என் மலர்tooltip icon

    ஈரோடு

    நீதிமன்ற உத்தரவுபடி ஈமு கோழி நிறுவனத்துக்கு சொந்தமான விவசாய நிலம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து வருவாய்த்துறை சார்பில் அங்கு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் ஈமு கோழி நிறுவனங்கள் கவர்ச்சிகரமான விளம்பரம் மூலம் நிதி திரட்டியது.

    இதனை நம்பிய ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை இந்த நிறுவனத்தில் டெபாசிட் செய்து பங்குதாரர்களாக சேர்ந்தனர்.

    அந்த டெபாசிட் முதிர்வு அடைந்ததும் நிறுவனத்தை அணுகியபோது பெரும்பாலான வாடிக்கையாளர்களுக்கு முதிர்வுத்தொகை திருப்பித் கொடுக்கப்படாமல் இழுக்கப்பட்டது.

    இதையடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் நிறுவனங்களை முற்றுகையிட்டு புகார் மனு அளித்தனர். இது குறித்து கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது.

    ஈமு கோழி நிறுவன சொத்துக்களை முடக்கி அந்த தொகையை இழப்பீடாக பங்குதாரர்கள் பிரித்து கொடுக்கும்படி கோர்ட்டு உத்தரவிட்டது. அந்த நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    தாளவாடி அடுத்த திகினாரையில் ஈமு கோழி நிறுவனத்துக்கு சொந்தமான 13.5 ஏக்கர் நிலத்தை பக்கத்து தோட்டத்துக்காரருக்கு ஈமு கோழி நிறுவனம் விற்றது தெரியவந்தது.

    இதையடுத்து தாளவாடி வருவாய் துணை வட்டாட்சியர் மகேஸ்வரி, நில வருவாய் ஆய்வாளர் செல்வம், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் போலீசார் அங்கு சென்றனர்.

    அவர்கள் முன்னிலையில் நிலம் அளவீடு செய்யப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து வருவாய்த்துறை சார்பில் அங்கு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.

    அதில் இந்த இடம் ஈமு கோழி நிறுவனத்துக்கு சொந்தமானது. யாரும் இதை வாங்கவோ விற்கவோ கூடாது. அதையும் மீறிவாங்கினால் செல்லாது என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. #Tamilnews

    தென்மேற்கு பருவமழை தொடங்கி இருப்பதால் பவானிசாகர் அணையில் இருந்து கால்வாய்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று சிறுகுறு விவசாயிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
    மொடக்குறிச்சி:

    தமிழ்நாடு சிறுகுறு விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் மொடக்குறிச்சியில் நடைபெற்றது. மாநில தலைவர் கே.ஆர்.சுதந்திரராசு தலைமை தாங்கினார். சங்கத்தின் மாவட்ட தலைவர் சென்னியங்கிரி, செயலாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    தமிழகத்தில் உள்ள விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற இயலாத சூழ்நிலை உள்ளது. வங்கிப்பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் தனிஅலுவலர் இல்லை என்று எந்த பணியும் செய்ய மறுக்கின்றனர். கூட்டுறவு சங்கங்களுக்கு அரசு தனிஅலுவலரை உடனடியாக நியமிக்க வேண்டும்.

    தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் நீண்டகாலப் பயிர்களான கரும்பு, மஞ்சள், வாழை போன்ற பயிர்கள் பயிரிட ஜீன் மாத இறுதிக்குள் தடப்பள்ளி அரக்கன்கோட்டை மற்றும் காலிங்கராயன் கால்வாய்களுக்கு பவானிசாகர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    சிறுகுறு விவசாயிகளுக்கு வழங்கும் சொட்டுநீர் பாசனம் அமைக்க அரசு மானியத்தை அதிகரிக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்துக்கு உழவு எந்திரங்கள் போன்ற விவசாய கருவிகள் வழங்கவேண்டும்.

    பொதுமக்களின் சேமிப்பு கணக்கின் மீது விதிக்கப்பட்டிருக்கும் ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும். பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டி வரிவிதிப்புக்குள் கொண்டு வரவேண்டும். என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.
    சம்பள உயர்வு கேட்டு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் நாளை (7-ந் தேதி) இரவு முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.
    ஈரோடு:

    தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் சேவை நடந்து வருகிறது. 108-க்கு போன் செய்ததும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து முதலுதவி சிகிச்சை அளித்து ஆஸ்பத்திரிக்கு கொண்டு உயிர்களை காப்பாற்றி வருகிறார்கள்.

    ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்ட நிறுவனம் 108 ஆம்புலன்ஸ் சேவையை காண்டிராக்ட் எடுத்து ஊழியர்களுக்கு சம்பளம் கொடுத்து நடத்தி வருகிறது.

    ஆனால் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தங்களுக்கு உரிய சம்பளம் வழங்கவேண்டும் என்பது உள்பட பல கோரிக்கைகளுடன் உள்ளனர்.

    இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்கம் சார்பில் அவர்கள் நாளை (7-ந் தேதி) இரவு முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இது குறித்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்கத்தினர் கூறியதாவது:-

    108 ஆம்புலன்சில் டிரைவர்கள், டெக்னீசியன்கள், மருத்துவ உதவியாளர்கள், கால்சென்டர் பணியாளர்கள் பணிபுரிகிறார்கள். இவர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ. 17 ஆயிரமும், அதிகபட்சமாக ரூ. 22 ஆயிரமும் வழங்க வேண்டும். ஆனால் அதிகபட்சமாகவே ரூ. 17 ஆயிரம்தான் வழங்குகிறார்கள்.

    வேலை நேரம் 8 மணி நேரம் மட்டுமே. ஆனால் 12 முதல் 14 மணி நேரம் வரை வேலை வாங்குகிறார்கள். 108 ஆம்புலன்சுகளை நிறுத்த சில ஆஸ்பத்திரிகளில் இடம் இல்லை. ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தங்கவும் இடம் இல்லை.

    108 ஆம்புலன்ஸ் வாகனங்களும் சரியான பராமரிப்பில் இல்லை. அவற்றை பராமரிப்பு செய்ய வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் வேலை நிறுத்தம் செய்ய உள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    ஈரோட்டில் 2018-19-ம் கல்வி ஆண்டிற்கான பொது மாறுதல், பதவி உயர்வு, பணி நிரவல் கலந்தாய்வுக்கான தேதி வெளியாகி உள்ளது. இந்த கலந்தாய்வு ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடக்கிறது.
    ஈரோடு:

    ஈரோட்டில் 2018-19-ம் கல்வி ஆண்டிற்கான பொது மாறுதல், பதவி உயர்வு, பணி நிரவல் கலந்தாய்வுக்கான தேதி வெளியாகி உள்ளது. இந்த கலந்தாய்வு ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடக்கிறது.

    வருகிற 11-ந் தேதி வட்டார கல்வி அலுவலர்களின் பொது மாறுதல் கலந்தாய்வும், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவியில் இருந்து வட்டார கல்வி அலுவலராக பணி மாறுதல் கலந்தாய்வும் நடக்கிறது.

    12-ந் தேதி அரசு, நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாறுதல் (கல்வி மாவட்டத்திற்குள், கல்வி மாவட்டம் விட்டு கல்வி மாவட்டம் வருவாய் மாவட்டத்திற்குள், மாவட்டம் விட்டு மாவட்டம்) கலந்தாய்வும், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பொது மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வும் நடக்கிறது.

    13-ந் தேதி அரசு, நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வும், பட்டதாரி ஆசிரியருக்கான பணி நிரவல், பதவி உயர்வு பொது மாறுதல் (ஒன்றியத்திற்குள்) கலந்தாய்வும் நடக்கிறது.

    14-ந் தேதி அரசு, நகராட்சி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாறுதல் (கல்வி மாவட்டத்திற்குள், கல்வி மாவட்டம் விட்டு கல்வி மாவட்டம், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்) கலந்தாய்வும், அரசு, நகராட்சி பள்ளி முதுகலை ஆசிரியர்கள் பணி நிரவல் கலந்தாய்வும், பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் (கல்வி, வருவாய் மாவட்டத்திற்குள்) கலந்தாய்வும் நடக்கிறது.

    16-ந் தேதி தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வும், அரசு, நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுகலை, தொழிற் கல்வி ஆசிரியர்கள் மாறுதல் (கல்வி மாவட்டத்திற்குள், கல்வி மாவட்டம் விட்டு கல்வி மாவட்டம், மாவட்டம் விட்டு மாவட்டம்) கலந்தாய்வும் நடக்கிறது.

    18-ந் தேதி அரசு, நகராட்சி மேல்நிலைப்பள்ளி முதுகலை, தொழிற்கல்வி ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வும், இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வும் நடக்கிறது.

    19-ந் தேதி இடைநிலை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் (ஒன்றியத்திற்குள், கல்வி மாவட்டத்திற்குள், வருவாய் மாவட்டத்திற்குள்) கலந்தாய்வும், உடற்கல்வி, கலை, இசை, தையல் ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் மாறுதல் (கல்வி மாவட்டத்திற்குள், கல்வி மாவட்டம் விட்டு கல்வி மாவட்டம், மாவட்டம் விட்டு மாவட்டம்) கலந்தாய்வும், அரசு, நகராட்சி பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் பணி நிரவல் கலந்தாய்வும் நடக்கிறது.

    20-ந் தேதி பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்-வருவாய் மாவட்டம்) கலந்தாய்வும், பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் (கல்வி மாவட்டத்திற்குள் கல்வி மாவட்டம் விட்டு கல்வி மாவட்டம், மாவட்டம் விட்டு மாவட்டம்) கலந்தாய்வும் நடக்கிறது.

    21-ந் தேதி இடைநிலை ஆசிரியருக்கான பொது மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்-வருவாய் மாவட்டம்) கலந்தாய்வும், இடைநிலை, உடற்கல்வி சிறப்பு ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வு கலந்தாய்வும் நடக்கிறது.
    கமல்ஹாசனும், ரஜினி காந்த்தும் சுயநலவாதிகள் என்றும் இவர்களை நம்பி தமிழக மக்கள் ஏமாந்து விடக்கூடாது என்றும் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். #Rajinikanth #KamalHaasan #Eswaran
    ஈரோடு:

    கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டாமென்றும், இரு மாநில முதலமைச்சர்களும் பேசி தீர்வுக்காண வேண்டுமென்றும் நடிகர் ரஜினிகாந்த் வலியுறுத்தினால் மட்டுமே கர்நாடகாவில் காலா படம் எந்த பிரச்சனையும் இல்லாமல் திரையிட முடியும் என்று கன்னட திரைப்பட வர்த்தக சபை நிபந்தனை விதித்திருக்கிறது.

    கமல்ஹாசனும் தன்னோட விஸ்வரூபம் 2 படம் கர்நாடகாவில் திரையிட எந்த பிரச்சனையும் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே சந்திப்பை நிகழ்த்தியிருப்பது இப்போது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது. கமல்ஹாசன் காவிரிக்காக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியை சந்தித்தேன் என்பதெல்லாம் அப்பட்டமான பொய். கன்னட திரைப்பட வர்த்தக சபை ரஜினிகாந்துக்கு விதித்திருக்கும் நிபந்தனையை தான் கமல்ஹாசன் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியை சந்தித்த பிறகு அளித்த பேட்டியில் காவிரி பிரச்சனையில் இரு மாநில முதலமைச்சர்களும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வுக்காண வேண்டும் என்று கூறியிருக்கிறார்.


    காவிரிக்காக என்று சொல்லிவிட்டு கமல்ஹாசன் தன்னோட விஸ்வரூபம் 2 படத்திற்காக தான் சென்றிருக்கிறார் என்று நாங்கள் சந்தேகித்தது உறுதியாகி இருக்கிறது. தமிழகம் போராடி பெற்ற உரிமைக்கு எதிராகவும், மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலும் காவிரி மேலாண்மை ஆணையம் பற்றி கருத்துக்கூறி கர்நாடகாவிலேயே அவர்களின் நிபந்தனையை கமல்ஹாசன் நிறைவேற்றி விட்டு வந்திருப்பது தமிழகத்திற்கு இழைத்திருக்கும் மாபெரும் துரோகம்.

    அதேபோல ரஜினிகாந்தும் கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு எதிர்ப்பும் தெரிவிக்காமல் ஆதரவளித்தது காலா படத்திற்கு மேலும் கர்நாடகாவில் எந்த விதமான பிரச்சனை வந்துவிடக் கூடாது என்பதற்காகவா?. சுயநலவாதிகள் அல்லவா இவர்கள். இவர்களை நம்பி தமிழக மக்கள் ஏமாந்து விடக்கூடாது.

    தங்கள் சுயலாபத்திற்காக அரசியலை பயன்படுத்துகிறார்கள் என்பதை தமிழக மக்கள் அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார். #Rajinikanth #KamalHaasan #Eswaran
    வட மாநில மக்களின் ரசனை மாற்றத்தால் சென்னிமலை பகுதியில் சாயப் பட்டறை தொழில் பாதிப்படைந்து வருகிறது. ஆனால் துணி பிரிண்டிங் பட்டறை தொழிலுக்கு மவுசு கூடியுள்ளது.
    சென்னிமலை:

    சென்னிமலை பகுதியில் கைத்தறிகளிலும், விசைத் தறிகளிலும் அதிக அளவில் பெட்ஷீட்டுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இவை உள்நாட்டு தேவைகளுக்கு மட்டும் இன்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    ஆரம்ப காலத்தில் இங்கு குழி தறிகளில் தான் பெட்ஷீட்டுகள் உற்பத்தி செய்யப்பட்டது பின் அவை சட்டதறிகளாக (மக்கம்) மாற்றப்பட்டது. மக்களின் ரசனை மாற்றத்திற்கு தகுந்தாற்போல் மாறி பல வண்ணங்களில் பல ரக டிசைன்களில் உற்பத்தி செய்ய ஜாக்காடு தறிகளாக மாற்றப்பட்டது. பின்பு இவைகளின் 60 சதவீத உற்பத்தியை விசைதறிகள் அபகரித்து கொண்டது.

    சென்னிமலை சுற்று பகுதியில் இன்று 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகிறது இதில் 10 சதவீதம் தறிகள்தான் ஏற்றுமதி ரக துணி உற்பத்தியில் ஈடுபடுகிறது. மற்ற 90 சதவீத துணிகள் தறிகள் 10ம் நெம்பர் நூலை பயன்படுத்திதான் பெட்ஷீட்டுகள் தயார் செய்யப்படுகிறது.

    கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பல வண்ணங்களில் சென்னிமலை பகுதியில் உள்ள சாயபட்டறைகளில் சாயமிடப்பட்டு அவைகள் வட மாநில மக்களின் மனதை கவரும் வகையில் கலர் மேட்ச் செய்து பெட்ஷீட்டுகள் தயார் செய்து அனுப்பி வந்தனர் இதனால் சென்னிமலை பகுதி சாயப்பட்டறைகளுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பு இருந்தது. இதனால் சாய பட்டறை தொழிலும் பெருகி சென்னிமலை சுற்று வட்டார பகுதிகளில் 50-க்கும் அதிகமான சாய பட்டறைகள் இயங்கி வந்தது.

    இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக வட மாநிலங்களில் பல வண்ணங்களில் சாயம்மிடப்பட்ட நூலை பயன்படுத்தி தயாராகும் பெட்ஷீட்களை மக்கள் விரும்பி வாங்கும் நிலை குறைந்து விட்டது. தற்போது வெள்ளை கலரில் நெசவு நெய்து பல வண்ணங்களில் பிரிண்ட் செய்யும் ரகங்களை தான் வட மாநில மக்கள் விரும்புகின்றனர்.

    மேலும் சென்னிமலை பகுதியில் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்களும் பனியன் வேஸ்ட் கார்டன் மூலம் தயார் ஆகும் கலர் கோன் நூல்களை வாங்கி அதில் பெட்ஷீட்கள் உற்பத்தி செய்ய தொடங்கி விட்டனர்.

    மெல்ல மெல்ல பிரிண்டிங் பெட்ஷீட்களுக்கு மவுசு கூடி இந்த ஆண்டு அதிக அளவு பிரிண்டிங் பெட்ஷீட்டுகள் தான் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

    இதனால் சாயபட்டறை தொழிலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வடமாநில மக்களின் ரசனை மாற்றத்தால் சென்னிமலை பகுதியில் சாய பட்டறை தொழிலுக்கு நெருக்கடி நிலவுகிறது.

    அதே சமயம் பிரிண்டிங் பட்டறைகளுக்கு கூடுதல் வேலை வாய்ப்புகள் உருவாகி உள்ளது. பெட்ஷீட்களுக்கு பிரிண்ட் செய்யும் பட்டறைகள் சென்னிமலை பகுதியில் அதிகம் இல்லை.

    அதிக அளவில் ஈரோட்டில் கொடுத்துதான் பெட்ஷீட்களுக்கு பிரிண்ட் செய்து வாங்கி வருகின்றனர். வடமாநில மக்களின் ரசனை மாற்றம் மற்றும் கலர் கோன் நூல் ஆதிக்கத்தால் சென்னிமலைசாயப் பட்டறை தொழில் பாதிப்படைந்து வருகிறது. இதை நம்பி உள்ள தொழிலாளர்கள் வேதனையில் உள்ளனர்.
    கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியை கமல்ஹாசன் சந்தித்து காவிரி பிரச்சனையை பற்றி பேசினோம் என்று தெரிவித்திருப்பது உள்நோக்கம் கொண்டது என்று ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
    ஈரோடு:

    கொ.ம.தே.க. பொதுச்செயலாளர் ஈஸ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் பல ஆண்டுகால சட்ட போராட்டத்திற்கு பிறகு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு மத்திய அரசு மேலாண்மை ஆணையம் அமைத்த நிலையில் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியை கமல்ஹாசன் சந்தித்து காவிரி பிரச்சனையை பற்றி பேசினோம் என்று தெரிவித்திருப்பது உள்நோக்கம் கொண்டது.

    இந்த சந்திப்புக்கு பிறகு காவிரி பிரச்சனையை இரு மாநிலங்களும் பேச்சு வார்த்தையின் மூலம் தீர்க்கலாம் என்று கமல்ஹாசன் கருத்து கூறியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கமல்ஹாசனின் இந்த கருத்து மத்திய அரசு அமைத்திருக்கும் ஆணையத்திற்கு எந்த அதிகாரமும் இல்லாதததை போலவும், மீண்டும் கர்நாடக மாநிலத்திற்கே எல்லா அதிகாரமும் இருப்பதை போலவும் தோற்றத்தை உருவாக்கி இருக்கிறது.

    கமல்ஹாசன் உச்ச நீதிமன்றம் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க உத்தரவிட்ட பிறகு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியதும், மத்திய அரசு ஆணையம் அமைத்த பிறகு கர்நாடக முதலமைச்சரை சந்தித்ததும் தேவையற்றது.

    காவிரிக்கான சந்திப்பு என்று சொல்லி விட்டு விரைவில் வெளிவரவிருக்கும் விஸ்வரூபம்-2 படம் கர்நாடகாவில் திரையிடுவதில் எந்தவொரு பிரச்சனையும் வந்துவிடக் கூடாது என்பதற்காக கர்நாடக முதலமைச்சரை கமல்ஹாசன் சந்தித்து பேசியிருப்பாரோ? என்ற சந்தேகம் தான் எழுகிறது.

    காவிரி பிரச்சனையில் தமிழகத்திற்கு ஆதரவாக கருத்து கூறியதாக சொல்லி ரஜினிகாந்த் நடித்து வெளிவரவிருக்கும் காலா படத்தை கர்நாடகாவில் திரையிட தடை விதித்ததை போல, விஸ்வரூபம் 2 படத்திற்கும் தடை போட்டு விடுவார்களோ என்ற அச்சத்தில் முன்னேற்பாடாக இச்சந்திப்பை கமல்ஹாசன் நிகழ்த்தியிருக்கிறார்.

    காவிரி பிரச்சனை தொடர்பாக தமிழகத்தில் வீர வசனங்களை எல்லாம் பேசிய நடிகர் சத்யராஜ், தான் நடித்த பாகுபலி 2 படம் கர்நாடகாவில் திரையிட சிக்கல் ஏற்பட்ட போது மன்னிப்பு கேட்டதையும் பார்த்திருக்கிறோம். அதே போல கமல்ஹாசன் நடித்து வெளிவந்த விஸ்வரூபம் படத்திற்கு அப்போது பல பிரச்சனைகள் எழுந்து திரையிடுவதில் சிக்கல் ஏற்பட்டது.

    தற்போது காலா படத்திற்கு உருவாகியிருக்கும் சிக்கல் விஸ்வரூபம் 2 படத்திற்கும் வராமல் இருப்பதற்காக காவிரி பிரச்சனையில் நான் தமிழகத்திற்கு ஆதரவானவன் இல்லை என்பதை கர்நாடகாவிற்கு உணர்த்தவே கமல்ஹாசன் சென்றது அவரது பேட்டியின் மூலம் தெளிவாகிறது.

    எனவே கமல்ஹாசன் தன்னுடைய நலனுக்காக சந்திப்பை நிகழ்த்திவிட்டு காவிரிக்காக சென்றேன் என்று கூறுவதை எல்லாம் தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். #Tamilnews
    பவானிசாகர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் உள்ள 2-வது பெரிய அணையான பவானிசாகர் அணைக்கு கடந்த சில நாட்களாக தண்ணீர் வரத்து குறைந்து கொண்டே வந்தது.

    இந்த நிலையில் நேற்று அணையின் நீர் பிடிப்பு பகுதியான ஊட்டி மலைப் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதையொட்டி இன்று (புதன்கிழமை) காலை முதல் பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 1732 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர் மட்டமும் உயர்ந்து 54.49 அடியாக உள்ளது. இன்று மாலை 55 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பவானிசாகர் அணைக்கு மீண்டும் நீர் வரத்து அதிகரித்து உள்ளதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்,

    நீர் மட்டம் 55 அடியை தொடும் நிலையில் இருப்பதால் விவசாயத்துக்காக வாய்க்காலில் தண்ணீர் திறக்க வாய்ப்பு இருப்பதாகவும் விவசாயிகள் தெரி வித்துள்ளனர்.

    சத்தியமங்கலம் அருகே 2 மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் அதிரடிப்படை வீரர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அன்னூர் கவுண்டர் தோட்டம் அய்யன் சாலை பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 36).

    இவர் சத்தியமங்கலம் அதிரடிப்படை பிரிவில் போலீஸ்காரராக பணி புரிந்து வந்தார். நேற்று இரவு 10.30 மணி அளவில் தனது மோட்டார் சைக்கிளில் கடை வீதிக்கு வந்தார். பிறகு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.

    மேட்டுப்பாளையம் ரோடு திருநகர் காலனி பகுதியில் சென்ற போது அவருக்கு முன்னால் கோணமூலை பகுதியை சேர்ந்த கண்ணன் (17) என்பவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். திடீரென கண்ணன் வலது புறமாக திரும்பினார்.

    அப்போது அவருக்கு பின்னால் வந்த கார்த்திகேயன் மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மோதியது.

    இந்த விபத்தில் கார்த்திகேயன் கீழே விழுந்ததில் அவரது தலை, முகம், தாடையில் பலத்த அடிபட்டது. உடனடியாக அவர் மீட்கப்பட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு பிறகு மேல் சிகிச்சைக்காக கோவை கொண்டு செல்லப்பட்டார்.

    ஆனால் செல்லும் வழியிலேயே கார்த்திகேயன் பரிதாபமாக இறந்தார். அவரது உடல் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

    இவரது மனைவி பெயர் கவிதா, அரசுபள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார். 1 மகனும், 1 மகளும் உள்ளனர்.

    விபத்தில் படுகாயம் அடைந்த கண்ணன் கோபியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த விபத்து குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    போலீசார் கொடுக்கும் டார்ச்சரால் எங்களால் நிம்மதியாக வாழ முடியவில்லை. ஆகவே எங்களை கருணை கொலை செய்து விடுங்கள் என்று 2 திருநங்கைகள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் பிரபாகர் பொதுமக்களிடம் குறைகளை கேட்டு கோரிக்கை மனுக்களை வாங்கி கொண்டிருந்தார். அப்போது ஈரோடு வீரப்பன்சத்திரத்தை சேர்ந்த ஓவியா, அனு என்ற 2 திருநங்கைகள் கையில் ஒரு மனுவுடன் கண்ணீருடன் வந்தனர்.

    கண்ணீர் சிந்தியபடி கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    கடந்த சில நாட்களுக்கு முன் நாங்கள் கலை நிகழ்ச்சி நடத்தி விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தோம். அப்போது 3 பேர் கொண்ட கும்பல் எங்களை தாக்கி செல்போனை பறித்துக் கொண்டு சென்று விட்டனர்.

    இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம போலீசில் புகார் செய்தோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. கேட்டால் போலீசார் எங்களை தரக் குறைவாக பேசுகிறார்கள்.

    மேலும் எங்கள் உறவினர் மீது உள்ள ஒரு வழக்கு தொடர்பாகவும் எங்களுக்கு போலீசார் ரொம்பவும் டார்ச்சர் கொடுக்கிறார்கள்.

    போலீசார் கொடுக்கும் டார்ச்சரால் எங்களால் நிம்மதியாக வாழ முடியவில்லை. ஆகவே எங்களை கருணை கொலை செய்து விடுங்கள்.

    இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி உள்ளனர்.

    கடந்த சில தினங்களுக்கு முன் இந்த 2 திருநங்கைகள் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் மனு கொடுக்க வந்தபோது உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    கோபி பகுதியில் சூறாவளி காற்றுடன் மழை பெய்ததையடுத்து ஓரிரு மாதங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள், 100-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் சாய்ந்தன.
    கோபி:

    ஈரோடுமாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சூறாவளி காற்று, இடி-மின்னலுடன் மழை பெய்து வருகிறது.

    கோபி அருகே உள்ள நாகதேவன்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட வெள்ளிங்காட்டுப்புதூர் முள்ளங்கரை அய்யம்புதூர் செல்வபுரம்காலனி உள்பட பல பகுதிகளில் நேற்று கனமழை மற்றும் சூறாவளிக் காற்றும் வீசியது.

    இதனால் இன்னும் ஓரிரு மாதங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் 100-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் சாய்ந்தது.

    கடந்த ஆண்டுகளில் போதிய தண்ணீர் இல்லாததினால் விவசாயம் செழிக்காத நிலையில் விவசாயிகள் பெரும் வேதனைக்குள்ளாகினர். அதனை ஈடுகட்டும் வகையில் இந்தாண்டு வாழைமஞ்சள் என பயிர் செய்து வாங்கியுள்ள கடன்களை அடைத்துவிடலாம் என்று எண்ணி இருந்தனர்.

    தற்போது அடித்த சூறாவளிக் காற்றினால் அந்த எண்ணமும் சிதைந்து விட்டதாகவும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மனதில் கொண்டு பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

    அதேபோல் செல்வபுரம் காலனியில் 60-க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இங்குஅடித்த சூறாவளிக்காற்றினால் வீடுகளின் மேற்கூரைகள் பெயர்ந்து அவை காற்றில் தூக்கிவீசப்பட்டது.

    இதில் மேற்க்கூரை ஓடுகள் மற்றும் சிமெண்ட் அட்டைகள் 500 அடி தூரத்திற்கும் மேல் தூக்கிவீசப்பட்டது. இதனால் அப்பகுதிமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் சூறாவளிக்காற்றில் மின்கம்பங்கள் சாய்ந்துமின் கம்பிகள் அறுந்ததால் நாகதேவன்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் இரவு முழுவதும் மின் தடை ஏற்பட்டது.

    இதனால் இரவு முழுவதும் மின்சாரம் இன்றியும் வீடுகளில் மேற்கூரை இன்றியும் தவித்துள்ளனர். தினக்கூலிக்கு செல்லும் தங்களது வீடுகள் சேதமடைந்துள்ளதை புதுப்பிக்க வீடுகளின் மேற்கூரைகளை இழந்துதவிக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



    அரசு பள்ளிக்கூடங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. தொடங் கும் முடிவு சட்டசபையில் தெரிவிக்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். #minister #sengottaiyan
    ஈரோடு:

    ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் ரூ.40 லட்சம் செலவில் அவசர சிகிச்சை பிரிவு புதுப்பிக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று காலை நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. குடிமராமத்து என்ற பெயரில் இதுவரை கண்டிராத வகையில் தமிழகத்தில் பொதுப்பணித்துறை சார்பில் பல்வேறு குளங்கள் தூர்வாரப்பட்டு உள்ளது. மழைநீர் சேமிப்பு முறையில் புதிய புரட்சியை தமிழகத்தில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    அரசு பள்ளிக்கூடங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் 5 வயது நிரம்பிய மாணவர் களை மட்டுமே பள்ளிக்கூடங்களில் சேர்க்க முடியும் என்று இந்திய அரசியலைப்பு சட்டத்தில் கூறப்பட்டு உள்ளது. ஆனால் தனியார் பள்ளிக்கூடங்களில் 3 வயதில் இருந்து பயிற்சி அளிக்கிறார் கள். இதுபற்றி அரசு ஆய்வு செய்துகொண்டு இருக்கிறது. இதுதொடர்பாக என்ன முடிவு எடுக்கப்படும் என்பது சட்டசபையில் தெரிவிக்கப்படும். வெளியில் கருத்து கூற இயலாது.



    தனியார் பள்ளிக்கூடங்களில் கட்டண விவரங்களை பள்ளிக்கூடங்களின் முன்பு வைக்க வேண்டும் என்ற அறிவிப்பு அனைத்து பள்ளிக்கூடங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.  #minister #sengottaiyan
    ×