என் மலர்tooltip icon

    ஈரோடு

    காதல் மனைவியை கணவரே கழுத்தை துண்டித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பெருந்துறை:

    பெருந்துறை மேட்டுக்கடை அருகே வசித்து வருபவர் முனியப்பன்(வயது 28). இவரது மனைவி பெயர் நிவேதா (19) இருவரும் கர்நாடக மாநிலம் சிமாகோ மாவட்டம் ஏலே பகுதியை சேர்ந்தவர்கள்.

    இருவரும் கடந்த 8 மாதத்துக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

    ஒரே பகுதியை சேர்ந்த இவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டு பெருந்துறை அருகே மேட்டுக்கடையில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வேலைக்கு போய் வந்தனர்.

    முனியப்பன் தனியார் நிறுவனத்தில் வேன் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி நிவேதா மேட்டுக்கடை பகுதியில் உள்ள ஒரு டிப்பார்ட்டுமெண்ட் ஸ்டோரில் வேலை பார்த்து வந்தார்.

    மனைவியின் நடத்தை மீது கணவன் முனியப்பனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அடிக்கடி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நேற்று இரவு 11 மணிக்கு மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் தலைக்கேரிய முனியப்பன் வீட்டில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியால் மனைவி என்றும் பாராமல் கழுத்தை ஆட்டை அறுப்பது போல் அறுத்து துண்டித்தார்.

    தலை துண்டான நிலையில் ரத்த வெள்ளத்தில் நிவேதா பரிதாபமாக இறந்தார்.

    பிறகு தலையையும் உடலையும் தனித்தனி துணியால் மூடிக்கொண்டு வாய்க்காலில் வீச மோட்டார் சைக்கிளில் எடுத்து சென்று கொண்டிருந்தார்.

    எருக்ககாட்டு வலசு பகுதியில் வந்த போது அந்த வழியாக சென்ற மக்களுக்கு முனியப்பன் மீது சந்தேகம் ஏற்பட்டது.

    மேலும் பின்னால் மனைவி உடலின் கால் பகுதி தரையில் உரசிய படி வந்ததால் சந்தேகம் மேலும் வலுத்தது,

    இதனால் 4 பேர் மோட்டார் சைக்கிளில் அவரை விரட்டி சென்றனர். பொதுமக்கள் தன்னை விரட்டி வருவதை கண்ட முனியப்பன் பைக்கை முறுக்கி வேகமாக ஓட்டினார்.

    பெரியமிளாமலை வாய்க்கால் அருகே வந்த போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி முனியப்பன் கீழே விழுந்தார். உடனே வாய்க்காலில் குதித்து மறுகரையில் ஏற தப்பி ஓடினார்.

    அவரை விரட்டிய இளைஞர்களும் விடவில்லை. அவரை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர்.

    பிறகு முனியப்பனை வி.ஏ.ஓ. ஆல்பர்ட் ஓப்படைத்தனர். அவர் பெருந்துறை போலீசில் முனியப்பனை ஒப்படைத்தார்.

    இது குறித்து பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    அம்மாபேட்டை அருகே குடிநீர் கேட்டு இன்று பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அம்மாபேட்டை:

    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள மாணிக்கம் பாளையம் ஊராட்சிக்குட்பட்ட கிராமம் குதிரைக்கல் மேடு. இந்த பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

    இந்த பகுதி மக்களுக்கு காடப்ப நல்லூர் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக குடி தண்ணீர் வரவில்லையாம். மேலும் அந்த பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ்சும் நிற்பதில்லையாம். இதை கண்டித்தும் குடிநீர் சீராக வழங்க கோரியும் மேலும் அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தியும் அந்த பகுதியை சேர்ந்த ஆண்கள் பெண்கள் என 50க்கும் மேற்பட்டோர் குதிரைக்கல் மேட்டில் உள்ள பவானி- மேட்டூர் ரோட்டில் காலி குடங்களுடன் இன்று காலை 6.45 மணிக்கு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இது பற்றி தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரவேல் தலைமையில் போலீசார் விரைந்தனர். மேலும் பஞ்சாயத்து செயலாளர் கணேசனும் சென்றார். அவர் சாலை மறியல் நடத்திய பொதுமக்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர்.

    மேலும் குடிநீர் குழாய் உடைந்து விட்டதால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. அது விரைவில் சரி செய்யப்படும் என உறுதி அளித்தனர். அதன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    பொதுமக்களின் திடீர் சாலை மறியலால் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    நம்பியூர் அருகே வாய்க்காலில் மூழ்கி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நம்பியூர்:

    மதுரை மாவட்டம் கரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ் குமார் தற்போது திருப்பூர் மாவட்டம் அம்மாபாளையம் பகுதியில் பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்று வருகிறார்.

    கடந்த 14 தேதி தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு திருப்பூர் பனியன் கம்பெனிகள் விடுமுறை அளிக்கப்பட்டது.

    அன்றைய தினம் தனது நண்பர்களுடன் கொடிவேரி அணைக்கு சுற்றுலா சென்றுவிட்டு பின்பு மாலை 5 மணி அளவில் நம்பியூர் அருகே உள்ள மூணாம் பள்ளி கீழ்பவானி வாய்க்காலில் தனது நண்பர்களான செல்வம், வினோத், ஜோன்ஸ், ஆகியோருடன் காரில் வந்த கணேஷ் குமார் கீழ்பவானி வாய்க்காலில் கரைப்பகுதியில் குழித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது கணேஷ் குமார் திடீரென வாய்க்காலின் நடுப்பகுதிக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

    அவருக்கு நீச்சல் தெரியாததால் கரை திரும்பவில்லை. தொடர்ந்து நண்பர்கள் அப்பகுதியில் உள்ள நபர்களிடம் சம்பவத்தைப் பற்றி கூறினர் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் தேடிப்பார்த்தும் அவர் கிடைக்கவில்லை.

    அதனைத் தொடர்ந்து கோபி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தரப்பட்டது மாலை வரை தேடப்பட்டது.

    பின்பு போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் மறுநாள் காலையில் தேடுதல் பணி தொடங்கியது. நேற்று மாலை கணேஷ் குமார் உடல் வாய்க்காலின் மேல் பகுதியில் மிதந்து கொண்டிருந்தது. தீயணைப்பு துறையினர் உடலை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இதுகுறித்து கணேஷ் குமாரின் அண்ணன் அன்பழகன் கொடுத்த புகாரின் பேரில் நம்பியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ஈரோடு அருகே சொத்து தகராறில் தந்தையை பெற்ற மகனே அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு நாராயண வலசு, வாய்க்கால் மேடு, இந்திரா நகரைச் சேர்ந்தவர் ராமசாமி (வயது 70). இவரது மனைவி கடந்த 3 ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மகன் நாராயணமூர்த்தி (39). திருமணமாகவில்லை. மகள் தங்கமணி (36) திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார்.

    ராமசாமி மகன்நாராயண மூர்த்தி மகள் தங்கமணி மற்றும் அவரது கணவர் ஆகியோர் கூட்டுக் குடும்பமாக ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.

    இதற்கிடையே சொத்து தொடர்பாக தந்தை-மகன் இடையே பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்றிரவு 9 மணிக்கு இது தொடர்பாக மீண்டும் அவர்கள் இடையே வாய் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    அப்போது ராமசாமி தனது பெயரில் உள்ள வீட்டை தனது மகள் தங்க மணிக்கு எழுதிவைப்பதாக கூறினார். இதைக் கேட்டு ஆத்திரம் அடைந்த நாராயண மூர்த்தி வீட்டில் இருந்த இரும்பு ஊதுகுழல் மற்றும் கட்டையால் ராமசாமியை சராமாரியாக தாக்கினார்.

    இதில் படுகாயமடைந்த ராமசாமி உயிருக்காக போராடினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தங்கமணி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் உயிருக்கு போராடிய ராமசாமியை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தார்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது எனினும் சிகிச்சை பலனின்றி இரவு 10.45 மணிக்கு ராமசாமி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து ராமசாமியின் மகள் தங்கமணி ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் செய்தார்.

    அதன்பேரில் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குபதிவு செய்து நாராயண மூர்த்தியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    22 சட்டசபை தொகுதியிலும் தி.மு.க. வெற்றி பெறும் என்று ஸ்டாலின் கூறியதற்கு பதிலடி கொடுத்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாங்கள் என்ன அவ்வளவு மோசமாகவா இருக்கிறோம்? என கேள்வி எழுப்பினார். #Loksabhaelections2019
    ஈரோடு:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஈரோடு தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் வெங்கு என்கிற மணிமாறனுக்கு பிரசாரம் செய்தார்.

    1998 இல் திருச்செங்கோடு பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு நான் வெற்றி பெற்றுள்ளேன். அப்போது ஈரோடு சட்டமன்ற தொகுதி திருசெங்கோடு பாராளுமன்ற தொகுதியில் இருந்தது. அப்போது நான் பாராளுமன்ற உறுப்பினராவதற்கு வாக்கு கேட்ட இடத்தில் இப்போது தமிழக முதல்வராக வந்து அதிமுக வேட்பாளருக்கு வாக்கு கேட்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    பிரதமராக வருவதற்கு தனித்தகுதி வேண்டும், திறமை வேண்டும், வலிமை வேண்டும். இந்த நாட்டில் உள்ள 130 கோடி மக்களை பாதுகாக்கக் கூடிய ஒரு வலிமை மிகுந்த பிரதமர் நரேந்திர மோடிதான். அவர் மீண்டும் பிரதமராவதற்கு இன்றைக்கு இந்திய நாடே மீண்டும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

    ஈரோடு தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் திமுக சின்னத்திற்கு வாக்கு கேட்கிறார். ஒரு கட்சி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் அந்த கட்சியில் உறுப்பினராக இருக்க வேண்டும். இங்கு போட்டியிடும் வேட்பாளர் மதிமுக உறுப்பினரா? அல்லது திமுக உறுப்பினரா? என்பதை வைகோ விளக்க வேண்டும். கூட்டணிக்காகக் கொள்கையை விட்டு விட்டார். கொள்கையும் கிடையாது கோட்பாடும் கிடையாது. அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தும் சுயமரியாதை கட்சிகள். ஏனெனில் அனைத்து கட்சிகளும் அவரவர் சின்னத்தில் தான் போட்டியிடுகின்றன.

    வைகோவுக்காக எத்தனை பேர் உயிர் தியாகம் செய்துள்ளனர். அதையெல்லாம் நினைக்காமல் தன்னுடைய சுய லாபத்துக்காக, பதவிக்காக வேறொரு கட்சி சின்னத்தில் போட்டியிடுகிறார். கடந்த காலத்தில் மு.க.ஸ்டாலின் குறித்தும், அந்த கட்சியினர் செய்த ஊழல்கள் குறித்தும் கடுமையாக விமர்சித்த வைகோ இப்போது எப்படி கூட்டணி சேர்ந்தார்? இலங்கைத் தமிழர் படுகொலை குறித்து பேசிய வைகோ இப்போது அதுகுறித்து பேசுவதில்லை. மதிமுக தன்னுடைய தனித்தன்மையை இழந்துவிட்டது.

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக அரசைப் பற்றியும், மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக அரசைப் பற்றியும் குறை கூறி வருகிறார். இந்திய நாட்டிற்கே தலை குனிவை ஏற்படுத்தியது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல். ஆகவே இன்றைக்கு தலை குனிவை ஏற்படுத்திய கட்சி திமுக தான். அவர்கள் ஊழலைப்பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும், அருகதையும் இல்லை.

    கடந்த 4 நாட்களுக்கு முன்பு, ராகுல்காந்தி கர்நாடகத்தில் பேசும் போது, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக குறிப்பிடும் போது, நான் பிரதமராக பொறுப்பேற்றவுடன் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டப்படும் என தெரிவித்திருக்கிறார்.

    அது மட்டும் அல்லாமல் நாம் 50 ஆண்டுகாலம் போராடி, நீதிமன்றத்தின் மூலம் நல்ல தீர்ப்பை பெற்று, மத்திய அரசின் மூலமாக காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவை நாம் அமைத்தோம். ஆனால் அந்த அமைப்புகளை கலைப்பேன் என்றும் சொல்லியிருக்கிறார். ஆக தமிழ்நாட்டை பாலைவனம் ஆக்குவதற்காக ராகுல் காந்தியை பிரதமர் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

    மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 22 தொகுதிகளிலும் வெற்றிபெறுவோம் என கூறுகிறார். நாங்கள் என்ன அவ்வளவு மோசமான நிலையிலா இருக்கிறோம்? முதல்வராக வேண்டும் அவர் கனவு எப்போதும் நிறைவேறாது. தோல்வி பயத்தால் மு.க.ஸ்டாலின் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்து வருகிறார். நான் கிளைச்செயலராக இருந்து படிப்படியாக உழைப்பால் உயர்ந்து இப்போது முதல்வராக இருக்கிறேன். மு.க.ஸ்டாலின் தன்னுடைய தந்தை நிழலில் இருந்து கட்சிக்கு தலைவராகி இருக்கிறார்.

    தமிழ்நாட்டு மக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்கின்றனர். இந்த ஆட்சியைக் கலைத்து விடலாம், கட்சியை உடைத்து விடலாம் என ஸ்டாலின் நினைத்தார். ஆனால், அவரது எண்ணம் நிறைவேறவில்லை. தலைவர் ஸ்டாலின் கனவில் கூட முதல்வராக முடியாது. நல்ல உள்ளம் இருந்தால்தான் மக்கள் ஆதரிப்பார்கள்.

    இவ்வாறு முதல் அமைச்சர் எட்பபாடி பழனிசாமி பேசினார்.

    அதனைத்தொடர்ந்து சூளை பகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். எம்எல்ஏக்கள் கே.வி. ராமலிங்கம், கே.எஸ். தென்னரசு மற்றும் கூட்டணி கட்சிகள் தலைவர்கள் உடன் இருந்தனர். #Loksabhaelections2019 #Edappadipalaniswami #MKStalin
    ம.தி.மு.க.வை ஸ்டாலினிடம் வைகோ அடகு வைத்து விட்டார் என்று ஈரோட்டில் தேர்தல் பிரசாரம் செய்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக தாக்கி பேசினார். #LokSabhaElections2019 #Vaiko
    ஈரோடு:

    அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார். அவர் நேற்று ஈரோடு பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வெங்கு என்கிற ஜி.மணிமாறனுக்கு இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகள் கேட்டு ஈரோடு கஸ்பாபேட்டை, பன்னீர்செல்வம் பூங்கா, சூளை பகுதிகளில் பேசினார்.

    முன்னதாக காங்கேயத்தில் இருந்து திறந்த வேனில் வந்த அவருக்கு கஸ்பாபேட்டை பகுதியில் அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்பு அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் மத்தியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்தவேனில் நின்று கொண்டே வாக்கு சேகரித்து பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    இங்கே தேர்தல் பிரசார பொதுக்கூட்டமா?, வெற்றி விழா கூட்டமா? என்று நினைக்கும் அளவுக்கு கடல்போல மக்கள் திரண்டு இருக்கிறீர்கள். நீங்கள் ஈரோடு பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் மணிமாறனுக்கு இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்.

    நம்முடைய தலைமையில் அமைந்திருப்பது மெகா கூட்டணி. மக்கள் விரும்பும் கட்சிகளின் கூட்டணி. தி.மு.க. தலைமையில் ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி, கொள்கை இல்லாத கட்சிகளின் கூட்டணி அமைந்திருக்கிறது. நம்முடைய கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக மோடியை அறிவித்து இருக்கிறோம். ஆனால் தி.மு.க. கூட்டணியில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மட்டுமே காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரதமர் என்று அறிவித்து உள்ளார். அந்த கட்சியில் உள்ள வேறு எந்த கட்சியும் அவரை பிரதமர் வேட்பாளர் என்று கூறவில்லை. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூட தேர்தலுக்கு பின்னர்தான் பிரதமரை தேர்ந்து எடுப்போம் என்று கூறி உள்ளார். மற்ற கூட்டணி கட்சிகளும் அப்படியே நினைக்கின்றன. எனவே அந்த கூட்டணி குழப்பம் நிறைந்த கூட்டணி.

    நமது அரசு தமிழகத்தில் பல்வேறு வளர்ச்சித்திட்டங்களை செய்து உள்ளது. ஆனால், மு.க.ஸ்டாலின் என்ன வளர்ச்சித்திட்டம் கொண்டு வந்தீர்கள் என்று கேட்கிறார். ஜெயலலிதா இருந்தபோது அறிவித்த அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி இருக்கிறோம்.

    அதே ஸ்டாலின் பிரதமர் வேட்பாளராக அறிவித்து இருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கர்நாடகாவில் பேசும்போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்டுவோம், காவிரி மேலாண்மை வாரியத்தை கலைப்போம் என்று கூறி இருக்கிறார். 50 ஆண்டுகள் நமது உரிமைக்காக போராடி, காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் பங்கீட்டு ஆணைத்தை அமைத்து இருக்கிறோம்.

    ஆனால் காவிரி மேலாண்மை வாரித்தை கலைப்போம் என்று ஸ்டாலின் அறிவித்து உள்ள பிரதமர் வேட்பாளர் கூறுகிறார். காவிரி தண்ணீர்தான் நமக்கு ஒரே நீர் ஆதாரம். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டினால் 63 டி.எம்.சி. தண்ணீர் தேக்கப்படும். அப்போது காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வராது. தமிழகம் பாலைவனம் ஆகும். எனவே தமிழகத்துக்கு தண்ணீர் வருவதை தடுக்கும் தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் பதிலடி கொடுக்க வேண்டும்.

    அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை நிறைவேற்றி இருக்கிறோம். ஆனால் ஸ்டாலின் அவர்களே, உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். உங்கள் கூட்டணியில் நீங்கள் அறிவித்த பிரதமர் வேட்பாளர் ராகுல்காந்தி கர்நாடகாவில் அணை கட்டுவோம் என்று கூறி இருக்கிறாரே இதற்கு நீங்கள் என்ன பதில் கூறுகிறீர்கள். இதை நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

    இந்த தொகுதியில் ம.தி.மு.க. கட்சி வேட்பாளரை நிறுத்தி இருக்கிறது. ம.தி.மு.க. கட்சியை வைகோ நடத்தி வருகிறார். தி.மு.க.வில் இருந்து பிரிந்து வந்தபோது ஸ்டாலின் ஒரு வார்டு கவுன்சிலருக்கு கூட தகுதியில்லாதவர் என்று விமர்சித்தவர் வைகோ. அதுமட்டுமா?, தி.மு.க. ஒரு கார்ப்பரேட் நிறுவனம், இலங்கை தமிழர்களை கொன்றொழித்தவர் கருணாநிதி. மீத்தேனுக்கு கையொப்பமிட்டவர் துரோகி ஸ்டாலின், தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி மக்களை ஏமாற்றி மோசடி செய்கிறது.

    வாய்திறந்தால் ஈழத்தமிழர்கள், இலங்கை தமிழர்கள் என்று பேசும் வைகோ, இன்று கூனிக்குறுகி, தி.மு.க. முன்பு மண்டியிட்டு பிச்சை எடுத்து தி.மு.க. கூட்டணியில் போட்டியிடுகிறார்.

    பச்சோந்திகளை பார்த்திருக்கிறோம். அதுபோன்று நிறம் மாறுபவர் வைகோ. அவர் ஒரு திறமையான பேச்சாளர், திறமையான அரசியல்வாதி என்று நினைத்திருந்தேன். ஆனால் இவ்வளவு தரம் தாழ்ந்து போவார் என்று நினைக்கவில்லை.

    தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. போட்டியிடுகிறது. ஒரு கட்சியின் வேட்பாளர் அந்த கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவது என்றால் அவர் அந்த கட்சியின் உறுப்பினராக இருக்க வேண்டும். இங்கு போட்டியிடும் ம.தி.மு.க. வேட்பாளர் எந்த கட்சியின் உறுப்பினர். அவர் ம.தி.மு.க. உறுப்பினர் என்பதா? தி.மு.க. உறுப்பினர் என்பதா? ம.தி.மு.க. கட்சியினர் எப்படி கூறி அவருக்கு வாக்கு சேகரிப்பார்கள்.



    ஒரு சீட்டுக்காக வைகோ அவருடைய கட்சியை தி.மு.க.விடம் அடகுவைத்து விட்டார் என்பது வெட்கமாக இருக்கிறது. துண்டை இழுத்து இழுத்து அவர் பேசும்போது அவரை ரசித்து இருக்கிறேன். ஆனால் இப்போது அவரது செயல்கள் அசிங்கமாக இருக்கிறது.

    தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது தமிழகத்தின் மின்சார தேவை 9 ஆயிரத்து 500 மெகாவாட். அதைக்கூட தி.மு.க. அரசால் கொடுக்க முடியவில்லை. இப்போது நமது தேவை 16 ஆயிரம் மெகாவாட். இந்த மின்சாரத்தை முழுமையாக தயாரித்து தொழிற்சாலைகள், விவசாயிகள் என்று அனைவருக்கும் தடையில்லாமல் கொடுக்கிறோம். அதுமட்டுமின்றி இன்னும் 50 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் மின்வெட்டே இருக்காது என்ற அடிப்படையில் திட்டங்கள் தீட்டி மின்சாரம் உற்பத்தி செய்து மின்மிகை மாநிலமாக, உபரி மின்சார உற்பத்தி செய்பவர்களாக இருக்கிறோம். ஆனால் இதை எல்லாம் தெரியாமல் கொச்சைப்படுத்துவதையும், கேவலமாக பேசுவதையும் நிறுத்திக்கொள்ள வேண்டும். ஸ்டாலின் வாய் திறந்தாலே பொய்யாக பேசுகிறார். உண்மையே பேசுவதில்லை.

    தி.மு.க. தேர்தல் அறிக்கையில் பல அறிவிப்புகளை கொடுத்து இருக்கிறார். அவர் ஏதோ ஆட்சியில் இருப்பது போலவும், நடப்பது சட்டமன்ற தேர்தல் போலவும் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். இது பாராளுமன்ற தேர்தல். இது பிரதமரை தேர்ந்து எடுப்பதற்கான தேர்தல். ஆனால், ஆட்சியிலேயே இல்லாதவர் வாக்குறுதிகள் கொடுக்கிறார்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

    அவருடன் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன், எம்.எல்.ஏ.க்கள் தோப்பு என்.டி.வெங்கடாசலம், கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, வி.பி.சிவசுப்பிரமணி ஆகியோர் இருந்தனர்.  #LokSabhaElections2019 #Vaiko
    சத்தியமங்கலத்தில் இன்று சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தி பெண்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் பகுதியில் தற்போது பாதாள சாக்கடை பணி நடந்து வருகிறது. இதனால் ஆங்காங்கே குடிநீர் குழாய்கள் உடைக்கப்பட்டு தண்ணீர் வீணாக வெளியே சென்று கொண்டிருக்கிறது.

    பல்வேறு இடங்களில் சீராக குடிநீர் வினியோகிக்க படவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    இந்நிலையில் சத்திய மங்கலம் அருகே உள்ள வடக்கு பேட்டை, திப்பு சுல்தான் ரோடு, புளியம் கோம்பை ரோடு, கட்டபொம்மன் நகர் உட்பட பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

    இப்பகுதி மக்களுக்கு கடந்த ஒரு மாதமாக சீராக குடிநீர் விநியோகிக்க படவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர். தினமும் ஒரு குடம் தண்ணீர் மட்டுமே குடிக்க வருவதாக குற்றம் சாட்டினார்.

    எனவே இதனை கண்டித்தும் சீராக குடிநீர் வழங்க வலியுறுத்தியும் இன்று காலை 9.20 மணி அளவில் அப்பகுதி பெண்கள் பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் அத்தாணி ரோட்டில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் சத்தியமங்கலம் போலீசார் மற்றும் சத்தியமங்கலம் நகராட்சி அலுவலர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உங்கள் பகுதியில் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனை ஏற்று பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். சுமார் 30 நிமிடம் நடந்த சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    பு.புளியம்பட்டி அருகே சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தி காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள எலங்காட்டு பாளையம் பகுதியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

    இந்த பகுதியில் கடந்த 10 நாட்களாக குடிநீர் வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் தண்ணீருக்காக மிகவும் சிரமம்பட்டு வந்ததாக பொதுமக்கள் கூறி வந்தனர்.

    இந்த நிலையில் இன்று அந்த பகுதியை சேர்ந்த 40 பெண்கள் உள்பட 100-க்கு மேற்பட்ட பொதுமக்கள் புஞ்சை புளியம்பட்டி காவிலிபாளையம் ரோட்டுக்கு வந்தனர். அவர்கள் திடீரென காலி குடங்களுடன் எலங்காட்டு பாளையம் காலனி அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இது குறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது, அந்த பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்லப்படும் டேங்க் சுத்தப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதனால் தற்காலிகமாக தண்ணீர் வழங்க முடியவில்லை. விரைவில் இந்த பணி முடித்து சீரான குடிநீர் வழங்கப்படும் என தெரிவித்தனர்.

    இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    எலச்சிபாளையம் அருகே கஞ்சா பதுக்கி விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    பர்கூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாசம் தலைமையிலான போலீசார் குற்றத் தடுப்பு நடவடிக்கையாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எலச்சிபாளையம் பஸ் நிறுத்தம் அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் ஒரு நபர் நின்று கொண்டிருந்தார்.

    அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த நபர் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்தார். அந்த நபரை சோதனை செய்ததில் அவரது இடுப்பில் பிளாஸ்டிக் கவரில் 225 கிராம் எடையுள்ள கஞ்சா இருந்தது தெரியவந்தது.

    போலீசார் விசாரணையில் அவர் பர்கூர் கிராமம், எலச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த முருகேசன் என தெரியவந்தது கர்நாடக மாநிலம் சென்று கஞ்சாவை வாங்கி வந்து இங்கு விற்பனை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.

    இதையடுத்து பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகேசனை கைது செய்தனர். அவரிடமிருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    ரெயில் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    சங்ககிரியை அடுத்த வீரபாண்டிய ரெயில் நிலையத்திற்கும் மகுடஞ்சாவடி ரெயல் நிலையத்துக்கும் இடையே உள்ள தண்டவாளத்தில் சம்பவத்தன்று சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ரெயில் மோதி இறந்து விட்டதாக தெரிய வந்துள்ளது.

    அவர் தண்டவாளத்தை கடக்கும் போது ரெயில் மோதி இறந்தாரா? அல்லது ஓடும் ரெயிலிருந்து தவறி விழுந்து இறந்தாரா? என்றும் தெரியவில்லை.

    எடப்பாடிக்கு கருணாநிதி மீது திடீர் பாசம் ஏன்? என்று ம.தி.மு.க.பொதுச் செயலாளர் வைகோ கேள்வி எழுப்பி உள்ளார். #LokSabhaElections2019 #Vaiko
    ஈரோடு:

    ம.தி.மு.க.பொதுச் செயலாளர் வைகோ ஈரோடு தொகுதிக்குட்பட்ட குமாரபாளையம் பகுதியில் ம.தி.மு.க. வேட்பாளர் கணேசமூர்த்தியை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

    மத்தியில் உள்ள ஆட்சியை தூக்கி எறிய வேண்டும் அதற்கு உங்கள் ஆதரவு வேண்டும். மத்திய அரசு பாசிச வெறியாட்டம் ஆடிவருகிறது.

    மகாத்மா காந்தியின் உருவபொம்மையை வைத்துக்கொண்டு ஒரு கும்பல் துப்பாக்கியால் சுடுகிறது. கோட்சேக்கு நாடு முழுவதும் சிலை வைக்கப்போவதாகவும் அந்த கும்பல் கூறுகிறது. மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? வேடிக்கைதான் பார்த்தது.

    ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதாக கூறியவரே துணை முதல்வர் ஓ.பி.எஸ்.தான் அவரிடம் விசாரணை நடத்த இந்த அரசு தயாரா? இன்று கலைஞர் மீது எடப்பாடிக்கு திடீர் பாசம் வந்துள்ளது. அவரை பற்றியெல்லாம் வாய்க்கு வந்தபடி பேசிவருகிறார். ஏதோ விசாரணை நடத்தப் போகிறாராம். கலைஞரை ஸ்டாலின் பெற்ற பிள்ளையைபோல் பார்த்து கொண்டார். ஏன்.. பிரதமர் மோடி உள்பட அனைவரும் அவரை பார்த்து சென்றவர்கள்தானே?

    கலைஞர் மறைந்த பிறகு ஸ்டாலின் உள்பட அவரது குடும்பத்தினர் மெரினாவில் இடம் கேட்டு வந்தார்களே... முடியாது என்று சொன்னவர்கள்தானே... நீங்கள்? இப்போது மட்டும் கலைஞர் மீது பாசம் வந்துவிட்டதா?

    தி.மு.க. வக்கீல்கள் போராடி வாதாடி மெரினாவில் இடம் வாங்கி கொடுத்தார்கள். தமிழகத்தில் 18 சட்டசபை இடைத்தேர்தலோடு மேலும் 4 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதனால் மத்தியில் மட்டுமல்ல... மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் நிச்சயம் ஏற்படும்.

    இவ்வாறு வைகோ பேசினார்.  #LokSabhaElections2019 #Vaiko



    அனைத்து தொழிலாளர்களுக்கும் 2 ஆயிரம் ரூபாய் வழங்க முடியாமல் போனதுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தான் காரணம் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். #Edappadipalanisamy
    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் செய்தார்.

    கொங்கு மண்டல விவசாயிகளின் மனதையும் உள்ளத்தையும் குளிர வைக்கும் வகையில் ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்ட விவசாயிகள்-மக்களின் 60 ஆண்டு கால கனவு திட்டமான அத்திக்கடவு- அவினாசி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது.

    விவசாய கூலித்தொழிலாளர்கள் உள்பட அனைத்து தொழிலாளர்களுக்கும் 2 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக அறிவித்தோம். தேர்தலை காரணம் காட்டி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தடை ஏற்படுத்தியதால் அதை கொடுக்க முடியவில்லை. இப்படி மக்கள் நலத்திட்டங்களுக்கு எதிராக இருப்பவர்தான் ஸ்டாலின்.

    எனினும் அந்த தடையை உடைத்தெறிந்து தேர்தல் முடிந்ததும் அனைவருக்கும் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என இங்கே தெரிவித்து கொள்கிறேன்.

    மேலும் இன்னொன்றையும் தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன். தேர்தல் முடிந்ததும் தனியார் சேனல் கட்டணங்களை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இப்பகுதியில் கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டத்துக்காக ரூ.247 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடக்கிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு முற்றிலும் தடுக்கப்பட்டு உள்ளது. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் ஆட்சி மீது குறை கூறி பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டு ஆட்சியை பிடிக்க பார்க்கிறார் ஸ்டாலின். அது ஒருபோதும் நடக்கப்போவது இல்லை.

    திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலே 6 மணி நேரம் மின்வெட்டு, 7 மணி நேர மின்வெட்டு, 8 மணி நேரம் மின்வெட்டாக இருந்த நிலையை மாற்றி, நெசவாளர்கள் பயன் பெறுகின்ற வகையில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் 24 மணி நேரமும் தடையில்லாத மின்சாரத்தை வழங்குகிற அரசு அம்மாவுடைய அரசு என்பதை நான் இந்த நேரத்திலே அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.

    இன்று கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவந்து ரூ.28,000 கோடி ரூபாயை கல்வித் துறைக்காக ஒதுக்கீடு செய்து பல்வேறு திட்டங்களை இன்றைக்கு கல்வித்துறையிலே நாங்கள் செயல்படுத்தி வருகிறோம்.

    பள்ளிப்படிப்பை முடித்த பின்னாலே மாணவர்கள் தொழில் கல்வி பயில வேண்டும் என்று சொன்னால் ஈரோடு மாவட்டத்திலேயே அரசு பாலிடெக்னிக் கல்லூரி கிடையாது. அம்மா அரசுதான் இந்த பெருந்துறை தொகுதிக்கு ரூ.52 கோடி ரூபாய் செலவில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி கொண்டு வந்தது. உங்கள் பெருந்துறையில் தான் மேலும் நான்கு வழிச்சாலையும் அமைக்கப்பட்டு உள்ளது.

    ஏழை எளிய மாணவர்கள் கட்டணமில்லாத கல்வியை கற்று வருகிறார்கள் என்பதை நான் உங்களுக்கு பெருமையோடு சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

    இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். #Edappadipalanisamy
    ×