search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vikrama raja"

    • இடைக்கால பட்ஜெட் வியாபாரிகளை ஏமாற்றுகிற பட்ஜெட்டாக உள்ளது.
    • தனியார் நிறுவன காப்பீட்டு நிறுவனங்கள் செயல்பாடு சரியாக இல்லை.

    ஈரோடு:

    வணிக நிறுவனங்களில் கட்டாயம் தமிழ் பெயர் பலகை இடம் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி ஈரோட்டில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா தொடங்கி வைத்தார்.

    பின்னர் விக்கிரமராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஈரோட்டில் தொடங்கி இருக்கும் இந்த விழிப்புணர்வு பேரணி மாநிலம் முழுவதும் மாவட்டம் வாரியாக பேரணிகள் நடத்தி வணிகர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளோம். பெரிய கார்பரேட் நிறுவனங்கள் மீதும் தமிழ் பெயர் வைக்க வலியுறுத்துவோம். 60 சதவீதம் பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும் என வணிகர்களிடம் கூறி உள்ளோம்.

    இடைக்கால பட்ஜெட் வியாபாரிகளை ஏமாற்றுகிற பட்ஜெட்டாக உள்ளது. வணிகர்களுக்கு எந்த அறிவிப்பும் இல்லை. பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தோம். 10 லட்சம் வரை வருமான வரி விலக்கு கேட்டிருந்தோம். அது குறித்து எதுவும் இல்லை. ஜி.எஸ்.டி வரி விலக்கில் மாற்றங்கள் கேட்டிருந்தோம், ஒரே முறை வரியாக கேட்டிருந்தோம், வரியை குறைத்தால் வரி ஏய்ப்பு இருக்காது என்பதையும் வலியுறுத்தி இருந்தோம்.

    ஜி.எஸ்.டி சட்ட ரீதியான பிரச்சனைகள் நிறைய இருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஆன்லைனில் பார்த்து ஜி.எஸ்.டி சட்டத்தை தெரிந்து கொள்வதாக இருக்கிறது. இதனை எளிமைப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தோம். காலாவதியான சுங்கச்சாவடிகளை 6 மாத காலத்தில் அகற்றுவதாக 2 ஆண்டுகளுக்கு முன்பாக துறையின் அமைச்சர் நிதின் கட்கரி கூறியிருந்தார்.

    ஆனால் இன்னும் எதுவும் அகற்றப்படவில்லை. பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இணையாக ஆண்டுதோறும் கட்டணம் உயர்த்தப்படுகிறது. சாலைகளில் எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரப்படாமல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுபோன்று எதுவும் செய்யாத பட்ஜெட்டாக இருக்கிறது.

    சோலார் பயன்படுத்து பவர்களுக்கு 300 யூனிட் மின்சாரம் தருவதையும் ஒரு லட்சம் கோடி வட்டி இல்லா கடன் தருவதையும் வரவேற்கிறோம். ஆனால் அது யாருக்கு தரப்போகிறார்கள் என்பது தெரியவில்லை. ஏற்கனவே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் வாழ்வாதாரத்தை இழந்திருக்கின்றோம். அவர்களுக்கு வட்டி இல்லா கடன் கொடுத்து வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும்.

    இந்தியாவில் வணிகவரி அதிகம் கட்டுவது தமிழ்நாட்டில் தான். இதில் சிறு சிறு குறைபாடுகளை கூட அதிகாரிகள் கையில் எடுத்துக்கொண்டு அபராதம் விதிக்கின்றனர். ஏற்கனவே நசிந்து வரும் தொழிலை மேலும் நசுக்க வேண்டாம்.

    தனியார் நிறுவன காப்பீட்டு நிறுவனங்கள் செயல்பாடு சரியாக இல்லை. விரைவில் அதன் உண்மை தன்மையை அம்பலப்படுத்துவோம். தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் பாராளுமன்றத் தேர்தலை ஒட்டி பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளோம். வணிகர் சங்க மாநில மாநாட்டில் பல்வேறு பிரகடன தீர்மானத்தை வெளியிட இருக்கின்றோம். இந்த ஆண்டு சென்னையில் மாநாடு நடைபெற உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக மேயர் நாகரத்தினம் தமிழ் பெயர் பலகையை திறந்து வைத்தார். பேட்டியின் போது அமைச்சர் முத்துசாமி, இளைஞரணி மாவட்ட தலைவர் நெல்லை ராஜா, பேரமைப்பின் மாவட்ட தலைவர் சண்முகவேல், மாவட்ட செயலாளர் ராமசந்திரன், பொருளாளர் உதயம் செல்வன், இளைஞரணி செயலாளர் லாரன்ஸ் ஆகியோர் உடனிருந்தனர்.

    • வணிகர்களின் வாழ்வில் ஒரு மாற்று சக்தியை உருவாக்கும் மாநாடாக இம்மாநாடு அமைய உள்ளது.
    • மாநில நிர்வாகிகள், மண்டல நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் என ஏராளமானோர் திரளாக கலந்து கொள்கின்றனர்.

    சென்னை:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜூலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் மே 5-ந்தேதி, 40வது வணிகர் தினம் வணிகர் உரிமை முழக்க மாநாடாக ஈரோடு, டெக்ஸ்வேலி மைதானத்தில் நடைபெற உள்ளது.

    இதற்காக லட்சக்கணக்கான வணிகர்கள் அமரும் வகையில் மாநாட்டு பந்தல் பிரம்மாண்டமாக அமைக்கப்பட உள்ளது.

    மாநாட்டு கால்கோள் விழா என்பது மகிழ்ச்சிக்குரியது. அதுவும் 40-வது வணிகர் தின வணிகர் உரிமை முழக்க மாநாடு என்பது அதன் பின்னனியில் மறைந்துள்ள 40 ஆண்டுகால பேரமைப்பின் வரலாற்றை வெளிக்கொண்டுவரும் வியத்தகு மாநாடு ஆகும்.

    40 ஆண்டுகால வேதனையை துடைத்தெறிந்து வணிகர்களின் உரிமைக்காக குரல் எழுப்பி முழக்கமிடும் மாநாடாக ஈரோடு மாநாடு நடைபெற இருப்பதால் மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுடன் தமிழகத்தின் அனைத்து வணிகர்களும் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள் எனும் பேருண்மையை எடுத்துக்காட்டும் மாநாடாக வணிகர் உரிமை முழக்க மாநாடு நடக்கும்.

    வணிகர்களின் வாழ்வில் ஒரு மாற்று சக்தியை உருவாக்கும் மாநாடாக இம்மாநாடு அமைய உள்ளது.

    மாநாட்டு பந்தல் கால்கோள்விழா நாளை (புதன்கிழமை) காலை 9.30 மணியளவில் மாநாட்டுத்திடலில் நடைபெற உள்ளது. விழாவிற்கு பேரமைப்பின் மாநிலத்தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமை தாங்குகிறார். மாநிலப் பொதுச்செயலாளர் வெ.கோவிந்தராஜுலு வரவேற்று பேச மாநிலப் பொருளாளர் ஹாஜி ஏ.எம்.சதக்கத் துல்லா நன்றி கூறுகிறார்.

    மாநில நிர்வாகிகள், மண்டல நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் என ஏராளமானோர் திரளாக கலந்து கொள்கின்றனர்.

    கால்கோள் விழாவைத் தொடர்ந்து, மாநில மாவட்ட நிர்வாகிகள், ஒருங்கி ணைப்புக்குழு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டமும் மாநாட்டில் நிறைவேற்றப்பட வேண்டிய முக்கிய தீர்மானங்கள் குறித்த ஆலோசனையும் நடைபெறுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழ்நாட்டில் சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு சலுகை விலையில் மின்சாரம் வழங்க வேண்டும்.
    • மின் கட்டணம், கட்டிட வரி உள்ளிட்டவற்றை தமிழக அரசு குறைக்கவேண்டும் என்றார் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம் வெள்ளகுளம்சாலையில் ஸ்ரீ செந்தூர் முருகன் டைல்ஸ் & டோர்ஸ் ஷோரூம் திறப்பு நிகழ்வில் பங்கேற்ற தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசியதாவது:

    இரண்டு ஆண்டுகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது வணிகர்கள் மெல்ல மீண்டு வருகின்றனர். அதிகாரிகள் குழுவினர் கடைகளில் பொருட்களை வாங்கி ஜிஎஸ்டி வரி நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்ற சோதனை முறையை கைவிட வேண்டும்.

    அறநிலையத் துறைக்குச் சொந்தமான இடங்களில் வீட்டின் உரிமையாளர்கள் வரி செலுத்தவில்லை என்பதால் அவர்களிடம் வாடகை செலுத்தி வரும் கடைக்கும் சேர்த்தே சீல் வைக்கும் நடவடிக்கையை தவிர்த்து கடை உரிமையாளரிடம் நேரடியாக வாடகையை வசூலித்துக் கொண்டு சீல் வைப்பதை தவிர்க்க வேண்டும்.

    14 வகையான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என்பதில் வணிகர்கள் உறுதியாக உள்ளனர்.

    திடீரென கடை சீல் வைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது.

    குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்களை விற்கக்கூடாது என்பதில் வணிகர் சங்க பேரமைப்பினர் உறுதியாக உள்ளனர். அதனையும் மீறி விற்பனை செய்பவர்களுக்கு வணிகர் சங்க பேரமைப்பு ஆதரவு அளிப்பதில்லை.

    மின் கட்டணமும், கட்டிட வரியும் அதிகளவில் உயர்ந்துள்ளதால் மின் கட்டணத்தையும், கட்டிட வரியையும் தமிழக அரசு குறைக்க வேண்டும்.

    சிறுகுறு தொழில் பதிவு செய்துள்ள வணிகர்களுக்கு சலுகை விலையில் மின்சாரம் வழங்க வேண்டும்.

    ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாட்டிலில் குளிர்பானங்களை அடைத்து விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும்.

    நாடு முழுவதும் பொருட்களை பேக்கிங் செய்வது மற்றும் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து ஒரே சட்டம் அமல்படுத்தி வணிகர்களிடையே ஏற்பட்டுள்ள குழப்பத்தை போக்கிட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

    தற்போது ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை செய்யப்பட்டுள்ள நிலையில் அதிலும் பல நடிகர்கள் நடித்ததாகவும், அதனால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.

    விளையாட்டு வீரர்கள் மற்றும் நடிகர்கள் என விளம்பரங்களில் நடிப்பவர்கள் வணிக நோக்காக பார்க்காமல் சுய பரிசோதனை செய்து பின்னர் விளம்பரத்தில் நடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

    இதில் விஜய ராஜேந்திரன் நாடார், கனகராஜ் சோமசுந்தரம், குணசேகர் முத்துக்குமார், சென்னை மாவட்ட தலைவர் எட்வர்ட் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள், நடராஜன், நந்தன், முத்துப்பாண்டியன், முருகன், பால் பாண்டி, வேலு ஆசாரி, ஏகாம்பரநாதன், பாலகிருஷ்ணன், கர்ணா, யுவராஜ், அப்துல்காதர், வெல்டன் வாசகர் சந்தனகுமார், சுரேஷ்குமார், ஜிவிஎம் குமார், மீஞ்சூர் ரியாஸ், முகமது அலி, செல்லத்துரை, துரையரசன், பகிர்முகமது, மாதர்பாக்கம் பாலமுருகன், அஜிஸ் அகமது உள்பட பேரமைப்பு நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    முன்னதாக நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி என அனைத்து இடங்களில் உள்ள கடைகளுக்கு வாடகையை வரன்முறைப்படுத்தும் சீரமைப்பு குழுவில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பிற்கு பிரதிநித்துவம் அளித்ததற்கு தமிழ்நாடு முதலமைச்சருக்கு விக்கிரமராஜா நன்றி தெரிவித்து கொண்டார்.

    பிளாஸ்டிக் பொருட்கள் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து விரைவில் 3 நாட்கள் கடையடைப்பு போராட்டம் நடத்த போவதாக விக்கிரமராஜா கூறியுள்ளார்.
    சேலம்:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் சேலம் பிளாஸ்டிக் வியாபாரிகள், தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகியவை சார்பில் பிளாஸ்டிக் தடை பற்றிய ஆலோசனை கூட்டம் சேலத்தில் நடந்தது.

    இந்த கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    உள்நாட்டு வணிகத்தை முடக்குவதற்காகவே அடுத்தாண்டு ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது. இதனால் கடன் வாங்கி தொழில் தொடங்கிய வணிகர்கள் உள்பட ஏராளமானவர்கள் பாதிக்கப்படுகின்றனர். எந்தெந்த பொருட்களுக்கு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை என்பதை அரசு அறிவிக்காததால் வணிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். 2020-ம் ஆண்டுக்குள் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படாத நாடாக மாற்ற மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

    இதேபோல் தமிழக அரசும் 2020-ம் ஆண்டு வரை பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த கால அவகாசம் கொடுக்க வேண்டும். மேலும் பிளாஸ்டிக் பொருட்கள் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து விரைவில் 3 நாட்கள் கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்து உள்ளோம். இதுதொடர்பாக வருகிற 15-ந் தேதி நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றி அறிவிக்க உள்ளோம்.

    இதுதவிர பட்டாசு வெடிப்பதற்கு தடை மற்றும் உணவு பொருட்களில் உள்ள பல்வேறு சட்ட விதிகளை மாற்றக்கோரி வருகிற 19-ந் தேதி டெல்லியில் பேரணி நடத்த உள்ளோம். சேலம் செவ்வாய்பேட்டை மேம்பாலத்தை விரைவில் கட்டக்கோரி கோரிக்கை விடுத்தும் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால் வணிகர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews
    வணிகர்கள் கோரிக்கை நிறைவேறாவிட்டால் அடுத்த கட்டமாக தமிழக சட்டசபையை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவோம் என்று விக்கிரமராஜா அறிவித்துள்ளார்.
    சென்னை:

    சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்க கூடாது, உணவு பாதுகாப்பு, தரநீர்ணய சட்டத்தில் உள்ள குறைபாடுகளை நீக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மாநிலம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மண்டல தலைவர் கே.ஜோதிலிங்கம் தலைமை தாங்கினார். சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் என்.டி.மோகன் முன்னிலை வகித்தார்.

    ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். அப்போது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரியும், மத்திய-மாநில அரசுகளை கண்டித்தும் கோ‌ஷம் எழுப்பினார்கள்.

    ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா பேசியதாவது:-

    வணிகர்களின் கோரிக்கைகளை மத்திய-மாநில அரசுகள் நிறைவேற்றுவது இல்லை. அந்நிய நிறுவனங்களான வால்மார்ட், அமேசான் ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் சில்லரை வணிகத்தில் ஈடுபடுகிறது. இதை தடுக்க வேண்டும்.

    நாங்கள் கடந்த 4½ ஆண்டுகளில் 5 முறை மத்திய மந்திரிகளை சந்தித்து மனு கொடுத்திருக்கிறோம். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும், தமிழக அமைச்சர்களையும் சந்தித்து மனு கொடுத்தேன். எங்கள் மனுக்கள் என்ன ஆனது? பத்திரமாக வைத்து இருக்கிறீர்களா? அல்லது குப்பை தொட்டியில் போட்டு விட்டீர்களா?

    அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வருகிறது. வணிகர்களின் ஓட்டு உங்களுக்கு வேண்டுமா? வேண்டாமா? அமெரிக்காவில் உள்ள வால்மார்ட் நிறுவனத்திடமா ஓட்டு கேட்பீர்கள்?

    தமிழ்நாட்டில் ஒரு கோடி வணிக குடும்பங்கள் உள்ளன. நாங்கள் பணத்துக்கு ஓட்டுகளை விற்பதில்லை. அதற்கு வியாபாரிகள் துணை போகமாட்டார்கள். எங்களுக்கு வாழ்வாதாரம் வேண்டும் என்று கேட்கிறோம். நாங்கள் எந்த கால கட்டத்திலும் அரசியல் பக்கம் செல்ல மாட்டோம்.

    எங்கள் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் அடுத்த மாதம் 23-ந்தேதி உண்ணாவிரதம் இருப்போம். அடுத்த கட்டமாக சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவோம். அதன் பிறகும் அரசு அழைத்து பேசாவிட்டால் கடையடைப்பு போராட்டம் நடத்துவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் பொருளாளர் ஏ.எம்.சதக்கத்துல்லா, செய்தி தொடர்பாளர் பாண்டியராஜன், மாவட்ட தலைவர்கள் ஜோதிலிங்கம், மோகன், ஜெயபால், அமல்ராஜ், ஆதிகுருசாமி, சாமுவேல், ரவி, நிர்வாகிகள் வி.பி.மணி, ராஜ்குமார், அம்பத்தூர் ஹாஜிமுகமது, ஆர்.கே.எம்.துரைராஜன், அய்யார் பவன் அய்யாதுரை, தங்கதுரை, மனோகரன், ராஜேந்திரன், வேலுசாமி, ஆர்.எம்.பழனியப்பன், சுப்பிரமணியன், பால்ஆசீர், எட்வர்டு, வில்சன், முகமது செரீப், தேசிகன், சின்னவன், அடையாறு துரை, பாஸ்கர், கே.ஏ.மாரியப்பன் உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

    இதுபோல் 12 மண்டலங்களிலும் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
    மத்திய-மாநில அரசுகளை கண்டித்து நாளை விக்கிரமராஜா தலைமையில் கருப்பு சட்டை அணிந்து மண்டலம் தோறும் வணிகர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.
    சென்னை:

    சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், உணவு தர நிர்ணய பாதுகாப்பு சட்டத்தில் உள்ள பல்வேறு அம்சங்களை திருத்தக் கோரியும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் அகில இந்திய வணிகர்கள் சம்மேளனம் சார்பில் நாளை இந்தியா முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.

    தமிழ்நாட்டில் கடை அடைப்புக்கு பதிலாக கருப்பு சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரம ராஜா அறிவித்திருந்தார். அதன்படி தமிழ்நாடு முழுவதும் கருப்பு சட்டை அணிந்து மண்டலம் தோறும் நாளை வணிகர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.

    வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெறும் ஆர்ப்பாட்டத்துக்கு மண்டலத் தலைவர் கே.ஜோதிலிங்கம் தலைமை தாங்குகிறார். சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் என்.டி.மோகன் முன்னிலை வகிக்கிறார்.

    இதில் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா விளக்கவுரை நிகழ்த்துகிறார். ஆர்ப்பாட்டத்தில் பொருளாளர் ஏ.எம்.சதக்கத்துல்லா வி.பி.மணி, ராஜ்குமார், எட்வர்டு, நடராஜன், மகேஸ்வரன், செய்தி தொடர்பாளர் பாண்டியராஜன் மற்றும் எஸ்.சாமுவேல் உள்ளிட்ட மாவட்டத் தலைவர்கள், மாவட்ட நிர்வாகிகள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கிறார்கள்.

    வணிகர்களின் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் இதன் அடுத்தகட்ட போராட்டமாக உண்ணாவிரத போராட்டம், சட்டமன்ற முற்றுகை போராட்டம், தொடர் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு அறிவித்துள்ளார்.
    வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் டெல்லியில் 24-ந்தேதி தர்ணா போராட்டம் நடத்தயிருக்கிறோம் என்று விக்கிரம ராஜா தெரிவித்துள்ளார். #vikramaraja

    திசையன்விளை:

    திசையன்விளை அனைத்து வியாபாரிகள் கலந்தாய்வு கூட்டம் வியாபாரிகள் சங்க தலைவர் டிம்பர் செல்வராஜ் தலைமையில் நடந்தது. அதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா கலந்து கொண்டு பேசினார். பின்பு அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் உணவு பாதுகாப்பு சட்டத்தில் கடைபிடிக்க முடியாத சட்ட விதிகளை மாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியும், ஜி.எஸ்.டி. வரி விதிப்பு சட்ட விதிகளை நிர்ணயம்படுத்த வேண்டும், 28 சதவிகிதம், 18 சதவிகிதம் வரி விதிப்புகளை முழுமையாக அகற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும், சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கமாட்டோம் என்று சொன்ன அரசு மத்தியிலும், மாநிலத்திலும் ஆளுகின்ற நேரத்தில் இன்று பிலிப்காட் நிறுவனத்தை வாங்கி வால்மார்ட் நிறுவனம் பொய்யான புள்ளி விபரங்களை தருகிறார்கள்.

    ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு தருவோம் என்று அப்பட்டமான பொய் புகாரோடு வால்மார்ட் நிறுவனம் உள்ளே நுழைந்து கொண்டிருக்கிறது. இது உடனடியாக தடை செய்யப்பட வேண்டும். பிலிப்காட் நிறுவனம் வாங்கிய 87 சதவிதம் பங்குகளை உடனடியாக திருப்பி பெற வேண்டும் என வலியுறுத்தி டெல்லியில் வரும் 24-ந் தேதி ஆயிரக்கணக்காண வணிகர்களை தமிழகத்தில் இருந்து அழைத்து சென்று பேரணி மற்றும் தர்ணா நடத்தயிருக்கிறோம்.

    இவ்வாறு விக்கிரம ராஜா கூறினார். #vikramaraja

    டெல்லியில் 24-ந் தேதி உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தை திரும்பபெறக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

    பூதலூர்:

    பூதலூரில் அனைத்து வணிகர் சங்க 19-ம் ஆண்டு துவக்க விழா கொடியேற்றுவிழா, உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் விழா இணைந்த முப்பெரும் விழா தலைவர் சண்முகராஜ் தலைமையில் நடைபெற்றது. சங்க செயலாளர் ரமேஷ்குமார் வரவேற்று பேசினார்.

    கூட்டத்தில் சங்க கொடியேற்றி, உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவரும், தேசிய முதன்மை செயலாளருமான ஏ.எம்.விக்கிரமராஜா பேசும் போது கூறியதாவது:-

    தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்தால் வணிகர்களுக்கு ரூ 3 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. வால்மார்ட் நிறுவனம் சில்லறை வணிகத்தை கபளீகரம் செய்துவிடும். இந்த நிறுவனத்தை வரவிடாமல் தடுப்பது நம் கடமை.

    வணிகர்களை பாதிக்கும் உணவு பாதுகாப்பு தரநிர்ணய சட்டம், ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறை ,சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடுகளை அனுமதிப்பது. ஆகியவற்றை எதிர்த்து கண்டனம் தெரிவித்து வருகிற 23,24,25 தேதிகளில் தேசிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    தமிழகத்தின் சார்பில் அடுத்த 24-ம் தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டதில் தமிழகத்தில் இருந்து ஆயிரம் பேர் கலந்து கொள்ள உள்ளோம். மேலும் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்க கூடாது என்பதை வலியுறுத்தி தமிழக அரசியல்கட்சிகளுடன் இணைந்து பெரிய அளவில் போராட்டம் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    1½ கோடி வியாபாரிகள் குடும்பங்களை பாதிக்கும் வால்மார்ட்டை தமிழகத்தில் நுழைய விடக்கூடாது என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறியுள்ளார். #Vikramaraja

    சென்னை:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    வால்மார்ட் நிறுவனம் இந்தியாவில் சில்லறை வணிகத்தில் ஈடுபடக் கூடாது என்பது விதியாகும்.

    ஆனால் இப்போது பிளிப்கார்ட் நிறுவனத்தை வால்மார்ட் வாங்கியதன் மூலம் அதில் உள்ள 1 கோடி வாடிக்கையாளர்களுக்கும் வால்மார்ட் பொருட்களை விற்பனை செய்ய வழி வகை ஏற்பட்டுள்ளது. இது சிறுகடைகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

    இதனால் தமிழகத்தில் உள்ள மளிகை கடைகள், மருந்து கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் கடுமையாக பாதிக்கப்படும். ஒட்டு மொத்தமாக சிறு வணிகர்களை அழித்து விடும்.

    காவிரி வறண்டதால் விவசாயிகள் தற்கொலை செய்வது போல் கடைகளில் வியாபாரம் இல்லாமல் வணிகர்கள் தற்கொலை செய்யும் அவல நிலை உருவாகும். மத்திய அரசின் தவறான அணுகுமுறை காரணமாக தமிழகத்தில் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கும் நிலை உருவாகும்.

    வெளிநாட்டு நிறுவனமான வால்மார்ட் நிறுவனம் உலக அளவில் பொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்து ஆன்லைன் மூலம் சில்லறை வணிகத்தில் நுழைவதால் இந்தியாவில் உள்ள சூப்பர் மார்க்கெட், மால்கள், காய்கறி மார்க்கெட், மளிகை கடை, மருந்து கடைகள் உள்ளிட்ட அனைத்து வியாபார நிறுவனங்களும் பெருமளவில் பாதிக்கப்படும். இதனால் லட்சக்கணக்கான வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள்.

    ஆனால் இதை மறைப்பதற்காக ஆன்லைன் வியாபாரம் மூலம் 1 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று அந்நிறுவனம் சொல்வது அப்பட்டமான பொய்யாகும்.

    தமிழ்நாட்டில் 21 லட்சம் வியாபாரிகள் உள்ளனர். அவர்களை சார்ந்து 1½ கோடி குடும்பத்தினர் உள்ளனர். இவர்களை காப்பது அரசின் கடமையாகும்.

    எனவே வால்மார்ட் ஆன்லைன் மூலம் சில்லறை வணிகத்தில் நுழைவதை அரசு தடை செய்ய வேண்டும்.

    இந்திய வணிகர்களை காப்பாற்ற தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு இதுவரை கண்டிராத அளவில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தும். இதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும்.

    இவ்வாறு விக்கிரமராஜா கூறினார்.

    சென்னை திருவல்லிக்கேணியில் வி.பி.எம். ஸ்டோர்ஸ் நடத்தும் மொத்த வியாபாரியான வி.பி.மணி கூறியதாவது:-

    எங்கள் கடையில் அழகு சாதன பொருட்கள், குளிர் பானங்கள், பேன்சி பொருட்கள், எழுது பொருட்கள், ஹார்லிக்ஸ் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் மொத்த விற்பனையில் கொடுக்கிறோம்.

    பிளிப்கார்ட், அமேசான் நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் வியாபாரத்தில் உள்ளதால் எங்கள் கடைகளில் வியாபாரம் பெருமளவு குறைந்துவிட்டது.

    இப்போது வால்மார்ட் நிறுவனம் பிளிப்கார்ட் வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை விற்பனை செய்ய உள்ளது. இது உள்ளூர் கடை விற்பனையை வெகுவாக பாதிக்கும்.

    இந்திய பொருளாதார சந்தையை கைப்பற்ற நேரடியாக சில்லறை விற்பனைக்குள் வால்மார்ட் நிறுவனம் நுழைந்துவிட்டது. இதை நாங்கள் உயிரை கொடுத்தாவது தடுத்து நிறுத்துவோம்.

    இந்தியாவில் ஒரு பொருள் உற்பத்தியானால், அது மாநில வினியோகஸ்தர், மண்டல விநியோகஸ்தர், ஏரியா விநியோகஸ்தர், மொத்த வியாபாரி, ஆகியோர் கைமாறி, சில்லரை கடைகளுக்கு வரும். அங்கிருந்து பொது மக்களுக்கு பொருட்கள் கிடைக்கும்.

    ஆனால் வால்மார்ட் நிறுவனம், உற்பத்தியாளர்களிடம் நேரடியாக பொருட்களை வாங்கி ஆன்லைன் மூலம் பொது மக்களுக்கு பொருட்களை விற்க உள்ளனர்.

    ஆரம்பத்தில் குறைந்த விலைக்கு பொருட்களை கொடுத்து வாடிக்கையாளர்களை இழுப்பார்கள். இதன் பாதிப்பால் கடைகளில் வியாபாரம் குறைந்து விடும். நாளடைவில் கடைகளை இழுத்து மூடும் நிலை உருவாகும்.

    சில்லறை வியாபாரிகளை நசுக்கிய பிறகு வால்மார்ட் நிறுவனம் தனது பொருட்களுக்கான விலையை அதிகமாக்கி விடுவார்கள். அதனால்தான் எதிர்க்கிறோம். எனவே ஆன்லைன் விற்பனையை அரசு தடை செய்ய வேண்டும்.

    இவ்வாறு வி.பி. மணி கூறினார்.

    ×