என் மலர்tooltip icon

    செய்திகள்

    பு.புளியம்பட்டி அருகே காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
    X

    பு.புளியம்பட்டி அருகே காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

    பு.புளியம்பட்டி அருகே சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தி காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள எலங்காட்டு பாளையம் பகுதியில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

    இந்த பகுதியில் கடந்த 10 நாட்களாக குடிநீர் வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் தண்ணீருக்காக மிகவும் சிரமம்பட்டு வந்ததாக பொதுமக்கள் கூறி வந்தனர்.

    இந்த நிலையில் இன்று அந்த பகுதியை சேர்ந்த 40 பெண்கள் உள்பட 100-க்கு மேற்பட்ட பொதுமக்கள் புஞ்சை புளியம்பட்டி காவிலிபாளையம் ரோட்டுக்கு வந்தனர். அவர்கள் திடீரென காலி குடங்களுடன் எலங்காட்டு பாளையம் காலனி அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இது குறித்து அதிகாரிகளிடம் கேட்ட போது, அந்த பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்லப்படும் டேங்க் சுத்தப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதனால் தற்காலிகமாக தண்ணீர் வழங்க முடியவில்லை. விரைவில் இந்த பணி முடித்து சீரான குடிநீர் வழங்கப்படும் என தெரிவித்தனர்.

    இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×