என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோட்டில் வக்கீல் வீட்டில் 35 பவுன் நகைகள் கொள்ளை
    X

    ஈரோட்டில் வக்கீல் வீட்டில் 35 பவுன் நகைகள் கொள்ளை

    ஈரோட்டில் வக்கீல் வீட்டின் பூட்டை உடைத்து 35 பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு அடுத்த திண்டல் அரவிந்தர் நகரை சேர்ந்தவர் பாக்கியராஜ் (வயது 34). வக்கீல். இவரது மனைவி சரண்யா.

    பாக்கியராஜின் சொந்த ஊர் அவல்பூந்துறை ஆகும். அங்கு அவரது தந்தை சிவசுப்பிரமணியம் உள்ளார்.

    பாக்கியராஜ் தனது மனைவி, மகன் அஷ்ரத் (8) ஆகியோருடன் அரவிந்தர் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். அஷ்ரத் 3-ம் வகுப்பு படித்து வருகிறான்.

    பாக்கியராஜின் தந்தை உடல் நலக்குறைவாக உள்ளார். எனவே பாக்கியராஜ் தனது மனைவி, மகனுடன் அங்கு சென்றார். தற்போது மனைவியையும், மகனையும் அங்கு விட்டுள்ளார்.

    அவ்வப்போது அவர் மட்டும் அரவிந்தர் நகருக்கு வந்து செல்வார். எனவே பல நேரங்களில் பாக்கியராஜின் வீடு பூட்டி கிடக்கும். நேற்றும் பாக்கியராஜ் அவல் பூந்துறைக்கு சென்றிருந்தார்.

    இன்று காலை பக்கத்து வீட்டினர் பார்த்தபோது பாக்கியராஜ் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    பாக்கியராஜ் வீட்டில் இல்லாத நிலையில் அவரது வீடு திறந்து கிடந்தது அவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

    எனவே அவர்கள் இது பற்றி பாக்கியராஜிக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பாக்கியராஜ் திண்டல் அரவிந்தர் நகருக்கு வந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறி கிடந்தது. பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த துணிகளும் வெளியே வீசப்பட்டிருந்தன.

    பீரோவில் இருந்த 35 பவுன் நகையையும் காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

    இது குறித்து ஈரோடு தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

    கொள்ளை நடந்த இடத்தை பார்வையிட்டனர். தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர் அவர்கள் தடயங்களை சேகரித்தனர்.

    பாக்கியராஜ் அவ்வப்போதுதான் அரவிந்தர் நகர் வீட்டில் இருப்பதை மர்ம நபர்கள் கண்காணித்துதான் இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews
    Next Story
    ×