என் மலர்
ஈரோடு
ஈரோடு அடுத்த பெரிய அக்ரகாரத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(வயது47). இவரது மனைவி பிரேமா.
ஈரோடு அருகே உள்ள வெட்டுக்காட்டு வலசில் உள்ள ஒரு பிரிண்டிங் (பட்டறையில்) தொழிற்சாலையில் பால கிருஷ்ணன் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
தொழிற்சாலையில் உள்ள ஒரு பாய்லர் பழுதாகி இருந்தது. இந்த பழுதை பாலகிருஷ்ணன் சரி செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக பாய்லரில் உள்ள கொதிநீர் ‘குபீர்’ என அவர் மீது கொட்டியது.
இதில் உடல் முழுவதும் கொதி நீர் விழுந்து உடல் வெந்து பாலகிருஷ்ணன் துடித்தார்.உடனடியாக அவரை மீட்டு ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெருந்துறை புதிய பஸ் நிலையம் பகுதியில் கோட்டைமேடு மாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பொங்கல் விழா நாளை வியாழக்கிழமை நடைபெற உள்ளது.
இதற்காக அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் கோவிலின் அருகே ரோட்டில் பிளக்ஸ் பேனர் வைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த பிளக்ஸ் பேனரை அந்த பகுதியில் இருந்த டிரான்ஸ்பார்மர் அருகே வைத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக பிளக்ஸ் பேனர் டிரான்ஸ்பார்மர் மீது சாய்ந்தது. அதனை தாங்கி பிடிக்க முயன்ற அனைவரும் டிரான்ஸ்பார்மரின் உயர் அழுத்த மின்சாரம் தாக்கியதில் படுகாயமடைந்தனர்.
இதில் காயமடைந்த கோட்டை மேடு காலனி பகுதியை சேர்ந்த சரத் குமார் (17), நந்தகுமார் (14), வேலுமணி ஆகிய 3 பேர் பெருந்துறை தனியார் மருத்துவமனையிலும், கவுதம் (15), சேமலையப்பன் (20), கண்ணன் (15), தனுஷ் (18) ஆகிய 4 பேர் பெருந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
மேல் சிகிச்சைக்காக அவர்கள் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக பெருந்துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்தில் பழுதடைந்த டிரான்ஸ்பார் மரை மின்சார வாரிய ஊழியர்கள் சரி செய்தனர். இதனால் இந்த பகுதியில் 1 மணி நேரம் மின்தடை ஏற்பட்டது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முதன் முறையாக இந்த ஆண்டு பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கு அரசு பொதுத்தேர்வு நடைபெற்றது. தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. www.tnresults.nic.in, www.dge.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
பிளஸ் 1 தேர்வில் பள்ளி மாணாக்கராகவும் தனித் தேர்வர்களாகவும் பதிவு செய்தோரின் மொத்த எண்ணிக்கை 8,63,668. பள்ளி மாணாக்கராய் தேர்வு எழுதியோர் 8,47,648. மாணவியரின் எண்ணிக்கை 4,54,215. மாணவர்களின் எண்ணிக்கை 3,93,433. பொதுப் பாடப்பிரிவில் தேர்வு எழுதியோரின் எண்ணிக்கை 7,92,331. தொழிற்பாடப் பிரிவில் தேர்வு எழுதியோரின் எண்ணிக்கை 55,317. தேர்ச்சி பெற்றவர்கள் 91.3 சதவீதம். மாணவியர் 94.6 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 87.4 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 7.2 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 7070. இதில் 2054 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. 2724 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 188 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
36,380 மாணவர்கள் 500-க்கும் மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அதில் மாணவியர் எண்ணிக்கை 25412. மாணவர்களின் எண்ணிக்கை 10968.
தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு மாவட்டம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் 97.3 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அடுத்து திருப்பூர் மாவட்டம் 96.4 சதவீத தேர்ச்சியுடன் இரண்டாம் இடத்தையும், கோவை மாவட்டம் 96.2 சதவீத தேர்ச்சியுடன் மூன்றாமிடத்தையும் பிடித்துள்ளன. #TNHSCResult #PlusOneResult2018 #ErodePlusonetop
ஈரோடு அருகே உள்ளது கஸ்பாபேட்டை. இதையடுத்துள்ள நாதகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 50).
இவர் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி லலிதாராணி (38). கணவரும், மனைவியும் நேற்று இரவு வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர்.
அதிகாலை 1 மணி அளவில் மர்ம ஆசாமிகள் 2 பேர் வீட்டின் பின்னால் உள்ள காம்பவுண்டு சுவர் ஏறி குதித்தனர்.
வீட்டின் சமையல் அறை கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பிறகு வீட்டுக்குள் இருந்த பீரோவையும் நைசாக திறந்தனர். சத்தம் கேட்டு லலிதா ராணி எழுந்தார்.

அப்போது ஒரு கொள்ளையன் அவரை 3 அடி நீளம் கொண்ட இரும்பு கம்பியால் ஓங்கி அடித்தான். இதில் அவர் நிலை குலைந்தார்.
பிறகு அவரது முகத்தில் கொள்ளையன் டார்ச் லைட்டால் அடித்தான். இதில் அவர் கண் கூசியது. இதை பயன்படுத்தி சிவக்குமார் கழுத்தில் கிடந்த 4 பவுன் செயினையும் பறித்தான்.
பின்னர் கொள்ளையர்கள் 2 பேரும் அங்கிருந்து வீட்டின் பின்புறம் வழியாக ஓடி தப்பிவிட்டனர். கொள்ளையர்கள் 2 பேருக்கும் 30 வயது இருக்கும். ஆஜானு பாகு தோற்றத்தில் இருந்தார்கள்.
அவர்கள் பெர்முடாஸ் அணிந்திருந்தனர். 2 பேரும் முகத்தை மறைத்து முகமூடி அணிந்திருந்தனர்.
இதேபோல கஸ்பாபேட்டை அரசு போக்குவரத்து நகரிலும் முகமூடி கொள்ளை நடந்துள்ளது. அந்த பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (47). பெருந்துறை அரசு போக்குவரத்து கழக நிறுவனத்தில் டெக்னீசியனாக வேலை பார்த்தார்.
நேற்று இவர் பணிக்கு சென்றிருந்தார். வீட்டில் அவரது மனைவி அம்பிகா (40), தந்தை ஆறுமுகம் (68), தாய் பாப்பாத்தி (62) மற்றும் உறவினர்கள் இருந்தனர்.
இரவில் அவர்கள் தூங்கிக் கொண்டு இருந்தனர். வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 2 பேர் வீட்டுக்குள் புகுந்தனர். அவர்கள் முகமூடி அணிந்திருந்தனர்.
வீட்டில் இருந்த பாப்பாத்தியின் கழுத்தில் கிடந்த செயினை கொள்ளையன் ஒருவன் பறித்தான். அந்த செயின் கவரிங் செயின் ஆகும்.
தடுக்க முயன்ற அவரது கணவர் ஆறுமுகம் தலையில் இரும்பு கம்பியால் ஒருவன் ஓங்கி அடித்தான். இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.
வலியால் ரத்தம் சொட்ட சொட்ட அவர் துடித்தார். பிறகு கொள்ளையர்கள் வீட்டின் பின் பக்கம் வழியாக தப்பி ஓடிவிட்டனர்.
இந்த 2 கொள்ளை சம்பவம் குறித்தும் ஈரோடு தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இரு சம்பவத்திலும் ஒரே கொள்ளை கும்பல்தான் கைவரிசை காட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து நடந்த இந்த 2 முகமூடி கொள்ளை சம்பவத்தால் அந்த பகுதி மக்களிடையே பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. #Tamilnews
ஆப்பக்கூடல்:
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே உள்ள அத்தாணி கருப்பகவுண்டன் புதூரை சேர்ந்தவர் சரவணன் (வயது 35).
இவருக்கு சொந்தமான விவசாய தோட்டம் பூனைக் கல் என்ற இடத்தில் உள்ளது. அருகே வனப்பகுதி இருப்பதால் தோட்டத்தில் வன விலங்குகள் புகாமல் இருக்க தோட்டத்தைசுற்றி மின் வேலி அமைத்திருந்தார்.
இன்று காலை சரவணன் மற்றும் அவரது மனைவி சத்யா(36)வும் தோட்டத்துக்குசென்றனர். அப்போது இருவரது கைகளும் தவறுதலாக மின்கம்பியில் பட்டுவிட்டது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.
உடனடியாக இருவரையும் மீட்டு ஆம்புலன்சில் கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் வழியிலேயே கணவர் சரவணன் பரிதாபமாக இறந்தார். படுகாயத்துடன் சத்யா கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மின்சாரம் தாக்கி பலியான சரவணனுக்கு உமாஸ்ரீ (6) என்ற மகளும், நிருபம்(1) என்ற ஒரு மகனும் உள்ளனர்.
இந்த பரிதாப சம்பவம் குறித்து ஆப்பக்கூடல் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொடுமுடி:
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள பனப்பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது38). அரசியல் பிரமுகரான இவரது அண்ணன் தங்கவேல்.
ரமேஷ் கரூரிலும், தங்கவேல் காங்கயத்திலும் ஸ்டடி (கல்வி) நிறுவனம் நடத்தி வருகிறார்கள். இருவரும் அவ்வப்போது சொந்த ஊரான பனப்பாளையத்துக்கு சென்று வருவார்கள்.
நேற்று மாலை ரமேஷ் பனப்பாளையம் வந்திருந்தார். வீட்டை சுத்தம் செய்து விட்டு மஞசள் வாங்க கொண்டு வந்த ரூ.1½ லட்சத்தை ஒரு சூட்கேசில் வைத்து பீரோவில் வைத்தார். பிறகு கரூர் சென்று விட்டார்.
இதை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் நள்ளிரவில் வீட்டின் முன் பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். மேலும் 2 அறைகளையும் உடைத்தனர். பீரோவையும் உடைத்து அதில் இருந்த 3 பவுன் செயின், 2 வளையல், தோடு, மோதிரம் உள்பட 6¼ பவுன் நகைகள் கொள்ளையடித்தனர்.
பிறகு சூட்கேசை அப்படியே தூக்கி கொண்டு சென்றனர். சிறிய தூரம் சென்றதும் சூட்கேசை உடைத்து அதில் இருந்த 1½ லட்சம் பணத்தையும் கொள்ளையடித்து சூட்கேசை தூக்கி வீசி விட்டு தப்பி சென்று விட்டனர்.
இந்த துணிகர கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து கொடுமுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.
ஈரோடு:
ஈரோட்டில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மத்திய அரசை கண்டித்து தெருமுனை பிரச்சாரம் நடந்தது.
ஈரோடு மரப்பாலத்தில் தெருமுனை பிரச்சாரம் தொடங்கியது. மாநகர் மாவட்ட தலைவர் ஈ.பி.ரவி தெரு முனை பிரச்சாரத்திற்கு தலைமை தாங்கினார்.
மண்டல தலைவர்கள் ஆயுப்அலி, திருச்செல்வம், விவேகானந்தன், ஜாபர்சாதீக், துணை தலைவர்கள் ராஜேஸ் ராஜப்பா, கோதண்டபாணி, பாபு என்கிற செங்காடச்சலம், மாவட்ட பொது செயலாளர்கள் கண்ணப்பன், ஆறுமுகம். மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் சுரேஷ், துணை தலைவர் பாட்ஷா, சின்னசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை தொடர்ந்து சூரம்பட்டி நால் ரோடு, சூளை பஸ் நிறுத்தம், அக்ரஹாரம் போன்ற பகுதிகளிலும் காங்கிரஸ் சார்பில் தெருமுனை பிரச்சாரம் நடந்தது. இது குறித்து மாநகர் மாவட்ட தலைவர் ஈ.பி.ரவி கூறியதாவது.-
மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து மக்களை வஞ்சித்து வருகிறது. இதை கண்டித்து காங்கிரஸ் சார்பில் தெருமுனை பிரச்சாரம் செய்ய வேண்டும் என தலைவர் ராகுல்காந்தி அறிவுறுத்தி இருந்தார். அதன்படி இந்த தெருமனை பிரச்சாரம் நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள நந்தவனப்பட்டியை சேர்ந்தவர் ரகீம்ஷேட். இவரது மகன் முகமது அனாஸ் (வயது 22).
ஈரோடு பெருந்துறை ரோடு, கே.சி.பி. தோட்டத்தை சேர்ந்தவர் ஷகின் அலி. இவரது மகன் முகமது மசூத் அலி (21). இவர்கள் 2 பேரும் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு மாணவர்கள்.
இவர்கள் நேற்று மோட்டார் சைக்கிளில் கல்லூரியில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி வந்து கொண்டு இருந்தனர். மோட்டார் சைக்கிளை முகமது மசூத் அலி ஓட்டினார்.
சத்தியமங்கலம்-அத்தாணி சாலையில் உள்ள தனியார் மண்டபம் அருகே வந்தபோது அந்த வழியாக வந்த டிராக்டரும், மோட்டார் சைக்கிளும் மோதின.
இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் முகமது அனாஸ் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக இரவில் இடி-மின்னலுடன் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோபி, தாளவாடி, சத்தியமங்கலம், அந்தியூர், அம்மாபேட்டை, கொடுமுடி உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் இந்த பகுதிகளில் உள்ள குளங்கள், நீர்நிலைகள் நிரம்பி உள்ளன.
நேற்று முன்தினம் கோபி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பெய்த பலத்த மழையால் 1 கோடி மதிப்பிலான வாழை தோட்டங்கள் சேதம் அடைந்தன. இதே போல் அந்தியூர் பகுதியிலும் பலத்த சேதம் அடைந்தன.
இந்நிலையில் நேற்று இரவும் சத்தியமங்கலம், கொடிமுடி, பவானிசாகர், சென்னிமலை உள்ளிட்ட பகுதிகளில் இடி-மின்னலுடன் பரவலாக மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு.-
சிவகிரி -8.3, வெள்ளக்கோவில்-6.4, கொடிவேரி -2.2, பவானிசாகர் அணைக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இன்று காலை 9 மணி நேர நிலவரப்படி பவானிசாகர் அணை 50.44 அடியாக உள்ளது.
அணைக்கு வினாடிக்கு 794 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்ருக்கிறது. அணையில் இருந்து குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 150 கனஅடி நீரும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி நீரும் திறந்து விடப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள பாலமலை களக்காட்டை சேர்ந்தவர் செல்லப்பன். இவரது மகள் லதா (வயது23).
இவருக்கும் அதே பாலமலை பகுதி திம்பம்பதியை சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகன் தமிழரசன் (28) என்பவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு நாளை மறுநாள் திருமணம் நடக்க இருந்தது.
திருமணத்தையொட்டி புதிய ஜவுளி வாங்க இருவர் வீட்டாரும் அம்மாபேட்டை அருகே உள்ள குருவரெட்டியூருக்கு சென்றனர். அவர்களுடன் மணப்பெண் லதாவும் ஜவுளி எடுக்க சென்றார்.
ஜவுளி கடையில் உறவினர்கள் தங்களுக்கு பிடித்த புதிய துணிகளை தேர்வு செய்து வாங்கி கொண்டிருந்தனர்.
அப்போது மணமகளை தேடினர். ஆனால் அங்கு அவரை காணவில்லை. அவர்களுடன் வந்த புதுப்பெண் லதா திடீரென மாயமாகி விட்டார்.
இதனால் உறவினர்களிடையே பரபரப்பும், சலசலப்பும் ஏற்பட்டது. கடை உள்ளேயும், வெளியேயும் ஓடி வந்து தேடி பார்த்தனர். ஆனால் கிடைக்கவில்லை.
இது குறித்து புதுப்பெண்ணின் தந்தை அம்மாபேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுப்பெண் லதாவை யாரேனும் கடத்தி சென்றார்களா? அல்லது வேறு யாருடனும் ஏற்பட்ட காதல் விவகாரத்தில் மாயமாகி விட்டாரா? என்ற பல்வேறு சந்தேகத்துடன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அதன்படி இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. ஈரோடு மாவட்டத்தை பொருத்த வரை 50 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
மீதி 50 சதவீத கடைகள் வழக்கம் போல் திறந்திருந்தன. டீக்கடைகள், ஓட்டல்கள் மற்றும் மருந்து கடைகள் அனைத்தும் திறந்திருந்தன. ஈரோடு கடை வீதிகளிலும் பாதிக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஈரோடு நேதாஜி மார்க்கெட்டில் பழ வியாபாரிகள் அனைவரும் கடைகளை அடைத்திருந்தனர்.
அதே சமயம் பஸ்கள் அனைத்தும் வழக்கம் போல் ஓடியது. ஈரோடு பஸ் நிலையத்தில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் அனைத்தும் ஓடியது. பஸ்களில் அதிகளவில் கூட்டம் இல்லை. மேலும் ஈரோடு நகரின் முக்கிய பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டிருந்தனர். இதே போல் ஈரோடு ரெயில் நிலையத்திலும் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
மாவட்டத்தில் முக்கிய ஊர்களான கோபி, சத்திய மங்கலம், பெருந்துறை, பவானி, கொடுமுடி, அந்தியூர் போன்ற அனைத்து ஊர்களிலும் 50 சதவீத கடைகள் மட்டும் அடைக்கப்பட்டிருந்தன.
அதே சமயம் பஸ் போக்குவரத்தில் எந்த பாதிப்பும் இல்லை வழக்கம் போல் ஓடியது.
தூத்துக்குடி துப்பாக்கி சம்பவத்தை கண்டித்து ஈரோடு மாவட்டத்தில் வக்கீல்கள் இன்று ஒரு நாள் கோர்ட்டு பணிகளை புறக்கணித்தனர். மாவட்டம் முழுவதும் 1500 வக்கீல்கள் கோர்ட்டுக்கு செல்லவில்லை.
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த ஊஞ்சலூர் அருகே உள்ள காசி பாளையத்தை சேர்ந்தவர் சண்முகம் (70). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரது 2-வது மகன் விக்னேஷ் (25).
இவர் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்துள்ளார். சென்னையில் ஒரு கார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார்.
இதற்கிடையே விக்னேசுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்தது. இன்று (வெள்ளிக்கிழமை) கொடுமுடியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் விக்னேஷ் திருமணம் நடக்க இருந்தது. இதற்காக இருவர் வீட்டு உறவினர்களும் திருமண மண்டபத்தில் கூடினர்.
திருமணத்தையொட்டி கடந்த ஒரு வாரத்துக்கு முன்பே சென்னையில் விடுப்பு எடுத்து விக்னேஷ் புது மாப்பிள்ளை களையுடன் ஊருக்கு வந்தார்.
தனக்கு திருமணம் நடப்பதையொட்டி நேற்று ஊரில் உள்ள தனது நண்பர்களை வரவழைத்து “பார்ட்டி’’யும் கொடுத்து சந்தோஷமாக இருந்தார்.
இந்த நிலையில் கொடுமுடி அருகே உள்ள வெங்கம்பூர் குரங்கன் பாளையம் ரெயில்வே தண்டவாள பகுதியில் புதுமாப்பிளை விக்னேஷ் தலை துண்டிக்கப்பட்டு பிணமாக கிடந்தார். அவர் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இது பற்றி கிடைத்த தகவல்படி ஈரோடு ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விக்னேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புது மாப்பிள்ளை தற்கொலையில் மர்மம் நீடித்து வருகிறது. சந்தோஷமாக சென்னையில் இருந்து வந்த விக்னேஷ் நண்பர்களுக்கு திருமண பார்ட்டியும் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் அவர் திடீரென தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்ய காரணம் என்ன? அவருக்கு திருமணம் பிடிக்கவில்லையா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்ற பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இன்று மண மாலை சூட இருந்த புது மாப்பிள்ளை விக்னேசின் மர்ம சாவு அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.






