என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஈரோட்டில் வக்கீல் வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு அடுத்த திண்டல் அரவிந்தர் நகரை சேர்ந்தவர் பாக்கியராஜ் (வயது 34). வக்கீல். இவரது மனைவி சரண்யா.

    பாக்கியராஜின் சொந்த ஊர் அவல்பூந்துறை ஆகும். அங்கு அவரது தந்தை சிவசுப்பிரமணியம் உள்ளார்.

    பாக்கியராஜ் தனது மனைவி, மகன் அஷ்ரத் (8) ஆகியோருடன் அரவிந்தர் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். அஷ்ரத் 3-ம் வகுப்பு படித்து வருகிறான்.

    பாக்கியராஜின் தந்தை உடல் நலக்குறைவாக உள்ளார். எனவே பாக்கியராஜ் தனது மனைவி, மகனுடன் அங்கு சென்றார். தற்போது மனைவியையும், மகனையும் அங்கு விட்டுள்ளார்.

    அவ்வப்போது அவர் மட்டும் அரவிந்தர் நகருக்கு வந்து செல்வார். எனவே பல நேரங்களில் பாக்கியராஜின் வீடு பூட்டி கிடக்கும். நேற்றும் பாக்கியராஜ் அவல் பூந்துறைக்கு சென்றிருந்தார்.

    இன்று காலை பக்கத்து வீட்டினர் பார்த்தபோது பாக்கியராஜ் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    பாக்கியராஜ் வீட்டில் இல்லாத நிலையில் அவரது வீடு திறந்து கிடந்தது அவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

    எனவே அவர்கள் இது பற்றி பாக்கியராஜிக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பாக்கியராஜ் திண்டல் அரவிந்தர் நகருக்கு வந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறி கிடந்தது. பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த துணிகளும் வெளியே வீசப்பட்டிருந்தன.

    பீரோவில் இருந்த 35 பவுன் நகையையும் காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

    இது குறித்து ஈரோடு தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

    கொள்ளை நடந்த இடத்தை பார்வையிட்டனர். தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர் அவர்கள் தடயங்களை சேகரித்தனர்.

    பாக்கியராஜ் அவ்வப்போதுதான் அரவிந்தர் நகர் வீட்டில் இருப்பதை மர்ம நபர்கள் கண்காணித்துதான் இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews
    ஈரோடு அருகே மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் ஆட்டோ டிரைவர் தீக்குளித்து பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு கனிராவுத்தர் குளம் பகுதியை சேர்ந்தவர் தஜ்மீர் (வயது30). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி பெபினா. இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகள் உள்ளார்.

    தஜ்மீருக்கும் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. பெபினா கோபித்து கொண்டு கேரளாவில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். தஜ்மீர் மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்தார். கடந்த 18-ந் தேதி தஜ்மீர் வீட்டில் இருந்தபோது வாழ்க்கையில் வெறுப்படைந்து மண்ணெயை உடம்பில் ஊற்றி தீ வைத்து கொண்டார்.

    அவரது அலறல் சத்தமும், வீட்டில் இருந்து கரும்புகை அதிக அளவில் வெளியானதை கண்டும் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர் அவரை மீட்டு 108 ஆம்புலன்சு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று தஜ்மீர் பரிதாபமாக இறந்தார். தகவலறிந்து தஜ்மீரின் மனைவி மற்றும் உறவினர்கள் வந்து அவரது உடலை பார்த்து கதறி அழுதது பார்ப்பதற்கு பரிதாபமாக இருந்தது. இன்று அவர் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு சத்தியமங்கலம் வனப்பகுதியில் மரத்தில் படுத்திருக்கும் சிறுத்தை எந்த நேரத்திலும் ரோட்டை கடக்கும் என்பதால் ரோட்டில் நடந்து செல்வோர்கள் கவனமாக சொல்லுமாறு வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் தற்போது சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    முன்பெல்லாம் அடர்ந்த வனப்பகுதியை யொட்டி சிறுத்தைகள் அவ்வளவாக வெளியே வருவது கிடையாது. ஆனால் இப்போது சிறுத்தைகள் சர்வ சாதாரணமாக ரோட்டோரம் நடமாடுகிறது. பட்டப்பகலில் ரோட்டை கடந்தும் செல்கிறது.

    மேலும் அடர்ந்த காட்டு பகுதியில் உள்ள மரங்களில் தஞ்சம் அடைந்திருக்கும் சிறுத்தைகள் இப்போது ரோட்டோர மரத்திலும் ஒய்யாரமாக சாய்ந்து படுத்து ரோட்டில் வருவோர், போவோரை நோட்டமிட்டு வருகிறது.

    திம்பத்தில் இருந்து தலமலை வழியாக தாளவாடி செல்லும் ரோட்டில் தல மலை வனப்பகுதியின் ரோட்டோரம் ஒரு மரத்தில் சிறுத்தை ஒன்று படுத்திருந்ததை அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    பிறகு இது குறித்து வனத்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.

    மரத்தில் படுத்திருக்கும் சிறுத்தை எந்த நேரத்திலும் ரோட்டை கடக்கும் ஆதலால் வாகனங்களில் செல்வோர்களும் ரோட்டில் நடந்து செல்வோர்களும் கவனமாக சொல்லுமாறு வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.  #tamilnews







    ஈரோட்டில் மிளகாய் பொடி தூவி பெண்ணிடம் கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு பெரியவலசு பகுதியை சேர்ந்தவர் காளியப்பன். இவரது மனைவி சுமதி (வயது 40). இவர் நேற்று சின்னமுத்து வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஹெல்மெட் அணிந்த 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தனர்.

    அந்த மர்ம நபர்கள் 2 பேரும் சுமதியிடம் இருந்து நகையை பறிக்க திட்டமிட்டு பின் தொடர்ந்து வந்தனர்.ஆனால் சுமதி தனது கழுத்தில் தங்க நகை அணிய வில்லை.

    தாலிக்கயிறு மட்டும் அணிந்திருந்தார். அதை தூரத்தில் இருந்து பார்த்த அந்த மர்ம நபர்களுக்கு சுமதி தங்க நகை அணிந்திருப்பது போல தெரிந்துள்ளது.

    எனவே சுமதி ஆள் நட மாட்டம் இல்லாத பகுதிக்கு வரும் வரை பின் தொடர்ந்து வந்தனர். ஆட் கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சுமதி வந்ததும் அவரது அருகில் அந்த மர்ம நபர்கள் வந்தனர்.

    கண் இமைக்கும் நேரத்தில் அந்த மர்ம நபர்கள் சுமதியின் முகத்தில் மிளகாய் பொடியை தூவினர். பின்னர் சுமதியின் கழுத்தில் கிடந்ததை கொள்ளையடிக்க முயன்றனர்.

    அப்போதுதான் அந்த நபர்களுக்கு சுமதி அணிந்திருந்தது தாலிக்கயிறு என்பது தெரியவந்தது. எனவே அதை பறிக்காமல் அந்த மர்ம நபர்கள் தப்பி ஓட்டம் பிடித்தனர்.

    ஆனால் தனது முகத்தில் மிளகாய் பொடி தூவி கழுத்தில் கை வைத்ததால் சுமதி பதறிப்போய் திருடன்... திருடன்... என்று சத்தமிட்டார். ஆனால் அந்த நேரத்தில் அங்கு யாரும் இல்லாததால் அந்த மர்ம நபர்களை பிடிக்க முடியவில்லை.

    இந்த சம்பவம் அந்த பகுதி மக்களை அச்சமடைய செய்துள்ளது. இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே இன்று அதிகாலை தடுப்பு சுவர் மீது அரசுபஸ் மோதிய விபத்தில் கண்டக்டர் உள்பட 2 பேர் தூக்கி வீசப்பட்டு காயம் அடைந்தனர்.
    கவுந்தப்பாடி:

    கரூர் அரசு போக்குவரத்து கழக டெப்போவுக்கு சொந்தமான அரசு பஸ் ஒன்று நேற்று இரவு 11.30 மணியளவில் மைசூரிலிருந்து புறப்பட்டு கரூருக்கு வந்து கொண்டிருந்தது. கரூரை சேர்ந்த டிரைவர் கண்ணன் (வயது 46) பஸ்சை ஓட்டினார். முசிறியை சேர்ந்த மனோகரன் (56) கண்டக்டராக இருந்தார்.

    அந்த பஸ்சில் பயணிகள் அதிகளவில் இருந்தனர். மேலும் பல பயணிகள் நின்றுகொண்டும் பயணம் செய்தனர். இன்று அதிகாலை 4.20 மணிக்கு கவுந்தப்பாடியை தாண்டி ஈரோடு நோக்கி சென்றது.

    கவுந்தப்பாடி அருகே கிருஷ்ணாபுரம் பிரிவில் வந்தபோது ரோட்டில் உள்ள தடுப்புச்சுவரில் பஸ் எதிர்பாராத வகையில் மோதியது.

    மோதிய வேகத்தில் பஸ்சின்முன்பக்க கண்ணாடி உடைந்தது. அதன் வழியாக பஸ்கண்டக்டர் மனோகரனும் மற்றும் வாசு (35) என்ற பயணியும் வெளியே தூக்கி வீசப்பட்டு விழுந்து படுகாயம் அடைந்தனர். மேலும் ஒரு பயணியும் படுகாயம் அடைந்தார்.

    படுகாயத்துடன் தப்பிய கண்டக்டர் உள்பட 3 பேருக்கும் கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். பிறகு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

    இன்று அதிகாலை இந்த விபத்து நடக்கும்போது அந்த வழியாக வேறு எந்த வாகனமும் வரவில்லை. இதனால் பெரும் விபத்தும் தவிர்க்கப்பட்டது.

    இந்த விபத்து குறித்து கவுந்தப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பொதுமக்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று மாலை அந்த வழியாக வந்த குன்னத்தூர், கவுந்தப்பாடி மற்றும் ஆயிக்கவுண்டன்பாளையம் செல்லும் அரசு பஸ்களை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்துள்ள துடுப்பதி ரோடு பகுதியில் உள்ளது சிலேட்டர் நகர். இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று மாலை அந்த வழியாக வந்த குன்னத்தூர், கவுந்தப்பாடி மற்றும் ஆயிக்கவுண்டன்பாளையம் செல்லும் அரசு பஸ்களை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவலறிந்த பெருந்துறை தாசில்தார் வீரலட்சுமி, ஆர்.ஐ. ரேவதி, பெருந்துறை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராம்பிரபு மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:-

    ஈரோட்டில் இருந்து பெருந்துறை, சிலேட்டர் நகர் வழியாக துடுப்பதி வரை 12ஏ என்ற டவுன்பஸ் இயக்கப்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு 8 முறை இந்த வழித்தடத்தில் இயக்கப்பட்டு வந்த இந்த டவுன் பஸ் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக காலை ஒருமுறை மட்டுமே இயக்கப்படுகிறது.

    இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் அனைத்து அரசு பஸ்களும் இந்த சிலேட்டர் நகர் பஸ் ஸ்டாப்பில் நிற்காமல் செல்வதால் இங்கிருந்து தினமும் வேலைக்கு செல்பவர்கள், பள்ளிக் குழந்தைகள், கல்லூரி மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

    இது தொடர்பாக பல முறை உரிய அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த பலனும் இல்லை. எனவே இந்த சிறைபிடிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    இது தொடர்பாக பெருந்துறை அரசு பஸ் டெப்போ மேனேஜர் முருகானந்தம் மற்றும் அதிகாரிகள் பெருந்துறை தாசில்தார் முன்னிலையில் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என உறுதியளித்ததின் பேரில் பொது மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    பண்ணாரி அருகே வனத்துறை ஊழியர்கள் அப்பகுதிக்கு சென்று வாகன ஓட்டிகளிடம் வனவிலங்குகள் நடமாடும் பகுதியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் கூறினார்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் பண்ணாரியை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தை இணைக்கும் இச்சாலை வழியாக 24 மணி நேரமும் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

    வனச்சாலையில் அவ்வப்போது வனவிலங்குகள் சாலையை கடப்பது வழக்கம். இந்த நிலையில் நேற்று காலை பண்ணாரி அருகே திம்பம் மலை அடிவாரத்தில் விநாயகர் கோவிலை அடுத்துள்ள 1-வது கொண்டை ஊசி வளைவை ஒட்டிய வனப்பகுதியில் காட்டெருமை ஒன்று சுற்றித்திரிந்தது.

    இதைக்கண்ட வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்திவிட்டு காட்டெருமையை செல்போனில் படம் பிடிக்க ஆர்வம் காட்டினர்.

    தகவலறிந்த பண்ணாரி வனசோதனைச் சாவடியிலிருந்து வனத்துறை ஊழியர்கள் அப்பகுதிக்கு சென்று வாகன ஓட்டிகளிடம் வனவிலங்குகள் நடமாடும் பகுதியில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் எனவும், காட்டெருமை மனிதர்களை கண்டால் தாக்க வாய்ப்புள்ளதாக அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் 2 நாட்கள் நடக்கும் தி.மு.க.மண்டல மாநாட்டு நிகழ்ச்சி குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே கோவை நெடுஞ்சாலையோரம் சரளை பகுதியில் தி.மு.க.மண்டல மாநாடு பிரமாண்டமாக நடக்க உள்ளது.

    வரும் 24-ந்தேதி, 25-ந்தேதி என 2 நாட்கள் நடக்கும் இந்த மாநாட்டில் ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர், சேலம், கரூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான தி.மு.க.வினர் கலந்து கொள்கிறார்கள்.

    மாநாட்டுக்கான அனைத்து ஏற்பாடுகள் நடந்து முடிவடையும் நிலையில் உள்ளது. பிரம்மாண்ட மேடை, பந்தல் என அமைக்கப்பட்டு அப்பகுதி திருவிழா கோலம் பூண்டுள்ளது.

    2 நாட்கள் நடக்கும் மாநாட்டு நிகழ்ச்சிகள் முழு விவரம் வருமாறு.-

    24-ந் தேதி(சனிக்கிழமை) காலை 9 மணிக்கு இசை நிகழ்ச்சியுடன் மாநாடு தொடங்கிறது. அரித்துவார மங்கலம் ஏ.கே.பழனிவேல் குழுவினரின் நாதஸ்வரம் தவிலிசை நடக்கிறது.

    காலை 10 மணிக்கு கோவி.செழியன் எம்.எல்.ஏ.மாநாட்டு கொடியேற்றி உரை நிகழ்த்துகிறார். 10.30 மணிக்கு வரவேற்பு குழு தலைவரும், முன்னாள் அமைச்சருமான முத்துசாமி வரவேற்று பேசுகிறார். தொடர்ந்து மாநாட்டு செயலாளர்கள் என்.நல்லசிவம், முபாரக், சிவலிங்கம், வீரபாண்டி, ஆ.ராஜா, ராஜேந்திரன் செல்வராஜ், சி.ஆர்.ராமசந்திரன், தமிழ்மணி, மு.முத்துசாமி, கார்த்திக் ஆகியோர் மாநாட்டு தலைவரை வழிமொழிந்து பேசுகிறார்கள்.

    பிற்பகல் 11.15 மணிக்கு மாநாட்டு தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான சுப்புலட்சுமி ஜெகதீசன், மாநாட்டு திறப்பாளர் திருச்சி சிவா எம்.பி.ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள்.

    மாலை 3 மணிக்கு புதுக்கோட்டை ஆக்காட்டி ஆறுமுகம் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடக்கிறது.

    அன்று இரவு 9 மணிக்கு முன்னாள் அமைச்சரும், முதன்மை செயலாளருமான துரைமுருகன் சிறப்புரையாற்றுகிறார். அத்துடன் மாநாட்டு முதல் நாள் நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது.

    மறுநாள் 25-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு இறையன்பன் குத்தூஸ் குழுவினரின் இசை நிகழ்ச்சியுடன் மாநாட்டின் 2-வது நாள் நிகழ்ச்சி தொடங்குகிறது. கட்சி முன்னோடிகள் பல்வேறு தலைப்புகளில் பேசுகிறார்கள்.

    மதியம் 12.30 மணியளவில் திண்டுக்கல் ஐ.லியோனி சிறப்புரையாற்றுகிறார். மாலை 3 மணிக்கு நாகூர் ஹனிபா நவுசாத்அலி குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    மாலை 4 மணிக்கு மாநாட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு படிக்கப்படுகிறது. தொடர்ந்து மாலை 6 மணியிலிருந்து பல்வேறு தலைப்புகளில் பேச்சாளர்கள் பேசுகிறார்கள்.

    இரவு 8 மணிக்கு கட்சியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் எழுச்சியுரை ஆற்றுகிறார். அதை தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மாநாட்டின் நிறைவு பேரூரையாற்றுகிறார்.  #Tamilnews

    ஈரோடு அருகே முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு, கொல்லம்பாளையம், பெரியகாட்டு நகரை சேர்ந்தவர் முருகேசன்(வயது68). ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல்.ஊழியர். இவரது மனைவி மல்லிகா(54). இவர்களுக்கு சங்கீதா என்ற மகள் உள்ளார். சங்கீதாவுக்கு திருமணமாகி பெங்களூரில் உள்ளார்.

    முருகேசனுக்கு சிறுநீரகம் செயல் இழந்து விட்டதாக கூறப்படுகிறது. இதற்காக அவர் டயாசெலிஸ் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் முருகேசன் மனவேதனையில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

    சம்பவத்தன்று வாழ்க்கையில் வெறுப்படைந்த முருகேசன் வீட்டில் இருந்த வி‌ஷ மாத்திரை எடுத்து தின்று விட்டார். சிகிச்சைக்காக முருகேசனை ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி முருகேசன் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பவானி அருகே இன்று மதியம் வேன் மோதிய விபத்தில் டிராக்டர் கவிழ்ந்து தீ பிடித்தது எரிய தொடங்கியது. இதில், 2 டிரைவர்களும் அதிர்ஷ்டவசமாக காயத்துடன் உயிர் தப்பினர்.
    பவானி:

    ஈரோடு மாவட்டம் பவானி அருகே ஊராட்சி கோட்டை உள்ளது. இந்த பகுதியில் பவானி 3 ரோட்டில் இருந்து ஒரு டிராக்டர் பவானி நோக்கி இன்று மதியம் வந்து கொண்டிருந்தது.

    அப்போது அந்த டிராக்டருக்கு பின்னால் ஈச்சேர் வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. திடீரென வேன் டிரைவரின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி ஓடி முன்னால் சென்ற டிராக்டர் மீது வேகமாக மோதியது. இதில் அந்த டிராக்டர் 3 தடவை குட்டிகர்ணம் அடித்து கவிழ்ந்தது.

    இதில் மின்சார என்ஜின் உராய்வு ஏற்பட்டு டிராக்டர் தீ பிடித்து குபு... குபு...வென எரிந்தது. அக்கம் பக்கத்தினர் இதை கண்டு உடனடியாக பவானி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

    உடனடியாக தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ் குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். சுமார் 30 நிமிடம் போராடி தீயை அணைத்தனர்.

    இந்த விபத்தில் டிராக்டர் டிரைவர் தேவராஜ், வேன் டிரைவர் சந்துரு ஆகியோர் காயத்துடன் உயிர் தப்பினர். இருவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பவானி போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையில் போலீசார் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    இந்த விபத்தால் மேட்டூர் ரோட்டில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் நேற்று பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதையடுத்து ஈரோடு பெரியார் வீதியில் உள்ள பெரியார் இல்லத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
    ஈரோடு:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டது. இதையொட்டி பல இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.

    பெரியார் சிலை மீண்டும் தாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து ஈரோடு பெரியார் வீதியில் உள்ள பெரியார் இல்லத்துக்கு மீண்டும் நேற்று இரவு முதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    அங்கு சுழற்சி அடிப்படையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதேபோல் ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள பெரியார் சிலைக்கும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதேபோல் கோபி, சத்தியமங்கலம், பெருந்துறை, அந்தியூர் உள்பட ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து பெரியார் சிலைகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. #tamilnews

    பெருந்துறையில் நடைபெறும் மாநாட்டை பேனர்களோ, ஆர்ச்சிகளோ, கட் அவுட்டுகளோ இல்லாத மாநாடாக நடத்த வேண்டும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
    ஈரோடு:

    தி.மு.க மண்டல மாநாடு வரும் 24, 25-ந்தேதி பெருந்துறை அடுத்த சரளையில் நடைபெற உள்ளது. இதற்காக பிரம்மாண்ட பந்தல், முகப்பு அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    மாநாட்டு திடலில் தி.மு.க. வரலாற்றை தெரிந்து கொள்ளும் வகையில் புகைப்பட கண்காட்சி அரங்கங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

    இதனை தினமும் 1000-க்கணக்கான மக்கள் பார்த்து வருகிறார்கள். இதுகுறித்து தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளரும் மாநாட்டு வரவேற்பு குழு தலைவருமான சு.முத்துசாமி கூறியதாவது:-

    ஈரோட்டில் நடைபெறும் மாநாடு பிரம்மாண்ட முறையில் நடைபெற உள்ளது. இதற்காக 100 ஏக்கர் பரப்பளவில் 41000 ஆயிரம் சதுரஅடி பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. 1 லட்சம் பேர் அமரும் வகையிலும், 5 லட்சத்துக்கும் அதிகமாக தொண்டர்கள் கலந்து கொள்ளும் வகையிலும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. சுமார் 500 ஏக்கரில் வாகனங்கள் நிறுத்தும் இடம் அமைக்கப்பட்டு உள்ளது.

    புதிதாக உருவாக்கப்பட்ட நவீன கழிப்பறைகள், சுகாதாரமான குடி தண்ணீர், உணவு ஏற்பாடுகள் என அனைத்து வசதிகளும் சிறப்பான முறையில் நடந்து வருகிறது. மாநாட்டிற்காக தமிழகம் முழுவதும் இருந்து வரும் தி.மு.க. பிரமுகர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் 80 திருமண மண்டபங்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டு உள்ளது. பேனர்களோ, ஆர்ச்சிகளோ, கட் அவுட்டுகளோ இல்லாத மாநாடாக இதை நடத்த வேண்டும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    வரும் 26-ந்தேதி இலவச திருமணம் நடத்துவதற்கான ஏற்பாடு நடந்து வருகிறது. மாநாட்டில் கலந்து கொள்ளும் பெண்களுக்காக தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #tamilnews
    ×