின் உணர்வு. எனவே அதை நிறைவேற்றினால்தான் தென் பகுதியில் இருக்கக் கூடிய மக்களுக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கே பெருமை சேர்க்கக்கூடிய திட்டமாக அமைந்திட முடியும்.
எனவே அப்படிப்பட்ட நிலை வரவேண்டும் என்று தான் நாங்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழக எம்.பி.க்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறியதை மக்களின் வரவேற்பு கருதி சொல்லவில்லை. மக்களின் கண்ணீரை துடைக்க வேண்டும். அப்போதாவது மாநில அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என்ற எண்ணத்தில் தான் நான் அதை சொல்லி இருக்கிறேன்.
அதை ஏற்றுக் கொண்டு இன்றைக்கு ஆளும் கட்சியாக இருக்கக்கூடிய அ.தி.மு.க. முன்வரும் என்று சொன்னால், தி.மு.க.வும் அதை பின்பற்ற காத்திருக்கிறது. தயாராக இருக்கிறது.
அவினாசி-அத்திக்கடவு திட்டம் தொடர்பாக ஜெயலலிதா உயிருடன் இருந்த போதே உறுதி மொழி தரப்பட்டிருக்கிறது. 110-வது விதியை பயன்படுத்தி அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இதைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். எனவே இது ஏமாற்றுகிற நாடகம். உள்ளபடியே நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் எப்போதோ நிறைவேற்றி இருக்க முடியும்.
இப்போது சொல்லி இருப்பதையாவது நிறைவேற்றுவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஆனால் எங்களுக்கு நம்பிக்கை இல்லை.
தென் மாநிலங்கள் ஒன்றாக சேர்ந்து திராவிட நாடு என்ற கோரிக்கைகள் வலுவடைந்து வருவதை வரவேற்கிறேன். வரும் என்ற நம்பிக்கையில்தான் நானும் இருக்கிறேன்.
தமிழகத்தில் ஒவ்வொரு துறையாக நான் அலசி ஆராய்ந்து கொண்டிருக்க முடியாது. ஒட்டு மொத்தமாக இரு கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன் ஆகிய மூன்றும் சேர்ந்து நடைபெறக்கூடிய ஆட்சிதான் இந்த ஆட்சி.
இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews
சென்னிமலை:
ஈரோடு மாவட்டம், சென்னிமலை 1010 நெசவாளர் குடியிருப்பில் வருபவர் சக்திவேல். இவர் அரசு பஸ் கண்டக்டராக பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி சுந்தரி. இவர்களுக்கு ராம் பிரசாத்(15),என்ற பத்தாம் வகுப்பு படிக்கும் மகனும், கலையரசன்(13)என்ற 7-ம் வகுப்பு படிக்கும் மகனும் உள்ளனர்.
ராம் பிரசாத் வீட்டருகே உள்ள முகாசிபிடாரியூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் படித்து வந்தார். நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்தவர் படிக்க வேண்டும் என கூறி வீட்டிற்குள் சென்று தாழிட்டுக்கொண்டார்.
இரண்டுமணி நேரம் ஆகியும் கதவு திறக்காத்தால் வீட்டில் உள்ளவர் ஜன்னல் வழியாக பார்த்தபோது ராம் பிரசாத் தூக்கில் பிணமாக தொங்கியது தெரியவந்தது.
இதனையடுத்து சென்னிமலை போலீசாருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாளை பத்தாம் வகுப்பு பரீட்சை துவங்கும் நிலையில் மாணவர் ராம்பிரசாத் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
மாணவர் ராம்பிரசாத் தேர்வு பயத்தின் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு என்ன காரணம்? என்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம், பாப்பாரப்பட்டி, ரெட்டியாபட்டி பகுதியை சேர்ந்தவர் முருகேசன்(வயது 39). விவசாயியான இவர் அந்த பகுதியில் தோட்டம் அமைத்து தொழில் செய்து வருகிறார்.
இந்த தோட்டத்தில் உள்ள கிணற்றை தூர் வாரும் பணியில் தொழிலாளர்களுடன் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென கால் இடறி கிணற்றுக்குள் தவறி விழுந்தார். இதில் கால் மற்றும் கைகளில் பலத்த அடிபட்டு எலும்பு முறிவு ஏற்பட்டது. தர்மபுரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர்.
இந்த ஆம்புலன்ஸை தர்மபுரியை சேர்ந்த பழனிச்சாமி(39) என்பவர் ஓட்டிவந்தார். நேற்று மதியம் தர்மபுரியில் இருந்து புறப்பட்ட இந்த ஆம்புலன்ஸ் மாலை 4 மணியளவில் பெருந்துறையை அடுத்துள்ள சோளிபாளையம் பகுதியில் வந்த போது, முன்னால் சென்ற ஒரு கண்டைனர் லாரி திடீரென இடது புறம் சர்வீஸ் ரோட்டில் செல்வதற்காக லாரியை திரும்பிய போது அந்த லாரியின் பின்பகுதியில் ஆம்புலன்ஸ் எதிர்பாராத விதமாக மோதியது.
இதில் ஆம்புலன்ஸ் வேனில் வந்த நோயாளி முருகேசன், அவரது மனைவி சரசு(32) உறவினர்கள் சந்திரன்(33) பழனி(42), ராஜசேகர்(35), சின்னத்தம்பி(55) மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவர் பழனிச்சாமி ஆகியோர் பலத்த அடிபட்ட நிலையில் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்கப்பட்டு பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே முருகேசன் பரிதாபமாக இறந்து போனார். மீதமுள்ளவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து தகவலறிந்த பெருந்துறை இன்ஸ்பெக்டர் சுகவனம் சம்பவ இடத்திற்கு வந்து வேனை ஓட்டிவந்த திண்டுக்கல் மாவட்டம் கம்புளியம்பட்டியை சேர்ந்த முருகன்(40) என்ற டிரைவரிடம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
தமிழகம் முழுவதும் நாளை (16-ந் தேதி) எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்குகிறது.
கோபியை சேர்ந்தவர்கள் சுபாஷ் (வயது 15), மவுனேஷ் (15). இவர்கள் 2 பேரும் கோபியில் உள்ள பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வருகிறார்கள்.
இதே பள்ளியில் கோபி பெருமாள்சாமிநகரை சேர்ந்த சுப்பிரமணியம் மகன் கோபிநாத் (16), சீத்தா லட்சுமிபுரத்தை சேர்ந்த செல்வம் மகன் முத்துராஜா (16), கரடிபாளையத்தை சேர்ந்த முத்து மகன் சவுந்தர் (16) ஆகியோர் பிளஸ்-1 படிக்கிறார்கள்.
இவர்கள் அனைவரும் ஒரே பள்ளியில் படித்ததால் நண்பர்களானார்கள். வழக்கம்போல இவர்கள் நேற்று பள்ளிக்கு வந்தனர். மாலையில் பள்ளி முடிந்ததும் அவர்கள் பள்ளியை விட்டு வெளியேறினர்.
ஆனால் அவர்கள் 5 பேரும் வீட்டுக்கு செல்லவில்லை. இரவு நெருங்கிய பின்னரும் அவர்கள் வீடு வந்து சேராததால் அவர்களது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பல இடங்களில் அவர்களை தேடி பார்த்தனர். உடன் படிக்கும் சில மாணவர்களிடமும் விசாரித்தனர். ஆனால் அவர்களை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
மாணவர்கள் சுபாஷ், மவுனேஷ், கோபிநாத், முத்து ராஜா, சவுந்தர் ஆகியோருடன் கோபி சீத்தா லட்சுமிபுரத்தை சேர்ந்த அஜீத் (18) என்ற வாலிபரும் மாயமாகி இருப்பது தெரியவந்தது.
இவர்கள் அனைவரும் எங்கு சென்றார்கள்? என்ன ஆனார்கள்? என்பது தெரியவில்லை. நேற்று இரவும் அவர்கள் வீட்டுக்கு திரும்பி வராததால் பதட்டம் அடைந்த பெற்றோர் கோபி போலீஸ் நிலையத்துக்கு வந்தனர்.
மாணவர்கள் மாயமானது குறித்து அவர்கள் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் மாயமான மாணவர்களை தேடி வருகிறார்கள்.
அவர்கள் கடத்தப்பட்டார்களா? அல்லது தேர்வுக்கு பயந்து ஓட்டம் பிடித்தார்களா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
ஒரே நேரத்தில் 5 மாணவர்களும் மாயமான தகவல் கோபியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் மாணவர்கள் மாயம் குறித்து சக மாணவர்களிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது மாயமான மாணவர்கள் ஈரோடு சென்று அங்கிருந்து சென்னைக்கு செல்ல திட்டமிட்டது தெரியவந்தது. இதையடுத்து சென்னை மாநகர போலீசாரிடம் கோபி போலீசார் பேசி தகவல் தெரிவித்து மாணவர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிவகிரி:
சிவகிரி அருகே உள்ள வேட்டுவபாளையத்தை சேர்ந்தவர் நடராஜன் (வயது 50). கூலி தொழிலாளி.
இவர் தாண்டாம் பாளையத்துக்கு பெரிய காரிய நிகழ்ச்சிக்கு சென்று விட்டு தனது மொபட்டில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். வள்ளியம்பாளையம் பிரிவில் வந்த போது அவருக்கு முன்னால் மற்றொருவர் மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
முன்னால் சென்றவர் எந்தவித சைகையும் காட்டாமல் திடீரென திரும்பியதாக கூறப்படுகிறது. இதனால் இருவாகனங்களும் திடீரென மோதி கொண்டது.
இதில் நடராஜன் மொட்டில் இருந்து கீழேவிழுந்தார். அவரது தலையில் பலத்த அடிபட்டது. உடனடியாக அவரை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பிறகு மேல் சிகிச்சைக்காக கோவை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த விபத்து குறித்து சிவகிரி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
பெருந்துறை:
பெருந்துறையை அடுத்த காஞ்சிக்கோவில் செங்காளி பாளையம் பகுதியை சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது 36). பெருந்துறை சேனடோரியத்தில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணி புரிந்து வருகிறார்.
இவரது மனைவி மகாலட்சுமி (33). பெருந்துறை குன்னத்தூர் ரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் நர்சாக பணி புரிந்து வருகிறார். 5 வருடங்களுக்கும் மேலாக இதே மருத்துவமனையில் பணி புரிந்து வரும் இவர் கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதி வேலைக்கு செல்வதாக வீட்டில் இருந்து சென்றவர் மாலையில் வீடு திரும்ப வில்லையாம்.
இதனால் அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர் வீடுகள் உள்பட பல்வேறு இடங்களிலும் விசாரித்தும் தேடிப்பார்த்தும் கிடைக் காததால், வெளியூரில் உள்ள தனது உறவினர்கள் வீடுகளிலும் தேடிப்பார்த்தார்.
அங்கும் அவர் கிடைக்காமல் போகவே காஞ்சிக் கோவில் போலீசில் அருணாச்சலம் புகார் கொடுத்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காஞ்சிக்கோவில் போலீசார் காணாமல் போன நர்சை தேடி வருகின்றனர். #tamilnews
தமிழக பா.ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடிக்கு வந்தார்.
தேனி மாவட்ட மலைப்பகுதியில் சுற்றுலா சென்ற கவுந்தப்பாடியை சேர்ந்த புதுமாப்பிள்ளை விவேக் மற்றும் அவரது மனைவி திவ்யா ஆகியோர் மலைப் பகுதியில் நடந்த தீ விபத்தில் பலியானார்கள்.
அவர்களது வீட்டுக்கு தமிழிசை சவுந்தரராஜன் நேரில் சென்றார். அங்கு இருந்த விவேக் பெற்றோருக்கு அவர் ஆறுதல் கூறினார்.

இதே போல் தீ விபத்தில் பலியான விவேக்கின் நண்பர் தமிழ்செல்வன் வீட்டுக்கும் தமிழிசை சென்றார். அங்கு தங்களது ஒரே மகனை இழந்து வாடும் தமிழ்செல்வன் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.
இதைத்தொடர்ந்து ஈரோடு வந்த தமிழிசை ஈரோட்டில் நடந்த பாரதிய ஜனதா கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் நான் தமிழ் தாமரை யாத்திரை என்ற பெயரில் சுற்றுப்பயணம் செய்கிறேன். பொதுமக்களிடம் இதற்கு அமோக வரவேற்பு உள்ளது. ஈரோடு எனக்கு 20-வது மாவட்டம் இங்கு நல்ல சூழ்நிலை நிலவுகிறது.
தமிழகத்தில் நாகரீகமான அரசியலை முன் எடுத்து செல்வது தான் பாரதிய ஜனதா கட்சியின் நோக்கம். எங்களால் மட்டுமே ஊழலற்ற வளர்ச்சியான நேர்மையான ஆட்சியை கொடுக்க முடியும்.
இன்று புதியவர்கள் பலர் வருகிறார்கள். அவர்கள் எதற்கு வருகிறோம்? என்று தெரியாமல் வருகிறார்கள். நாளைய தினம் கூட டி.டி.வி.தினகரன் புதிய கட்சியை ஆரம்பிக்க போவதாக அறிவித்து உள்ளார்.

இன்னும் சிலர் தமிழகத்தை தலை நிமிர செய்ய வருகிறோம் என்கிறார்கள். சிறைக்கு சென்றவர்கள் படத்தை வைத்து கொண்டு வருகிறார்கள். இவர்களால் தமிழகத்தை எப்படி தலை நிமிர செய்ய முடியும்?
நேற்றைய தினம் கூட நான் ஒரு கருத்தை கூறி இருந்தேன். கமல்ஹாசன் கட்சியில் இருந்து என்னை உறுப்பினராக சேர்த்து கொண்டார்கள் என்று கூறியதாக சொன்னேன். நான் ஒரு தேசிய கட்சிக்கு மாநில தலைவர் என்னை எப்படி அவர்கள் கட்சியில் சேர்த்தார்கள்? என்று தெரியவில்லை.
முதலில் அவர்கள் தவறை ஒத்து கொள்ள வேண்டும். தவறு நடந்து விட்டது. அதை பார்த்து கொள்கிறேன் என்பது தான் ஆரோக்கியமான விஷயம் ஆகும். சின்ன குழந்தைக்கு கூட தெரியும். இப்போதுள்ள தொழில் நுட்பத்தை பயன்படுத்தி எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று.
அதற்கு அவர்கள் விளக்கம் கொடுத்திருந்தார்கள். அதில் அவர்கள் எனது போன் எண்ணில் கரியை பூசி விட்டேன் என்று சொல்லி இருக்கிறார்கள். பிறகு உங்களது பழைய முதலாளி என்றும் கூறி இருக்கிறார்கள். இது என்ன வார்த்தை? என்ன அரசியல் நாகரீகம்? எனது போன் எண்ணை நான் 25 வருடமாக பயன்படுத்தி வருகிறேன். என் இ-மெயில் முகவரியும் அனைவருக்கும் தெரிந்ததே. நான் ஒரு அரசியல்வாதி மட்டுமல்ல. ஒரு மருத்துவரும் கூட. என்னை பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் தொடர்பு கொண்டு என்னிடம் பேசி கொண்டு தான் வருகிறார்கள். என்ன ஏமாற்று வேலை இது?
இந்த பிரச்சனையை இதோடு முற்று புள்ளி வைக்க நான் விரும்புகிறேன். வளர்க்க விரும்பவில்லை.
சகோதரர் கமல்ஹாசனுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். இந்த மாதிரியான அரசியல் நாகரீகமற்ற செயலை நிறுத்தி கொள்ள வேண்டும். மேலும் உங்கள் இணைய தளத்தில் யாரோ பதிவு செய்த அசிங்கமான வார்த்தைகள் உள்ளது. நீங்கள் இதை பார்த்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கமல்ஹாசன் கட்சியில் நான் ஏன் உறுப்பினராக வேண்டும்?
சமூக வலைதளங்களில் பெண்களை பற்றி அவதூறாக பேசுகிறார்கள். காட்டுகிறார்கள். தமிழகத்தில் பாரதிய ஜனதாவால் மட்டுமே மாற்றத்தை கொண்டு வர முடியும். பாரதீய ஜனதா தயவு இல்லாமல் தமிழகத்தில் இனி யாரும் ஆட்சி அமைக்க முடியாது.
தேனி மலை தீ விபத்து சம்பவம் மிகவும் வேதனை அளிக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் உயிரிழந்த விவேக், திவ்யா, தமிழ்செல்வன் வீட்டுக்கு நான் சென்று வந்தேன். மலை ஏற செல்லும் போது பாதுகாப்பு வழிமுறையை செய்ய வேண்டும். விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு சிறந்த நிபுணர்களை வரவழைத்து சிகிச்சை அளிக்க வேண்டும். கன்னியாகுமரி பகுதியில் கடலுக்கு சென்ற 500 மீனவர்கள் மீண்டும் கரைக்கு வரவில்லை. அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு அவர்களுக்கு உதவி செய்ய தயாராக இருக்கிறது.
நேற்று சோனியா காந்தி டெல்லியில் 20 கட்சி தலைவர்களுக்கு டீ-பார்ட்டி கொடுத்துள்ளார். அதில் சோனியா மகன் கலைஞர் மகள், லாலு மகன் இப்படி சிலர் தான் கலந்து கொண்டார்கள். இவர்களால் பாரதிய ஜனதா கட்சியின் உறுதி தன்மையை மாற்ற முடியாது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பணி ஆரம்பித்துவிட்டது என்று மத்திய மந்திரி கூறிவிட்டார். இந்த விசயத்தில் தேவையற்ற விவாதங்களை கிளப்ப வேண்டாம்.
இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். #Tamilnews






