search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வால்மார்ட்டை தமிழகத்தில் நுழைய விடக்கூடாது - விக்கிரமராஜா
    X

    வால்மார்ட்டை தமிழகத்தில் நுழைய விடக்கூடாது - விக்கிரமராஜா

    1½ கோடி வியாபாரிகள் குடும்பங்களை பாதிக்கும் வால்மார்ட்டை தமிழகத்தில் நுழைய விடக்கூடாது என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறியுள்ளார். #Vikramaraja

    சென்னை:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    வால்மார்ட் நிறுவனம் இந்தியாவில் சில்லறை வணிகத்தில் ஈடுபடக் கூடாது என்பது விதியாகும்.

    ஆனால் இப்போது பிளிப்கார்ட் நிறுவனத்தை வால்மார்ட் வாங்கியதன் மூலம் அதில் உள்ள 1 கோடி வாடிக்கையாளர்களுக்கும் வால்மார்ட் பொருட்களை விற்பனை செய்ய வழி வகை ஏற்பட்டுள்ளது. இது சிறுகடைகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

    இதனால் தமிழகத்தில் உள்ள மளிகை கடைகள், மருந்து கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் கடுமையாக பாதிக்கப்படும். ஒட்டு மொத்தமாக சிறு வணிகர்களை அழித்து விடும்.

    காவிரி வறண்டதால் விவசாயிகள் தற்கொலை செய்வது போல் கடைகளில் வியாபாரம் இல்லாமல் வணிகர்கள் தற்கொலை செய்யும் அவல நிலை உருவாகும். மத்திய அரசின் தவறான அணுகுமுறை காரணமாக தமிழகத்தில் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கும் நிலை உருவாகும்.

    வெளிநாட்டு நிறுவனமான வால்மார்ட் நிறுவனம் உலக அளவில் பொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்து ஆன்லைன் மூலம் சில்லறை வணிகத்தில் நுழைவதால் இந்தியாவில் உள்ள சூப்பர் மார்க்கெட், மால்கள், காய்கறி மார்க்கெட், மளிகை கடை, மருந்து கடைகள் உள்ளிட்ட அனைத்து வியாபார நிறுவனங்களும் பெருமளவில் பாதிக்கப்படும். இதனால் லட்சக்கணக்கான வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள்.

    ஆனால் இதை மறைப்பதற்காக ஆன்லைன் வியாபாரம் மூலம் 1 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று அந்நிறுவனம் சொல்வது அப்பட்டமான பொய்யாகும்.

    தமிழ்நாட்டில் 21 லட்சம் வியாபாரிகள் உள்ளனர். அவர்களை சார்ந்து 1½ கோடி குடும்பத்தினர் உள்ளனர். இவர்களை காப்பது அரசின் கடமையாகும்.

    எனவே வால்மார்ட் ஆன்லைன் மூலம் சில்லறை வணிகத்தில் நுழைவதை அரசு தடை செய்ய வேண்டும்.

    இந்திய வணிகர்களை காப்பாற்ற தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு இதுவரை கண்டிராத அளவில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தும். இதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும்.

    இவ்வாறு விக்கிரமராஜா கூறினார்.

    சென்னை திருவல்லிக்கேணியில் வி.பி.எம். ஸ்டோர்ஸ் நடத்தும் மொத்த வியாபாரியான வி.பி.மணி கூறியதாவது:-

    எங்கள் கடையில் அழகு சாதன பொருட்கள், குளிர் பானங்கள், பேன்சி பொருட்கள், எழுது பொருட்கள், ஹார்லிக்ஸ் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் மொத்த விற்பனையில் கொடுக்கிறோம்.

    பிளிப்கார்ட், அமேசான் நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் வியாபாரத்தில் உள்ளதால் எங்கள் கடைகளில் வியாபாரம் பெருமளவு குறைந்துவிட்டது.

    இப்போது வால்மார்ட் நிறுவனம் பிளிப்கார்ட் வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை விற்பனை செய்ய உள்ளது. இது உள்ளூர் கடை விற்பனையை வெகுவாக பாதிக்கும்.

    இந்திய பொருளாதார சந்தையை கைப்பற்ற நேரடியாக சில்லறை விற்பனைக்குள் வால்மார்ட் நிறுவனம் நுழைந்துவிட்டது. இதை நாங்கள் உயிரை கொடுத்தாவது தடுத்து நிறுத்துவோம்.

    இந்தியாவில் ஒரு பொருள் உற்பத்தியானால், அது மாநில வினியோகஸ்தர், மண்டல விநியோகஸ்தர், ஏரியா விநியோகஸ்தர், மொத்த வியாபாரி, ஆகியோர் கைமாறி, சில்லரை கடைகளுக்கு வரும். அங்கிருந்து பொது மக்களுக்கு பொருட்கள் கிடைக்கும்.

    ஆனால் வால்மார்ட் நிறுவனம், உற்பத்தியாளர்களிடம் நேரடியாக பொருட்களை வாங்கி ஆன்லைன் மூலம் பொது மக்களுக்கு பொருட்களை விற்க உள்ளனர்.

    ஆரம்பத்தில் குறைந்த விலைக்கு பொருட்களை கொடுத்து வாடிக்கையாளர்களை இழுப்பார்கள். இதன் பாதிப்பால் கடைகளில் வியாபாரம் குறைந்து விடும். நாளடைவில் கடைகளை இழுத்து மூடும் நிலை உருவாகும்.

    சில்லறை வியாபாரிகளை நசுக்கிய பிறகு வால்மார்ட் நிறுவனம் தனது பொருட்களுக்கான விலையை அதிகமாக்கி விடுவார்கள். அதனால்தான் எதிர்க்கிறோம். எனவே ஆன்லைன் விற்பனையை அரசு தடை செய்ய வேண்டும்.

    இவ்வாறு வி.பி. மணி கூறினார்.

    Next Story
    ×