search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் செங்கோட்டையன்
    X
    அமைச்சர் செங்கோட்டையன்

    விவசாயம் பற்றி மு.க.ஸ்டாலினுக்கு என்ன தெரியும்- அமைச்சர் செங்கோட்டையன் கேள்வி

    முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு உண்மையான விவசாயி. அவர் விவசாயம் செய்வதை கேலி செய்யும் ஸ்டாலினுக்கு விவசாயத்தைப் பற்றி என்ன தெரியும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கேள்வி எழுப்பி உள்ளார்.
    கோபி:

    கோபியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. நகரச்செயலாளர் காளியப்பன் தலைமை தாங்கினார். அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    தமிழகத்தில் 1977ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தைக்கொண்டு வந்து ஒரு வரலாறு படைத்தார். அதன் பிறகு அவர் ஒருவரே தமிழகத்தின் நிரந்தர முதல்வராக இருந்தார். அவருக்குப் பிறகு ஜெயலலிதா அதிமுகவை வழிநடத்தினார். 1993ம் ஆண்டு தொட்டில் குழந்தை திட்டத்தை கொண்டு வந்தார்.

    அவரது வழியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இந்த ஆட்சி அமைந்தது. அப்போது தமிழ்நாட்டின் எதிர்கட்சிகள் உட்பட பலரும் 10 நாட்கள் கூட இந்த ஆட்சி நீடிக்காது என்றனர். 122 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட அதிமுகவை யாராலும் வெல்ல முடியவில்லை. 3 வருடங்களாக மிக சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். இஸ்லாமியர்களை பாதுகாக்கும் அரசாக அந்த அரசு உள்ளது. மசூதிகளில் ஓதும் உலமாக்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.1,500லிருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. ஹஜ் பயணம் செல்பவர்களுக்காக ரூ.15 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சிறுபான்மையினரை பேணிக்காக்கும் அரசாக இந்த அரசு இருக்கும்.

    பள்ளி கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. உயர்நிலைப்பள்ளிகளில் 10 கம்ப்யூட்டர்களும், மேல்நிலைப்பள்ளிகளுக்கு இன்டர்நெட் வசதியுடன் கூடிய 20 கம்ப்யூட்டர்களும் நிறுவப்பட்டு மாணவர்கள் கல்வி கற்று வருகிறார்கள். பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு வரும் கல்வியாண்டு முதல் ஸ்கில் டிரைனிங் என்று அழைக்கப்படும் வொகேஷ்னல் பாடப்பிரிவு அறிமுகப்படுத்தப்படும். மேலும், வருங்காலத்தில் பிளஸ் 2 முடித்தவுடன் வேலைவாய்ப்பை வழங்கும் உத்தரவாதத்துடன் கூடிய கல்வியாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

    எடப்பாடி பழனிச்சாமி

    முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு உண்மையான விவசாயி. அவர் விவசாயம் செய்வதை கேலி செய்யும் ஸ்டாலினுக்கு விவசாயத்தைப் பற்றி என்ன தெரியும்? எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு டிராக்டர் ஓட்ட தெரியுமா? ஆனால், நீங்கள் எப்படி வயலில் நடப்பது போன்றும், டீக்கடையில் டீ குடிப்பது போன்றும் படம் எடுத்து வெளியிட்டீர்கள். எத்தனை நாள் ஸ்டாலின் டீக்கடைக்குச் சென்று டீ குடித்தார். காவிரி டெல்டா பகுதியை வேளாண்மை சிறப்பு மண்டலமாக முதலமைச்சர் அறிவித்தார். ஆனால், வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும் என போராட்டம் நடத்திய திமுகவினரே சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தபோது ஏன் வெளிநடப்பு செய்ய வேண்டும்?

    பல்வேறு திட்டங்களை இந்த அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. எனவே, அதிமுகவை எவராலும் வெல்ல முடியாது. வரும் உள்ளாட்சி தேர்தல் மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக அமோக வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் டைரக்டர். உதயகுமார், நம்பியூர் ஒன்றிய அதிமுக செயலாளர் தம்பி சுப்பிரமணியம், மாவட்ட மாணவரணி செயலாளர் அருள் ராமச்சந்திரா மற்றும் ஒன்றிய, நகர, கிளைக்கழக நிர்வாகிகள் சார்பு அமைப்பினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×