என் மலர்
ஈரோடு
தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபான கடைகளை மூட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கான டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. அதன்பின்னர் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக வகை மாற்றம் செய்யப்பட்ட இடங்களில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், முறையான அறிவிப்பு வெளியிடாமல் மதுபானக்கடைகள் திறக்கப்பட்டு இருந்தால் மூட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.
ஐகோர்ட்டு உத்தரவின்படி ஈரோடு மாவட்டத்தில் 49 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதனால் 125 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்தன. இந்தநிலையில் தமிழ்நாட்டில் ஊரகப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை திறக்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கியது. அதன்பிறகு மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
ஈரோடு மாநகர் பகுதியில் 19 இடங்களில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் நேற்று திறக்கப்பட்டன. அதன்படி, ஈரோடு பிரகாசம் வீதி, ஈரோடு பஸ் நிலையம் அருகில் வீரபத்திரா வீதி, நாராயணவலசு விவேகானந்தர்சாலை, பஸ் நிலையம் அருகில் சேலம் மெயின்ரோடு, ஈரோடு மேட்டூர்ரோடு அபிராமி திரையரங்கம் ரோட்டில் 2 கடைகள், மூலப்பட்டறை வ.உ.சி. பூங்கா எதிரில், திண்டல், சம்பத்நகர், நேதாஜிரோடு, சம்பத்நகர் அண்ணா திரையரங்கம் ரோடு, ஈரோடு பெருந்துறை ரோடு, பவானி ரோடு, வீரப்பம்பாளையம், ஈரோடு பஸ் நிலையம், அகில்மேடு வீதி, சூளை சத்திரோடு, மரப்பாலம் நேதாஜி ரோடு, வில்லரசம்பட்டி நசியனூர் ரோடு ஆகிய இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு நேற்று முதல் செயல்பட்டு வருகின்றன.
ஈரோடு:
ஈரோடு கொல்லம்பாளையத்தை சேர்ந்தவர் கேசவன். இவரது மகன் ராஜேஸ் (வயது 31). இவர் ஷேர் மார்க்கெட் தொழில் நடத்தி வருகிறார். இவர் நேற்று இரவு கொல்லம்பாளையம் கரூர் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்தது.
அந்த கார் தாறுமாறாக இயக்கப்பட்டதாக தெரிகிறது. எனவே அந்த காரை ராஜேஸ் தடுத்து நிறுத்தினார். காரை ஓட்டி வந்த ஈரோடு சாஸ்திரி நகர், விவேகானந்தர் வீதியை சேர்ந்த நரசிம்மனின் மகன் சிலம்பரசனை, ராஜேஸ் கண்டித்தார்.
அவருடன் சேர்ந்து அந்த பகுதி மக்களும் சிலம்பரசனை எச்சரித்துக் கொண்டு இருந்தனர். அப்போது சிலம்பரசனுக்கும் ராஜேசுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது ராஜேசின் இடது கை கட்டை விரலை சிலம்பரசன் கடித்து துப்பினார். இதில அந்த விரல் துண்டானது. சிகிச்சைக்காக ராஜேஸ் ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
இது குறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலம்பரசனை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. கைதான சிலம்பரசன் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள சோலார்புரம் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 40).
இவர் அந்த பகுதியில் கிரானைட் கற்களுக்கு பாலீஸ் தீட்டும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இங்கு ஏராளமான தொழிலாளர்களும் பணிபுரிகின்றனர்.
வழக்கமாக இரவு நேரத்தில் வேலை முடிந்ததும் தொழிற்சாலையை மூடி விட்டு உரிமையாளர் இளங்கோவனும் தொழிலாளர்களும் சென்று விடுவது வழக்கம்.
ஆனால் நேற்று இரவு வேலை முடிந்ததும் சில தொழிலாளர்கள் சென்று விட்டனர். தொழிற்சாலைக்குள் இளங்கோவன் உள்பட 10 பேர் படுத்து தூங்கினர்.
இன்று அதிகாலை 5 மணி அளவில் தொழிற்சாலையின் கதவை தட்டும் சத்தம் கேட்டது. உரிமையாளர் இளங்கோவன் எழுந்த வந்து கதவை திறந்தார்.
அப்போது அங்கு வட மாநில வாலிபர்கள் 5 பேர் நின்றனர். அவர்கள் இளங்கோவனிடம் தண்ணீர் கேட்டனர். எனவே அவர்களை இளங்கோவன் தொழிற்சாலைக்குள் அனுமதித்தாக தெரிகிறது.
தொழிற்சாலைக்குள் வந்த அந்த வட மாநில வாலிபர்கள் அங்கு இளங்கோவன் மட்டுமே இருக்கிறார் என்று அவர்கள் நினைத்தனர். எனவே இளங்கோவனினை அவர்கள் மிரட்டி பணம் கேட்டனர்.
மேலும் அங்கு கொள்ளையடிக்க முயன்றதாகவும் தெரிகிறது. இதை எதிர்பாராத இளங்கோவன் சத்தமிட்டார். அவரது சத்தம் கேட்டு அங்கு தூங்கிக்கொண்டு இருந்த தொழிலாளர்கள் ஓடி வந்தனர்.
அவர்களை பார்த்ததும் அந்த வட மாநில வாலிபர்கள் 5 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர். அவர்களை இளங்கோவனும் தொழிலாளர்களும் துரத்தி சென்றனர். அக்கம் பக்கத்தினர் சிலரும் அங்கு வந்து அந்த வட மாநில வாலிபர்களை பிடிக்க முயன்றனர்.
அந்த வாலிபர்களில் 2 பேர் மட்டுமே பொது மக்களிடம் சிக்கினர். மற்ற 3 வாலிபர்கள் அங்கிருந்த தப்பி ஓடிவிட்டனர்.
பிடிபட்ட வட மாநில வாலிபர்களிடம் பொதுமக்கள் விசாரித்தனர். ஆனால் அந்த வாலிபர் எந்த தகவலையும் கூறவில்லை.
ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பிடிபட்ட 2 வாலிபர்களையும் அங்க ஒரு மரத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து மொடக்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
திருட்டு தொடர்பான வழக்குகளை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள தனிப்படைக்கு நியமிக்கப்பட்ட ஈரோடு தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் அங்கு வந்தார்.
பொதுமக்களிடம் இருந்து அந்த 2 வாலிபர்களையும் மீட்ட போலீசார் அவர்களை ஈரோடு தாலுகா போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.#tamilnews
கோபி அருகே உள்ள குள்ளம்பாளையம் அரசு உயர் நிலைப்பள்ளியில் 25-வது ஆண்டு வெள்ளி விழாவையொட்டி கட்டப்பட்டுள்ள கலையரங்கம் திறப்பு விழா இன்று நடந்தது. கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பால முரளி வரவேற்றார். கலையரங்கை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்து பேசியதாவது:-
1-ம் வகுப்பு மாணவர்களுக்கு கியூ ஆர் திட்டம் மூலம் பாடங்கள் கற்று கொடுக்கப்படும். இந்த கோடு மூலமாக செல்போனில் பாடத்தை தெரிந்து கொள்ளலாம். 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அனைவருக்கும் இலவச கல்வி கற்றுத்தர இந்த அரசு முனைப்புடன் செயல்பட உள்ளது. புதிய சீருடைகள் மாற்றி அமைத்ததன் மூலம் அரசு பள்ளி மாணவர்கள் தாழ்வு மானப்பான்மை இல்லாமல் பள்ளிக்கு செல்லும் நிலை உள்ளது.
1,6,9,11 ஆகிய வகுப்புகளுக்கு பாடத்திட்டங்கள் இந்த ஆண்டு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக கடந்த 8 மாதத்துக்கும் மேலாக கல்வியாளர்கள் உழைத்து இந்த புதிய புத்தகங்களை உருவாக்கி உள்ளனர். இந்த புத்தகம் சி.பி.எஸ்.இ.க்கு இணையாக இருப்பதாக அனைவரும் பாராட்டுகிறார்கள். இந்தியாவையே திரும்பி பார்க்கும் அளவுக்கு தமிழக கல்வி துறை மாறும் என்பதில் ஐயமில்லை. நாம் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்ற நிலையை இந்த அரசு உருவாக்கி உள்ளது. இந்தியாவிலேயே எவரும் பெற முடியாத மடி கணினி திட்டத்தையும், இலவச சைக்கிள் வழங்கும் அறிமுகப்படுத்தியது ஜெயலலிதா தான். அவரது ஆசியோடு இந்த அரசு நடக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறும் போது, ‘‘கட்டாய கல்வி சட்டத்தில் தனியார் பள்ளிகளில் தரப்படும் கல்வியை தமிழக அரசு ஊக்கப்படுத்தவில்லை. கட்டாய கல்வி சட்டத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து சட்டப்பேரவையில் விளக்கப்படும்’’ என்று கூறினார். #TNMinister #Sengottaiyan
அரச்சலூர்:
அரச்சலூர் அருகே உள்ளது ராட்டை சுற்றி பாளையம். இங்கு ஜெயச்சந்திரன் (42) என்பவர் 25 ஆண்டுகளாக மளிகை கடை நடத்தி வருகிறார்.
வழக்கம் போல் இரவு கடையை பூட்டி விட்டு ஜெயச்சந்திரன் வீட்டுக்கு சென்று விட்டார். இரவில் மர்ம ஆசாமிகள் இவரது கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.
அங்கு கல்லா பெட்டி மற்றும் பல்வேறு இடங்களில் துழாவி பார்த்தனர். ஆனால் எங்கும் பணம் இல்லை. வழக்கம் போல் ஒவ்வொரு நாளும் வசூலான பணத்தை ஜெயச்சந்திரன் வீட்டுக்கு எடுத்து சென்று விடுவார். அதே போல் எடுத்து சென்றதால் பணம் தப்பியது.
பணம் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்த மர்ம ஆசாமிகள் 25 கிலோ (ஜிப்பம்) கொண்ட 12 அரிசி மூட்டைகளை தூக்கி கொண்டு சென்று விட்டனர்.
இது குறித்து அரச்சலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சத்தியமங்கலம்:
கரூர் மாவட்டம் அரவாக்குறிச்சியை சேர்ந்தவர் கார்த்தி (வயது 28). இவர் தனது பெற்றோருடன் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் திருநகர் காலனியில் வசித்து வந்தார்.
கார்த்தி நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த சில நாட்களாக அவர் சோகமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு 7 மணியளவில் கார்த்தி தனது வீட்டில் பேனில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை செய்வதற்கு முன் அவர் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார். அந்த கடிதத்தில் “வாழ பிடிக்கவில்லை. என் சாவுக்கு யாரும் காரணம் அல்ல” என்று எழுதி இருந்தார்.
கார்த்தி என்ன காரணத்துக்காக தற்கொலை செய்து கொண்டார்? பண நெருக்கடியில் தற்கொலை செய்து கொண்டாரா? என்று தெரியவில்லை.
இது குறித்து சத்தியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ஈரோடு:
ஈரோடு அருகே உள்ள திண்டல் பாலாஜி கார்டன் பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை புரோட்டா மாஸ்டராக பணிபுரிகிறார். இவரது மனைவி பெயர் மேகலா (வயது 25). 3 மகன்கள் உள்ளனர்.
அண்ணாமலைக்கு அவ்வப்போது குடித்து விட்டு வீட்டுக்கு வருவாராம். இதை மனைவி மேகலா கண்டித்துள்ளார். இப்படி குடித்து விட்டு ஏன் வீட்டுக்கு வருகிறீர்கள்? எப்படி குடும்பம் நடத்த முடியும்? என்று கேட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் வேதனை அடைந்த மேகலா வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த பரிதாப சம்பவம் குறித்து ஈரோடு தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஊத்துக்குளி ரோட்டில் உள்ள காந்தி நகரில் வசிப்பவர் சக்தி நாதன். பெயிண்டராக வேலை பார்க்கிறார்.
இவரது மனைவி உமா மகேஸ்வரி (35). மகன் யுவராஜ் (14). 8-ம் வகுப்பு முடித்து 9-ம் வகுப்புக்கு தேர்ச்சி பெற்றிருந்தார். மகள் பெயர் பூஜா (12). 6-ம் வகுப்பு முடித்து 7-ம் வகுப்பு செல்கிறார்.
கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது. இதில் உமா மகேஸ்வரி மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் உமா மகேஸ்வரி தனது 2 பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்தார். பிறகு தானும் விஷம் குடித்தார்.
சிறிது நேரத்தில் 3 பேரும் வாயில் நுரை தள்ளிய படி மயங்கி விழுந்தனர். ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிய தாய் மற்றும் குழந்தைகளையும் மீட்டு ஈரோட்டில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உமாமகேஸ்வரி, மகன் யுவராஜ் ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள சிறுமி பூஜாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த பரிதாப சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை செய்து கொண்ட உமா மகேஸ்வரியின் சொந்த ஊர் கரூர் அடுத்த நத்தமேடு ஆகும். இவரது முதல் கணவர் சுந்தர் ராஜன். இவர் உமா மகேஸ்வரியை விட்டு பிரிந்து சென்று விட்டார்.
இவர்களது வீட்டில் சக்தி நாதன் குடியிருந்து வந்தார். கணவர் பிரிந்து சென்றதும் சக்திநாதனை 2-ம் திருமணம் செய்து கொண்டு சென்னி மலையில் உமா மகேஸ்வரி புதிய வாழ்க்கை வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் தான் 2-வது கணவருடனும் ஏற்பட்ட தகராறில் உமா மகேஸ்வரி இந்த விபரீத முடிவை எடுத்து உள்ளதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்த தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார். #Tamilnews
பெருந்துறை:
கடலூர் மாவட்டம், புவனகிரி, அரகஆலம்பாடி, முகந்தரியான் குப்பம் பகுதியைசேர்ந்த கோவிந்தராஜ் என்பவரது மகள் தேன்மொழி (வயது 19). இன்னும் திருமணமாகாத பெருந்துறையை அடுத்துள்ள விஜயமங்கலம், புலவர்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் கடந்த 2 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார்.
கம்பெனி வளாகத்தில் உள்ள லேடீஸ் ஹாஸ்டலில் தங்கி வேலைபார்த்து வந்த இவர், நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து 9 மணியளவில் ஹாஸ்டல் வளாகத்தில் துணிமணிகள் துவைக்கும் இடத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இதனைக்கண்ட ஹாஸ்டல் வார்டன் தேன்மொழியின் பெற்றோருக்கு அவர் மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்து விட்டதாக தகவல் கொடுத்துள்ளார். இதனால் அலறியடித்து ஊரில் இருந்து தேன்மொழியின் தந்தை கோவிந்தராஜ் கம்பெனிக்கு வந்துள்ளார். அங்கு பணிபுரிந்து வரும் கடலூர் பகுதியை சேர்ந்த தேன்மொழியின் தோழியான தமிழ் என்பவரிடம் விசாரித்த போது, தேன் மொழி நேற்று இரவு துணி துவைப்பதற்காக ரூமில் இருந்து சென்றதாகவும், அங்குள்ள இரும்பு தூணை பிடித்த போது அதில் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் இறந்து விட்டதாகவும் தெரிவித்தார்.
இதனை கேட்ட கோவிந்தராஜ் தனது மகளின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி பெருந்துறை போலீசில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த பெருந்துறை இன்ஸ்பெக்டர் சுகவனம் இறந்த தேன்மொழியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தார்.
திருப்பூர் மாவட்டம் காங்கயம் முத்தூர் ரோட்டை சேர்ந்தவர் சிவக்குமார் இவரது மகன் கார்த்திகேயன் (வயது 18). இவரது நண்பர் முகிலன் (18). கொடுமுடியை சேர்ந்த முத்தரசன் என்பவரின் மகன்.
இவருவரும் பிளஸ்-2 முடித்து தேர்ச்சி பெற்றிருந்தனர்.
நண்பர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் பவானி வந்தனர். பிறகு அவர்கள் சித்தோடு அருகே டெக்ஸ்வேலி பக்கம் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
மோட்டார் சைக்கிளை கார்த்திகேயன் ஓட்டி சென்றார். அப்போது ஒரு டீ கடையில் டீ குடிப்பதற்காக கார்த்திகேயன் திடீர் பிரேக் போட்டதாக கூறப்படுகிறது.
அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 2 பேரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர்.
உடனடியாக அவர்கள் 108 ஆம்புலன்சு மூலம் மீட்கப்பட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதில் சிகிச்சை பலன் பெறாமல் கார்த்திகேயன் இன்று காலை பரிதாபமாக இறந்தார். முகிலனுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
ஈரோடு, சம்பத் நகர் ஹவுசிங் யுனிட் பகுதியை சேர்ந்தவர் விஜயசேகரன் (வயது52). தனியார் நிறுவனத்தில் கேஷியராக பணி புரிந்து வந்தார்.
நேற்று விஜயசேகரன் தனது மகன் பிரேம்குமாருடன் மோட்டார்சைக்கிளில் திண்டல் அருகே வந்து கொண்டிருந்தார்.
அப்போது கோவையில் இருந்து ஈரோடு நோக்கி ஒரு தனியார் பஸ் வந்து கொண்டிருந்தது. எதிர்பாராத விதமாக தனியார் பஸ்சும், விஜயசேகரன் வந்த மோட்டார்சைக்கிளிலும் மோதி கொண்டன.
இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த விஜயசேகரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மகன் பிரேம்குமார் படுகாயம் அடைந்தார்.
அந்த வழியாக வந்தவர்கள் படுகாயம் அடைந்த பிரேம்குமாரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்தில் உயிரிழந்த விஜயசேகரன் உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #Tamilnews
ஈரோடு அருகே தண்ணீர்பந்தல்பாளையம், கணபதி நகரை சேர்ந்தவர் பிலிப்மேத்யூ(வயது65). ஜவுளி வியாபாரி.
பிலிப்மேத்யூவுக்கு சொந்த ஊர் கேரள மாநிலம் கோட்டயம் ஆகும். ஈரோட்டுக்கு வந்து ஜவுளி வியாபாரம் செய்து இங்கு வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் பிலிப் மேத்யூ கேரளாவில் உள்ள தனது உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன் கேரளா சென்று விட்டார்.
இதற்கிடையே மேத்யூ பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் மேத்யூ வீட்டின் முன் பக்க கதவு உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இது குறித்து மேத்யூவுக்கு போனில் தகவல் கொடுத்தார்.
திடுக்கிட்ட மேத்யூ கேரளாவில் இருந்து தண்ணீர்பந்தல் பாளையத்தில் உள்ள வீடுக்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கபட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் வீட்டில் உள்ள பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோவை உடைத்து அதில் இருந்த 28 பவுன் நகையை மர்ம ஆசாமிகள் கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.
இதே போன்று அதே பகுதியில் உள்ள மற்றொரு வீட்டிலும் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.
தண்ணீர்பந்தல் பாளையம், கணபதி நகரை சேர்ந்தவர் பழனிசாமி. சாயபட்டறை உரிமையாளர். இவரது மனைவி பத்மாவதி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். பழனிசாமி திருப்பூரில் உள்ள உறவினர் வீட்டு விஷேசத்துக்காக தனது குடும்பத்துடன் சென்று இருந்தார்.
இதை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் பழனிசாமி வீட்டின் பூட்டை உடைத்து வீட்டிற்குள் புகுந்து பீரோவை உடைத்து அதில் இருந்த 9 பவுன் நகையையும், மகன் கல்வி கட்டணத்திற்காக வைத்திருந்த ரூ.60 ஆயிரத்தையும் கொள்ளையர்கள் அள்ளி சென்றனர்.
இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.மேலும் கைரேகை நிபுணர்களும் தடயங்களை பதிவு செய்து வருகிறார்கள்.
இரு கொள்ளை சம்பவங்களிலும் ஈடுபட்டது ஓரே கும்பலாக இருக்க கூடும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் கொள்ளை நடந்த வீட்டின் அருகே வைக்கபட்டுள்ள சி.சி.டி.வி.கேமிரா பதிவுகளையும் போலீசார் ஆராய்ந்து வருகிறார்கள்.
தொடர்ந்து அடுத்தடுத்து 2 வீடுகளில் நடந்த இது துணிகர கொள்ளையால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர். நேற்றும் இதேபோல் மொடக்குறிச்சி அருகே அடுத்தடுத்து 2 வீடுகளில் முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை காட்டி இருப்பது குறிப்பிட்டத்தக்கது. #tamilnews






