என் மலர்
ஈரோடு
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே அத்தாணி பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் செல்வராஜ் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஏற்றும் வாகனத்தை சோதனை செய்தபோது புளியம்பட்டி பகுதியைச் சேர்ந்த சின்னராஜ் (46) என்பவர் புளியம்பட்டியில் இருந்து சத்தியமங்கலம் அந்தியூர் வழியாக சென்னம்பட்டியில் வாழைக்காய் வாங்குவதற்க்காக பணம் 77 ஆயிரம் கொண்டு வந்ததாக தெரிவித்தார்.
முறையான ஆவணம் இல்லாததால் பணம் பறிமுதல் செய்யப்பட்டு அந்தியூர் தாசில்தார் கணேசனிடம் ரூ. 77 ஆயிரம் தொகையை ஒப்படைத்தனர். #LokSabhaElections2019
பீகார் மாநிலம் கல்யாண்பூர் என்ற ஊரை சேர்ந்தவர் நவீன்குமார் பட்டேல் (வயது 23). இவரது மனைவி பெயர் சசிகலா (22).
கடந்த 6 மாதத்துக்கு முன் கணவன்-மனைவி இருவரும் ஈரோடு வில்லரசம்பட்டி ராசம்பாளையம் முத்து மாணிக்கம் நகரில் வாடகை வீட்டில் தங்கி கணவன்-மனைவி இருவரும் சாயப்பட்டறைக்கு வேலைக்கு போய் வந்தனர்.
கணவன்-மனைவி இருவரும் அவர்களின் மாநிலத்தை சேர்ந்தவர்களிடம் நைசாக பேசி அவர்களிடம் நட்பாக இருப்பது போல் நடித்து பிறகு கடத்தி பணம் பறிப்பதை வழக்கமாக வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இவர்கள் ரெயிலில் பீகார் செல்லும் போது அதே மாநிலத்தை சேர்ந்த நித்திஷ்குமார் என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டது. நித்திஷ்குமார் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் நாச்சியார்பட்டி நான்கு ரோடு பகுதியில் ஒரு மினரல் வாட்டர் கம்பெனியில் பணிபுரிந்தார். அவருடன் அவரது தாயாரும் உடனிருந்தார்.
இதற்கிடையே நித்திஷ்குமாரிடம் நவீன்குமார் ஆசை வார்த்தை கூறினார். “அங்கு ஏன் கஷ்டப்படுகிறாய் ஈரோட்டுக்கு வந்துவிடு நிறைய பணம் சம்பாதிக்கலாம்” என்று கூறினார்.
அவரின் பேச்சைகேட்டு ஆசையுடன் நித்திஷ்குமார் ஈரோடு வந்தார்.
ஆனால் அவருக்கு சொன்னபடி நவீன்குமாரும் அவரது மனைவியும் வேலை வாங்கி கொடுக்கவில்லை.
நித்திஷ்குமாரை ஒரு அறையில் அடைத்து “ரூ.1 லட்சம் பணம் கொடு இல்லையென்றால் கொன்று விடுவோம்” என தனது சுய உருவத்தை காட்டத் தொடங்கினார்கள். அதற்கு நித்திஷ்குமார், “என்னிடம் அவ்வளவு பணம் கிடையாது. வேலை வாங்கி தருவதாக கூறி இப்படி பணம் பறிக்க முயற்சி செய்கிறீர்களே.. இது நம்பிக்கை துரோகம் இல்லையா?” என்று கேட்டார்.
நித்திஷ்குமாருடன் ராகுல் தத்தா என்பவரும் வந்திருந்தார். அவரும் நவின்குமாரின் ஆள் என நித்திஷ்குமாருக்கு தெரியாமல் போனது. அவர்தான் நைசாக பேசி நித்திஷ்குமாரை கடத்தி வந்தார்.
பணம் தொடர்பாக அறையில் அடைத்து வைத்து நித்திஷ்குமாரை நவீன்குமாரும் அவரது மனைவி மற்றும் ராகுல் தத்தாவும் சேர்ந்து அடித்து சித்ரவதை செய்து உள்ளனர்.
இந்த நிலையில் ஈரோடு போன மகனைப்பற்றி எந்த தகவலும் இல்லையே என்று பயந்த நித்திஷ்குமாரின் தாயார் தன் மகனை காணவில்லை என்று திண்டுக்கல் போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே நித்திஷ்குமாரின் தாயாருக்கு நவீன்குமார் போன் செய்து “உன் மகன் வேண்டுமானால் ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்” என்று மிரட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் திண்டுக்கல் போலீசில் புகார் செய்தார்.
அவரது செல்போன் சிக்னலை வைத்து ஆராய்ந்த போலீசார் ஈரோடு வில்லரசம்பட்டி என தெரிந்தது. உடனே தனிப்படையினர் ஈரோடு வில்லரசம்பட்டிக்கு விரைந்தனர்.
வில்லரசம்பட்டியில் ஒரு வீட்டு முன் ரத்தக்கறை வடிந்திருப்பதை கண்ட போலீசார் உள்ளே அதிரடியாக சென்று விசாரணை நடத்தினர். அப்போது வீட்டுக்குள் இருந்த ராகுல்தத்தா வெளியே ஓடி விட்டார். உள்ளே இருந்த நவீன்குமாரும் அவரது மனைவி சசிகலாவும் வசமாக சிக்கி கொண்டனர். வீட்டின் உள்ளே 3 சாக்கு மூட்டை இருந்தது.
போலீசார் அந்த மூட்டைகளை அவிழ்த்து பார்த்தபோது அதில் கடத்தப்பட்ட நித்திஷ்குமாரின் தலை, கை, கால் என துண்டு துண்டாக உடல் பாகங்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பிறகு அந்த உடலை கைப்பற்றிய போலீசார் நவீன்குமாரையும் சசிகலாவையும் பிடித்து தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர்.
கேட்ட பணம் கொடுக்காததால் நித்திஷ்குமாரை கணவன்-மனைவி மற்றும் ராகுல் தத்தாவும் கொலை செய்து உடலை வெளியே கொண்டு போட துண்டு துண்டாக வெட்டி சாக்கு மூட்டைக்குள் கட்டி இருந்தது தெரியவந்தது.
ஈரோடு ஏ.டி.எஸ்.பி சந்தனபாண்டியன் டவுன் டி.எஸ்.பி ராதா கிருஷ்ணன் இன்ஸ்பெக்டர்கள் பன்னீர்செல்வம், சுப்புரத்தினம் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
ஈரோடு தொகுதிக்குட்பட்ட வெள்ளோட்டில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் அ.கணேசமூர்த்தியை ஆதரித்து ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
இந்த பகுதியில் விளை நிலங்களில் உயர் மின் அழுத்த மின் கோபுரம், கெயில் எரிவாயு குழாய் அமைக்கும் திட்டத்தை மேற்கொண்டால் ஏராளமான விவசாயிகளின் வாழ்வாதாரம் அழிந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
மத்திய பாஜக அரசு பெருநிறுவனங்களின் ஆதரவு அரசாக உள்ளது. விவசாய கடன், கல்வி கடனை தள்ளுபடி செய்ய முடியாது எனச்சொல்லும் மத்திய அரசு, பெரு நிறுவனங்களின் 2.42 லட்சம் கோடி கடனைத் தள்ளுபடி செய்கிறது. அவர்களுக்கு 5 லட்சம் கோடி வரிச்சலுகை வழங்குகிறது. ஜிஎஸ்டி அமலாகத்தால் வணிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் 80 லட்சம் இளைஞர்கள் வேலையின்றி இருக்கின்றனர். ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுப்பேன் என்று சொன்ன பிரதமர் மோடி, 200 பேருக்கு கூட வேலை கொடுக்கவில்லை. ரூ.50 ரூபாய் கேபிள் கட்டணம் செலுத்திய மக்கள் இப்போது ரூ.300 செலுத்த வேண்டியுள்ளது. ரூ.450 ஆக இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.1000 மாக உயர்ந்து விட்டது.
எனவே மத்தியில் நடைபெறும் மக்கள்விரோத, தமிழ்நாட்டுக்கு விரோதமான அரசினை அகற்ற வேண்டும். தேர்தலுக்குப் பின், மாநில உரிமைகளை மீட்கும் வகையில், மாநிலக் கட்சிகளுடன் இணைந்து ராகுல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் இது உறுதி. நீட் தேர்வினால் தமிழக மாணவர்களின் எதிர்காலம் பாழாகிட்டது. நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என ஸ்டாலின் வாக்குறுதி அளித்து உள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுலும் நீட் தேர்வை ரத்து செய்வோம், பறிக்கப்பட்ட கல்வி உரிமை மாநிலங்களுக்கு கொடுக்கப்படும் என அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் வஞ்சக திட்டங்களை தடுக்க முடியாத அளவுக்கு ஊழல் புதைகுழியில் தமிழக அரசு சிக்கியுள்ளது. தமிழக அரசு பேரம் நடத்தியதால் பல தொழிற்சாலைகள் வெளி மாநிலங்களுக்குச் சென்று விட்டன.
நாங்கள் ஆலயங்களுக்கு செல்லும் பக்தர்களையும், அவர்கள் உணர்வுகளையும் மதிக்கிறோம். அதே நேரத்தில் சமய நல்லிணக்கத்திற்கு வெடிவைக்க முயற்சிக்கின்றன. புதுக்கோட்டையில் பெரியார் சிலை உடைப்பு வேதனையைத் தருகிறது. மீண்டும் மோடி தலைமையிலான அரசு மத்தியில் அமையுமானால், சமூகநீதி குழிதோண்டி புதைக்கப்படும். கற்பனை செய்ய முடியாத பாசிச ஏதேச்சதிகார ஆட்சி அமைந்து விடும்.
இவ்வாறு வைகோ பேசினார். #vaiko #rahulgandhi
பாராளுமன்ற தேர்தலில் வாக்குச்சாவடி அலுவலர்களாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் 237 வாக்குச்சாவடி மையங்கள், ஈரோடு மேற்கு தொகுதியில் 298 வாக்குச்சாவடி மையங்கள், மொடக்குறிச்சி தொகுதியில் 275 வாக்குச்சாவடி மையங்கள், பெருந்துறை தொகுதியில் 263 வாக்குச்சாவடி மையங்கள், பவானி தொகுதியில் 289 வாக்குச்சாவடி மையங்கள், அந்தியூர் தொகுதியில் 261 வாக்குச்சாவடி மையங்கள், கோபிசெட்டிபாளையம் தொகுதியில் 296 வாக்குச்சாவடி மையங்கள், பவானிசாகர் தொகுதிக்கு 294 வாக்குச்சாவடி மையங்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 213 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன.
அங்கு பணியாற்ற 2 ஆயிரத்து 656 தலைமை அதிகாரிகள், நிலை-1, நிலை-2, நிலை-3 அலுவலர்கள் 7 ஆயிரத்து 968 பேர் என மொத்தம் 10 ஆயிரத்து 624 வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் செயல்பாடு பற்றி 3 கட்டங்களாக பயிற்சி அளிக்கப்பட திட்டமிடப்பட்டு இருக்கிறது. இதில் முதல்கட்ட பயிற்சி கடந்த மாதம் 24-ந் தேதி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான 2-ம் கட்ட பயிற்சி நேற்று நடைபெற்றது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் ஈரோடு திண்டல் வேளாளர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி வளாகத்திலும், ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலையத்திலும் நடந்தது. அங்கு வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், விவிபேட் கருவிகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், வாக்காளர்களை உள்ளே அனுமதிக்கும் முறை, அவர்களுடைய அடையாள அட்டையை சரிபார்த்தல், வாக்குப்பதிவு செய்ததன் அடையாளமாக விரலில் மை வைத்தல், ஓட்டு போட அனுமதித்தல் போன்ற செயல்பாடுகள் குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது. இந்த பயிற்சி முகாமை ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி நேற்று மாலை ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் பேசினார்.
காமராஜர், எம்ஜிஆர் போன்ற பெரிய தலைவர்கள் பெரிதாக படித்தவர்கள் இல்லை. ஆனால் அவர்கள் மக்களை படித்தவர்கள், அவர்களை பார்த்து, படித்து நான் இங்கு வந்திருக்கிறேன். இந்த தேர்தல் பிரதமர் யார் என்று முடிவு செய்வதற்கான தேர்தல் அல்ல.
நம்முடைய எதிர்காலம் என்ன என்று நாம் முடிவு செய்யும் தேர்தல். நாட்டுக்கு நல்லது எது என முடிவு செய்யும் தேர்தல். யார் பிரதமர் என்பதை தேர்ந்தெடுக்கப்படும் எம்பிக்கள் சேர்ந்து தான் முடிவு செய்ய வேண்டும். இப்போதே முடிவு செய்து சொல்வது என்பது அரசியல் மாண்பு இல்லை.
ஓட்டுப்போடுவதை அடுத்த முறை பார்த்துக் கொள்ளலாம் என இளைஞர்கள் விட்டுவிடக்கூடாது. அடுத்த முறை பார்த்துக் கொள்ளலாம் என 30 ஆண்டுகளை கடந்து விட்டீர்கள். நல்ல தலைமையை தேர்ந்தெடுப்பது உங்கள் பொறுப்பு.
தமிழகம் புரட்சியின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறது. அதற்கு வலுசேர்க்க மக்கள் நீதி மய்யத்தில் சேர திமுக, அதிமுகவில் இருந்து ஏராளமான இளைஞர்கள் வருவார்கள். எங்களை நோக்கி இளைஞர்கள் வரக்காரணம், நாங்கள் நேர்மையானவர்கள் என்பது தான்.
பண மூட்டை பதுக்கிக் கொண்டிருக்கும் திருடர்கள் எப்படி பேச முடியும். இப்போது திருடர்களுக்கு தேள் வேறு கொட்டி விட்டது, இனி பேசவே மாட்டார்கள். ஈரோட்டில் இருந்த பெரியவர் கொடுத்த தைரியத்தில் தான் நான் இவ்வளவு தைரியமாக பேசுகிறேன். யாரையும், எந்த தலைவரையும் அவமதிப்பது என்னுடைய நோக்கமல்ல. ஆனால் திருடனை, திருடன் என்று சொல்லும் தைரியம் எனக்கு உள்ளது. இந்த தைரியம் தமிழ் மக்களுக்கு வந்தே ஆக வேண்டும்.
ஊழல் செய்பவர்கள் எல்லோருமே திருடர்கள் தான். அவர்களை நீங்கள் வணங்கக் கூடாது. அவர்கள் உங்களை வணங்க வைக்க வேண்டும். நம்முடைய குடியரசுக்கு வணங்கியாக வேண்டும். மாண்புள்ள தலைவர்கள் பலர் இருந்த தமிழ்நாடு, திருடர்கள் நாடாக மாறிவிடக் கூடாது. இது திரு நாடு, திருடர்கள் நாடு அல்ல.
ஆட்சியாளர்கள் திருடுவதை நிறுத்தினாலே, 2 தமிழ்நாடு நடத்த முடியும். இதை நீக்கியே ஆக வேண்டும். இவர்கள் இத்தனை நாள் மாண்புடன் வணங்கிக் கொண்டிருந்த 2 கழகங்கள் அன்றைய தமிழகத்தின் தேவையாக இருந்தது. அதனால் அப்போது அவர்கள் வந்தார்கள்.
இன்றைய தேவை அவர்கள் அகற்றப்பட வேண்டும். காலம் உங்களுக்கு காட்டும் செய்தியாக மக்கள் இதை புரிந்துகொள்ள வேண்டும். நாம் நல்ல ஒரு காலத்தை நோக்கி தமிழகத்தை நடத்துவதற்கு மக்கள் இந்த தேர்தலில் யோசித்து செயல்பட வேண்டும்.
இளைஞர்கள் நோட்டாவுக்கு ஓட்டுப் போடாதீர்கள். நாடு நன்றாக இருக்க, உங்கள் மனசாட்சி சொல்லும் நல்லவருக்கு ஓட்டுப் போடுங்கள். அந்த நல்லவர் கண்டிப்பாக மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக இருப்பார். ஓட்டு போடப் போகும் போது உங்கள் மனதை மாற்ற பல வேலைகள் நடக்கும்.
ஆனால் எதிர் காலத்தை மனதில் வைத்து கொண்டு ஓட்டுப் போடுங்கள். உங்களால் தேர்வு செய்யப்பட்ட மக்கள் நீதி மய்ய பிரதிநிதி தவறு செய்தது உறுதி செய்யப்பட்டால் அவரது ராஜினாமா கடிதம் உங்களுக்கு வந்து சேரும்.
இவ்வாறு கமல்ஹாசன் கூறினார். #LokSabhaElections2019 #MakkalNeedhiMaiam #KamalHaasan
ஈரோடு:
ஈரோடு ஆணைக்கல் பாளையத்தில் திமுக கூட்டணி சார்பில் பிரம்மாண்ட பொதுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
காங்கிரசின் தேர்தல் அறிக்கையை கண்டு மோடி இப்போது பயந்து போய் இருக்கிறார். காங்கிரஸ் அறிக்கை பொய்யான அறிக்கை என்கிறார் மோடி. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 90 லட்சம் கோடி கருப்பு பணத்தை வெளிநாட்டிலிருந்து மீட்போம் என்று சொன்னீர்களே... செய்தீர்களா? விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 15 லட்சம் டெபாசிட் செய்வோம் என்று சொன்னீர்கள் செய்தீர்களா? அட்லீஸ்ட் 15 ரூபாய் ஆவது போட்டீர்களா?
கருப்பு பணத்தை ஒழிப்போம் என்று சொன்னீர்கள் ஆனால் நல்ல பணத்தை அல்லவா ஒழித்தீர்கள் இப்படி வாக்குறுதிகளைக் கொடுத்து ஏமாற்றியவர் தானே இந்த மோடி? இதை நினைக்கும்போது எனக்கு ஒரு சினிமா பாட்டு ஞாபகத்துக்கு வருகிறது. "பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே'' அதை மாற்றி "பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த மோடி பெருமானே''என்று பாடலாம்.
நம்மைப் போல் இப்போது எடப்பாடியும் பிரச்சாரம் செய்கிறார். ஜெயலலிதா பிரச்சாரம் செய்யும் போது கைகட்டி குனிந்து நின்ற அவர் இப்போது எம்ஜிஆரை போல் கழுத்தில் துண்டு எல்லாம் போட்டு பேசுகிறார். எடப்பாடியை பார்த்து நான் கேட்கிறேன் "தமிழக மக்களுக்காக என்ன செய்தீர்கள்? நாட்டு மக்களைப் பற்றிச் சிந்தித்தது உண்டா? இதனால் என்ன ஆச்சு? மக்கள் போராட்டம், விவசாயிகள் போராட்டம், மாணவர்கள் போராட்டம், அரசு ஊழியர்கள் போராட்டம், ஆசிரியர்கள் போராட்டம், இப்படி 35 ஆயிரம் போராட்டம் நடந்ததாக நீங்களே சொல்கிறீர்கள்.
இதையெல்லாம் சமாளித்து உள்ளோம் என்கிறீர்கள். இப்படி சொல்ல வெட்கமா இல்லையா? இது பெருமைக்குரிய விசயமா? ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் 13 பேரை சுட்டுக் கொன்றீர்களே? பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு எடப்பாடி ஆறுதல் சொல்லி இருப்பாரா? நேரில் போய் பார்த்தாரா? கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசினாரா?
மோடி கையில் நாடு பாதுகாப்பாக இருக்கும் என்கிறார் எடப்பாடி. மோடிக்கு இந்தியாவைப் பற்றி கவலை இல்லை அவர் வெளிநாடு வாழ் பிரதமராக அல்லவா இருக்கிறார். அவரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். கடந்த சில நாட்களாக மோடி நம் மீது மிகவும் கோபமாக இருக்கிறார். அதற்கு மூன்று காரணம்.

ஒரு காரணம் ராகுல் காந்தி அடுத்த பிரதமர் என்று நான் சொன்னது. இரண்டாவது காரணம்.. இந்தியா முழுவதும் நடந்த கருத்துக்கணிப்பில் தமிழ்நாட்டில் தி.மு.க அணி அமோக வெற்றி பெறும் என்று சொன்னது. மூன்றாவது காரணம்... நான் பேசும் இடமெல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது என்று ரிப்போர்ட் அவருக்கு போனது. இப்படி மூன்று காரணத்துக்காக நம் மீது மோடிக்கு கோபம். அதன் விளைவு தான் நமது முன்னணி தலைவர் துரைமுருகன் வீட்டில் சோதனை. ஆனால் எதுவும் கிடைக்கவில்லை.
அப்புறம் இரண்டு நாட்கள் கழித்து சில வீடுகளில் பணம் பறிமுதல் செய்தார்களாம். இவர்களே பணத்தை வைத்து விட்டு இவர்களே எடுத்து இருப்பதாக நான் கருதுகிறேன். நான் எதிர்க்கட்சித் தலைவர். முதல்வருக்கு இணையாக.. அது கூட வேண்டாம்.. ஒரு அமைச்சர் அந்தஸ்தில் இருக்கிறேன். நான் புகார் கொடுக்கிறேன். மோடி வீட்டில் கோடி கோடியாக பணம் இருக்கிறது. எடப்பாடி வீட்டிலும் பணம் குவிந்திருக்கிறது. அங்கு சென்று சோதனை நடத்துங்கள் போடுவீர்களா சோதனை? தேர்தல் கமிசன் வாகனங்களை நிறுத்தி சோதனை போட செய்துள்ளது. போடுங்கள் அது தேர்தல் விதிமுறை. அதேபோல் போலீஸ் வேன்களையும், போலீஸ் வாகனங்களையும் சோதனை செய்யுங்கள். ஆளுங்கட்சிக்காக போலீஸ் வாகனத்தில் பணம் கடத்தப்படுகிறது. இதை தேர்தல் துறை சோதனை போடாவிட்டாலும் எங்களின் இளைஞர் படை சோதனை நடத்தும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார். #mkstalin #pmmodi #dmk
கோபி:
கோபி அருகே உள்ள காசிபாளையம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் உமாபதி தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்தது. அந்த காரை நிறுத்தி விசாரித்து சோதனை செய்தனர். இதில் சேதுராமன் என்பவர் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 450 கொண்டு சென்றது தெரிய வந்தது. ஆனால் அந்த பணத்துக்கு உரிய ஆவணம் இல்லை என தெரிகிறது.
இதையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்து கோபி கோட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.
கோபி வெள்ளாள பாளையம் பகுதியில் இருந்து சேதுராமன் பவானிசாகர் பகுதியில் உள்ள தனது தோட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு கூலி கொடுப்பதற்காக கொண்டு சென்றது விசாரணை தெரிய வந்தது. ஆனால் அந்த பணத்துக்கான ஆவணம் இல்லாததால் அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்தனர். #LokSabhaElections2019
பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து கமல்ஹாசன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.
அதன்படி இன்று ஈரோடு மாவட்டத்தில் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
இன்று மாலை 4 மணிக்கு வீரப்பன் சத்திரம் பஸ் நிறுத்தத்தில் கமல்ஹாசன் தனது பிரசாரத்தை தொடங்குகிறார் அதனைத் தொடர்ந்து மாநகரின் பல்வேறு இடங்களிலும் சென்று ஓட்டு சேகரிக்கிறார் பின்னர் கோபியிலும் வாக்கு சேகரிக்கிறார்.
தொடர்ந்து திருப்பூர் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு கமல் பேசுகிறார். #LokSabhaElections2019 #KamalHaasan
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அருகே விளாமுண்டி வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன.
தற்போது சுட்டெரிக்கும் கோடை காலம் தொடங்கியதையொட்டி வனப்பகுதியில் இருந்து யானைகள் மற்றும் வன விலங்குகள் இரை தேடியும் தண்ணீர் தேடியும் காட்டை விட்டு வெளியேற தொடங்கி விட்டன.
இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் வனப்பகுதியில் இருந்து 3 யானைகள் புஞ்சை புளியம்பட்டி அருகே காவிலி பாளையம் ஊருக்குள் புகுந்தது. இதையொட்டி பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
பொதுமக்களுடன் வனத்துறையினரும் சேர்ந்து ஊருக்குள் புகுந்த யானையை விரட்டினர். ஆனால் அந்த யானைகள் நல்லூர் ஓடக்காடு பகுதியில் உள்ள பருத்தி காட்டில் உள்ள முள் காட்டில் பதுங்கியது. தொடர்ந்து யானைகளை விரட்டும் பணி நடந்து வருகிறது.
ஈரோடு:
ஈரோடு முத்தம் பாளையம் ஹவுசிங் யூனிட் பேஸ் 3 பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 35). இவரது மனைவி சித்ரா என்கிற மைதிலி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
பார்த்திபன் ஈரோடு டவுன் போலீஸ் நிலையத்தில் காவலராக வேலை பார்த்து வருகிறார்.அவர்கள் ஈரோட்டுக்கு சென்றனர். பின்னர் 2 மணி நேரம் கழித்து 12.30 மணிக்கு வீட்டுக்கு திரும்பி வந்தனர்.
அப்போது வீட்டின் பூட்டு உடைந்து இருப்பதை கண்டு பார்த்திபன் மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் பொருட்கள் சிதறிக் கிடந்தன. பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 20 பவுன் நகை, ரூ.1.50 லட்சம் பணம் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கைரேகை நிபுணரும் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை பதிவு செய்தார்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் நேற்று இரவு வீட்டை நோட்டமிட்ட மர்மநபர்கள் சிலர் வீட்டில் யாரும் இல்லாததை தெரிந்து கொண்டு மெயின் கேட் வழியாக உள்ளே குதித்து வீட்டின் பூட்டை கடப்பாரை, கம்பியால் நெம்பி உடைத்து உள்ளே சென்று கைவரிசையை காட்டியுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.
கொள்ளை நடந்த வீட்டை சுற்றிலும் காலியிடங்கள், இருந்ததால் கொள்ளையர்களுக்கு அது வசதியாக போய்விட்டது.
இந்த துணிகர கொள்ளை குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு பூசாரி தோட்டம் பகுதியை சேர்ந்தவர் நாராயணன் (வயது 45). சொந்தமாக கார்மெண்ட்ஸ் நடத்தி வருகிறார். இவரது மனைவி கோமதி (35). இவர்களுக்கு திருமணமாகி 20 வருடம் ஆகிறது. குழந்தையில்லை.
மேலும் நாராயணனுக்கு கடன் பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் நாராயணன் மன வேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று கோமதி வெளியே சென்று விட்டார். வீட்டில் நாராயணன் மட்டும் தனியாக இருந்துள்ளார். பின்னர் கோமதி வீடு திரும்பி வந்து பார்த்த போது நாராயணன் தூக்குபோட்டு தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து நாராயணன் உடலை மீட்டு கிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர் நாராயணன் வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்தார்.
நாராயணன் குழந்தை இல்லாத ஏக்கத்தில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கடன் பிரச்சினையால் தற்கொலை செய்து கொண்டாரா? என்று தெரியவில்லை.
இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






