என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஈரோடு அருகே நகைக்கடை பூட்டை உடைத்து 60 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கர்நாடகா மாநில எல்லையில் உள்ள தாளவாடி ஓசூர் ரோட்டில் நகைக்கடை மற்றும் பேன்சி ஷோரூம் வைத்திருப்பவர் ரங்கசாமி.

    இவரது சொந்த ஊர் தாளவாடி அருகே உள்ள தலமலை ஆகும். வழக்கம்போல் நேற்று இரவு தாளவாடியில் உள்ள தனது நகைக்கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு வந்து விட்டார்.

    இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணி அளவில் கடையை திறக்க சென்ற ரங்கசாமி அதிர்ச்சி அடைந்தார். அவரது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. மர்ம ஆசாமிகள் நள்ளிரவில் கடை பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.

    பிறகு கடையில் இருந்த 60 பவுன் நகையை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்று உள்ளனர்.

    இது குறித்து தாளவாடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த கைவரிசையில் ஈடுபட்டிருப்பது கர்நாடகா மாநில கொள்ளையர்களா? என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்பதே என் விருப்பம் என்று தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
    ஈரோடு:

    தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை ஆதரிக்கிறோம். அதே சமயம் இந்த சட்டத்தால் யாருக்கும் வரக்கூடாது. பாதிப்படைய கூடாது. அப்படி யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டால் தட்டி கேட்கும் முதல் கட்சியாக தே.மு.தி.க. நிற்கும்.

    மற்ற கட்சி தலைவர்களுக்கு எல்லாம் முன் உதாரணமாக நம் தலைவர் விஜயகாந்த் திகழ்கிறார். அதற்கு ஒரேயொரு சான்று விஜயகாந்த் திரைப்படங்கள் மூலம் சம்பாதித்த பணத்தையெல்லாம் ஏழை-எளிய மக்களுக்கு தானமாகவும் பொருட்களாகவும் வாரி வழங்கி உள்ளார்.

    வரும் சட்டமன்ற தேர்தலுக்கு தே.மு.தி.க. தொண்டர்கள் இப்போதே தயாராகி விட்டார்கள். விஜயகாந்த் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரச்சாரம் செய்வார். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளார்.

    நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் கூட்டணியுடன் போட்டியிட்டோம். வரும் தேர்தலில் கூட்டணியுடன் சேர்ந்து போட்டியா? அல்லது தனித்து போட்டியா? என இப்போது கூற முடியாது. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் உள்ளது. தற்போது எதையும் உறுதியாக கூற முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

     ரஜினிகாந்த்

    ரஜினிகாந்த் கட்சி தொடங்கினால் பல கட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறுகிறார்களே? என்று கேட்ட கேள்விக்கு “தே.மு.தி.க. இன்று மக்கள் செல்வாக்குடன் உள்ளது. வரும் தேர்தலிலும் அதை நிரூபிப்போம். முதலில் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கட்டும் பார்ப்போம். அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்பதே என் விருப்பம்” என கூறினார்.

    அந்தியூர் அருகே தீ விபத்தில் வீடு எரிந்து சாம்பல் ஆனது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அந்தியூர்:

    அந்தியூர் அருகே உள்ள குருநாதபுரத்தை சேர்ந்தவர் குமார். கூலி தொழிலாளி. இவர் விறகு அடுப்பில் சமையல் செய்தபின், நெருப்பை அணைக்காமல் சென்றதாக கூறப்படுகிறது.

    சில மணிநேரங்களுக்கு பின்பு, அப்பகுதியில் வீசிய லேசான காற்று தீப்பிழம்புகள் அவரது கூரை வீடு மீது விழுந்துள்ளது. சிறிது நேரத்தில் கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது.

    இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அந்தியூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் அரை மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர்.

    திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை கண்டித்து ஈரோட்டில் முஸ்லிம்களின் காத்திருப்பு போராட்டம் 6-வது நாளாக நீடிக்கிறது.
    ஈரோடு:

    மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர், முஸ்லிம் அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோட்டிலும் முஸ்லிம் அமைப்புகள் கடந்த 21-ம் தேதி முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு செல்ல பாஷா வீதியில் தரையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    குடியிருப்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் அது தொடர்பாக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் உள்பட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறு உள்ளனர். நாளுக்கு நாள் இவர்களின் காத்திருப்பு போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்ட 200 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    அந்தப் பகுதியில் சாமியானா பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. அதில் நாள் முழுவதும் முஸ்லிம்கள் ஒன்று கூடி குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கோ‌ஷம் எழுப்பியவாறு உள்ளனர். இரவில் ஆண்கள் அங்கேயே தங்கி விடுகின்றனர்.

    இந்நிலையில் அவர்களின் போராட்டம் இன்று ஆறாவது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது. பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டக்களத்திற்கு நேரடியாக வந்து அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பேசி வருகின்றனர்.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டோன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    தவக்காலம் தொடங்கியதன் அடையாளமாக ஈரோட்டில் புனித அமல அன்னை ஆலயத்தில் கிறிஸ்தவர்களின் நெற்றியில் பங்குத்தந்தை சாம்பலால் சிலுவை அடையாளம் இட்டார்.

    ஈரோடு:

    இயேசு கிறிஸ்து பாடுபட்டு சிலுவையில் உயிர்விட்ட நாள் புனித வெள்ளியாக உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களால் கடைபிடிக்கப்படுகிறது.

    இதை முன்னிட்டு 40 நாட்கள் நோன்பு இருப்பது வழக்கம். இந்த நோன்பு காலம் தவக்காலம் என்று அழைக்கப்படுகிறது. தவக்காலத்தின் முதல் நாள் சாம்பல் புதன் அல்லது திருநீற்றுப் புதனாக கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி இன்று தவக்காலம் தொடங்கியது.

    இதையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று காலை சிறப்பு திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டன.

    ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை ஜான் சேவியர் குழந்தை தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது.

    தவக்காலம் தொடங்கியதன் அடையாளமாக கிறிஸ்தவர்களின் நெற்றியில் பங்குத்தந்தை சாம்பலால் சிலுவை அடையாளம் இட்டார். இந்த சாம்பல், கடந்த ஆண்டு குருத்தோலை திருநாளின் போது ஊர்வலமாக எடுத்துச்சென்று வீடுகளில் வைக்கப்பட்டு இருந்தவையாகும். அவற்றை சேகரித்து சுட்டு சாம்பலாக்கி நெற்றியில் பூச பயன்படுத்தப்பட்டது.

    சாம்பல் நெற்றியில் பூசும்போது மனிதனே மண்ணாக இருக்கின்றாய் மண்ணுக்கே திரும்புவாய் என்று கூறி பங்குத்தந்தை ஒவ்வொருவரின் நெற்றியிலும் சிலுவை அடையாளம் வரைந்தார். இன்று மாலையும் திருப்பலி நடக்கிறது.

    திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மெக்கானிக்குக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

    ஈரோடு:

    ஈரோடு மாணிக்கம் பாளையம் நேதாஜி நகரைச் சேர்ந்தவர் கார்த்தி (வயது 31). மெக்கானிக். இவருக்கு திருமணமாகி விட்டது.

    இந்நிலையில் 17 வயது சிறுமியுடன் கார்த்திக்கு பழக்கம் ஏற்பட்டது. அந்தத் சிறுமியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கடந்த 15.1.2016-ல் பாலியல் பலாத்காரம் செய்தார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். ஈரோடு மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்து கார்த்தியை கைது செய்தனர்.

    இந்த வழக்கு ஈரோடு மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்து வந்த நீதிபதி மாலதி இன்று தீர்ப்பு அளித்தார். அதில் மெக்கானிக் கார்த்திக்குக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.25,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 3 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.1.25 லட்சம் இழப்பீடாக வழங்க பரிந்துரை செய்தார். அரசு தரப்பில் வக்கீல் சுமதி ஆஜரானார்.

    முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு உண்மையான விவசாயி. அவர் விவசாயம் செய்வதை கேலி செய்யும் ஸ்டாலினுக்கு விவசாயத்தைப் பற்றி என்ன தெரியும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கேள்வி எழுப்பி உள்ளார்.
    கோபி:

    கோபியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. நகரச்செயலாளர் காளியப்பன் தலைமை தாங்கினார். அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    தமிழகத்தில் 1977ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தைக்கொண்டு வந்து ஒரு வரலாறு படைத்தார். அதன் பிறகு அவர் ஒருவரே தமிழகத்தின் நிரந்தர முதல்வராக இருந்தார். அவருக்குப் பிறகு ஜெயலலிதா அதிமுகவை வழிநடத்தினார். 1993ம் ஆண்டு தொட்டில் குழந்தை திட்டத்தை கொண்டு வந்தார்.

    அவரது வழியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இந்த ஆட்சி அமைந்தது. அப்போது தமிழ்நாட்டின் எதிர்கட்சிகள் உட்பட பலரும் 10 நாட்கள் கூட இந்த ஆட்சி நீடிக்காது என்றனர். 122 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட அதிமுகவை யாராலும் வெல்ல முடியவில்லை. 3 வருடங்களாக மிக சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். இஸ்லாமியர்களை பாதுகாக்கும் அரசாக அந்த அரசு உள்ளது. மசூதிகளில் ஓதும் உலமாக்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.1,500லிருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. ஹஜ் பயணம் செல்பவர்களுக்காக ரூ.15 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சிறுபான்மையினரை பேணிக்காக்கும் அரசாக இந்த அரசு இருக்கும்.

    பள்ளி கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. உயர்நிலைப்பள்ளிகளில் 10 கம்ப்யூட்டர்களும், மேல்நிலைப்பள்ளிகளுக்கு இன்டர்நெட் வசதியுடன் கூடிய 20 கம்ப்யூட்டர்களும் நிறுவப்பட்டு மாணவர்கள் கல்வி கற்று வருகிறார்கள். பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு வரும் கல்வியாண்டு முதல் ஸ்கில் டிரைனிங் என்று அழைக்கப்படும் வொகேஷ்னல் பாடப்பிரிவு அறிமுகப்படுத்தப்படும். மேலும், வருங்காலத்தில் பிளஸ் 2 முடித்தவுடன் வேலைவாய்ப்பை வழங்கும் உத்தரவாதத்துடன் கூடிய கல்வியாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

    எடப்பாடி பழனிச்சாமி

    முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு உண்மையான விவசாயி. அவர் விவசாயம் செய்வதை கேலி செய்யும் ஸ்டாலினுக்கு விவசாயத்தைப் பற்றி என்ன தெரியும்? எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு டிராக்டர் ஓட்ட தெரியுமா? ஆனால், நீங்கள் எப்படி வயலில் நடப்பது போன்றும், டீக்கடையில் டீ குடிப்பது போன்றும் படம் எடுத்து வெளியிட்டீர்கள். எத்தனை நாள் ஸ்டாலின் டீக்கடைக்குச் சென்று டீ குடித்தார். காவிரி டெல்டா பகுதியை வேளாண்மை சிறப்பு மண்டலமாக முதலமைச்சர் அறிவித்தார். ஆனால், வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும் என போராட்டம் நடத்திய திமுகவினரே சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தபோது ஏன் வெளிநடப்பு செய்ய வேண்டும்?

    பல்வேறு திட்டங்களை இந்த அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. எனவே, அதிமுகவை எவராலும் வெல்ல முடியாது. வரும் உள்ளாட்சி தேர்தல் மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக அமோக வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் டைரக்டர். உதயகுமார், நம்பியூர் ஒன்றிய அதிமுக செயலாளர் தம்பி சுப்பிரமணியம், மாவட்ட மாணவரணி செயலாளர் அருள் ராமச்சந்திரா மற்றும் ஒன்றிய, நகர, கிளைக்கழக நிர்வாகிகள் சார்பு அமைப்பினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஈரோட்டில் கிடா விருந்து தொடர்பாக தறிப்பட்டறை தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு 16 அடி ரோடு ஐயன் காடு பகுதியைச் சேர்ந்தவர் துரையன் (வயது 40). தறிப்பட்டறை தொழிலாளி. இவரது மனைவி உமா.

    இந்நிலையில் துரையன் ஊரில் கோவில் திருவிழா நடந்துள்ளது. இதனையடுத்து அவரது வீட்டில் நண்பர்களுக்கு கிடா விருந்து கொடுத்துள்ளார். இதை தொடர்ந்து நேற்று இரவு துரையன் தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து நெரிக்கல்மேடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்றனர்.

    அப்போது கிடா விருந்து தொடர்பாக அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதையடுத்து நண்பர்கள் சிலர் சேர்ந்து துரையனை தாக்கியுள்ளனர். அப்போது அருகில் இருந்த ஒரு பெரிய கல்லை எடுத்து துரையன் தலையில் போட்டு உள்ளனர். இதில் அவர் தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்காக போராடினார். இதையடுத்து நண்பர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். துரையனை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த துரையன் சிகிச்சை பலனின்றி நள்ளிரவு பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கொலை நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமரா ஆய்வுகளை பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    ஈரோட்டில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி 5-வது நாளாக இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    ஈரோடு:

    குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து திருத்தச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டத்தில் இஸ்லாமியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டத்தில் முஸ்லிம்கள் குடியுரிமைச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் இதை தொடர்ந்து ஈரோடு செல்ல பாட்ஷா வீதியில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு திடீரென சாலையில் அமர்ந்து குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி கோ‘ம் எழுப்பி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள முஸ்லிம்கள் தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் ஐந்தாவது நாளாக பல்வேறு முஸ்லிம் கட்சியை சேர்ந்த ஆண்களும் பெண்களும் குழந்தைகளுடன் திரண்டு வந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

    போராட்டம் தீவிரமடைந்து வருவதால் இஸ்லாமிய பெண்கள் காலை முதல் இரவு வரை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் ஆண்கள் அங்கேயே தங்கி நள்ளிரவிலும் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

    போராட்டம் நடைபெறும் இடத்தில் முஸ்லிம் பெண்கள் குழந்தைகளுடன் அதிக அளவில் கலந்து கொண்டு தேசியக்கொடியை கையில் பிடித்தவாறு மத்திய அரசுக்கு எதிராக கோ‌ஷமிட்டு தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் போராட்டம் நடைபெறும் பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
    ஈரோடு அருகே இரும்பு வியாபாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன் சத்திரம் ஜான்சி நகர் பகுதியை சேர்ந்தவர் நாராயணன் (வயது 70). இவர் பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தார்.

    மன வருத்ததில் இருந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டி கொண்டார்.

    இதை கண்ட அக்கம் பக்கத்தினர் சத்தம் கேட்டு வந்து அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் நாராயணன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சிறுத்தை ரோட்டை கடந்து செல்லும் பகுதியில் வனப்பகுதி எதுவும் கிடையாது. அப்படி இருந்தும் அந்த சிறுத்தை எப்படி ஊருக்குள் புகுந்தது? என அந்த பகுதி மக்கள் மிகவும் அச்சத்துடன் உள்ளனர்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான காட்டு விலங்குகள் உள்ளன இதில் யானை மான் புலி சிறுத்தை என பல்வேறு விலங்குகள் உள்ளன.

    இந்நிலையில் சத்தியமங்கலம் அடுத்துள்ள மேட்டூர் பகுதியில் இன்று அதிகாலையில் வேலை முடித்து விட்டு வீட்டிற்கு வந்த மகேந்திரன் என்பவர் வரும் வழியில் ஒரு சிறுத்தை தென்னை மரத் தோட்டம் பகுதியில் ரோட்டை கடந்து செல்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

    பிறகு வாழைத் தோட்டத்திற்குள் புகுந்து சிறுத்தை செல்வதை பொதுமக்கள் பார்த்துள்ளனர் உடனே தகவலை சத்தியமங்கலம் வனத்துறையினரிடம் கூறியுள்ளனர்.

    சத்தியமங்கலம் வனச்சரகர் பெர்னார்ட் தலைமையில் 10 பேர் கொண்ட குழு தென்னைமர தோட்டத்தை ஆய்வு செய்தனர்.

    சிறுத்தை கால் தடங்களை ஆய்வு செய்து இது சிறுத்தையா? அல்லது புலியா என தெரியவில்லை என்று கூறினர் மேலும் இதை கண்காணிக்க தென்னை மரத் தோட்டம் மற்றும் வாழைத்தோட்டத்தில் 8 தானியங்கி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

    கேமராவின் மூலம் பதிவானால் கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஊர் பொதுமக்களிடம் கூறினார்.

    இந்நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் ஒரு சிறுத்தை சசத்தியமங்கலம் அருகே அரியப்பம் பாளையத்தில் சத்தி- கோபி மெயின் ரோடு வழியில் கடந்து செல்வதை அங்கிருந்த கடைகளில் சிசிடிவி கேமரா மூலம் பதிவாகி இருந்தது பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    சிறுத்தை ரோட்டை கடந்து செல்லும் பகுதியில் வனப்பகுதி எதுவும் கிடையாது. அப்படி இருந்தும் அந்த சிறுத்தை எப்படி ஊருக்குள் புகுந்தது? என அந்த பகுதி மக்கள் மிகவும் அச்சத்துடன் உள்ளனர்.

    கரும்பு காடு வயல் வெளியில் தப்பி தவறி வந்து ஊருக்குள் சிறுத்தை புகுந்திருக்க கூடும் என சத்தியமங்கலம் நகர மக்கள் பரபரப்பாக பேசி கொள்கிறார்கள்.

    இதே போல் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5.30 மணி அளவில் சத்தி அடுத்த பாச குட்டை என்ற இடத்தில் கோபால் என்பவருக்கு சொந்தமான சோள தோட்டம் உள்ளது. தோட்டத்தில் இருந்த ஒரு கன்று குட்டியை சிறுத்தை ஒன்று இழுத்து காட்டு பகுதிக்குள் கொண்டு சென்று தின்று விட்டது.

    இந்த சம்பவத்தை அறிந்து சத்தி நகர மக்கள் கடும் பீதியில் உறைந்துள்ளனர். இப்படி ஒரே சமயத்தில் சத்தியமங்கலம் ஊருக்குள் 2 சிறுத்தைகள் புகுந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    சீனாவில் இருந்து பெருந்துறை திரும்பிய கல்லூரி மாணவருக்கு சளி, காய்ச்சல் உள்ளதால் அவரது ரத்தப்பரிசோதனை முடிவு தெரியும் வரை தனி அறையில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் வசித்து வரும் வாலிபர் ஒருவர் கடந்த 5 ஆண்டுகளாக சீனாவில் உள்ள சின்ஜியங் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த 15-ந் தேதி சீனாவிலிருந்து பெருந்துறைக்கு அந்த வாலிபர் திரும்பினார். வீட்டில் இருந்து வந்த அந்த வாலிபருக்கு திடீரென சளி, காய்ச்சல் அதிகமானது. இதனால் கொரோனா வைரஸ் தாக்கி இருக்குமோ? என்ற சந்தேகத்தின் பேரில் அந்த வாலிபர் பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார்.

    இதையடுத்து மருத்துவர்கள் அந்த வாலிபரின் ரத்த மாதிரியை எடுத்து அதை சென்னையில் உள்ள கொரோனா வைரஸ் செல்லுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    சோதனை முடிவு தெரியும் வரை தனி வார்டில் இருக்க வேண்டுமென அந்த வாலிபருக்கு ஆஸ்பத்திரி நிர்வாகம் அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில் தனி வார்டில் இருந்த அந்த வாலிபர் திடீரென வீட்டுக்கு சென்று விட்டார்

    இதனையடுத்து மருத்துவர்கள் அந்த வாலிபர் வீட்டிற்கு சென்று ரத்தப் பரிசோதனை முடிவு தெரியும் வரை வீட்டில் தனி அறையில் இருப்பது நல்லது என அறிவுறுத்தியுள்ளனர்.

    ×