என் மலர்tooltip icon

    ஈரோடு

    • குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி என மொத்தம் 800 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
    • நீர்வரத்து குறைந்ததாலும் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருகிறது. அதேநேரம் அணைக்கு வரும் நீர்வரத்தை விட பாசனத்திற்கு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 79.61 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 798 கனஅடியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு முதல் சுற்று நீர் நிறுத்தப்பட்டுள்ளது.

    தடப்பள்ளி-அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 700 கனஅடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி என மொத்தம் 800 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 39.52 அடியாகவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 2.85 அடியாகவும், வரட்டுப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 33.04 அடியாகவும் உள்ளது. மழை பொழிவு இல்லாததாலும், நீர்வரத்து குறைந்ததாலும் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    • மழை காலங்கள் இல்லாத சமயங்களில் அந்த பகுதியில் உள்ள ஓடையின் ஓரமாக எளிதாக சென்று இறந்தவர்களின் சடலங்களை எரித்து வந்தனர்.
    • மயான வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று மந்தை பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள மைக்கேல்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட மந்தை பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதி மக்களுக்கு மயான வசதி இல்லை என கூறப்படுகிறது.

    இந்த மந்தை பகுதியில் ஓடை ஒன்று அமைந்துள்ளது. இந்த பகுதியை சேர்ந்தவர்கள் இறந்தால் அவர்களை சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஓடை வழியாக சுமந்து சென்று அந்த பகுதியில் உள்ள காலி இடங்களில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்தும் எரித்தும் வருகிறார்கள்.

    மழை காலங்கள் இல்லாத சமயங்களில் அந்த பகுதியில் உள்ள ஓடையின் ஓரமாக எளிதாக சென்று இறந்தவர்களின் சடலங்களை எரித்து வந்தனர்.

    வரட்டுபள்ளம் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மந்தை ஓடை வழியாக செல்கிறது. அதே போல் அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்படும் நேரங்கள் மற்றும் பாசன வசதிக்காக தண்ணீர் திறக்கப்படும் போது மந்தை ஓடையில் தண்ணீர் பெருக்கெடுத்து சென்று வருகிறது.

    அப்படி மந்தை ஓடையில் தண்ணீர் செல்லும் போது அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இறந்தால் ஓடை தண்ணீரில் இறங்கி இறந்தவரின் பிணத்தை சுமந்து கொண்டு சென்று உடலை அடக்கம் செய்ய வேண்டிய நிலை உள்ளது.

    இந்த நிலையில் வரட்டு பள்ளம் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் மந்தை ஓடையில் அதிகளவில் தண்ணீர் செல்கிறது.

    இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் இறந்து விட்டார். இதையடுத்து இறந்தவரின் உடலை அப்பகுதி மக்கள் தண்ணீருக்குள் இறங்கி சிரமப்பட்டு சுமந்து சென்று அக்கறையில் எரியூட்டி விட்டு வந்தனர். இதே நிலை தான் நீண்ட காலமாக உள்ளது.

    எனவே இந்த பகுதியை சேர்ந்தவர் இறந்தால் அடக்கம் செய்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    எனவே இந்த பகுதிக்கு மயான வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று மந்தை பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கடந்த 9 ஆண்டுகளில் நடந்த விபத்துகளில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.
    • இந்தியாவின் வேறு எந்த பகுதியிலும் இந்த அளவுக்கு அதிகமாக விபத்துகள் நடந்ததில்லை.

    கடத்தூர்:

    தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 8 பேர் காயமடைந்துள்ளனர். இது குறித்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

    சாலை விபத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்களுக்கு தரமான மருத்துவம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    தொப்பூர் பகுதியில் நடந்ததை விபத்து என்று கூற முடியாது, மத்திய, மாநில அரசுகளின் அலட்சியத்தால் நடந்த கொலை என்று தான் கூற வேண்டும். தொப்பூர் பகுதி நெடுஞ்சாலை நாளுக்கு நாள் அதிக விபத்து நடக்கும் பகுதியாகவும், உயிர்ப்பலி வாங்கும் சாலையாகவும் மாறி வருகிறது. அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். சில ஆண்டுகளுக்கு முன் தொப்பூரில் ஒரே நேரத்தில் 15 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மொத்தம் 400 மீட்டர் தொலைவு மட்டுமே கொண்ட தொப்பூர் கணவாய் பகுதியில் கடந்த 9 ஆண்டுகளில் நடந்த விபத்துகளில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர்.

    இந்தியாவின் வேறு எந்த பகுதியிலும் இந்த அளவுக்கு அதிகமாக விபத்துகள் நடந்ததில்லை. தொப்பூர் கணவாய் பகுதியில் நடைபெறும் சாலை விபத்துகளுக்கு மனிதத் தவறுகளை விட, தேசிய நெடுஞ்சாலையின் அபத்தமான வடிவமைப்பு தான் காரணம் என்பதையும் பல்வேறு தருணங்களில் சுட்டிக் காட்டியுள்ளேன். தொப்பூர் பகுதியில் விபத்துகளைத் தடுக்க வேண்டும் என்ற அக்கறை மத்திய, மாநில அரசுகளுக்கு இருந்திருந்தால் சாலை வடிவமைப்பை மாற்ற எப்போதோ நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • நகர் மன்றத்தின் துணைத்தலைவர் மணி நகராட்சி நுழைவாயில் முன்பாக நின்று திடீரென கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
    • பலமுறை நான் பேசியும் எந்த பலனும் கிடைக்கவில்லை.

    பவானி:

    பவானி நகராட்சி அலுவலக வளாகத்தில் இன்று காலை குடியரசு தினவிழாவை முன்னிட்டு கொடியேற்று விழா நடைபெற்றது. ஆணையாளர் மோகன்குமார் முன்னிலையில், நகர் மன்ற தலைவர் சிந்தூரி தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இந்நிலையில் நகராட்சி வளாகத்துக்கு வருகை தந்த நகர் மன்றத்தின் துணைத்தலைவர் மணி நகராட்சி நுழைவாயில் முன்பாக நின்று திடீரென கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். இது குறித்து அவர் கூறுகையில்,

    நான் நகர் மன்ற துணைத்தலைவராக பதவி வைத்து வருகிறேன். எனக்கு இதுவரை நகராட்சி நிர்வாகத்தினர் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் முறையாக அழைப்பு விடுத்ததே கிடையாது. பலமுறை நான் பேசியும் எந்த பலனும் கிடைக்கவில்லை. ஆகையால் இன்று குடியரசு தினத்தில் எனது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டேன்.

    இதனைத்தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் மோகன்குமார், தலைவர் சிந்தூரி மற்றும் கவுன்சிலர்கள் பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மணியை சமரச பேச்சு வார்த்தைக்கு அழைத்து சென்று உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து அவர் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டார்.

    இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • சிறுத்தை உலா வருவதை கண்ட மக்கள் சத்தியமங்கலம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
    • அக்கிராம மக்கள் ஊருக்குள் உலா வரும் சிறுத்தைகளை உடனடியாக கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, சிறுத்தை, புலி, மான் காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    இதில் யானை, சிறுத்தை, புலி வனப்பகுதிகளை விட்டு வெளியேறி அருகே உள்ள கிராமங்களுக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருவதும், விவசாயிகள் வளர்த்து வரும் கால்நடைகளை வேட்டையாடி வருவது வாடிக்கையாகி வருகின்றன. சில சமயம் யானை தாக்குதல்களால் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு சத்தியமங்கலம் அருகே உள்ள அரியப்பம்பாளையம் பகுதியில் சிறுத்தை உலா வருவதை கண்ட பொது மக்கள் சத்தியமங்கலம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் அப்பகுதியில் இருந்த கால் தடயங்களை ஆய்வு செய்து ஊருக்குள் உலா வருவது சிறுத்தையா? என கண்காணிக்கும் வகையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று இரவு சத்தியமங்கலம் அருகே உள்ள உக்கரம் கிராமம் கக்கரா குட்டையில் இருந்து கேத்தம்பாளையம் செல்லும் வழி சாலையோரம் 2 சிறுத்தைகள் உலா வந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவ்வழியாக சென்ற வாகன ஓட்டி ஒருவர் சிறுத்தை உலா வரும் காட்சிகளை தனது செல்போனில் வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

    இதனைப்பார்த்து பீதி அடைந்த அக்கிராம மக்கள் ஊருக்குள் உலா வரும் சிறுத்தைகளை உடனடியாக கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து வனத்துறையினர் கூறும்போது,

    சத்தியமங்கலம் அருகே உள்ள உக்கரம் கிராமம் கக்கரா குட்டையில் இருந்து கேத்தம்பாளையம் செல்லும் வழி சாலையோரம் 2 சிறுத்தைகள் உலா வருவது போன்று வீடியோ வெளியாகி உள்ளது. எனவே இப்பகுதி மக்கள் இரவு நேரங்களில் வெளியே தனியாக செல்வதை தவிர்க்க வேண்டும்.

    மேலும் வாகன ஓட்டிகள் இந்த பகுதியில் செல்லும் போது மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும். இந்த பகுதிகளில் தானியங்கி கேமரா பொருத்தப்பட்டு சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டால் கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இன்று சுவாமிக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு தேரோட்டம் தொடங்கியது.
    • தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

    கொண்டையம்பாளையம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே கொண்டையம்பாளையம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பொன்மலை ஆண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இன்று சுவாமிக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு தேரோட்டம் தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். வீதியில் உலா வந்த தேர் வளைவில் திரும்பும் போது, சாலையோரம் இருந்த குழியில் தேரின் சக்கரங்கள் இறங்கியதால் நிலைத்தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    தேர் கவிழ்வதை பார்த்த பக்தர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதில் அதிர்ஷ்டவசமாக காயம் எதுவும் இன்றி பக்தர்கள் உயிர் தப்பினர். இதனையடுத்து, பொக்லைன் இயந்திரம் மூலம் தேரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    தேரோட்டத்தையொட்டி முன்னெச்சரிக்கையாக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    • ரெயில் நிலையத்தில் உள்ள ஒவ்வொரு நடை மேடையாக சென்று போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
    • ரெயிலில் பயணம் செய்த பயணிகளிடம் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினர்.

    ஈரோடு:

    குடியரசு தின விழா நாளை இந்தியா முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. குடியரசு தின விழாவை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு தீவிர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பெயரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் கண்காணித்து வருகின்றனர். மாவட்டம் முழுவதும் குடியரசு தின விழாவை முன்னிட்டு 800-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு பஸ் நிலையத்தில் இன்று பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி பிக்பாக்கெட் அடிக்கும் சம்பவத்தை தடுக்கும் வகையில் ஈரோடு டவுன் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஈரோடு ரெயில் நிலையத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு ஈரோடு ரெயில்வே போலீசார், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ஒன்றிணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு ரெயில் நிலையம் நுழைவு வாயில் ஈரோடு ரெயில்வே போலீசார் பயணிகள் உடைமைகளை தீவிரமாக சோதனை செய்து அதன் பிறகே அவர்களை உள்ளே அனுமதித்தனர். மெட்டல் டிடெக்டர் கருவிகள் மூலம் சோதனை செய்தனர். ரெயில் நிலையத்தில் உள்ள ஒவ்வொரு நடை மேடையாக சென்று போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

    இதேபோல் ஈரோடு ரெயில் நிலையத்திற்கு வந்த ஒவ்வொரு ரெயில்களிலும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ரெயிலில் பயணம் செய்த பயணிகளிடம் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினர். இதுபோல் ஈரோடு காவிரி ரெயில் இரும்பு பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று முதல் நாளை வரை போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரோட்டில் உள்ள சோதனை சாவடிகளிலும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு பிறகே மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறது.

    • அன்னக்கொடிக்கு திடீரென பிரசவ வலி அதிகமானது.
    • 108 ஆம்புலன்ஸ் மருத்துவ குழுவினருக்கு அன்னக்கொடி உறவினர்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுகா, கல்வாரை பகுதியை சேர்ந்தவர் தனபால். கூலி தொழிலாளி. இவரது மனைவி அன்னக்கொடி. கர்ப்பிணியான இவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து அவரது உறவினர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக தேவர் மலையில் இருந்து 108 ஆம்புலன்ஸ் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அன்னக்கொடி மற்றும் உறவினரை ஏற்றுக்கொண்டு பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தது. அப்போது அன்னக்கொடிக்கு திடீரென பிரசவ வலி அதிகமானது.

    நிலைமையை புரிந்து கொண்ட அவசரகால மருத்துவ நுட்புநர் பூபதி சாலை ஓரமாக வாகனத்தை நிறுத்தி 108 ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்த்தார். அப்போது அன்னக்கொடிக்கு பெண் குழந்தை பிறந்தது.

    பின்னர் சிகிச்சைக்காக பர்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு தாயும், குழந்தையும் நன்றாக உள்ளனர். இதனையடுத்து 108 ஆம்புலன்ஸ் மருத்துவ குழுவினருக்கு அன்னக்கொடி உறவினர்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

    • ஜவுளி சந்தை ஈரோடு அசோகபுரம், சென்ட்ரல் தியேட்டர் பகுதியிலும் நடைபெறுகிறது.
    • பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு ஜவுளி வியாபாரம் கடந்த சில நாட்களாக மந்த நிலையில் நடந்து வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே ஈரோடு ஜவுளி சந்தை (கனி மார்க்கெட்) செயல்பட்டு வருகிறது. இங்கு தினசரி கடை, வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. இங்கு நடைபெறும் வாரச்சந்தை தென்னிந்திய அளவில் புகழ்பெற்றது. ஒவ்வொரு வாரம் திங்கட்கிழமை மாலை தொடங்கி செவ்வாய்க்கிழமை மாலை வரை ஜவுளி சந்தை நடைபெறுகிறது.

    இந்த ஜவுளி சந்தை ஈரோடு அசோகபுரம், சென்ட்ரல் தியேட்டர் பகுதியிலும் நடைபெறுகிறது. ஜவுளி சந்தையில் துணிகளை கொள்முதல் செய்வதற்காக மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான வெளிமாநில வியாபாரிகள் வந்து துணிகளை கொள்முதல் செய்து செல்வார்கள்.

    இதேப்போல் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வரும் சிறுகுறு வியாபாரிகளும் துணிகளை கொள்முதல் செய்து செல்வார்கள். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஈரோடு ஜவுளி சந்தையில் மொத்தம் மற்றும் சில்லரை வியாபாரம் சூடு பிடித்தது. பொங்கல் பண்டிகை முடிந்து பிறகு ஜவுளி சந்தையில் வியாபாரம் மந்த நிலையில் நடந்து வந்தது.

    இந்நிலையில் இன்று ஜவுளி வாரச்சந்தை கூடியது. ஆனால் வெளிமாநில வியாபாரிகள் வருகை குறைவாக இருந்தது. குறிப்பாக ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வரவே இல்லை. கேரளாவில் இருந்து மற்றும் ஒரு சில வியாபாரிகள் வந்திருந்தனர். இதனால் இன்று மொத்த வியாபாரம் 15 சதவீதம் மட்டுமே நடைபெற்றது. இதேபோல் சில்லரை வியாபாரம் 20 சதவீதம் மட்டுமே நடைபெற்றது.

    பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு ஜவுளி வியாபாரம் கடந்த சில நாட்களாக மந்த நிலையில் நடந்து வருகிறது. இன்று கூடிய ஜவுளி வார சந்தையிலும் வெளி மாநில வியாபாரிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இனி வரக்கூடிய நாட்களில் தைப்பூசத்தையொட்டி வியாபாரம் மீண்டும் சூடு பிடிக்க தொடங்கும் என நம்பிக்கை தெரிவித்தனர்.

    • சாகுபடி செய்யும் காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை அரசு மாணவர்கள் விடுதிக்கு இலவசமாக வழங்கி வருகின்றனர்.
    • இயற்கை முறையில் பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வேளாண் பிரிவில் 50 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதையடுத்து அந்த பள்ளியிலேயே காய்கறி தோட்டம் அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த காய்கறி தோட்டத்தில் ஆண்டு தோறும் தக்காளி, வெண்டை, பூசணிக்காய், சுரைக்காய், அவரை, கீரை வகைகள் போன்றவற்றை சாகுபடி செய்து வருகின்றனர்.

    இதை தொடர்ந்து மாணவர்கள் சிறு குழுக்களாக பிரிந்து விதைப்பு முதல் அறுவடை வரை மாணவர்களே முழுவதும் ஈடுபட்டு வேலை செய்கின்றனர்.

    மேலும் எவ்வித ரசாயன உரங்களையோ, பூச்சிக் கொல்லிகளையோ பயன்படுத்தாமல் இயற்கை முறையில் பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர். மாணவர்களுக்கு வேளாண் ஆசிரியர் கந்தன், கைலாஷ் மாணவர்களுக்கு வழிகாட்டி வருகின்றனர். இவ்வாறு சாகுபடி செய்யும் காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை, மதிய உணவு திட்டத்திற்கும், அரசு மாணவர்கள் விடுதிக்கு இலவசமாக வழங்கி வருகின்றனர்.

    அந்த வகையில் சாகுபடி செய்திருந்த சிறுகீரை, அரைக் கீரை வகைகளை அறுவடை செய்யப்பட்டது. இந்த கீரை வகைகளை தலைமை ஆசிரியர் ரவி, மதிய உணவுத் திட்டத்திற்கு மாணவர்கள் வழங்கினர். இவ்வாறு காய்கறிகளை சாகுபடி செய்வது மாணவர்கள் செய்முறை வகுப்பிற்கும், அவர்கள் பிற்கால வாழ்வியலுக்கும், மேலும் விவசாயத்தில் மாணவர்களின் உற்சாகத்தை அதிகரிக்கும் வகையிலும் அமைகிறது என பள்ளி தலைமை ஆசிரியர் கூறினார்.

    • ஊருக்குள் வந்த சிறுத்தை எங்கு சென்றது என்று தெரியவில்லை
    • சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க தானியங்கி கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்படும்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் யானை, மான், புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    இதில் புலி, சிறுத்தை அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமத்துக்குள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடி வருவது தொடர்கதையாகி வருகிறது.

    இந்நிலையில் சத்தியமங்கலம் வனச்சரகத்திற்கு உட்பட்ட அரியப்பம்பாளையம் பகுதியில் நேற்று இரவு 9 மணி அளவில் டீக்கடையின் முன்பு ஒருவர் நின்று கொண்டிருந்தார். தற்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி வந்த ஒரு சிறுத்தை அந்த நபர் கண்முன்னே பாய்ந்து ஓடியதை நேரில் பார்த்தார்.


    இதை பார்த்து அந்த நபர் அலறி கூச்சலிட்டார். இதையடுத்து அப்பகுதியில் மக்கள் திரண்டு வந்து பார்த்தனர். அப்போது சிறுத்தை சென்ற கால் தடம் அங்கு பதிவாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து அங்கு பதிவாகி இருந்த கால் தடயங்களை சேகரித்து ஆய்வு செய்தனர். அது சிறுத்தை கால் தடம் தான் என்பதை அவர்கள் உறுதி செய்தனர்.

    ஆனால் நேற்று இரவு ஊருக்குள் வந்த சிறுத்தை எங்கு சென்றது என்று தெரியவில்லை. இதனையடுத்து அரியப்பம்பாளையம் பகுதி பொதுமக்கள் மிகுந்த கவனத்துடனும் இரவு நேரங்களில் தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம் எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க தானியங்கி கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்படும். தேவைப்பட்டால் கூண்டு வைத்து பிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

    • சிவன் மற்றும் பெருமாள் கோவில் ஒரே வளாகத்தில் அமைய பெற்று உள்ள கோவில் ஆகும்.
    • கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம்.

    பவானி:

    பவானி நகரில் மிகவும் பிரசித்தி பெற்ற சங்கமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரர் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி உடனமர் ஆதிகேசவ பெருமாள் ஆகிய சிவன் மற்றும் பெருமாள் கோவில் ஒரே வளாகத்தில் அமைய பெற்று உள்ள கோவில் ஆகும்.

    இந்த கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம். கோவில் பின்பகுதியில் உள்ள இரட்டை விநாயகர் சன்னதி படித்துறையில் காவேரி, பவானி மற்றும் கண்ணுக்கு புலப்படாத அமுத நதி என 3 நதிகள் சங்கமிப்பதால் முக்கூடல் சங்கமம், தென்னகத்தின் காசி, பரிகார ஸ்தலம் என பல பெயர் பெற்று விளங்கி வருகிறது.

    இந்த கோவிலுக்கு தினசரி உள்ளூர் வெளியூர் வெளிமாநில பக்தர்கள் என பல வருகை தந்து தங்கள் குடும்பத்தில் இறந்த முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம், எள்ளும் தண்ணியும் விடுதல், திருமண தடை தோஷம் நீக்குதல், செவ்வாய் தோஷம் நீக்குதல், ராகு கேது பரிகார தோஷம் நீக்குதல் உட்பட பல்வேறு பரிகார பூஜைகள் செய்து சாமி வழிபாடு மேற்கொண்டு சென்று வருகின்றனர்.

    அதேபோல் பரிகார பூஜையில் கலந்து கொள்ளும் பக்தர்கள் தாங்கள் அணிந்து கொண்ட பழைய துணிகளை காவிரி ஆற்றில் கழற்றி விட்டு செல்வது பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த துணிகளை சங்கமேஸ்வரர் கோவில் நிர்வாகத்தின் மூலம் ஏலம் விடப்பட்டு ஏலதாரர்கள் அதை சுத்தம் செய்வது வழக்கமாக உள்ளது.


    தற்போது காவிரி ஆற்றில் இருந்து குடிநீர் தேவைக்காக மட்டும் தினசரி 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படும் நிலையில் காவிரி ஆறு பார்க்கும் இடமெல்லாம் பாறைகளாக காட்சியளிக்கிறது. இந்நிலையில் பக்தர்கள் விடும் துணிகள் ஆங்காங்கே காவிரி ஆற்றின் பாறைகள் உட்பட படித்துறைகள் என பல்வேறு இடங்களில் கிடப்பதை நாம் பார்க்க முடிகிறது.

    துணிகளை அப்புறபடுத்த ஏலம் எடுத்தவர்கள் அவர்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து அந்த துணிகளை மட்டும் எடுத்துக் கொள்வதாகவும், மீதமுள்ள துணிகளை ஆங்காங்கே விட்டு விடுவதாகவும் பக்தர்கள் பலரும் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

    இதனால் பார்க்கும் இடமெல்லாம் பழைய துணிகளாகவும், குவிந்து கிடக்கும் குப்பைகளும், பார்க்கவே முகம் சுளிக்கும் வகையில் கூடுதுறை கோவில் பின்பகுதி அமைந்துள்ளது என பக்தர்கள் பலரும் வேதனையுடன் தெரிவித்து கொண்டனர்.

    இதனால் சங்கமேஸ்வரர் கோவில் நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுத்து இனிவரும் காலங்களில் பக்தர்கள் அந்த துணிகளை ஆற்றில் விடுவதை தடுத்தோ அல்லது துணிகள் தண்ணீர் ஓடும் இடங்களில் போட வலியுறுத்தி பக்தர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி காவிரி ஆற்றையும், சங்கமேஸ்வரர் கோவில் படித்துறை பகுதிகளையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பக்தர்கள் பலரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    ×