என் மலர்
ஈரோடு
ஈரோடு:
பவானி அடுத்த சீதபாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 45). விவசாயி. தேவராஜ் நேற்று இரவு காற்றுக்காக வீட்டின் கதவு திறந்து வைத்து குடும்பத்துடன் தூங்கினார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்ம நபர் தேவராஜின் வீட்டுக்குள் புகுந்தார். பின்னர் வீட்டில் உள்ள பீரோவில் இருந்த 32 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்றார்.
இன்று காலை கண் விழித்து பார்த்த தேவராஜ் பீரோ திறந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் பீரோவை பார்த்தபோது பீரோவில் இருந்த 32 பவுன் நகை மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து தேவராஜ் பவானி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வீட்டை பார்வையிட்டனர்.
மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த துணிகர கொள்ளை சம்பவம் பவானியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டி.என்.பாளையம்:
ஈரோடு மாவட்டம் டி.என். பாளையம் வனப்பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன.
தற்போது கோடை காலம் நிலவுவதால் தண்ணீர் மற்றும் உணவு தேடி யானைகள் காட்டை விட்டு வெளியேறிகிறது.
இது வரை இப்படி வெளியேறும் யானைகள் ஊரையொட்டி உள்ள தோட்டங்களில் மட்டும் தான் புகுந்து வந்தது. விவசாயிகள் அதை காட்டுக்குள் விரட்டி வருகிறார்கள்.
ஆனால் இதுவரை இல்லாத அதிர்ச்சி சம்பவமாக இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை ஒற்றை யானை ஒன்று வனத்தில் இருந்து வெளியேறி ஊருக்குள் புகுந்தது.
டி.என்.பாளையம் அருகே உள்ள பங்களாபுதூரில் உள்ள தனியார் கல்லூரி மற்றும் போலீஸ் நிலையம் அருகே மெயின் ரோட்டில் இந்த யானை அட்டகாசமாக நடந்து சென்றதை பார்த்த அந்த பகுதி மக்களும் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
ஆனால் அந்த யானை யாரையும் தாக்கவில்லை. எந்த அட்டகாசமும் செய்ய வில்லை. இது குறித்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ரேஞ்சர் தலைமையில் வனத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் பொதுமக்கள் உதவியுடன் அந்த ஒற்றை யானையை சத்தமிட்டப்படி விரட்டினர். எருமை குட்டை வழியாக அந்த யானை காட்டுக்குள் புகுந்தது.
அதிகாலை 2 மணிக்கு புகுந்த அந்த ஒற்றை யானை காலை 6.30 மணிக்கு காட்டுக்குள் சென்றது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 1-ந்தேதி தொடங்கி 19-ந் தேதி முடிவடைந்தது.
இந்த ஆண்டு பிளஸ்-2 பொதுத்தேர்வு 1200 மதிப்பெண்களுக்கு பதிலாக 600 மதிப்பெண்களுக்கு மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர்.
தேர்வுகள் முடிவடைந்து வினாத்தாள்கள் திருத்தும் பணி நிறைவடைந்து இன்று தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.
அதன்படி இன்று காலை 9.30 மணிக்கு பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகின. அதன்படி மாணவ-மாணவிகள் தேர்ச்சி சதவீதத்தில் திருப்பூர் மாவட்டம் மாநில அளவில் 95.37 சதவீதம் பெற்று முதல் இடம் பிடித்தது. ஈரோடு மாவட்டம் 95.23 சதவீதம் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்தது. பெரம்பலூர் மாவட்டம் 95.15 சதவீதம் பெற்று 3-ம் இடம் பிடித்தது.
ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரை 214 பள்ளிகளை சேர்ந்த 11 ஆயிரத்து 490 மாணவர்களும், 12 ஆயிரத்து 826 மாணவிகள் என மொத்தம் 24 ஆயிரத்து 316 மாணவ-மாணவிகள் பிளஸ்-2 பொதுத் தேர்வை எழுதினர்.
இதில் 10 ஆயிரத்து 847 மாணவர்களும், 12 ஆயிரத்து 308 மாணவிகள் என மொத்தம் 23 ஆயிரத்து 155 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் 94.40, மாணவிகள் தேர்ச்சி சதவீதம் 95.96 என மொத்தம் தேர்ச்சி சதவீதம் 95.23 ஆக உள்ளது.
வழக்கம் போல் இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்று உள்ளனர்.
இன்று வெளியான பிளஸ்-2 முடிவுகளை மாணவர்கள் தங்களது செல்போனில் எஸ்.எம்.எஸ்.மூலமாகவும் பார்த்து தெரிந்து கொண்டனர். அதுமட்டுமின்றி மாணவர்களின் பெற்றோர் செல்போனிலும் மதிப்பெண்கள் வெளியிடப்பட்டன.
மாணவர்கள் படிக்கும் பள்ளிகளிலும் மதிப்பெண்கள் பட்டியல் ஓட்டி வைக்கப்பட்டிருந்தது. இண்டர்நெட் மையங்களிலும் தங்களது மதிப்பெண்களை தெரிந்து கொண்டனர்.
நாளை முதல் 26-ந் தேதி வரை மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில் மாதிரி ரேங்க் கார்டு வழங்கப்படும். தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ-மாணவிகள் ஜூன் மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் சிறப்பு துணை தேர்வில் பங்கேற்று எழுதலாம் என்று பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். #Plus2Results
கோபி:
கோபி ஜே.ஜே. நகரை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 48) விவசாயி, கடந்த 16-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று விட்டார்.
நேற்று ஊரில் இருந்து திரும்பி வந்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
பீரோவில் இருந்த 2பவுன் நகை பணம் 2 ஆயிரம் மற்றும் ஒரு கம்ப்பூட்டர் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து உள்ளனர்.
வீடு பூட்டி கிடப்பதை கண்டு நோட்ட மிட்ட மர்ம ஆசாமிகள் பூட்டை உடைத்து இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து கோபி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று வெளியிடப்பட்டது. ஈரோடு மாவட்டம் தேர்ச்சி வீகிதத்தில் 95.23 சதவீதம் பெற்று மாநில அளவில் 2-ம் பிடித்தது.
ஈரோடு மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வை 94 அரசு பள்ளிகளை சேர்ந்த 10 ஆயிரத்து 305 மாணவ - மாணவிகள் எழுதினர். இதில் 9 ஆயிரத்து 520 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 92.38 ஆகும்.
இதே போன்று ஆண்கள் மட்டும் படிக்கும் பள்ளியில் 2 ஆயிரத்து 404 மாணவர்கள், பெண்கள் மட்டும் படிக்கும் பள்ளியில் 4 ஆயிரத்து 533 மாணவிகள், இருபாலரும் படிக்கும் பள்ளியில் 17 ஆயிரத்து 379 மாணவ-மாணவிகள் என மொத்தம் 24 ஆயிரத்து 316 பேர் தேர்வு எழுதினர்.
இதில் ஆண்கள் மட்டும் படிக்கும் பள்ளியில் 2 ஆயிரத்து 152 மாணவர்கள், பெண்கள் மட்டும் படிக்கும் பள்ளியில் 4 ஆயிரத்து 323 மாணவிகள், இருபாலரும் படிக்கும் பள்ளியில் 16 ஆயிரத்து 680 மாணவ-மாணவிகள் என மொத்தம் 23 ஆயிரத்து 155 பேர் தேர்ச்சி பெற்றனர்.
ஈரோடு மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு மாதமாக கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. சில இடங்களில் காற்றும் வனப்பகுதியில் சாரல் மழையும் பெய்து வருகிறது.
இந்த நிலையில் அந்தியூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று பலத்த சூறாவளி காற்று வீசியது.
காற்று மட்டும் தான் அடித்ததே தவிர மழை பெய்யவில்லை. இந்த சூறாவளி காற்றால் பல இடங்களில் வாழைகள் அடியோடு சாய்ந்தது.
அந்தியூர் அடுத்த பச்சாம்பாளையம் கொல்லபாளையத்தில் சரஸ்வதி என்பவர் தோட்டத்தில் நன்கு விளைந்திருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள வாழைகள் முற்றிலும் சேதமாகி விட்டன.
இதே போல் கே.மேட்டூரில் துரைசாமி என்பவரது தோட்டத்தில் உள்ள ரூ.2 லட்சம் மதிப்புள்ள வாழைகளும், புதுப்பாளையத்தை சேர்ந்த சேகர் என்பவரது தோட்டத்தில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள நேந்திதரம் வகை வாழைகளும் அடியோடு சாய்ந்து நாசமானது.
மேலும் எண்ணமங்கலம், சென்னம்பட்டி, கொமராயனூர் உள்பட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பல விவசாயிகளின் தோட்டங்களில் உள்ள பல லட்சம் மதிப்புள்ள வாழைகள் சேதமானது.
மொத்தம் ரூ.10 கோடி மதிப்புள்ள வாழைகள் நாசமாகி இருப்பதாக விவசாயிகள் கண்ணீருடன் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட வாழைகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கேட்டு கொண்டுள்ளனர்.
கோபி அருகேயுள்ள குள்ளம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளிக் கூடத்தில் அமைச்சர் செங்கோட்டையன் ஓட்டு போட்டார். வாக்களிப்பதற்கு முன்பாக அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் பல சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பொங்கலன்று பரிசாக ரூ.1,000 கொடுத்தது போல தேர்தல் முடிந்த பிறகு வறுமைக்கோட்டிற்கு கீழ்உள்ளவர்களுக்கு ரூ.2,000 வழங்கப்படும்.

நாளை 19 ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் காலை சரியாக 9-30 மணிக்கு திட்டமிட்டபடி வெளியிடப்படும். மாணவ, மாணவிகள் எஸ்எம்எஸ், ஆன்லைன் மூலமாகவும் தங்களது தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்.
பிளஸ் 2 தேர்வில் அனைத்து மாணவர்களும் நல்ல முறையில் வெற்றி பெற்று மேல்படிப்பிற்குச் செல்லவும் வாழத்துக்களை தெரிவிக்கிறேன். தோல்வியடைந்த மாணவர்கள் சோர்வும், மனஅழுத்தமும் இல்லாமலும், துவண்டு விடாமலும் ஜூன் மாதத்தில் நடைபெற உள்ள உடனடி தேர்வை எழுதி வெற்றி பெற்று இதே ஆண்டில் கல்லூரிக்குச் செல்லலாம்.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் முதன் முதலாக கல்வியாண்டின் துவக்கத்திலேயே மாணவ, மாணவிகள் பிளஸ்2, பிளஸ்1, 10 ம் வகுப்பு ஆகிய பொதுத் தேர்வுகளுக்கான தேதிகளும், தேர்வு முடிவுகளுக்கான தேதிகளும் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.
புதிய பாடத்திட்டங்களை செயல்படுத்த ஆசிரிய, ஆசிரியைகளுக்கு விரைவில் பயிற்சி அளிக்கப்படும். அரசு பள்ளிகளில் ஜூன் மாதம் முதல் எல்.கே.ஜி. யு.கே.ஜி. வகுப்புகள் துவங்கப்பட உள்ளது. 13 லட்சத்து 35 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு ஜூன் மாதம் மடிகணினி வழங்கப்படும்.
கோடை விடுமுறையில் தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது. இதுபற்றி தகவல் கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
நீட் தேர்வை பொருத்த வரை தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசிடம் தேவையில்லை என்று வலியுறுத்தி வருகிறது. ஆனால், திமுக, மற்றும் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. இந்த ஆண்டு நீட் தேர்விற்கு 10 கல்லூரிகளில் 5 ஆயிரம் பேருக்கு பயிற்சியளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வேலூர் பாராளுமன்றத் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டது குறித்து கேட்டதற்கு தேர்தல் கமிஷனும், உயர்நீதிமன்றமும் இதுபற்றி முடிவெடுத்துள்ளது என்றார். #Plus2Result #TNMinister #Sengottaiyan
கோபி, ஏப். 18-
தமிழகம் முழுவதும் இன்று பாராளுமன்ற தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த குள்ளம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த 123-வது வாக்கு மையத்தில் தமிழக கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஓட்டு போட்டார்.
காலை 7.30 மணிக்கெல்லாம் அமைச்சர் செங்கோட்டையன் வாக்காளர்களுடன் வரிசையில் நின்று ஓட்டு போட்டார்.
ஓட்டுப்பதிவு 7 மணி என்றாலும் காலை 6.30 மணிக்கெல்லாம் வாக்கு மையத்தில் வரிசையில் நிற்க தொடங்கினர்.
சரியாக காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியதும் பொதுமக்கள் வரிசையில் வந்து அமைதியாக ஓட்டு போட்டு தங்ளது ஜனநாயக கடமையாற்றினர். * * * தர்மபுரி-1 * * * பெங்களூரு தெற்கு தொகுதியில் அடங்கிய கிரி நகரில் ஓட்டுபோட காலை 7 மணிக்கே காத்திருந்த வாக்காளர்கள். * * * அமைச்சர் செங்கோட்டையன் ஓட்டு போட்டபோது எடுத்த படம். * * * ஓட்டு போட அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வரிசையின் நின்ற காட்சி.

ஈரோடு மாவட்டம் சிவகிரியில் உள்ள வாக்குச்சாவடியில் முருகேசன் என்ற முதியவர், வாக்களித்துவிட்டு வெளியே வந்ததும் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதேபோல் சேலம் மாவட்டம் வேடப்பட்டியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்த முதியவர் கிருஷ்ணனும் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் வாக்குச்சாவடியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. #TNElections2019 #ElderlyVoters
பெருந்துறை:
பெருந்துறை அருகே மேட்டுக்கடையில் வசித்தவர் முனியப்பன் (வயது 28) இவரது மனைவி நிவேதா(19), இருவரும் கடந்த 8 மாதத்துக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர்.
இருவரும் மேட்டுக்கடையில் ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருந்து 2 பேருமே வேலைக்கு போய் வந்தனர்.
இளம்பெண் நிவேதாவுக்கு ஆண் நண்பர்களுடன் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் செல்போனில் அவர்களுடன் பேசி வந்தார். இதைகண்ட கணவர் முனியப்பன் ஆத்திரம் அடைந்தார். “நமக்கு திருமணமாகிவிட்டது. மற்ற ஆண்களுடன் பேசுவதை பழகுவதை விட்டுவிடு” என்று சத்தமும் போட்டார். ஆனால் நிவேதா இதை கேட்டதாக தெரியவில்லை.
இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் நிவேதா ஒன்றாக இருந்ததை நேரில்கண்டு முனியப்பன் கடும் ஆத்திரம் அடைந்தார். இருவருக்கும் கடுமையான சண்டை ஏற்பட்டது.
இந்த வீட்டில் இருந்தால் மனைவியின் கள்ளக் காதலர்கள் மீண்டும் வரக் கூடும் என எண்ணிய முனியப்பன் அந்த வீட்டை விட்டு வேறு வீட்டுக்கு குடியிருக்க திட்டமிட்டார்.
இதனால் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் வீடுபார்க்க சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. கோபம் அடைந்த முனியப்பன் மனைவியை அடித்து உதைத்தார். இருவரும் மாறி... மாறி... தாக்கினர். பிறகு முனியப்பன் ஆத்திரத்தில் கத்தியால் நிவேதாவின் கழுத்தை அறுத்து துண்டித்தார். இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.
மனைவியின் பிணத்தை மறைக்க மோட்டார் சைக்கிளில் துண்டித்த தலை மற்றும் உடலை எடுத்து சென்ற போது பொதுமக்களிடம் சிக்கினார். பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் அவரை கைது செய்தார்.
போலீசாரிடம் கொலையாளி முனியப்பன் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
இதில் “நானும் நிவேதாவும் காதல் திருமணம் செய்து கொண்டோம். சந்தோஷமாகத்தான் வாழ்ந்தோம். அப்போதுதான் என் மனைவிக்கு வேறு ஒருவருடன் கள்ளக்காதல் இருந்ததை கண்டேன். மேலும் பல ஆண்களுடன் போனில் பேசியதையும் கண்டேன்.
இதனால் அவளை பல தடவை கண்டித்தேன். ஆனால் அவள் என்பேச்சை கேட்கவில்லை. தொடர்ந்து கள்ளக்காதலில் ஈடுபட்டாள். அவளை நான் மிரட்டியும் பார்த்தேன். அப்படியும் கேட்டகவில்லை. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கழுத்தை அறுத்து கொலை செய்தேன். தப்ப முயன்ற போது சிக்கி கொண்டேன்” என்று கூறினார்.
ஈரோடு:
ஈரோடு நாராயண வலசு, வாய்க்கால் மேடு, இந்திரா நகரைச் சேர்ந்தவர் ராமசாமி (வயது 70). இவரது மனைவி கடந்த 3 ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மகன் நாராயணமூர்த்தி (39). திருமணமாகவில்லை. மகள் தங்கமணி (36) திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார்.
ராமசாமி மகன் நாராயணமூர்த்தி மகள் தங்கமணி மற்றும் அவரது கணவர் ஆகியோர் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர். நாராயணமூர்த்தி சரியாக வேலைக்கு செல்லாமல் அவ்வப்போது வந்து வீட்டில் உள்ளவர்களிடம் தகராறில் ஈடுபடுவாராம். மேலும் நாராயணமூர்த்தி தனது தந்தையிடம் வீட்டை எனது பெயரில் எழுதி வைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். அதற்கு அவரது தந்தை ராமசாமி மறுத்து விட்டார். நேற்று முன்தினம் அவர்கள் இடையே வாய் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அப்போது ராமசாமி தனது பெயரில் உள்ள வீட்டை தனது மகள் தங்கமணிக்கு எழுதி வைப்பதாக கூறினார். இதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த நாராயணமூர்த்தி வீட்டில் இருந்த இரும்பு ஊதுகுழல் மற்றும் கட்டையால் ராமசாமியை தாக்கினார். இதில் படுகாயமடைந்த ராமசாமி உயிருக்காக போராடினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தங்கமணி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் உயிருக்கு போராடிய ராமசாமியை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி ராமசாமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ராமசாமியின் மகள் தங்கமணி ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் செய்தார்.
அதன்பேரில் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குபதிவு செய்து நாராயணமூர்த்தியை கைது செய்தனர்.
அப்போது அவர் கூறும்போது சம்பவத்தன்று வீட்டை எனது பெயருக்கு எழுதி வைக்குமாறு என் தந்தையிடம் கேட்டேன். அதற்கு அவர் மறுத்து என்னை உதாசீனப்படுத்தினார். எனது வீட்டை உனது பெயருக்கு எழுதி கொடுக்க மாட்டேன் எனது மகள் தங்கமணி பெயரில்தான் எழுதி வைப்பேன். நீ குடித்து குடித்து விட்டை அழித்து விடுவாய் என்றார். இதனால் ஆத்திரமடைந்த நான் வீட்டில் இருந்த இரும்பு ஊதுகுழலை எடுத்து தந்தையை தாக்கினேன். மேலும் அருகில் இருந்த கட்டையை எடுத்து அவரை அடித்தேன்.
இவ்வாறு நாராயண மூர்த்தி போலீசில் வாக்கு மூலமாக தெரிவித்தார். இதையடுத்து நாராயண மூர்த்தியை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர் அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
பெருந்துறை:
பெருந்துறை அடுத்த பெத்தாம்பாளையம் நரிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி அம்மணியம்மாள் (வயது 60).
இவர் அந்த பகுதியில் குடிசை வீடு அமைத்து வசித்து வருகிறார். கூலித் தொழிலாளி. நேற்று மாலை வீட்டில் இருந்த சுவிட்ச் பாக்சில் மின் கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் வீட்டின் மேற் கூரையில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
இதனைக்கண்ட முனியம்மாள் அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அவர்களால் முடிய வில்லை.
இதையடுத்து பெருந்துறை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். நிலைய அலுவலர் வேலுச்சாமி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு வீரர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர்.
ஆனால் வீட்டில் இருந்த பேன், டிவி, பொருட்கள் மற்றும் ரேசன் கார்டு உள்பட ஆவணங்கள் அனைத்தும் எரிந்தது.






