search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ISRO scientist"

    • முதல்முறையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட அணுக்கடிகாரம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
    • இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும், பணியாளர்களுக்கும் த.மா.கா சார்பில் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:-

    இந்தியாவின் இரண்டாம் தலைமுறை செயற்கைக்கோளான என்.வி.எஸ். 01 என்ற வழிகாட்டு செயற்கைக்கோளானது ஜி.எஸ்.எல்.வி. எப்-12 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

    இந்த செயற்கைக்கோள் மூலம் தரை, கடல், வான்வெளி போக்குவரத்து குறித்தும், பேரிடர் மேலாண்மை குறித்தும் தகவல்களை பெற முடியும். குறிப்பாக இந்த ராக்கெட், முழுவதும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட 6 வது ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் என்பது தனிச்சிறப்பு.

    மேலும் முதல்முறையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட அணுக்கடிகாரம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இஸ்ரோ விஞ்ஞானிகள் ஜி.எஸ்.எல்.வி. எப்-12 ராக்கெட்டை தயாரித்ததும், செயற்கைக்கோளுடன் ராக்கெட்டை விண்ணில் செலுத்தியதும், நிலைநிறுத்தியதும் மேலும் ஒரு மைல்கல்.

    மத்திய அரசு-இஸ்ரோ விஞ்ஞானிகளையும், பணியாளர்களையும் ஊக்குவிக்கும் விதமாக பரிசுகள், சான்றுகள், ஊக்கத்தொகை வழங்கி அவர்களின் வாழ்வு சிறக்க துணை நிற்க வேண்டும். இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும், பணியாளர்களுக்கும் த.மா.கா சார்பில் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • நான்கு பேருக்கும் கேரள ஐகோர்ட் கடந்த ஆண்டு முன்ஜாமீன் வழங்கியது.
    • மேல்முறையீட்டு மனுக்கள் மீது நான்கு வாரங்களுக்குள் தீர்ப்பு அளிக்க கேரள ஐகோர்ட்டுக்கு உத்தரவு

    புதுடெல்லி:

    இந்திய விண்வெளி கழகமான இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன், உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டது. பின்னர் அதில் உண்மை இல்லை என்பது தெரியவந்தது. இவ்வழக்கில் நம்பி நாராயணனை பொய்யாக சிக்க வைத்ததாக விசாரணை அதிகாரியான குஜராத் முன்னாள் டி.ஜி.பி. ஆர்.பி. ஸ்ரீகுமார், கேரளாவை சேர்ந்த இரண்டு முன்னாள் அதிகாரிகளான விஜயன், தம்பிதுர்காதத், ஓய்வு பெற்ற உளவுத்துறை அதிகாரி ஜெயபிரகாஷ் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது. இவர்கள் 4 பேருக்கும் கேரள ஐகோர்ட் கடந்த ஆண்டு முன்ஜாமீன் வழங்கியது. இந்த உத்தரவை எதிர்த்து சி.பி.ஐ. சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.

    இந்த மனு, இன்று நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் சி.டி. ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது 4 பேருக்கும் கேரள ஐகோர்ட் வழங்கிய முன்ஜாமீனை ரத்து செய்த சுப்ரீம் கோர்ட், இந்த வழக்கை மீண்டும் விசாரித்து தீர்ப்பு வழங்குவதற்காக கேரள ஐகோர்ட்டுக்கு அனுப்பி உத்தரவிட்டது.

    நீதிபதிகள் கூறும்போது, மேல் முறையீடுகள் அனைத்தும் அனுமதிக்கப்படுகின்றன. இந்த மனுக்கள் மீது நான்கு வாரங்களுக்குள் தீர்ப்பு அளிக்க கேரள ஐகோர்ட்டுக்கு உத்தரவிடுகிறோம். மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்களை 5 வாரங்களுக்கு கைது செய்யக்கூடாது என்றனர்.

    பூமி கண்காணிப்பு செயற்கைகோளை, பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்டில் பொறுத்தி, வரும் ஆகஸ்டு மாதம் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.
    சென்னை:

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தற்போது பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்காக ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் ஒருங்கிணைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்த ராக்கெட்டில் செலுத்துவதற்காக 800 முதல் 1,000 கிலோ எடைகொண்ட பூமி கண்காணிப்பு செயற்கைகோளை இஸ்ரோ வடிவமைத்து வருகிறது.

    மேலும் வெளிநாடுகளைச் சேர்ந்த 250 கிலோ எடைகொண்ட 20 முதல் 30 செயற்கைகோள்களையும் இணைத்து வரும் ஆகஸ்டு மாதம் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது. இதில் வெளிநாடுகளைச் சேர்ந்த புதிய வாடிக்கையாளர்களும் தங்கள் செயற்கைகோள்களை விண்ணில் ஏவுவதற்காக இஸ்ரோவிடம் அளித்து உள்ளனர். இவற்றை செலுத்துவதற்கான ஆயத்தபணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த ஆண்டு ஏவப்படும் 4-வது ராக்கெட் பி.எஸ்.எல்.வி. சி-42 ஆகும். அதில் பி.எஸ்.எல்.வி. ரகத்தில் 3-வதாக உள்ளது.

    வெளிநாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களிடம் உள்ள செயற்கைகோள்களை வாங்கி இஸ்ரோவுக்கு அளித்து வரும் ஆன்ட்ரிக்ஸ் நிறுவனம் தற்போது பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட் மூலம் விண்ணுக்கு ஏவுவதற்காக 20 முதல் 30 செயற்கைகோள்களை வாங்கி இஸ்ரோவுக்கு அளித்து உள்ளது.

    தகவல் தொடர்புக்காக 5 ஆயிரத்து 400 கிலோ எடையில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட ‘ஜி.சாட்- 11’ செயற்கைகோளை பிரெஞ்சு கயானாவில் இருந்து ஐரோப்பிய நாட்டு ராக்கெட்டில் விண்ணில் செலுத்தவும் இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது. இதற்கான இறுதிகட்ட சோதனை பெங்களூருவில் உள்ள இஸ்ரோ ஆய்வு மையத்தில் நடந்து வருகிறது. விரைவில் இதை விண்ணில் செலுத்தும் தேதி அறிவிக்கப்படும்.

    இஸ்ரோ இதுவரை 237 வெளிநாட்டு வாடிக்கையாளர்களின் செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி உள்ளது.

    அதேபோன்று ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்தில் ராக்கெட்டுகள் ஆய்வு செய்யும் ஆய்வகம் ரூ.630 கோடியிலும், ராக்கெட் ஒருங்கிணைப்பு வசதி கொண்ட மையம் ரூ.475 கோடி மதிப்பிலும் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்தப்பணிகள் அனைத்தும் நடப்பாண்டு இறுதியில் முடிவடைந்து செயல்பாட்டுக்கு வர உள்ளது.

    அதற்கு பிறகு முதல் ஏவுதளத்தில் இருந்து 15 ராக்கெட்டுகளையும், 2-வது ஏவுதளத்தில் இருந்து 11 ராக்கெட்டுகளையும் ஏவும் திறனை ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையம் பெறும்.

    இந்த தகவல்களை இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினார்கள். 
    ராக்கெட் தயாரிக்கும் தொழில்நுட்பம் பெற்றுள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று என இஸ்ரோ விஞ்ஞானி இங்கர்சால் கூறினார்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரத்தில் மாணவர் அறிவியல் பேரவை சார்பில் சமூக அறிவியல் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. மாவட்ட வழக்கறிஞர் சங்கத் தலைவர் ரவிச்சந்திர ராமவன்னி தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் பிரேம் முன்னிலை வகித்தார்.

    இன்னர்வீல் சங்கத் தலைவி நர்மதா ரஞ்சன் குத்துவிளக்கு ஏற்றினார். மாணவர் அறிவியல் பேரவை நிறுவனர் வாசன் வரவேற்றார். பெங்களூரு இஸ்ரோ விஞ்ஞானி இங்கர்சால் பேசியதாவது: -

    விஞ்ஞான கண்டுபிடிப்புகள் ஆக்கப்பூர்வ செயல்களுக்கு பயன்பட வேண்டும் என்ற நோக்கில் மாணவர் அறிவியல் பேரவை தொடங்கப்பட்டுள்ளது. உண்மையை தேடும் முயற்சியே விஞ்ஞானம். விஞ்ஞான தொழில்நுட்பத்தை தனக்கு மட்டும் என்றோ, குறிப்பிட்ட துறைக்கு என்றோ உரிமை கொண்டாட முடியாது.

    சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கு பயன்படுத்தும்போது விஞ்ஞானம் உயிர் பெறுகிறது. இயற்கை வளம் சுரண்டல், தனி நபர் ஏகபோகமாக அனுபவிக்க விஞ்ஞானம் பயன்படுவதை அனுமதிக்கக் கூடாது. ஆக்க பூர்வ செயல்களுக்கு விஞ்ஞானத்தை பயன்படுத்த மாணவர்கள் மூலம் சமூக மாற்றம் கொண்டுவர விழிப்புணர்வு ஏற்படுத்தவே மாணவர் அறிவியல் பேரவையின் நோக்கமாகும்.

    விண்வெளியில் செயற்கை கோள் ஏவும் 6 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. பிற நாடுகளின் துணையின்றி ராக்கெட் தயாரிக்கும் தொழில்நுட்பத்தை இந்தியா பெற்றுள்ளது.

    செவ்வாய் கிரகம் மட்டுமின்றி அண்டைய கோள்களை காணும் தொலைநோக்கு பார்வை என இந்தியா விண்வெளி சாதனையில் அசுர வளர்ச்சி கண்டுள்ளது.

    இயற்கை வளம் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தப்படுகிறதோ என்ற வருத்தம் உள்ளது.

    விஞ்ஞானிகள் இதை இன்றைய தலைமுறையினரிடம் சொல்லமால் சென்றுவிட்டால் எதிர்கால சந்ததிகள் நிலை குறித்து கவலையும் உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இளம் விஞ்ஞானி சிவகாசி மாணவர் ஜெயக்குமாருக்கு பரிசு வழங்கப்பட்டது. இஸ்ரோ விஞ்ஞானி (ஓய்வு) சிவசுப்ரமணியன், பிரண்ட்ஸ் சப்போர்ட் இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார், டாக்டர் சுப்ரமணியன் உள்பட பலர் பங்கேற்றனர். மாணவர் அறிவியல் பேரவை செயலர் சக்திவேல் நன்றி கூறினார்.
    ×