என் மலர்
ஈரோடு
கோபி:
கோபி அடுத்த சந்திரா புரத்தை சேர்ந்தவர் மும்மூர்த்தி மில் தொழிலாளி இவரது மனைவி பெயர் பிரபா (வயது 22).
பிரபாவுக்கும் கணவரின் தாயார் (மாமியார்) சரசம்மாளுக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் பிரபா வேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டில் இருந்த பிரபா தனது துப்பட்டாவால் விட்டத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது பற்றி சிறுவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால கோபி ஆர்.டி.ஓ கோவிந்தராஜனும், துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வமும் விசாரித்து வருகிறார்கள். #tamilnews
பஸ் கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க.சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
தி.மு.க.சார்பில் நடக்கும் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பல கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளன.
இந்தநிலையில் தி.மு.க.போராட்டத்துக்கு கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியும் ஆதரவு தெரிவித்து உள்ளது. இதுபற்றி அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசு உயர்த்தியிருக்கிற பேருந்து கட்டணத்தால் ஏழை, நடுத்தர மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மிகுந்த பாதிப்பை சந்தித்து வருகிறார்கள்.
தமிழக அரசு போக்குவரத்து கழகங்களை சரிவர கவனிக்காமல் நஷ்டத்தில் இயங்க பல ஆண்டுகளாக விட்டுவிட்டு பஸ் கட்டணத்தை உயர்த்தி அதன் மூலம் அரசுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட முயற்சிப்பது கண்டனத்திற்குரியது. போக்குவரத்துத்துறையின் நிர்வாக சீர்கேட்டை சரி செய்தாலே போக்குவரத்துக் கழகங்கள் லாபத்தை ஈட்ட முடியும் என்ற நிலை இருக்கும்போது கட்டண உயர்வு அவசியமற்றது.
எனவே இந்த சூழ்நிலையில் பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி வருகிற 27-ஆம் தேதி தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நடைபெறவிருக்கின்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் பெருந்திரளாக கலந்துகொள்வார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Tamilnews
பெருந்துறை:
ஈரோடு, டீச்சர்ஸ் காலனி பகுதியை சேர்ந்த அமுதா (வயது 55). பெருந்துறை சார் பதிவாளராக பணிபுரிந்து வந்தார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 30-ந் தேதி அலுவலக வாசல் முன்பாக ஒரு நபர் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவரிடம் அமுதா பணம் பெற்றார்.
அப்போது அங்கு மறைந்திருந்த ஈரோடு லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அதிகாரிகளால் கையும் களவுமாக பிடிபட்டார். அவரிடமிருந்து ரூ. 45 ஆயிரம் பணம் கைப்பற்றப்பட்டது.
மேலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவர் மீது 2 வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து பத்திரப்பதிவுத்துறை உயர் அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் பெருந்துறை சார் பதிவாளர் அமுதா கட்டாய விடுப்பில் சென்றார்.
கடந்த ஒருமாதத்திற்கும் மேலாக விடுப்பில் இருந்து வந்த அவர் கடந்த 15 நாட்களுக்கு முன்னர் மீண்டும் பணியில் சேர்ந்தார்.
இந்த நிலையில் அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். தற்போது அவர் கரூர் மாவட்ட சிட் பண்ட் நிறுவனங்களின் பதிவாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். #tamilnews
கவுந்தப்பாடி அருகே உள்ள ஒத்தக் குதிரையில் உள்ள பள்ளி ஆண்டு விழா நடந்தது. இதில் அமைச்சர் கே.சி.கருப்பணன், அந்தியூர் எம்.எல்.ஏராஜா கிருஷ்ணன் மற்றும் இஸ்ரோ விஞ்ஞானியும் முன்னாள் இஸ்ரோ தலைவருமான மயில்சாமி அண்ணாதுரை ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் பங்கேற்ற இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
வரும் காலங்களில் தண்ணீர் பற்றாக்குறை மழையின்மை உள்பட காரணங்களால் உணவு பொருட்கள் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படக்கூடும். அப்போது உணவு பற்றாக்குறை நிலவுவதற்கு சாத்தியக் கூறுகள் அதிகளவில் உள்ளது. இதனால் மண் இல்லாமல் பயிர் செய்ய முடியுமா? என்ற ஆராய்ச்சி தற்போது நடந்து வருகிறது.
2020-ம் ஆண்டு திட்டமிட்டப்படி சூரியணை ஆய்வு செய்து செயற்கை கோள் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதேபோல் மாணவர்கள் குறைந்த எடையுள்ள செயற்கை கோளை தயாரித்தால் இஸ்ரோ மூலம் இலவசமாக விண்ணில் செலுத்தப்படும்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வருடத்துக்கு ஒன்று அல்லது 2 செயற்கைகோள் அனுப்பப்பட்ட நிலையில் தற்போது ஆண்டுக்கு 12 செயற்கைகோள் அனுப்பப்படுகிறது. அதை 14 ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை கூறினார்.
பஸ் கட்டணம் திடீரென உயர்ந்திருப்பதை இன்னமும் பொதுமக்களால் ஜீரணிக்க முடியவில்லை.
ஈரோடு மாவட்ட மக்களும் இன்னமும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். ஈரோட்டில் இருந்து பக்கத்து ஊர்களான பவானி, பள்ளிபாளையம், பெருந் துறை, குமாரபாளையம் முதல் தூரத்தில் உள்ள திருப்பூர், சேலம், நாமக்கல், கோவை ஆகிய ஊர்களுக்கும் அடிக்கடி பொதுமக்கள் சென்று வருகிறார்கள். இதில் பலர் தினமும் வெளியூர்களுக்கு வேலைக்கு சென்று வருகிறார்கள். இவர்களின் பாடும் திண்டாட்டம் ஆகி உள்ளது. சம்பளத்தில் கிடைக்கும் பணத்தின் ஒரு பகுதி பஸ்சுக்காகவே போய் விடும். பட்ஜெட்டில் பெரிய இடி விழுந்தது போல் அவர்கள் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
பஸ் பயணம் என்றாலே பலர் இப்போது அலர்ஜியாகி அலற தொடங்கி உள்ளனர். வேலைக்கு பஸ்களில் போவோர்களுக்கு வேறு வழியில்லை. எப்படியும் போய்தான் ஆக வேண்டும் என்ற நிலை.
அதே சமயம் அடிக்கடி தங்களது உறவினர்கள் நண்பர்கள் ஊர்களுக்கு செல்பவர்கள் கடந்த 2 நாட்களாக பஸ்களில் போவதை தவிர்க்கத் தொடங்கி உள்ளனர். இன்னும் பலர் வெளியூர் விசேசம் என்றால் தங்களது இருசக்கர வாகனத்தில் செல்ல தொடங்கி விட்டார்கள்.
ஈரோட்டிலிருந்து திருப்பூர், கோவைக்கு கிட்டத்தட்ட இரு மடங்கு கட்டண உயர்வால் பஸ்சுக்கு கொடுக்கும் கட்டணத்தில் பெட்ரோல் ஊற்றி ஜாலியாக இளைஞர்கள் வெளியூர் செல்ல தொடங்கி உள்ளனர்.
இன்னும் பலர் அதாவது வேலைக்காக திருப்பூர், சேலம், கோவை, கரூர் செல்பவர்கள் பஸ்சில் போவதை நிறுத்திக் கொண்டு ரெயில்களில் போகத் தொடங்கி உள்ளனர்.
இதனால் ஈரோடு ரெயில் நிலையத்தில் வழக்கத்தை விட பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. அதே சமயம் ஈரோடு பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் குறையத் தொடங்கி உள்ளது.
வழக்கமாக காலை நேரத்தில் ஈரோடு பஸ் நிலையம் ஜே.ஜே.வென இருக்கும். ஆனால் 2 நாட்களாக களை இழந்து கிடக்கிறது. அரசு பஸ்களிலும் கூட்டத்தை காண முடியவில்லை.
அரசு பஸ்சைபோல் தனியார் பஸ்களிலும் கட்டணம் உயர்த்தப்பட்டாலும் அரசு பஸ்களை விட குறைவான கட்டணம் என்பதால் தனியார் பஸ்களில் கூட்டம் அதிகரித்து உள்ளது.
குறிப்பாக சேலம், நாமக்கல், திருப்பூர், கோவை, கரூர், கொடுமுடி செல்லும் பயணிகள் அரசு பஸ்களை தவிர்த்து நின்று கொண்டு போனாலும் பரவாயில்லை என தனியார் பஸ்களை நா(தே)டி செல்கிறார்கள்.
தமிழகத்தில் அதிரடியாக பஸ்கட்டணம் உயர்த்தப்பட்டது. திடீர் கட்டண உயர்வால் பொது மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
பஸ்கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் சாலைமறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இந்நிலையில் சத்தியமங்கலம் பஸ்நிலையம் அருகே உள்ள எஸ்பிஎஸ் கார்னரில் கூடிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 30 பேர் கோவை-மைசூர் கோபி சந்திப்பு சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கட்டண உயர்வை கண்டித்து கண்டன கோஷமிட்டனர்.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து வேனில் ஏற்றி தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். மறியல் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #tamilnews
பெங்களூருவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இயக்குனராக கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தமிழ்நாட்டை சேர்ந்த மயில்சாமி அண்ணாதுரை செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஒத்தக்குதிரையில் நடந்த பள்ளி பவள விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர் கூறியதாவது: மாணவர்கள் குறைந்த எடையுள்ள செயற்கை கோளை தயாரித்தால் இலவசமாக விண்ணில் செலுத்தப்படும். இளம் விஞ்ஞானிகள் புதிய உத்திகளை கண்டறிவதுடன் புதிய சிந்தனைகளை உருவாக்க வேண்டும்.மாணவர்கள் செயற்கை கோள் தயாரிப்பில் ஈடுபட்டால் வியாபார ரீதியாக வெளிநாடுகளுக்கும் வழங்க முடியும். ஆண்டிற்கு 12 முதல் 18 செயற்கை கோல்களை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும், என அவர் கூறினார்.
இந்த ஆய்வு பணிகளுக்காக செயற்கைக்கோள் திட்டம், ஆதித்யா எல் 1 என பெயரிடப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோளானது பி.எஸ்.எல்.வி. எக்ஸ்.எல். ராக்கெட்டின் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள தளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்ட உள்ளது. #MayilsamyAnnadurai #AdithyaL1 #Sunresearchsatellite #tamilnews
ஈரோடு:
ஈரோடு சம்பத்நகரை சேர்ந்தவர் வெங்கடேஸ் (வயது37). ஜவுளி வியாபாரி. இவரது மனைவி சாகிராபானா (32).இவர்கள் 2 பேரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பிபீகா என்ற மகள் உள்ளார்.
வெங்கடேஷ்சுக்கு குடி பழக்கம் உண்டாம். இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் மீண்டும் கணவன்-மனைவிக்குள் தகராறு வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்து வெங்கடேஷ் காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த வெங்கடேஷ் திடீரென தூக்குப்போட்டு கொண்டார். அக்கம் பக்கத்தினர் பார்த்து அதிர்ச்சியடைந்து 108 ஆம்புலன்சு மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே வெங்கடேஷ் பரிதாபமாக இறந்தார். பின்னர் அவர் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
கணவர் வெங்கடேஷ் உடலை பார்த்து அவரது மனைவி கதறி அழுதது பார்ப்பதற்கு பரிதாபமாக இருந்தது. இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
ஈரோடு:
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே இன்று தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலாளர் குமரகுருபரன் தலைமையில் மாவட்ட இளைஞரணி செயலாளர் சந்திரன், மாவட்ட அமைப்பாளர் கராத்தே சண்முகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி இளைஞரணி அமைப்பாளர் தனவிஜயன், திராவிடர் கழக மாநில அமைப்புச் செயலாளர் சண்முகம், தி.மு.க.வைச் சேர்ந்த பெரியசாமி உள்ளிட்டோர் திரண்டனர்.
அவர்கள் வைத்திருந்த எச்.ராஜா உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயன் தலைமையிலான போலீசார் தடுத்து நிறுத்தி உருவ பொம்மையை கைப்பற்றினர்.
எச்.ராஜா உருவ பொம்மையை எரிக்க முயன்றதாக 21 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த போராட்டம் குறித்து தந்தை பெரியார் திராவிட கழக மாவட்ட செயலாளர் குமரகுருபரன் கூறும்போது, “பாரதீய ஜனதாவை சேர்ந்த எச்.ராஜா தொடர்ந்து திராவிடர் இயக்க தலைவர்களை விமர்சித்து வருகிறார். கருணாநிதி, திருமாவளவன், வைரமுத்து, பெரியார் ஆகியோரையும் விமர்சிக்கிறார். இதை கண்டிக்கும் விதமாக இந்த போராட்டம் நடத்தப்பட்டது” என்றார். #tamilnews
கொடுமுடி:
கொடுமுடி அருகே உள்ள தட்டாம்பாளையத்தை சேர்ந்தவர் கவுரிசங்கர் (வயது 41). இவர் அ.தி.மு.க. வில் கொடுமுடி ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளராக உள்ளார். இவரது மனைவியின் தங்கை சிவகிரி அருகே உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். அவர் தனது அக்காள் வீட்டில் இருந்து வேலைக்கு சென்று வந்தார். அவரை திருமணம் செய்து கொள்ள கவுரிசங்கர் நினைத்தார்.
இது தொடர்பாக துன்புறுத்தல் அதிரித்ததால் கவுரிசங்கரின் மனைவி, தங்கையை அழைத்துக் கொண்டு கொடுமுடி அருகே தேவம் பாளையத்தில் உள்ள தந்தை வீட்டுக்கு சென்றார். ஆனால் அங்கு சென்றும் கவுரிசங்கர் தொல்லை கொடுத்தாராம். எனவே ஆசிரியையை குள்ளக்கவுண்டன்புதூரில் உள்ள தனது அக்காள் வீட்டுக்கு அவரது தந்தை அனுப்பி வைத்தார். ஆசிரியைக்கு திருமணம் நடத்த ஏற்பாட்டையும் செய்தார். ஒரு மணமகனை பார்த்து திருமண நிச்சயதார்த்த தேதியை முடிவு செய்தார். வருகிற 22-ந் தேதி நிச்சயதார்த்த நிகழ்வு நடப்பதாக இருந்தது.
இந்த நிலையில் அக்கா வீட்டில் தங்கி இருந்த ஆசிரியை கொளாநல்லியில் உள்ள கோவிலுக்கு சென்றார். அங்கு கவுரி சங்கர் காரில் வந்து ஆசிரியையின் கையை பிடித்து இழுத்து அங்கிருந்து காரில் கடத்தி செல்ல முயன்றார். பொதுமக்களும், பக்தர்களும் திரண்டதால் காரில் தப்பினார். அவரை துரத்தி சென்றனர். அப்போது கவுரிசங்கர் சென்ற கார் கரூர்-ஈரோடு ரோட்டில் சத்திரப்பட்டி என்ற இடத்தில் வந்தபோது நிலை தடுமாறி ஓடி கவிழ்ந்தது.
பின் தொடர்ந்து வந்தவர்கள் கவுரி சங்கரையும், காரை ஓட்டி வந்த கணபதி பாளையம் நால்ரோடு, ஆயிகவுண்டன்பாளையத்தை சேர்ந்த சதீசையும் சுற்றி வளைத்து பிடித்து மலையம்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர்.
இது குறித்து ஆசிரியையின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் கவுரிசங்கர், சதீஷ் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட் டம், கொலை முயற்சி விடுத்தல், தடுத்து நிறுத்துதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 2 பேரும் கொடுமுடி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஈரோடு சப்-ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
பவானி:
ஈரோடு அடுத்த சித்தோடு செல்லப்பன் பாளையத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி சித்ரா. இவர்களது மகன் யுவராஜ் (வயது 22).
யுவராஜ் அங்குள்ள ஒரு தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். கடந்த 45 நாட்களுக்கு முன்பு யுவராஜின் தந்தை விஜயகுமார் மாரடைப்பால் உயிரிழந்தார்.
அவர் இறந்த நாள் முதல் யுவராஜ் சோகத்துடன் காணப்பட்டார். தந்தை இறந்ததால் மனம் உடைந்த நிலையில் காணப்பட்ட அவர் நேற்று வீட்டில் தனியாக இருந்தார்.
அப்போது அவர் எலி மருந்தை (விஷம்) எடுத்து சாப்பிட்டதாக தெரிகிறது. உயிருக்கு போராடியபடி கிடந்த அவரை அவரது தாய் சித்ரா பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் யுவராஜை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
எனினும் சிகிச்சை பலனின்றி யுவராஜ் நேற்று மாலை பரிதாபமாக இறந்தார். இது குறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் சிவக்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.
பு.புளியம்பட்டி:
பட்டு நூல் விலை ஏற்றத்தால் கைத்தறி நெசவாளர்கள், பாவு நூல் சாயமிடும் தொழிலாளர்கள், பாவு வீசும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
எனவே மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு பட்டு நூல் விலையேற்றத்துக்கான காரணத்தை கண்டறிந்து விலை குறைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் ஜனவரி 15-ந் தேதி முதல் 15 நாட்கள் தொடர் வேலை நிறுத்தம் அறிவித்து போராட்டத்தை தொடங்கினர். அவர்களது போராட்டம் இன்று 5-வது நாளாக நீடிக்கிறது.
ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட கைத்தறி பட்டு, ஜவுளி உற்பத்தியாளர்கள், நெசவு தொழிலாளர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம், சது முகை, டி.ஜி.புதூர், புஞ்சை புளியம்பட்டி, நால் ரோடு, தொட்டம்பாளையம், அந்தியூர், சாவக்கட்டுபாளையம், நாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளையம், பள்ளிபாளையம், திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர், காங்கயம், சாவக்கட்டுபாளையம், கோவை மாவட்டத்தில் வாக ராயம்பாளையம், சிறுமுகை, ஆலாங்கொம்பு ஆகிய பகுதிகளில் உள்ள கைத்தறி கூடங்கள் மூடி வெறிச்சோடி கிடக்கின்றன.
போராட்டம் காரணமாக இங்குள்ள தொழிலாளர்களுக்கு நெசவு செய்ய பாவு, நூல் வழங்கப்படவில்லை. எனவே இங்குள்ள கைத்தறி கூடங்களில் கோரா பட்டு சேலைகள் உற்பத்தி முற்றிலும் முடங்கியது.
ஈரோடு, கோவை, திருப்பூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் தற்போது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் பணிபுரியும் கைத்தறி கூடங்கள் அனைத்திலும் சேர்த்து தினமும் மொத்தம் ரூ. 2½ கோடி முதல் 3 கோடி வரை கோரா பட்டு சேலைகள் உற்பத்தி நடக்கும்.
அந்த வகையில் பார்க்கும் போது போராட்டம் நடந்துள்ள கடந்த 4 நாட்களில் சுமார் ரூ. 10 கோடிக்கும் மேல் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. கைத்தறி நெசவு தொழிலாளர்கள் வேலை இன்றி உள்ளனர். #tamilnews






